நெஞ்சை கொய்தாள் வஞ்சி -3

அத்தியாயம் -3

இரண்டு நாட்களாக கனிஹாவின் நேரம் நிதிலாவுடன் மிகவும் கொண்டாட்டமாக கழிந்திருந்தது. 

ஏதோ வேலையாக  புதுக்கோட்டை வந்திருந்த தர்மா, கனியையும் அழைத்து சென்று விடலாம் என வீட்டுக்கு வந்திருந்தான். கல்லூரி முடித்து முன்பே வீட்டுக்கு வந்திருக்க வேண்டிய அஜய் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. 

நேரத்தை பார்த்தவன், “என்ன அவனை இன்னும் காணோம், ஏதும் சொன்னானா?” என தங்கையிடம் கேட்டான். இல்லை என நிதிலா சொல்லவும் அம்மாவிடம் கேட்டு வரச் சொன்னான். 

“அவன் என்ன சின்ன பிள்ளையா வந்திடுவான்” என்றார் தாமரை. 

தம்பி வரட்டும் என அமர்ந்து விட்டான் தர்மா. அண்ணன் இருப்பது முன்பே அஜய்க்கு தெரியாது, வீட்டின் வெளியில் அண்ணனின் காரை கண்டதுமே வெளியில் சென்று விடலாமா என யோசித்தான். 

நெற்றியில் பிளாஸ்டர் போட்டுக் கொண்டு முகத்தில் ஆங்காங்கே கன்றிப் போயிருந்த நிலையில் இருந்த அஜய்யை கண்டதுமே, “என்னப்பா என்னாச்சு?” என பரபரப்பாக விசாரித்தான் ஆசைத்தம்பி. இனி இங்கிருந்து செல்வதில் அர்த்தம் இல்லை என புரிந்து, விபத்து என அவனுக்கு பதில் சொல்லி உள்ளே சென்றான். 

அஜய்யை கண்டதும் பாட்டிதான் பதறிப் போய் விசாரித்தார். தம்பியை உற்று பார்த்த வண்ணம் இருந்தான் தர்மா. பைக்கிலிருந்து விழுந்து விட்டேன் என அஜய் சொல்லவுமே ஆசைத்தம்பி உள்ளே வந்தான். அவனிடம் தன் தம்பியை கண் காட்டி, என்னவென விசாரிக்க சாடையில் சொல்லி வெளியில் அனுப்பி வைத்தான் தர்மா.  

தாமரை வந்து மகனை பார்த்து விட்டு கவலை பட்டார். பார்த்து வர மாட்டாயா என கடிந்து கொண்டார். முதலுதவி எல்லாம் செய்து கொண்டேன், ஓய்வெடுக்க செல்கிறேன் என சொல்லி அண்ணனை தவிர்த்து விட்டு அறைக்கு சென்று விட்டான் அஜய். 

கனியும் நிதிலாவும் அவன் அறைக்கு போய் ஏதோ பேச, அவன் எரிந்து விழவும் வெளியில் வந்து விட்டனர். 

அதற்குள் ஆசைத்தம்பி தர்மாவிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். தன் தம்பியின் அறைக்கு சென்ற தர்மா அறைக் கதவை அடைத்து விட்டான். 

படுத்திருந்த அஜய் பயந்து போனவனாக அண்ணனை பார்த்தான். 

“என்னாச்சு?” என கடினத் தொனியில் கேட்டான் தர்மா. 

அண்ணனின் கண்களை சந்திக்காமல், “பைக்லேருந்து விழுந்திட்டேன்” என்றான் அஜய். 

“நடந்தது என்னன்னு தெரியாமத்தான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்னு நினைச்சியா?”

“அது அண்ணா…”

“எங்கிட்டேயும் வாங்கி கட்டிக்காம இருக்கணும்னா ஒழுங்கா உண்மையை சொல்லு” என தர்மா சொல்லவும், தன்னை மீறிக் கொண்டு அனைத்தையும் சொன்னான் அஜய். 

அந்தப் பெண்ணிடம் இன்னும் நட்பு ரீதியில் பழகிக் கொண்டுதான் இருக்கிறான் அஜய். அவன் தனியாக சிக்கிக் கொண்ட நேரத்தில் தீபக் அவனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அடித்திருக்கிறான். கல்லூரிக்கு வெளியில் நடந்ததால் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்லவில்லை. 

அஜய்யும் நாளை தன் நண்பர்களுடன் சேர்ந்து அவனுக்கு திருப்பி தர திட்டம் போட்டிருக்கிறான். 

“ஏதாவது ஆச்சுன்னா எனக்கு கால் பண்ண சொல்லி சொன்னேன்லடா?” அதட்டினான் தர்மா. 

“என் பிரச்சனை நான் பார்த்துப்பேன்” என்றான் அஜய். 

“உன் பிரச்சனையா?” என தர்மா அதட்ட, அண்ணனை நேராக பார்க்கும் திராணி இல்லாமல் குனிந்து கொண்டான். 

“அந்த பொண்ணு கூட பழக வேணாம்னு உனக்கு நான் சொல்லலை?” கோவமாக கேட்டான் தர்மா. 

அஜய் பதில் தராமல் போகவும், வெளியேற போனான் தர்மா. 

“நாளைக்கு சொல்லிடுறேன் ண்ணா” என்றான் அஜய். 

ஒரு நொடி நின்ற தர்மா, “இதை நான் பார்த்துக்கிறேன், பதிலுக்கு பதில்னு நீ போய் அந்த பசங்கள்ட்ட வம்பு பண்ணினதா தெரிஞ்சது தொலைச்சிடுவேன் உன்னை!” என மிரட்டலாக சொல்லி அறையை விட்டு சென்றான்.

 கனியை சற்று நேரம் காத்திருக்க சொன்ன தர்மா ஆசைத்தம்பியுடன்  வெளியேறி விட்டான். இரவு உணவு முடிந்த பிறகும் தர்மா வராமல் போகவும் அவனுக்கு அழைத்தாள் கனி. 

அழைப்பை ஏற்கவில்லை தர்மா. மீண்டும் மீண்டும் அழைத்தால் வீடு வந்த பிறகு திட்டுக்கள் விழும் என்பதால் அமைதியாக இருந்து கொண்டாள் கனி. 

அடுத்த நாள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் நிதிலா உறங்க சென்று விட்டாள். 

“உனக்கும் தூக்கம் வந்தா நீயும் போய் தூங்கு, எந்த வம்பு சண்டைக்கு போயிருக்கானோ, என் உயிரை வாங்கன்னு வந்து பொறந்து தொலைச்சிருக்கான்” என கனியிடம் சொன்னார் தாமரை. 

“வர்றேன்னு சொன்னா கண்டிப்பா மாமா வந்திடும். நாளைக்கு நித்தியும் கூட இல்லாம இங்க என்ன பண்றது, நீங்க தூங்க போங்க அத்தை” என்றாள் கனி. அனைவரும் தூங்க போய் விட்டால் இவளை யார் வழியனுப்பி  வைப்பது என நினைத்து அவளுடனே அமர்ந்து விட்டார் தாமரை. 

பத்து மணி போலத்தான் தர்மாவின் கார் வந்தது. வீட்டிற்குள் வராமல் கனிக்கு அழைத்து அவளை வெளியில் வர சொன்னான். கனியுடன் தாமரையும் வெளியில் வந்தார். 

கனி காரில் ஏறிக் கொள்ள, “மெதுவா ஓட்டுப்பா காரை” என ஆசைத்தம்பியிடம் சொன்னார் தாமரை. 

தர்மாவின் கண் சாடை பார்த்து, “நீங்க உள்ள போங்கம்மா” என்றான் ஆசைத்தம்பி. 

“கிளம்புங்க நான் போயிக்கிறேன்” என தாமரை சொல்லியும் கார் புறப்படவில்லை. 

சலிப்பான பார்வையுடன் உள்ளே சென்று விட்டார் தாமரை. 

“என்னாச்சு மாமா, ஏன் உன் முகம் சரியில்லாம இருக்கு?” என விசாரித்தாள் கனி. 

“நல்லாத்தான் இருக்கேன்” என்றவன் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள, கனியால் மேற்கொண்டு பேச முடியவில்லை. 

தீபக்கின் பெற்றோரிடம் எச்சரிக்கை செய்யத்தான் அவனது வீட்டுக்கு சென்றிருந்தான் தர்மா. அவன் நினைத்தது போல பாவம் அவர்களுக்கு மகனின் நடத்தையெல்லாம் தெரியவில்லை. 

‘நாங்கள் கண்டிக்கிறோம், எங்கள் மகனை எதுவும் செய்து விடாதீர்கள்’ என தீபக்கின் பெற்றோர் கெஞ்சலாக கேட்டுக் கொண்டனர். 

படிக்கும் மாணவன் என்பதால்தான் நிதானமாக கையாண்டான் தர்மா. இன்னொரு முறை இப்படி ஆனால் உங்களிடம் சொல்லவெல்லாம் வர மாட்டேன் என எச்சரிக்கையாக சொல்லி புறப்பட்டு விட்டான். 

வழியில் மஹாவை காண நேரிடும் என அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. சாலையோரத்தில் கையில் குழந்தையோடு பரிதவிப்பும் பதட்டமுமாக நின்றிருந்தாள். 

இரவு நேரம், அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சாலை, அப்படியே போக தர்மாவுக்கு மனம் வரவில்லை. ஆசைத் தம்பியை விட்டுத்தான் என்னவென விசாரிக்க சொன்னான். 

அவளின் மகளுக்கு உடம்புக்கு முடியாமல் மருத்துவமனைக்கு செல்ல, வழியில் கார் நின்று விட்டது. என்ன பிரச்சனை என டிரைவருக்கு தெரியவில்லை, மெக்கானிக் யாரையோ கூப்பிட்டிருக்கிறானாம். 

குழந்தைக்கு முடியவில்லை எனவும் எதையும் யோசிக்கவில்லை தர்மா, அவனது காரிலேயே ஏற சொல்லி விட்டான். தயக்கம் இருந்தாலும் ஏறிக் கொண்டாள் மஹா. அவளது காரின் டிரைவரும் உடன் ஏறிக் கொண்டான்.

அவளின் பெற்றோர் வெளியூர் சென்றிருக்கிறார்களாம். நல்ல காய்ச்சலில் கண்கள் கூட திறக்காத அந்த பிஞ்சுக் குழந்தைக்கு என்னவோ என தர்மாவுக்கு மனம் அடித்துக் கொண்டது. 

பரிசோதனைகள் செய்ய சொல்லியிருந்தனர். ரிப்போர்ட் வந்து பயப்பட ஒன்றுமில்லை என மருத்துவர் சொன்ன பிறகு, அவளை வீட்டில் விட்டு விட்டே வருகிறான். 

உன் திருமண வாழ்க்கைக்கு என்ன நேர்ந்தது என தொண்டை வரை வார்த்தைகள் வந்தாலும் அவனால் அவளிடம் கேட்டுக் கொள்ள முடியவில்லை. மஹாவும் இவனது கண்களை சந்திக்க மறுத்து விட்டாள். 

தர்மாவுக்கு என்னவோ போலாகி விட்டது. அன்பு செலுத்திய ஒருத்தியுடன் சேர்ந்து வாழ முடியா விட்டாலும் அவள் எங்கேயோ நன்றாக வாழ்ந்தால் அது வேறு, ஏதாவது பிரச்சனையில் இருந்தால் மனம் பாதிக்கத்தானே செய்யும்?

வீட்டுக்கு வந்து விட்டனர். தர்மா இன்னும் சாப்பிடிருக்கவில்லை என்பதை கனியிடம் ரகசியமாக  சொன்னான் ஆசைத்தம்பி.  அப்படியே ஒரு வார்த்தை மஹாவை பார்த்தான் என்பதையும் சொல்லி விட்டான். 

அறைக்கு போய் விட்டான் தர்மா. வீட்டில் உணவு எதுவும் மீதமிருக்கவில்லை. கொடுத்தாலும் சாப்பிடுவானா தெரியாது. பால் காய்ச்சி கெலாக்ஸ் போட்டு எடுத்து சென்றாள் கனி. 

“ஆசைத்தம்பிக்கு வேற வேலை இல்லை, கண்டதையும் கற்பனையா சொல்லுவான். நீ தூங்க போ” என்றான் தர்மா. 

“மெனெக்கெட்டு  செஞ்சு எடுத்திட்டு வந்திருக்கேன், அதுக்காவது மரியாதை கொடு மாமா” என்றாள். 

வேகமாக கெலாக்ஸை விழுங்கியவன் காலி கிண்ணத்தை அவளின் கையில் கொடுத்தான். 

“இன்னும் மஹாவை நினைச்சிட்டு இருக்கியா மாமா?” என பயந்து கொண்டேதான் கேட்டாள். 

தர்மா அவளை முறைக்க, “வாயை தொறந்து சொல்ல மாட்ட, அப்ப என் இஷ்டத்துக்கு ஏதாவது நினைச்சுப்பேன்” என்றாள். 

“ரெண்டு நாள் முன்னாடி என்கிட்ட வாங்கி கட்டினது போதலையா உனக்கு? அவ வேற ஒருத்தன் பொண்டாட்டி. இனி அவளை பத்தி ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது” என்றான் தர்மா. 

“நீயும் அப்படியே இரு” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள்.