நெஞ்சை கொய்தாள் வஞ்சி -6

அத்தியாயம் -6

திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. கனிஹா ஆசையோடு எல்லாம் செய்து கொண்டாள்

அழைப்பிதழில் தொடங்கி மணமேடையின் அலங்காரம், சமையல் மெனு, பூமாலை என எல்லாம் கனியின் விருப்பத்திற்கு ஏற்பதான். வரவேற்புக்கு லெஹங்கா  அணிவேன் என அவள் சொன்னதற்கு மட்டும் நம்பி மறுத்து விட்டார்

அவளுக்காகத்தான் மாமா இந்த கல்யாணமேசின்ன விஷயத்துல கூட அவளுக்கு குறை இருக்க கூடாதுஎன சொல்லி மாமனை சம்மதிக்க வைத்தான் தர்மா

ஒரே மகளின் திருமணம் என்பதால் யாரையும் ஒதுக்காமல் ஊரை வளைத்துக் கொண்டு அழைப்பிதழ் வைத்தார் நம்பி

தொழில் வட்டாரத்தில் முக்கிய பட்டவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கவென புதுக்கோட்டை வந்திருந்தான் தர்மா. கோயிலில் அன்னதானத்திற்கு சொல்லி விட்டு வரும்படி அன்னலக்ஷ்மி  பாட்டி முன்னரே சொல்லியிருக்க, வருகிற வழியில் கோயிலுக்கு சென்றான்

நிர்வாகிகளிடம் பேசிதொகையை செலுத்தி விட்டு கிளம்பும் போது அங்கே மஹாவை பார்த்தான். திருமணம் நடக்கவிருப்பது அவளுக்கும் தெரியும், தானாகவே அவனிடம் வந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டாள்

அவளது மகள் அவளிடமிருந்து இறங்கிக் கொண்டு வேறொரு குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தது

குழந்தையின் நலம் விசாரித்தான் தர்மா. இப்போது நன்றாக இருப்பதாக சொன்னவள், “ஒரு இடத்துல நிக்க மாட்டா, சுத்திட்டே இருக்கணும் இவளுக்குஎன்றாள்

மஹாவை போலவே இருக்கும் அவளது மகளின் பெயரை கேட்டு, ரியா என அறிந்து கொண்டான்

ம்ம்ரெண்டு பேரும் எப்ப போறீங்க ரியாவோட அப்பாகிட்ட?” என விசாரித்தான்

அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், “எனக்கெல்லாம் இன்விடேஷன் இல்லையா?” எனக் கேட்டாள்

ஏன்என் மேரேஜ்க்கு வரலாம்னு இருக்கியா?” என சந்தேகமாக கேட்டான்

உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைனா கண்டிப்பா வருவேன்என்றாள்

உன் வீட்ல பெர்மிஸன் கொடுப்பாங்களா?” 

அவங்க செஞ்ச தப்ப அவங்க ரியலைஸ் பண்ணிட்டாங்க தர்மா. என்ன…  காலம்தான் கடந்து போச்சுஎன அவள் சொல்லவும் அவனது முகத்தில் குழப்ப ரேகைகள்

ஆனால் அதைப் பற்றி அதிக விளக்கம் சொல்லாமல், “உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன், இப்ப டைம் இருக்கா, பேசலாமா?” என தயக்கத்தோடு கேட்டாள்

என்ன ஹெல்ப் வேணா கேளு மஹாஎன்றான்

ரியா வெளிநாட்டில் பிறந்தவள் என்பதால் வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரிவில் வருகிறாள். பிரபலமான பள்ளி ஒன்றின் பெயரை சொன்னவள் அங்கு ரியாவை சேர்த்துக்கொள்ள அதிகப் படியான நன்கொடை கேட்கிறார்கள் என்றாள்

நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் மஹா. பள்ளியில் கேட்கும் தொகை  அவள் குடும்பத்தின் சக்தியை மீறியது இல்லை, அதை விட மகளை இங்கே ஏன் படிக்க வைக்கிறாள் என அவனுக்கு யோசனையாகி விட்டது

டிவோர்ஸ் கேஸ் ஃபைல் பண்ணியாச்சு, இப்ப பாப்பாவை அம்மா பார்த்துப்பாங்க, மேல படிக்கலாம்னு இருக்கேன். டீச்சிங் சைட் பெட்டரா இருக்கும்னு தோணுது, பி ஜி முடிச்சிட்டு வேலைல ஜாயின் பண்ணிகிட்டே பி ஹெச்டி பண்ணலாம்னு இருக்கேன்என தன் எதிர்கால திட்டத்தையும் அவனிடம் சொன்னாள்

ஏய் என்ன சொல்லிட்டு இருக்க நீ? எனக்கு கல்யாணம் ஆகப் போகுது, உன் ஹஸ்பண்ட்கிட்ட சொன்னியா இல்லையா நீ?” என கவலையோடு கேட்டான் தர்மா

அவனது அக்கறையில் லேசாக சிரித்தவள், “என் அப்பா மாதிரியே பேசாதீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு சொல்லி என்னை பத்தினின்னு அவர்கிட்ட நான் நிரூபிக்கணுமா?” எனக் கேட்டாள்

அவர்கள் கணவன் மனைவி பிரச்சனை பற்றி அதிகமாகவெல்லாம் விசாரிக்க முடியாமல், அவள் சொன்னதை வைத்தே அவளது கணவன் மீது கோவம் கொண்டான் தர்மா. ஆயினும் அவளது வாழ்க்கை முக்கியம் ஆகிற்றே

 “பேசி சரி பண்ணிக்க கூடாதா மஹா?” எனக் கேட்டான்

அந்த கதையை விட்ரலாமே தர்மா. உங்க கனிஹா எப்படி இருக்காங்க? என்னை பத்தி அவங்களுக்கு தெரியுமா? என்னை வச்சு உங்களுக்குள்ள புரிதல்ல ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்ல தயக்க படாதீங்க, அவங்கள்ட்ட நான் பேசுறேன்என்றாள்

வருத்தம் மிகுந்து போயிருந்த தர்மா விளையாடிக் கொண்டிருந்த ரியாவை பார்த்தான். இனி தந்தையில்லாமல்தான் இந்தக் குழந்தை வளர வேண்டுமா என நினைக்கையிலேயே அவனது நெஞ்சம் கலங்கியது

எனக்கு எந்த கவலையும் இல்லை தர்மா, சொல்லப் போனா இப்போதான் நிம்மதியா இருக்கேன்என சமாதானமாக சொன்னாள்

ரொம்ப கொடுமைகாரரா அவர்?” எனக் கேட்டான்.

திரும்ப அவர்கிட்ட போக எனக்கு விருப்பம் இல்லை, அதை பத்தி பேச வேணாமே ப்ளீஸ்…” கெஞ்சலாக சொன்னாள்

முடிவா இருக்கியா? ரியாவை இங்கேயே ஸ்கூல் சேர்க்க போறியா?” 

அப்புறம் ஜோக் பண்ணிட்டா இருந்தேன்? ஒரு அண்ணாக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இன்னொரு அண்ணாக்கு  பார்த்திட்டு இருக்காங்க. பொண்ணுக்கு நகை போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறதோட என் அப்பாக்கு கடமை முடிஞ்சு போச்சு, சொத்துல எல்லாம் பங்கு கொடுக்க மாட்டார். கேஸ் எல்லாம் போட்டு பொறந்த வீட்டை பகைச்சுக்கிற நிலையிலயா இருக்கேன்? ரியா அப்பாகிட்டேருந்தும் எதையும் டிமாண்ட் பண்ண போறதில்ல நான். அதனாலதான் டொனேஷன்  அமௌன்ட் குறைக்க ரெகமெண்ட் பண்ண முடியுமான்னு உங்கள்ட்ட கேட்டேன். அவசரம் இல்லை, உங்க மேரேஜ் முடிஞ்சதும் பேசி சீட் வாங்கி தாங்க, போதும்என்றாள்

இப்போது கனியுடன் அவனுக்கு திருமணம் நடக்கவிருக்க,  தன்னால் தர்மா தனியனாகி விட்டானோ என அவளுள் இருந்த பெரும் குற்றவுணர்வு நீங்கியிருந்தது. ஆகவே அவனிடம் பேச மஹாவுக்கு எவ்வித தடையும் இல்லை. நன்றாக தெரிந்தவனிடம் சரளமாக பேசும் பாங்கில்தான் பேசினாள்

பெரிய மூச்சாக வெளியிட்டு தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள கூட அவனுக்கு முடியவில்லை. தாடியை தடவிக் கொண்டே சின்ன சின்னதாகவே நிறைய மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான்

இரண்டு வருட அன்னியோன்யமான காதல். அவனை அவளுக்கு அணு அணுவாக தெரியும். இப்போதும் அவனது மனம் படும் பாட்டை உணர்ந்து கொண்டாள்

நான் ஓகேதான் தர்மா. பழசெல்லாம் வெறும் மெமரிஸ் மட்டும்தான். இன்விடேஷன் கொடுத்தா உங்க கல்யாணத்துக்கு ரெடியாகி வர எனக்கு என் பொண்ணுக்கு ஷாப்பிங் செஞ்சிட்டே வீட்டுக்கு போவேன்என பேசி தான் இயல்பாக இருப்பதாக அவனுக்கு காட்டினாள்

கோயிலுக்கு வெளியில் காரில் காத்திருந்த ஆசைத்தம்பிக்கு அழைத்து அழைப்பிதழ் எடுத்து வரும் படி சொன்னான் தர்மா. கோயிலில் யாரோ தெரிந்தவருக்கு கொடுக்க கேட்கிறான் என நினைத்து வந்த ஆசைத்தம்பி மஹாவை கண்டு விட்டு முகத்தை சுருக்கினான்

அவனை முறைத்துக் கொண்டே அழைப்பிதழை எடுத்து மஹாவிடம் கொடுத்து, “கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடு மஹாஎன்றான் தர்மா

கல்யாணத்துக்கு கூட தாடி எடுக்க போறதில்லையா நீங்க?” எனக் கேட்ட மஹா, அதிகப்படியோ என நினைத்து அமைதியானாள்

அண்ணா இப்படி இருந்தாதான் எங்க கனிக்கு பிடிக்கும்என சூடாக சொன்னான் ஆசைத்தம்பி

காருக்கு போ நீஎன ஆசைத்தம்பியை அதட்டி அனுப்பி வைத்த தர்மா, “பாப்பா ஸ்கூல் அட்மிஷன் பத்தி என்னன்னு உனக்கு சொல்றேன். உன் நம்பர் என்ன?” என்றான்

நான் உங்கள்ட்ட பேசுறதால கனிக்கு கோவம் வருமா?” கைப்பேசி எண் கொடுக்காமலே கேட்டாள்

அதெல்லாம் இல்லைஎன்ற தர்மா, மீண்டும் வாய் விட்டு கேட்டு கைப்பேசி எண்ணை பெற்றுக் கொண்டான். ரியாவை தூக்கி கொஞ்சி விட்டு கீழே விட்டவன் மஹாவின் வாழ்க்கையை நினைத்து ஏற்பட்டு விட்ட கனத்தோடு அங்கிருந்து புறப்பட்டான்

ஆசைத்தம்பி பல வருடங்களாக நம்பியிடம் வேலை செய்பவன். தர்மா வந்த பிறகு, அவனுக்கும் நம்பகமானவன் ஆகி விட்டான். அண்ணா என அழைத்து பழகும் கனி மீது மிகுந்த அன்பு கொண்டவன், இப்போது தர்மாவை மணக்க போவதால் கூடுதல் பாசம் சேர்ந்து கொள்ள, மஹா தர்மாவை சந்திப்பது உகந்தது அல்ல என நினைத்தான்

ஆகவே வீடு வரவும் முதல் வேலையாக நம்பியிடம் சொல்லி விட்டான். அத்தோடு நிறுத்தாமல், “அண்ணனை நீங்கதான் கண்டிச்சு வைக்கணும்மா, அந்த பொண்ணு அது புருஷனை விவாகரத்து செய்ய போகுதாம். கவனமா இரும்மாஎன எச்சரிக்கை வேறு செய்தான்

தன் மருமகனை தவறாக நினைக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணுடன் ஏன் பேச வேண்டும் என நம்பிக்கு அதிருப்தி. இரவில் அனைவரும் சேர்ந்துதான் சாப்பிட்டனர்

வரவேற்புக்கு தர்மா அணிந்து கொள்ளும் சூட் தயாராகி வந்திருந்தது. அதை அவனை போட்டுப் பார்க்க சொல்ல வேண்டுமென நினைத்து, சாப்பிட்ட பிறகும் ஹாலிலேயே அமர்ந்திருந்தாள் கனி.

நேரத்துக்கு தூங்காம என்ன பண்ற?” எனக் கேட்டார் நம்பி

அவள் விவரம் சொல்லவும், “அவன் கைல கொடுத்தா என்னன்னு பார்த்துக்க போறான், ட்ரெஸ் எங்க?” எனக் கேட்டார்

தன் அறையில் இருப்பதாக அவள் சொல்லவும் சற்று நேரத்தில் அவன் மேலே அவனது அறைக்கு வருவான், அப்போது கொடுத்து விடு என சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டார்

கவனித்திருந்த தர்மாவுக்கு தனிமையில் தன்னிடம் ஏதோ பேச விரும்புகிறார் என்பது புரிந்தது. மஹா விஷயமாக இருக்கும் என நினைக்கவில்லை அவன்