Nenjai Koithaal Vanji 4 2 8010 தாமரைக்கு கட்டுக்கடங்காத கோவம். கனியை பார்த்தவர், “சொல்லுடி, எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற, மனசுல உள்ளதை இப்பவே சொல்லணும்” என கட்டளையாக சொன்னார். பெரியவர்களுக்கு அடங்கியே வளர்ந்த கனியால் அத்தையை மீற முடியவில்லை. “எனக்கு தர்மா மாமாவைத்தான் பிடிச்சிருக்கு, மாமாவைத்தான் கட்டிப்பேன்” என்றாள். தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான் தர்மா. பேத்தி சொல்வதை கிரகித்துக் கொண்ட பாட்டி, அவளின் கன்னம் பிடித்து, “அடி என் தங்கம்! இதை வெளில சொல்றதுக்கு என்னடி?” எனக் கேட்டார். தர்மாவை பார்த்த நம்பி, “என்னடா இது?” எனக் கேட்டார். என்ன பதில் சொல்ல என அவன் இருக்க, “உனக்கு தெரியுமா? ஏன்டா ஏன்… என் பொண்ணை உனக்கு கட்டி தர யோசிப்பேன்னு நினைச்சியாடா? ஏன் என்கிட்ட சொல்லாம போன?” எனக் கேட்டார் நம்பி. “ஏன்னா இந்த குடும்பத்துக்கு ஒரு தாமரை போதும்னு நினைச்சிருந்திருப்பான்” என ஏளனமாக சொன்னார் தாமரை. “அத்தை…” கெஞ்சலாக அழைத்தாள் கனி. “உனக்கு அறிவு மழுங்கி போச்சா? கல்யாண வாழக்கைக்கு அவனுக்கு என்ன தகுதி இருக்கு? தெரிஞ்சே உன் வாழ்க்கைய கெடுத்துக்க நினைச்சியா?” கனியிடம் கோவமாக கேட்டார் தாமரை. “என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க அத்தை, மாமாவைதான் மனசுல வச்சிருக்கேன், அது எப்பவும் மாறாது” என சொல்லி அறைக்கு சென்று விட்டாள் கனி. “உன் அம்மா கிடக்குறா விட்டுத்தள்ளு. உங்க கல்யாணத்தை நான் ஜாம் ஜாம்னு நடத்தி வைக்கிறேன்” என நம்பி சொல்ல, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார் தாமரை. “அவ என்னிக்குதான் சொல் பேச்சை கேட்ருக்கா? நீ நாள் பாரு” மகனிடம் சொன்னார் வேலம்மாள். “ஆளாளுக்கு பேசாதீங்க, எனக்கு கனியைனு இல்லை, யாரையுமே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை. கொஞ்ச நாள் போனா அவ மனசு மாறும், அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க, அதை விட்டுட்டு என்னை கட்டாய படுத்த நினைச்சா இங்கேருந்து போயிடுவேன் நான்” என சொல்லி வெளியில் சென்று விட்டான் தர்மா. நம்பியும் வேலம்மாளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றனர். “என்னடா ப்பா இது?” கவலையாக கேட்டார் வேலம்மாள். “உம்பேத்தி உறுதியா நின்னா அப்படி தனியாவே இருக்கட்டும்னு விட்ருவானா இவன்? கவலை படாம போம்மா” என்ற நம்பிக்கு உள்ளுக்குள் ஒரு வித மகிழ்ச்சி ஏற்பட்டது. தான் அபிமானம் வைத்திருக்கும் மருமகனே தன் மகளுக்கு மாப்பிள்ளையானால் அதைவிட அவருக்கு என்ன ஆனந்தம் இருக்க போகிறது? வீடு இயல்புக்கு திரும்ப ஒரு வாரமானது. கனியும் தர்மாவும் எதுவும் நடக்காதது போல இயல்பாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். நம்பியும் எதையும் கண்டுகொள்ளவில்லை. தர்மா இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என அறிந்து தாமரையும் நிம்மதியடைந்தார். ****** நம்பி தன் உயிர் நண்பன் இளம்பரிதியை தன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் முக்கிய பொறுப்பு கொடுத்து அமர்த்தினார். அரசியல் ஆர்வம் கொண்ட நம்பி தொழிலை நண்பனின் பொறுப்பில் விட்டு விட்டு நிம்மதியாக கட்சிப் பணிகளை பார்த்துக் கொண்டார். பரிதியை தனக்கு மாப்பிள்ளை என அண்ணன் கை காட்டவும் தாமரையும் மறுக்கவில்லை. பெரியவர்களின் ஆசியோடு சிறப்பாக நடந்த திருமணம். தாமரையை கண்களில் வைத்து பார்த்துக் கொண்டார் பரிதி. தர்மா பிறந்த பின்னர் பரிதிதான் மனைவியை மேலே படிக்க வைத்தது. தன் மனைவி இறக்கவும் தன் சோகத்தை மறக்க, அரசியலில் ஆழமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நம்பி. விரோதங்களும் வளர்ந்து வந்தன. நம்பிக்கு ஏதாவது என்றால் பரிதி பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். அடிதடியெல்லாம் சர்வ சாதாரணமாகிப் போனது அவர்களுக்கு. இதெல்லாம் வேண்டாம் என தாமரை எவ்வளவோ சொல்லி பார்த்தார். ‘நாம் இதை செய்யா விட்டால் நமக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடும், பொது மக்களையா துன்புறுத்துகிறோம், நம்மிடம் வம்பு செய்யும் யாரும் நல்லவர்கள் இல்லை, இதில் பட்டுக் கொள்ளாதே’ என சொல்லி மனைவியை சமாதானம் செய்வார் பரிதி. ஆனால் இதிலிருந்து ஏதேனும் ஆபத்து விளையுமோ என தாமரை பயந்து கொண்டேதான் இருந்தார். அப்படியொரு அரசியல் விரோதத்தால் நம்பி சென்ற காரில் மோதி விபத்து ஏற்படுத்த முயன்றனர் ஒரு தரப்பினர். நம்பிக்கு ஆபத்தில்லை என்ற போதும் பொது இடத்தில் வைத்து எதிரியை கடுமையாக கண்டித்தார் பரிதி, கைநீட்டியும் விட்டார். அது அத்தோடு நிற்கவில்லை. இருவரும் எங்கு சந்தித்தாலும் முட்டி மோதிக் கொண்டனர். ஒவ்வொரு முறையும் பரிதியின் கையே ஓங்கியிருக்க, தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தான் எதிரி. எதிரியால் தனியாக எதையும் செய்ய முடியவில்லை, ஆகவே கூலி ஆட்கள் வைத்து பரிதியை முடிக்க ஏற்பாடு செய்து விட்டான். இரட்டையர்களை சுமந்து கொண்டிருந்த ஏழு மாத கர்ப்பிணியான தன் மனைவியின் கையால் காலை சாப்பிட்டு விட்டு வெளிக் கிளம்பினார் பரிதி. தொழிற்முறையில் நடக்கவிருந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார். அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்துக் கொண்டது. அந்த நாளை இப்போது நினைத்தாலும் தாமரைக்கு மயக்கம் வந்து விடும். அப்போது தர்மா எட்டு வயது சிறுவன். தன் கணவரின் இறப்புக்கு வன்முறைதான் காரணம் என உறுதியாக நம்பினார் தாமரை. அண்ணன் மீது கோவம். எதிரிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர முயன்றார் தாமரை. அதெல்லாம் சரி வராது என்ற அண்ணனை தள்ளி வைத்தார். சிறைக்கு சென்ற எதிரி ஆறு மாத காலம்தான் சிறையில் இருந்தான். தகுந்த ஆதாரம் இல்லை, முதன்மை குற்றவாளி இவன் இல்லை என பெயில் கிடைத்து வெளியில் வந்து விட்டான். தாமரையின் மனம் நோகத்தான் செய்தது. கண்ணீர் விட்டார், வயிறு எரிய அவனுக்கு சாபம் இட்டார். ஆனால் மூன்று பிள்ளைகளின் அன்னையாக அதையே தூக்கி சுமக்காமல் தனக்கான வாழ்வாதாரத்தை கட்டமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அண்ணன் மீது கோவமிருந்த போதும் ஒரேயடியாக அவருடன் விலகாமல்தான் இருந்தார். நண்பனின் மரணத்துக்கு பழி தீர்த்துக் கொண்டார் நம்பி. அவரும் நேரடியாக இல்லாமல் ஆட்களை வைத்து செய்தார். அந்த எதிரிக்கும் குடும்பம் இருந்தது, குழந்தைகளுடன் அவனது மனைவி அடித்துக் கொண்டு அழுதாள். ஆதாரங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் நம்பியை யாரும் ஏதும் செய்ய முடியவில்லை. அண்ணனின் செயலை தாமரையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த பாவங்கள் தொடர்ந்து கொண்டே வரும், இனியும் உன் நிழலில் இருக்க மாட்டேன் என அண்ணனுடன் பேச்சை முறித்துக் கொண்டு விட்டார். இதெல்லாம் தர்மாவுக்கு அவன் மாமன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரியும். அந்த எதிரியின் குடும்பம் இன்னும் பகை சுமந்து கொண்டுதான் வாழ்கிறது. நம்பியின் உயிரை போக்க சில முயற்சிகள் நடந்ததையும் தர்மா அறிந்து கொண்டான். என் தந்தையின் மரணத்துக்கு முறையாக நான்தான் பழி தீர்த்திருக்க வேண்டும், அதை என் மாமன் செய்தார், அவருடன் நான் நிற்க வேண்டும் என தனக்கு தானே ஒரு நீதி கற்பித்துக் கொண்டு இங்கேயே இருந்து விட்டான் தர்மா. கணவரின் வழியிலேயே மகனும் செல்வதை தாமரையால் ஏற்க முடியவில்லை. போராடி தன் மகனை மீட்டுக் கொள்ள அவரால் இயலவில்லை. வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தன் தலைமகனை நினைத்து அவர் படும் வேதனையை சொல்ல சொற்கள் இல்லை. கண்களுக்கு புலப்படாத ஆபத்தை தன்னை சுற்றிலும் வைத்துக் கொண்டிருப்பவனை விரும்புகிறேன் என யார் சொல்லியிருந்தாலும் அதை ஏற்று, அந்த விருப்பத்துக்கு உடன்பட்டிருக்க மாட்டார் தாமரை. அப்படியிருக்க, தன் அன்புக்குரிய கனிஹா சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வார்?