Nenjai Koithaal Vanji 4 1 7773 நெஞ்சை கொய்தாள் வஞ்சி -4 அத்தியாயம் -4 “என்னடா, அந்த பையனை பற்றி விசாரித்து விட்டாயா?” என தான் சொன்ன வரன் பற்றி தர்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டார் நம்பி. தர்மா விசாரித்து விட்டான்தான், குறை சொல்ல ஏதுமில்லை, ஆனால் கனி இப்போதிருக்கும் மன நிலையில் உடனே திருமணம் பற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என நினைத்தான். ஆகவே, படிக்கட்டுமே மாமா என சொல்லி பார்த்தான். “அப்படியா, படிக்க ஆசை படுகிறாளா?” என நம்பியும் கேட்டார். ஆனால் வேலம்மாள் விடவில்லை, எங்கேயோ ஜோதிடம் பார்த்தாராம், இந்த வருடம் போனால் கனிக்கு திருமணம் கை கூடி வருவதில் சிரமம் ஏற்படும் என ஜாதகத்தில் இருக்கிறதாம். “அவ பொறந்த அன்னிலேருந்து வளர்த்தெடுத்து ஆளாக்கி விட்டவ நான்தான். நான் நல்லாருக்கும் போதே அவளுக்கு கல்யாணம் செய்யாம தள்ளி போட பார்க்காதீங்க. அவளுக்கு பிரசவம்னாலும் நான் இருந்துதான் பார்க்கணும், ஆளுங்க வச்சுன்னாலும் அவளுக்கு நெருக்கமான பொம்பள துணை வேணாமா? இப்பவே அவளுக்கு கல்யாணம் செஞ்சிடு” என மகனிடம் தீர்மானமாக சொல்லி விட்டார் வேலம்மாள். தாமரையின் காதுக்கு விஷயம் போக, “என்ன அவசரம், அவள் படிக்கட்டும்” என்றார். மகளையும் தன் பேச்சால் அடக்கி விட்டார் வேலம்மாள். திருமணம் செய்து கொண்டாலும் படிக்கட்டும் என யோசனை சொல்லி, நம்பி பார்த்த வரனுக்கு தாமரையும் சம்மதித்து விட்டார். தர்மாவுக்கே இக்கட்டான நிலையாகி விட்டது. அவனால் இந்த பெண் பார்க்கும் படலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல் நாள் பாட்டிதான் பேத்தியிடம் விஷயத்தை சொன்னார். அவள் தர்மாவை கோவமாக பார்த்தாள். “உனக்கு பிடிச்சாதானே கனி, வரட்டும்” என்றான் தர்மா. “ஏன் அவளுக்கு பிடிக்காம போக என்ன? நீயே எடுத்து கொடுக்காதடா, கெட்டதா செய்ய போறோம் நாம?” என கடிந்து கொண்டார் நம்பி. பாட்டியும், “இதை விட்டா இதுக்கு மேல நல்ல இடம் கிடைக்காது டா, எல்லா வகையிலும் இந்த பையன்தான் எனக்கு திருப்தி. ஜாதகம் கூட அமோகமா பொருந்தி போயிருக்கு” என்றார். கனியின் இறுக்கமான முகத்தை காண தர்மாவுக்கு சகிக்கவில்லை. விவரம் இல்லாமல் திருமணம் வேண்டாம் என்கிறாள், கல்யாணம் முடிந்த பிறகு மாறி விடுவாள் என நினைத்து அவளது பாட்டியும் அப்பாவும் அவளின் மறுப்பை பொருட்படுத்தவில்லை. பையன் வீட்டார் வருவதற்குள் தாமரை வந்து விட்டார். வேலம்மாள்தான் அழைத்திருந்தார். தாயில்லா பெண் விஷயத்தில் போய் என்ன வீராப்பு பார்ப்பது என நினைத்துதான் பல வருடங்களாக வந்திராத அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார். புகைப்படத்திலேயே கனிஹாவை பையனுக்கும் அவனது வீட்டினருக்கும் பிடித்திருந்தது. நம்பி தரப்பில் கூட பிடித்தம் இருப்பது போலவே பேசியிருக்க, முக்கிய சொந்தங்களையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டனர். மாமவைதான் பிடித்திருக்கிறது என சத்தம் போட்டு சொல்லி விட நினைக்கிறாள் கனி, ஆனால் பயம் வந்து தடுக்கிறது. தர்மாவும் விருப்பமில்லை என சொல்லியிருக்க இதை எப்படி கையாள என அவளுக்கு தெரியவில்லை. அத்தையை கண்டதும் இந்த திருமணம் வேண்டாம் என கண்கள் கலங்க சொன்னாள். “வர சொன்னவங்கள பாதில திருப்பி அனுப்ப முடியாது கனி, வந்திட்டு போகட்டும்” என சொல்லி விட்டார் தாமரை. பையன் வீட்டிலிருந்து வந்து விட்டனர். கனியை அழைத்து வந்தார் தாமரை. தன் தகப்பனாரின் அருகில் அமர்ந்திருக்கும் தர்மாவை பார்த்துக் கொண்டே நடந்து வந்தாள் கனி. ஹாலை நெருங்க நெருங்க, அவளின் கண்களில் திரண்ட கண்ணீர் காட்சியை மறைத்தது. அவளின் முகத்தைதானே எல்லோரும் பார்த்திருந்தனர். அனைவரின் முகத்திலும் புன்னகை மறைந்து குழப்பம் குடி கொண்டது. “கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு போறோமேன்னு கவலை” என நம்பி சமாளித்தாலும் அழும் அளவுக்கு மகளுக்கு என்னவானது என அவருக்கும் யோசனையாகி விட்டது. பையனும் பெண்ணும் நன்றாக பார்த்துக் கொள்ளட்டும் என பையனுக்கு எதிரில் அமர வைக்கப் பட்டாள் கனி. தலை நிமிராமல் கண்களை துடைத்துக் கொண்டாள் அவள். “இங்க இருக்கிற மாதிரியே எங்க வீட்லேயும் இருக்கலாம் கனிஹா” என்றார் பையனின் அம்மா. அழுத முகத்தோடு கனியை பார்க்கவுமே பெண்ணின் வாயால் அவளின் சம்மதத்தை அறிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்ட பையன் அவனது அப்பாவிடம் ரகசியமாக சொன்னான். அதை பற்றி முன் கூட்டியே சொல்லியிருக்கவில்லை அவன். ஆகவே அவனது அப்பா கடிந்து கொண்டார். அந்த பையன் உறுதியாக இருந்தான். அவர்கள் தனியாக பேசிக் கொள்ள நம்பியிடம் அனுமதி கேட்டார் பையனின் தந்தை. அவரோ தர்மாவை பார்த்தார். கனி உணர்ச்சிகளின் பிடியில் இருப்பதை புரிந்த தர்மாவுக்கு இந்த யோசனை உசிதமாக படவில்லை. கனி ஏதாவது சொல்லி மாமாவுக்கு தலைகுனிவு ஏற்படுமோ என பயந்தான். இவர்கள் சென்ற பிறகு கூட, ஏதாவது காரணத்தை சொல்லி திருமணத்தை தடுக்கலாம், அல்லது தள்ளி போடலாம் இப்போது கனியுடன் பையன் தனியாக பேசினால் அபாயம்தான். “நம்ம குடும்பத்துல அப்படி வழக்கம் இல்லை, அதுதான் மாமா யோசிக்கிறாங்க…” என பையனின் அப்பாவை பார்த்து சொன்னான் தர்மா. “இப்பலாம் இது பெரிய விஷயம் இல்லையே. எனக்கு அவங்க சம்மதம் கேட்கணும்” என அனைவரின் முன்னிலையிலேயே சொன்னான் பையன். “நான் கேட்டு சொல்றேன், இருங்க” என்ற தர்மா, கனியிடம் போய் நின்றான். “எல்லார் முன்னாடியும் சொல்ல இவளுக்கு சங்கடமா இருக்கலாம்” என அனைவருக்கும் பொதுவாக சொன்ன தர்மா, “உள்ள வா கனி” என்றான். எழுந்து கொண்ட கனிக்கு கண்ணீர் பெருகியது. சட்டென தர்மாவின் கைகளை பிடித்துக் கொண்டவள் அதில் முகம் புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள். செய்வதறியாது திகைத்துப் போனான் தர்மா. “வேணாம் மாமா, இந்த கல்யாணம் எனக்கு வேணாம் மாமா” என அழுது கொண்டே அவள் சொல்ல, “உள்ள வா முத” என சொல்லி அவளை அங்கிருந்து அழைத்து செல்ல பார்த்தான் தர்மா. தாமரையும் பாட்டியும் பயந்து விட்டார்கள். மகள் மீது பாசமில்லாதவர் இல்லையே நம்பி. அவரும் பயந்துதான் போயிருந்தார். “பொண்ணுக்கு தெரியுமா நாங்க வர்றது?” கோவத்தை மறைத்துக் கொண்டு கேட்டார் பையனின் அம்மா. “தெரியும்ங்க, ஆனா தப்பா ஏதும் இல்லை, அம்மா இல்லாம வளர்ந்தவ, புது இடத்துக்கு போகணும்னுலாம் நினைச்சி பயந்திருப்பா” என்றார் தாமரை. இந்த பெண் வேண்டாம் என அப்பாவிடம் சின்ன குரலில் சொன்ன பையன், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எழுந்து வெளியில் சென்று விட்டான். பையனின் அப்பா நம்பியின் மீது மிகுந்த மரியாதை உள்ளவர், ஆகவே நல்ல விதமாகவே “உறவாக முடியலைங்கிறது வருத்தம்தான் இருந்தாலும் புள்ளைங்க விருப்பம்தானே முக்கியம்? நீங்க என்ன ஏதுன்னு பாருங்க” என சொல்லி கிளம்பினார். நம்பிக்கு மகளின் மீது கோவமாகி விட்டது. என்ன நினைத்து இப்படி செய்கிறாள்? வந்தவர்கள் சென்ற பிறகு திருமணம் வேண்டாம் என பிடிவாதம் செய்திருக்கலாம், அதை விட்டு அனைவரின் முன்னிலையிலும் அவமான படுத்தி விட்டாளே என ஆத்திரம். தர்மாவின் கையில் முகம் பொதிந்து அழுது கொண்டிருந்தவளின் அருகே வந்த நம்பி, வேகமாக மகளை பிடித்து இழுத்தார். தர்மா இடையில் புகுந்திருக்கா விட்டால் அவன் முதுகு ஏற்ற அடியை கனி வாங்கியிருப்பாள். “தள்ளி போடா நீ!” கோவமாக சத்தமட்டார் நம்பி. கனியின் அருகில் சென்று அவளை பிடித்துக்கொண்டார் தாமரை. “பொம்பள புள்ளைய கை நீட்டி அடிப்பியாடா? அது உனக்கு என்ன பாவம்டா செஞ்சது?” என மகனிடம் கேட்டு அழுதார் வேலம்மாள். வீட்டு வேலையாட்கள் வேடிக்கை பார்த்து நிற்க, ஆசைத்தம்பியை பார்த்தான் தர்மா. மற்றவர்களை அப்புறபடுத்திய ஆசைத்தம்பியும் வெளியில் போய் நின்று கொண்டான். “நீ கொடுக்கிற செல்லம்தான், கல்யாண வயசாகலையா? நல்ல இடமாதானே பார்த்து வரவச்சிருக்கேன், இப்படி அசிங்க படுத்திட்டாளே… அழுதா ஆச்சா?” அம்மாவிடம் இரைந்தார் நம்பி. “நீங்க உள்ள வாங்க மாமா?” என நம்பியை உள்ளே இழுத்து செல்ல முயன்றான் தர்மா. “விடுடா என்னை. அவ யாரையும் ஆசை படறாளான்னு தெரிஞ்சுக்கனும்னு சொன்னதானே? அதுக்கும் மதிப்பு கொடுத்து உன்கிட்ட நான் கேட்டேன்லடா? நீயும் அவளுக்கு அப்படி ஏதும் இல்லைனு சொன்னதானே? அப்புறம் எதுக்கு இப்படி நடந்திருக்கா?” என நம்பி ஆதங்கப் பட்டு பேசவும் அழுகையை நிறுத்திய கனி தர்மாவை கோவமும் ஏமாற்றமுமாக பார்த்தாள். கவனித்து விட்ட தாமரை, “எதுக்கு அவனை பார்க்கிற? என்ன கனி, உண்மையை சொல்லு” என்றார் தாமரை. இப்போது எல்லோரின் பார்வையும் கனியிடம் சென்றது. “சும்மா எல்லாரும் அவளை கார்னர் செய்ய வேணாம். இப்போ கல்யாணம் வேணாம்னா விடுங்க, அவ ஃபேக்டரி வந்து போய் இருப்பா” என வேகமாக சொன்னான் தர்மா. தர்மாவை மீறி தன் மனதில் உள்ளதை யாரிடமும் சொல்ல விருப்ப படவில்லை கனி. இந்த வருடமே இவளுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என வேலம்மாள் புலம்ப, வேறு மாப்பிள்ளை பார்த்து அவர்கள் முன்பும் என்னை அவமானம் செய்வாள் உன் பேத்தி என பதிலுக்கு கோவமாக பேசினார் நம்பி. “இருக்கிறது ஒரே பொண்ணு, அது மனசு அறிஞ்சு நடக்க தெரியாம இப்படி கோவத்துல கத்துறதெல்லாம் எந்த வகைல சேர்க்கிறது?” என அண்ணனை சாடையாக பேசி தன் அதிருப்தியை காட்டினார் தாமரை. “என்ன குறை வச்சேன் அவ மருமகளுக்குன்னு உம் பொண்ணு இப்படி பேசுறாம்மா?” என அம்மாவிடம் நீதி கேட்டார் நம்பி. கனியின் சிறு வயதிலிருந்து தந்தையின் அன்புக்காக அவள் ஏங்கியதையும் அண்ணன் எங்கே தவறிப் போனார் என்றும் நேரடியாக சொல்லிக் காண்பித்தார் தாமரை. பேச்சு கொஞ்சம் சூடாகிப் போனது. “இவளுக்கு பரிஞ்சு பேசினது போதும், இன்னிக்கு இவ நடந்துகிட்ட முறை சரியா? இப்படி நடக்க எதாவது ஒரு காரணம்… ஒரு சரியான காரணம் இவளை சொல்ல சொல்லு” என தன் தங்கையிடம் நேரடியாக கேட்டார் நம்பி.