நெஞ்சை கொய்தாள் வஞ்சி -5

அத்தியாயம் -5

வெளிநாட்டு நிறுவனுங்களுடனான ஒப்பந்தங்கள் பற்றி கனிஹாவுக்கு விளக்கி கொண்டிருந்தான் தர்மா. அவனுடைய முகத்தை கவனித்தவள், “என்னாச்சு மாமா உடம்புக்கு முடியலையா?” என விசாரித்தாள்.

முதல் நாளிரவு நம்பியின் கட்சியை சார்ந்த ஒரு நபருக்கு அந்த பகுதியின் செல்வாக்கான ஆளால் ஒரு பிரச்சனை. தர்மாதான் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டு வந்தான். வீடு திரும்பும் போது விடிந்திருக்க, உறங்காமல் தயாராகி  தொழிற்சாலைக்கு வந்து விட்டான்.

அந்த உறக்கமின்மை இப்போது நல்ல தலைவலியை உண்டாக்கியிருந்தது.

பதில் சொல்லாதவனிடம், “தூங்க கூட விடாம அப்படி எங்கதான் உன்னை அப்பா அனுப்பி வச்சாரோ?” எனக் கேட்டாள்.

அதற்கும் அவன் ஏதும் சொல்லவில்லை. தன் கைப்பையிலிருந்து தலைவலிக்கான  தைலம் எடுத்தவள் அவனது நெற்றியில் தடவப் போக, சட்டென தலையை பின்னுக்கு இழுத்தவன் அவளை முறைத்தான்.

“தைலம் போட்டு விட்டதுக்காக எல்லாம் தாலி கட்ட சொல்ல மாட்டேன், பயப்படாத மாமா” என சொல்லிக் கொண்டே அவனுக்கு பின் பக்கம் வந்து நின்று கொண்டாள்.

அவன் மறுக்க மறுக்க விடாமல் இரண்டு பக்க நெற்றிப் பொட்டிலும் தைலம் வைத்து அழுத்தி விட ஆரம்பித்தாள்.

“சொன்னா புரியாதா கனி?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் கை பற்றி முன்னால் இழுத்தான்.

“உனக்குத்தான் புரிய மாட்டேங்குது. ஏன் உன் நெத்திய தொடக் கூடாதா நான்? உன் மனசுலதான் வேற எண்ணம் இல்லைல? அப்ப சும்மான்னு இரு, இல்லைனா உன் மனசுக்குள்ளேயும் ஏதோ இருக்குன்னு எடுத்துப்பேன்” என்றாள்.

“நீ பேசுறதுல ஏதாவது லாஜிக் இருக்கா கனி?”

“கண்டிப்பா இருக்கு” என்றவள் மீண்டும் அவனது நெற்றியை அழுத்தி விட ஆரம்பித்தாள்.

தான் தடுக்க தடுக்க அவளின் பிடிவாதம் அதிகமாகும் என நினைத்தவன் விட்டு விட்டான். அவனுக்கும் அந்த வலிக்கு அவளின் செய்கை இதமளித்ததுதான்.

இருக்கையில் சாய்ந்த வண்ணம் உறங்கியே விட்டான். அவனுக்கு கழுத்தில் வலி எடுக்குமோ என அவளுக்கு கவலையாகிப் போனது. அவன் அமர்ந்திருந்த அந்த நகரும் நாற்காலியை சோஃபா இருக்குமிடத்துக்கு மெதுவாக தள்ளிக் கொண்டு சென்றாள். அவனை சோஃபாவுக்கு மாற்றி விடலாம் என நினைத்து செயல்பட்டாள்.

அவளை விட அதிக எடை கொண்ட வலிமையானவனை அப்படி இடம் மாற்ற அவளுக்கு இலகுவாக இல்லை. சோஃபாவில் அவனது பாதி உடம்பை கிடத்தியவள் தடுமாறி அவன் மீதே விழுந்து விட்டாள்.

அந்த அதிர்வில் விழித்துக் கொண்டான் தர்மா. “என்ன செய்ற நீ?”என கடிந்து கொண்டே தன் மேல் கிடந்தவளை விலக்கி விட்டான்.

கனி அணிந்திருந்த சுடிதார் டாப் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்டிருந்தது. எம்ப்ராய்டரி நூல் பிரிந்து அவனது சட்டையின் பொத்தானில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்டது.

தர்மாவின் முக பாவத்திலேயே சங்கட பட்டுப் போனவளுக்கு நூல் சிக்கியதை அவனிடம் சொல்ல வார்த்தை எழவில்லை. அவனை நெருங்கி நூலை எடுத்து விடப் போனாள்.

அதை அறியாதவன், தான் கோவப்பட்டும் மீண்டும் தன்னிடம் நெருங்குகிறாளே என நினைத்து, “உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சிருந்தேன், என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என மிகவும் கடினமாக கேட்டான்.

நீர் நிறைந்த விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உன் கூடவே இருக்க கல்யாணம்தான் வழி, அதான் கல்யாணத்துக்கு கேட்டேன். சாகுற வரைக்கும் உன் கையை புடிச்சுகிட்டு நடக்க ஆசை பட்டேன். உன்னை மயக்கி அதை நிறைவேத்திக்க நினைக்கல. என் ட்ரெஸ்லேருந்து நூல் உன் சட்டைல மாட்டிக்கிச்சு” ரோஷம் மிகுந்திருந்தாலும் திணறித்தான் சொன்னாள்.

அதற்குள் அவளது கன்னங்களில் வழிந்தது கண்ணீர். அவனது பொத்தனாலிருந்து நூலை பிரிக்க சிரமமாக இருக்க, அதை அறுத்து விட முனைந்தாள். தடிமனான நூல் அறுபடாமல் போக,  ஆடையிலிருந்தே  நூலை பிரித்து விட்டாள்.

முழு எம்ப்ராய்டரியும் பிரிந்து கொண்டே வர, “இரு இரு” என்றான்.

அவளுக்கு அவனை விட்டு உடனே விலகியாக வேண்டும், அவன் சொல்வதை பொருட் படுத்தாமல், தன்மானத்தில்  துடிக்கும் இதழ்களை கடித்து அழுகையை அடக்கிக் கொண்டே வேக வேகமாக நூலை பிரித்தாள்.

அவளின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட தர்மா, “ஸாரி கனி, எனக்கு என்னன்னு புரியலை” என்றான்.

“உனக்கு எப்பதான் என்னை புரியும் மாமா? விடு கையை” என அதட்டினாள்.

“இரு, சிக்கியிருக்க நூலை எடுத்து விடுறேன்” என்றவன் முயற்சி செய்து பார்த்தான்.

அவனாலும் முடியாமல் போக பொத்தானை பிய்த்து விட்டான்.

“எனக்குள்ள புரையோடி போயிருக்க உன் நினைப்ப இப்படிலாம் பிச்சு எடுத்திட முடியாது மாமா” என சொல்லி விலகி அமர்ந்தாள்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழ முடியும்னு நினைக்கிறியா கனி? நீ நல்லா இருக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்” என்றான்.

“ஏன் உனக்கு என்னாகிடும்?”

“எனக்கே தெரியாது கனி. எங்கேருந்து என்ன வரும்னு எதுவும் சொல்ல முடியாது”

“அப்படி ஏதும் ஆனா நமக்கு கல்யாணம் ஆனாதான் நான் கஷ்ட படுவேன்னு நினைக்கிறியா மாமா?”

அவளை ஊன்றிப் பார்த்துக் கொண்டே, “கல்யாணம் ஆகலைனா வெறும் மனக் கஷ்டத்தோட போகும், கல்யாணம் ஆனா பாதிக்க படுவ கனி” என்றான்.

“உம்மேல எனக்கிருக்க அன்பை கல்யாணம்ங்கிற சடங்கு மாத்திடாது மாமா”

“கனி…” இயலாமையோடு அழைத்தான்.

“என்னை கல்யாணம் பண்ணிக்க மாமா, கனியை கஷ்ட படுத்தாம இருக்க என்ன செய்யணுமோ நீ செஞ்சிடுவ”

“கனி!”

“என்னை பார்த்தா நாள் போக போக மனச மாத்திக்கிறவ மாதிரியா தெரியுது? என் அம்மா பாதியிலேயே என் அப்பாவை விட்டுட்டு போகலையா? அவங்களுக்கு வெளியிலேருந்து என்ன ஆபத்து இருந்துச்சு? அதெல்லாம் நம்ம கைல இல்லை. நூறு வருஷம் தவிச்சு போய் வாழறதுக்கு ஒரு நாள் கிடைக்கிற ஆசை பட்ட வாழ்க்கை உன்னதமானது மாமா” என அவள் பேச பேச அமைதியாகவே இருந்தான்.

“கல்யாணம் ஆனாதான் நீ எனக்கு புருஷன் ஆவேன்னு நினைக்காத மாமா, இப்ப கூட எம்மனசுல அந்த இடத்துலதான் இருக்க” என அவள் சொல்லவும் ‘என்ன பேச்சு இது?’ என்பது போல பார்த்தான்.

“கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவா எடு மாமா” என சொல்லி வெளியேறி விட்டாள்.