வேலம்மாள் பாட்டி வேறு பேரனிடம், கனியை நீ மணந்து கொள்ளா விட்டால் இப்படியே தனியாகவே இவள் இருந்து விடுவாள் என சாடையாக பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
நம்பியும் ‘கனி சொல்லும் வரை எனக்கு இப்படி தோன்றியிறுக்கவில்லை, ஆனால் அவள் சொன்ன பின்பு அப்படி நடக்க வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்பதை வெளிப்படையாக சொல்லியிருந்தார்.
இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் தன் சம்மதத்திற்காக எதிர் நோக்கியிருக்கும் கனியை எதிர் கொள்ள முடியாமல் திண்டாடிப் போனான் தர்மா.
யாருக்கும் தெரியாத வரை காதலை உள்ளுக்குள் பொத்தி வைத்திருந்தாள் கனி. இப்போது அவனை காணும் போதெல்லாம் அவளையும் மீறி அவளது கண்கள் அவன் மீதான காதலால் நிரம்பி வழிந்தது.
கனியின் மனது மாற வேண்டும் என நினைத்து தர்மாவாக பேசும் போது தன் நிலைப்பாட்டை அவனிடம் சொல்வதோடு சரி, மற்றபடி அவன் வழியில் குறுக்கிடுவதில்லை, கல்யாணம் செய்து கொள் என அழுது அடம்பிடித்து மிரட்டி என எந்த தொந்தரவும் செய்யவில்லை. காதலை சுமந்து கொண்டு அமைதியாக காத்திருந்தாள்.
அவளின் காத்திருப்பு இன்னும் நீடிக்கும், வருடங்கள் கடந்தாலும் நீடித்துக் கொண்டே இருக்கும் என தர்மாவுக்கும் புரிய அவனுள் திகில் பரவியது.
வீட்டில் எடுத்து சொன்னால் கூட பரவாயில்லை, பாட்டியும் அப்பாவும் அவளின் ஆசைக்கே துணை நிற்க கனியின் மனதை மாற்றவே முடியாது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டான்.
கனிஹா அவனது அன்புக்குரியவள், அவளது மகிழ்ச்சிக்காக எது செய்யவும் அவன் தயார், இப்போது தன்னுடனான திருமணத்தை கேட்கிறாள், அவள் கேட்பது அவளுக்கு மகிழ்ச்சியை தருமா? நான் என்ன முடிவெடுக்க வேண்டும் என சற்று குழப்பத்தோடே யோசிக்கிறான் தர்மா.
இப்படியே நாட்கள் நகர்ந்தன.
நிதிலாவின் பிறந்தநாள் அன்று, தங்கைக்கு வாழ்த்து சொல்லவென அவள் கல்லூரி புறப்பட்டு செல்லும் முன்பே அவளை காண கனியுடன் சென்றிருந்தான் தர்மா.
அன்னலக்ஷ்மி பாட்டிக்கும் கனியின் விருப்பம் பற்றி தெரிந்திருந்தது. பேரனின் முகவாய் பற்றிக் கொண்டவர், “என் புள்ளையோட மூத்த வாரிசுடா நீ, ஒரு குடும்பமா நீ இருந்தாதான் இருக்கிறவங்களுக்கும் நிம்மதி, எனக்கு முன்னாடி போய் சேர்ந்தவங்களுக்கும் சாந்தி. எந்த பாவமும் நாங்க செய்யலையேடா, அப்புறம் ஏன்டா எம்புள்ள அல்பாயுசுல போனான்? எம்பேரன் தனிக்கட்டையா நிக்கிறான்?” என கண்கள் கலங்க கேட்டார்.
“இவ்ளோ நாள் நல்லாத்தானே இருந்த, இப்ப என்னாச்சு உனக்கு? உன் மருமகளுக்கே என் கல்யாணத்துல விருப்பம் இல்லை தெரியுமா?” எனக் கேட்டான் தர்மா.
“அவளுக்கென்ன தெரியும் என் மனசு படுற கஷ்டம்? கனியை கட்டிக்கடா?” என கெஞ்சலாக சொன்னார்.
“கனியோட அம்மாவை உனக்கு நினைவிருக்காது. ஆசை பட்டுத்தான் நம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டா. எவ்ளோ அன்பு வச்சிருந்தா தெரியுமா? அவ போனப்போ நம்பிக்கு என்ன வயசு? இன்னொரு கல்யாணம் பத்தி அவன்கிட்ட பேச்சே எடுக்க முடியலை, அப்படி பட்டவங்களுக்கு பொறந்தவடா அவ, சுலபத்துல உன்னை மறந்து போயிடுவான்னு நினைக்கிறியா?” என அவர் கேட்கவும் அவனால் பதிலே சொல்ல முடியவில்லை.
“உங்க பேரனுக்கு கல்யாணம் நடக்கணும்னு கனியை பலிகடா ஆக்க பார்க்காதீங்க அத்தை. அவனே இந்த ஒரு விஷயத்துலதான் சரியா முடிவெடுத்து நிக்கிறான், மனச கலைச்சு விடாதீங்க” என சொல்லிக் கொண்டே வந்து நின்றார் தாமரை.
உன் மகனை பற்றி நீயே இப்படி பேசுவாயா என கோவப்பட்டார் அன்னலக்ஷ்மி.
மாமியாருக்கும் மருமகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தர்மாவுக்கு இவர்களின் சண்டை பிடிக்காத காரணத்தால் வெளியில் போய் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். சத்தம் கேட்டு கனி, நிதிலா, அஜய் மூவரும் ஹால் வந்து விட்டனர்.
“அம்மா சொல்றதுதான் சரி, எதுக்கு தம் கட்டி பேசிட்டு இருக்க அப்பத்தா?” என கடுப்பாக கேட்ட அஜய், அம்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு அண்ணனை கண்டு கொள்ளாமல் கல்லூரிக்கு புறப்பட்டு விட்டான்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிதிலாவையும் அதட்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்த தாமரை, மாமியாருடனான தன் தர்க்கத்தை தொடர்ந்தார்.
“அத்தை ப்ளீஸ், உங்களுக்கு டைம் ஆகலையா, கிளம்புங்க நீங்களும்” என்றாள் கனி.
தாமரை அவளை முறைக்க, அவரின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சலாக பார்த்தாள்.
“நானே நினைச்சாலும் என் நினைப்ப மாத்திக்க முடியாது அத்தை. மாமாவோட சம்மதம் கிடைச்சதும் உங்க மருமகளை மனசார ஆசீர்வாதம் பண்ணனும் நீங்க, நெகடிவா எதுவும் பேசாதீங்க” என்றாள் கனி.
“குழிலதான் விழுவேன்னு ஏன் டி இப்படி அடம் பிடிக்கிற?” என தாமரை சத்தம் போடவும், எட்டிப் பார்த்தான் தர்மா.
“மாமா வேணும்னா குழில விழுந்து கெடக்கலாம், என்னை அப்படி விட மாட்டாரு அத்தை, எனக்காகவாவது என் கையை புடிச்சுகிட்டு மேட்டுக்கு வரத்தான் பார்ப்பாரு, உங்க மகனை உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டாள் கனி.
அப்படி தர்மா மாறுவானா என தாமரைக்கு தெரியாது, கனி சொல்லும் கண்ணோட்டத்தில் அவர் யோசித்ததும் இல்லை. இப்போது அப்படி இவளை மணம் செய்து கொண்டாலாவது மாறுவானா என நப்பாசை பிறந்தது. மறு கணமே ‘சீச்சி உன் மகன் வாழ்க்கை சரியாக சின்ன பெண்ணை பகடை ஆக்குவதா?’ என கேள்வி எழுப்பியது அவரின் மனசாட்சி.
அம்மாவையே பார்த்திருந்தான் தர்மா.
“அம்மா சொல்லி மாறாதவன் பொண்டாட்டிக்காக மாறுவான்னு நம்புறியாடி?” என கனியிடம் வேதனையாக கேட்டார் தாமரை.
தர்மா இப்போது கனியை பார்த்தான்.
“என் மாமாவோட அம்மா ரெண்டு தடவ சொல்லி பார்த்திட்டு எனக்கென்னன்னு தள்ளி போய் நின்னுட்டாங்க, நான் அப்படி இருக்க மாட்டேன்” என்றாள் கனி.
“உன்னை அழ வச்சான்னா அவனை மன்னிக்கவே மாட்டேன் நான்” என்றார் தாமரை.
“நான் ஒன்னும் அழ மாட்டேன்” என தீர்மானமாக சொன்னாள்.
“நீயெல்லாம் பட்டு திருந்துற ரகம், ஆனா என்ன… நீ எடுக்கிற முடிவுல நீ திருந்திறப்போ சரி பண்ண முடியாத நிலை ஆகிப் போயிருக்கும். சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்புறம் உங்க உங்க இஷ்டம்” என்ற தாமரை அவரது அறைக்கு சென்று விட்டார்.
ஊஞ்சலில் லேசாக ஆடிக் கொண்டே தரையை பார்த்துக் கொண்டிருந்தான் தர்மா.
“அவ சரின்னு சொல்லிட்டா, இந்த பயலும் சீக்கிரம் சொல்லுவான். நீ தைரியமா இருடி பொண்ணே” என கனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.