“அடிச்சிட்டு நிக்கிற இந்த ரெண்டு கோஷ்டில நீ யார் பக்கம் மாமா?” என சீண்டினாள் கனி.

“ரெண்டு பக்கமும் கனி” கண்கள் சிமிட்டி சொன்னான் தர்மா.

அவள் முறைக்க, “இப்பல்லாம் சண்டைங்கிற வார்த்தை கூட எனக்கு அலர்ஜியாகி போச்சு கனி. அந்தப் பக்க காத்து கூட வேணாம்னுதானே இந்த பக்கம் உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்?” என்றான் அவன்.

கணவனின் பேச்சில் திருப்தி கொண்டவளாக சில்லென்ற கடல் காற்றை அனுபவித்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

“போதும், இந்த காத்து உனக்கு ஒத்துக்காம போயிடும்” என சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டான்.

“நடக்கிற எல்லாம் எனக்கு தெரியணும்னு சொன்னா அவளுக்கு ஸ்பை வேலை பார்க்கிறியாடா நீ?” எனக் கேட்டு கோபுவுக்கு கொஞ்சம் டோஸ் விட்டான்.

கோபுவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலாக, ஆசைத்தம்பி குளு குளு என ரசித்து பார்த்தான்.

தர்மாவும் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. நேரத்தோடே கிளம்பி விட்டான்.

பதட்டமில்லாமல் ஒரு வித ரிதத்தோடு வாழ்க்கை சென்றது.

தாமரைக்கு மகளிடம் செட் ஆகி விட்டது. அவளின் பிரசவத்தை முடித்து விட்டு அவளால் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியும் என ஆன பிறகுதான் வருவதாக இருக்கிறார். அதியனையும் பள்ளியில் சேர்த்தாகி விட்டது.

தன் உடல்நிலையில் மாற்றங்களை கவனித்த கனி கணவனிடம் பகிர்ந்து கொண்டாள். அவனுக்கு ஒரே ஆனந்தம். குழந்தைதான் என கனிக்கும் உறுதியாக தோன்றியது.

மருத்துவமனையில் காட்டி உறுதி படுத்திக் கொண்டார்கள். பாட்டிகளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.

“எப்படியோ குடும்பம் பெருசானா சரிதான் அண்ணி. கிஃப் ட்டா உன் பெரியம்மா சைட்ல ஒரு பொண்ணு இருக்கிறதா சொன்னியே, இன்ஸ்டா ஐடி சொல்லு அண்ணி” என கனியிடம் கேட்டான் கைப்பேசியில் பேசிய அஜய்.

“சீரியசா கேட்கிறியா அஜய்? ஏன் அங்க ஒன்னும் செட் ஆகலையா?” என விசாரித்தாள் கனி.

“யாரும் சிங்கிலாவே இல்லை அண்ணி. ரொம்ப லோன்லியா ஃபீல் ஆகுது” என உதடுகளை பிதுக்கி பொய்யாக அழுதான்.

அருகில் அமர்ந்து இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த தர்மா, மனைவியை கூர்மையாக பார்த்தான். இயல்பாக எழுந்து செல்வது போல தள்ளிப் போய் விட்டாள் கனி.

நான்  பெரியம்மாவிடம் பேசுகிறேன், புகைப்படத்தை பார், உங்கள் இருவருக்கும் பிடித்திருந்தால் பேசிக் கொள்ள தொடங்குங்கள், புரிதல் ஏற்பட்டு விட்டால் கல்யாணத்துக்கு பேசலாம் என பொறுமையாக அவனிடம் சொன்னாள்.

“நீ என்ன அதுக்குள்ள என்னை கோர்த்து விட பார்க்கிற, கல்யாணம் எல்லாம் இப்ப இல்லை” என்றான் அஜய்.

“உடனே செஞ்சுக்க வேணாம், ஆனா உறுதி பண்ணி வச்சுக்கலாம். இது ஓகே இல்லைனா ஐடி எல்லாம் என்கிட்ட கேட்காத. என்னால மாமாவை சமாளிக்க முடியாது” என்றாள் கனி.

“எங்க என் அண்ணனுக்கு பயந்த உன் மூஞ்ச காட்டு பார்ப்போம்” என கிண்டல் செய்தான் அஜய்.

“இந்தா பார்த்துக்க” என்ற கனி கண்களை பெரிதாக்கிக் கொண்டு திரையை பார்த்தாள்.

வேடிக்கையாக பயந்த அஜய், “ஓகே உன் பெரிம்மாட்ட பேசு” என்றான்.

“அத்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பேசுறேன் அஜய்”

“எம்மேல என்ன காண்டு? அம்மாகிட்ட திட்டு வாங்குற மைண்ட் செட்ல இல்லை நான். நீ போ…என் விஷயமா யார்கிட்டயும் பேச வேணாம்” என்றவனிடம் அத்தை திட்டாமல் உன் அண்ணன் பார்த்துக் கொள்வார் என உறுதி தந்தாள்.

தர்மாவிடம் இதையெல்லாம் கனி சொல்ல, “அவனுக்கு என்ன வயசு? கொஞ்ச நாள் போகட்டும்” எனதான் சொன்னான்.

அதற்குள் அந்த பெண்ணுக்கு வேறு இடம் முடிந்தால் என்ன செய்வது? எனக்கு அவளை தெரியும், நல்ல பெண், அஜய்க்கு பொருத்தமாக இருப்பாள், அத்தோடு இப்போது பேச்சை ஆரம்பித்தாலும் திருமணத்துக்கு நாள் ஆகும், அத்தையிடம் நீதான் பேச வேண்டும் என்றெல்லாம் பேசி கணவனை சம்மதிக்க வைத்து விட்டாள்.

“ஹ்ம்ம்… அவன் உன் கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டான் போல” எனக் கேட்டான் தர்மா.

“அது தெரியலை மாமா. முன்னாடிலாம் அஜய்க்கு என்னை கண்டாலே ஆகாது, இப்ப என்னமோ நிதிகிட்ட சொல்லாத விஷயத்தை கூட என்கிட்ட ஷேர் பண்ணிக்கிறான். ஏன் உனக்கு என்ன கஷ்டம்?” என்றாள்.

தர்மாவுக்கு என்ன கஷ்டம் இதில். தன் அம்மா தம்பி தங்கை விஷயத்தில் தன்னை விட அதிக அக்கறை காட்டும் மனைவி இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே!

தாமரை இங்கு இல்லாததால் அதியனும் இவர்களுடன்தான் உறங்குகிறான். அம்மா தட்டிக் கொடுத்தால்தான் உறங்குவேன் என ஒரே அடம். அவனோடு சேர்ந்து கனியும் உறங்கி விட்டாள்.

உறக்கத்தில் பக்கத்தில் இருப்பவர் மீது ஏறி படுத்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் அதியனிடம் மறையவில்லை. கனிக்கு தொந்தரவாகி விடுமே என நினைத்து இருவரையும் பிரித்து நடுவில் தர்மா படுத்துக் கொண்டான். அந்த அரவத்தில் விழித்துக் கொண்டாள் கனி.

“தூக்கம் டிஸ்டர்ப் ஆகிடுச்சா, தூங்கு தூங்கு” என சொல்லி மனைவியை தட்டிக் கொடுத்தான் தர்மா.

கணவன் மேல் வாகாக படுத்துக் கொண்டவள், “இந்த நேரம் அத்தை கூட இல்லை, ஃபர்ஸ்ட் டெலிவரி அப்போ அவங்கதான் எனக்கு எல்லாம் பார்த்தாங்க. அப்பத்தா ஆத்தாக்கு எல்லாம் வயசாகிடுச்சு. எனக்கு கொஞ்சம் டென்ஷனாதான் இருக்கு மாமா” என்றாள்.

“என்னடி டென்ஷன், நான் பார்த்துக்க மாட்டேனா?”

“எப்படி அதியன் வயித்துல இருந்தப்போ பார்த்துகிட்ட மாதிரியா?”

“அப்பவும் என் கூட நீ இருந்திருந்தா எல்லாம் நானே பார்த்திருப்பேன். நீ ஒரு பக்கம் வீம்பு காட்டினா உன் அத்தை இன்னொரு பக்கம். நான் என்ன செய்ய? இந்த முறை அப்படிலாம் ஆகாது. பயமில்லாம இரு, டெலிவரி அப்போ கூட உன் கூடவே இருப்பேன்” என்றான்.

அவனது அன்பான வார்த்தைகளில் மனம் கனிந்தவள் தனதன்பை முத்தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினாள்.

“கிறுக்கி! போதும் தூங்குடி” என்றான்.

 “உம்மேல ஆசை வந்ததுக்கு அப்புறம் எப்படி இதை நடத்திப்பேன்னு எவ்ளோ பயந்திருக்கேன் தெரியுமா? இருந்தாலும் ரொம்பத்தான் மாமா என்னை ஆட்டி படைச்சிட்ட” என்றாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி   நான் உன்னை படுத்தினேன், கட்டிக்கிட்டப்புறம் நீயில்லடி என்னை ஆட்டி படைச்ச!” என்றவன் அவளின் முதுகை மென்மையாக தடவிக் கொடுத்தான்.

“நான் என்ன செஞ்சேன், நீதான் எல்லாம்” என்றாள்.

“சும்மா சொல்லாத, என்னை விட்டுட்டு உன் அத்தையோட போய் உட்கார்ந்துகிட்டது நீயா நானா?”

“நான்தான்…” சின்ன குரலில் சொன்னாள்.

“ம்ம்ம்… சும்மா இருந்தவன் மனசை கெடுத்து நீ இல்லாம வாழ முடியாத நிலைக்கு பழக்கி விட்டுட்டு திடீர்னு வுட்டுட்டு போய்ட்டு பேச்சை பாரு” என சொல்லிக் கொண்டிருந்தாலும் அவளின் முதுகு கை இடுப்பு என இதமாக பிடித்து விடுவதையும் வருடிக் கொடுப்பதையும் நிறுத்தியிருக்கவில்லை அவன்.

“கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்னை விட்டுட்டு வாழ முடியாதுன்னு புரிஞ்சுதா மக்கு மாமா? எனக்கெல்லாம் எப்பவோ அப்படி ஆகிப் போச்சு. உன்னை மனசுல நினைச்சு அப்பா அத்தையோட சேர்த்து உன்கிட்டேயும் அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், ஆனா அதுக்கெல்லாம் ஒர்த்’தான் மாமா நீ” என்றவளுக்கு உறக்கத்தில் கண்கள் சொருகியது.

“ம்ம்…  பேசு பேசு வாய்க்கு வந்ததை பேசு” என கிண்டலாக சொன்னான்.

“இவன் உண்டானப்பதான் உன்கிட்ட சீராட முடியலை. இந்த முறை குறையில்லாம பார்த்துக்க” என தெளிவாக பேசிக் கொண்டிருந்தவள், “ஒழுங்கா சாப்பிடு மாமா, முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளற ஆரம்பித்தாள்.

மெதுவாக அவளை படுக்கையில் கிடத்தியவன், “ஷ் தூங்கு கனி!” என சொல்ல, அவளும் அமைதியாகி விட்டாள்.

கனியுடன் திருமணம் நடந்திருக்கா விட்டால் இப்போது மனதில் பரவிக் கிடக்கும் இனிமையெல்லாம் கனவில் கூட சாத்தியமில்லை என்பதை உணர்ந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

கனி உறக்கத்திலேயே அவன் மீது கால்களை போட்டுக் கொண்டு அணைவாக அவனை பிடித்துக்கொள்ள, அதியன் புரண்டு வந்து அவன் மீது குப்புற படுத்துக் கொண்டான்.

தன் காதல் ஒரு பக்கம், காதலால் விளைந்த பொக்கிஷம் இன்னொரு பக்கம் என மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைக்க அதை அனுபவித்துக் கொண்டே துயில் கொள்ள ஆரம்பித்தான் தர்மா.

தர்மா, கனிஹா இருவருக்கும் இனியும் இந்த அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு நிலைக்கட்டும்!

நிறைவுற்றது.