“ஏன் மாமா இப்படி பண்ற? அவன் ரொட்டீன் ஏன் மாத்துற?” என கடிந்து கொண்டாள் கனி.

ஒரு நாள்தானே என தர்மா சமாதானமாக சொன்னான். தாமரையோ அதியனுக்கும் படிக்கும் வயது வந்து விட்டது, பகலில் உறங்காமல் பழக்க படுத்துவது நல்லதுதான் என்றார்.

“வீட்ல இருக்கிற வரை தூங்கட்டுமே அத்தை, சட்டுன்னு பழக்கத்தை மாத்த முடியாதில்லத்தை” என்றாள் கனி.

“ஸ்கூல் போயும் தூங்குவான், சொல்றதை கேளு” என தாமரை கண்டிப்போடு சொல்ல, தன் கணவனை முறைத்து விட்டு சென்றாள் கனி.

அம்மாவிடம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை தர்மா. முடிந்த வரை அவரை எதிர்த்து பேசுவதில்லை என்ற முடிவோடு அல்லவா இருக்கிறான். கனிக்கும் அவரிடம் பேச தயக்கமும் பயமும் என்பதால் நீயும் கேட்க மாட்டேன் என்கிறாய் என கணவனோடு தனிமையில் சண்டை போடுவாள்.

தர்மா தன்னை முழுமையான குடும்பஸ்தனாக மாற்றிக் கொண்டு விட்டான். மனைவி கோவத்தில் என்ன பேசினாலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பான். அவளே அலுத்துப் போய் அமைதியாகி விடுவாள். தன்னைக் கொண்டு இவர்களுக்குள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதே தாமரைக்கு தெரியாது.

அதியனுக்கு நல்ல பள்ளியாக பார்க்க வேண்டும் என மகனிடம் சொன்னார் தாமரை. வீட்டுக்கு பக்கமாக இருக்கும் பள்ளியிலேயே சேர்த்து விடலாம் என்றான் தர்மா. அது வேண்டாம் என்றவர் சற்று தூரமாக உள்ளதை சொன்னார். அது வேண்டாம் என தர்மா சொல்ல, தாமரையோ தான் சொல்லும் பள்ளியில்தான் கட்டமைப்பு நன்றாக இருக்கிறது என வாதாட ஆரம்பித்து விட்டார்.

வேலம்மாள் பாட்டி வந்து, “அவன் பையன் விஷயத்துல அவன் ஏதோ முடிவா சொல்றான்னா விடேன்டி!” என அதட்டினார். அன்னலக்ஷ்மி பாட்டியும், “இவளுக்கு இவ சொல்றதுதான் நடக்கணும்” என நொடிப்பாக சொன்னார்.

தாமரை அவர்களிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

“ஏய் என்ன என் அம்மாவையே குறை சொல்வீங்களா?” என செல்லமாக தன் பாட்டிகளை கண்டித்தான் தர்மா.

“அப்ப ரெண்டு பேரும் நல்லா முட்டிக்கோங்க, உனக்கு போய் பேசினோம் பாரு!” என்றார் வேலம்மாள் பாட்டி.

“அது நாங்க முட்டிப்போம் மோதிப்போம் நாங்களே பார்த்துப்போம். என்னம்மா?” என மகனையும் தூக்கிக் கொண்டு போய் அம்மாவின் காலடியில் அமர்ந்து கொண்டான் தர்மா.

தாமரைக்கு ஒரே சிரிப்பு, பேரனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டவர், “அப்படி என்னடா அந்த ஸ்கூல்ல சேர்க்கணும்ங்கிற?” என பொறுமையாக கேட்டார்.

கனி அப்படித்தானே விரும்புகிறாள், அதை விட அவனுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதுவே சரியெனப் பட்டது. இரண்டு காரணங்களையுமே அவரிடம் சொல்ல முடியாது. கனியை கூப்பிட்டு அவளிடமும் வாதிடுவார் அல்லது இன்னும் ஆபத்தா என பயப்படுவார்.

ஆதலால், “பக்கமா இருக்குல்லமா, நானே கொண்டு போய் விட்டு அழைச்சிட்டு வருவேன். சின்ன பையன் மா, தூரமாலாம் வேணாம்” என்றான் தர்மா.

“எது நாலு கிலோ மீட்டர் ஒரு தூரமா? புள்ளைய அப்படிலாம் கைக்குள்ள வச்சு வளர்க்க கூடாதுடா” என அறிவுரை சொன்னார்.

அம்மாவின் கால்களை அழுத்தி விட்டுக் கொண்டே, “இன்னும் கொஞ்சம் வளரட்டுமே மா” என தர்மா சொல்ல, தாமரையும் சரியென விட்டு விட்டார்.

இரவில் அதியனை தன்னுடன்தான் படுக்க வைத்துக் கொள்கிறார் தாமரை. அவனுக்கும் பழகி விட்டது.

அயர்ந்து படுத்திருந்த கனியின் ஆடையெல்லாம் விலகிப் போயிருக்க,  கண்களால் அவளை பருகிக் கொண்டே அவளின் காலடியில்  வந்தமர்ந்தான் தர்மா.

“பார்வையெல்லாம் பலமா இருக்கு மாமா, என்ன விஷயம்?” என குறும்பாக கேட்டாள் கனி.

குறுஞ்சிரிப்பை பதிலாக தந்து அவளது உள்ளங்காலை எடுத்து வைத்துக்கொண்டு கூசி விட்டான். அவள் நெளிய, காலை இறுகப் பிடித்துக்கொண்டவன், நன்றாக கூசி விட்டு விரல்களில் சொடக்கும் எடுத்து விட்டான்.

சுகமாக கண்களை மூடிக் கொண்டவள், “நீ சொடக்கு எடுத்து விடுறதுல மன்னன் மாமா” என்றாள்.

காலை பிடித்திழுத்து அவளை இன்னும் தனக்கு அருகில் படுத்திருக்கும் படி செய்து கொண்டவன், “மத்ததுல மட்டும் குறையா வச்சிருக்கேன்?” எனக் கேட்டான்.

 அவள் பொய்யாக முறைக்க, கணுக்காலுக்கு மேல் ஊர்ந்தது அவனது கை.

“மாமா…” என அவள் அழுத்தமே இல்லாமல் கண்டிக்க, அவனது கை ‘என் மனைவி என் உரிமை’ என்பதை பறை சாற்றுவது போல இஷ்டத்திற்கு சேட்டை செய்து கொண்டிருந்தது.

கூச்சத்தில் நெளிந்து கொண்டே இருந்தவள் அவனை பிடித்திழுத்து தன் மீது போட்டுக் கொண்டாள்.

“இன்னும் வசதியா போச்சு கனி எனக்கு” என மையலாக சொன்னவன் அவளை மயங்க வைத்தான்.

பின் இருவரும் நித்திரை கொள்ள நடு இரவாகி விட்டது.

அடுத்த நாள் தர்மா, கனி இருவருமே ஃபேக்டரி கிளம்பி விட்டார்கள். வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்தனர். எல்லா நேரமும் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்துக் கொள்வான் தர்மா.

தாமரையும் பொழுது போக்காக இணைய வழியில் சில மாணவர்களுக்கு பாடங்கள் எடுப்பார். நிதிலாவும் அஜய்யும் தினமும் வீட்டிற்கு பேசி விடுவார்கள்.

ஒரு மாதம் சென்றிருக்கும்,  தான் கருவுற்று இருக்கும் செய்தியை சொன்னாள் நிதிலா. அம்மாவை நேரில் பார்க்கவும் ஆசை கொண்டாள். சில மாதங்கள் அவளுடன் இருந்து விட்டு வா, நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என அம்மாவிடம் சொல்லி விட்டான் தர்மா.

சொன்னதோடு அல்லாமல் இரண்டு மாதங்களில் அம்மாவை தங்கையிடம் அனுப்பியும் வைத்தான்.

அன்று ஹார்பரில் ஏதோ பிரச்சனை, இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் சண்டை. தர்மாவும் அங்குதான் இருந்தான். நியாயம் யார் பக்கமோ அவர்கள் தரப்புக்காக பேசவும் செய்தான். ஆனால் மூர்க்கத்தனமாக இருந்தவர்கள் யார் பேச்சையும் கேட்க தயாராக இல்லை.

அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என தர்மா நினைத்து விட்டால்  அவனால் முடியாது என்றில்லை.

இன்று தான் செய்யும் சிறு செயல் அரும்பாடு பட்டு தான் மாற்றிக் கொண்டு வந்த வழியை விட்டு விலகச் செய்து விடும் அபாயத்தை ஏற்படுத்தி விடும் என்ற புரிதலோடு ஒதுங்கி விட்டான்.

அவன் தள்ளி நிற்பதற்கு முன்பே, “அண்ணன் ரெண்டு கோஷ்டிக்கும் சமரசம் பண்ணி வைக்க பேசிட்டு இருக்காறாம்” என கனியிடம் சொல்லி விட்டான் கோபு. அவளும் உடனே அங்கு புறப்பட்டு விட்டாள்.

ஹார்பரே கூட்டமாக இருக்கவும் தன் மாமனை தேடிக் கொண்டிருந்தாள் கனி.

“இந்த பக்கம் நமக்கு செட் ஆகாது, ஒரே சத்தம், வா அங்க போவோம்” அவளின் வரவில் வியப்படையாமல் சாதாரணமாக பேசி அவளை தன்னோடு அழைத்து சென்றான் தர்மா.

“நான் வர்றது முன்னாடியே தெரியுமா மாமா?” என சந்தேகமாக கேட்டாள் கனி. சிரித்தானே ஒழிய அதற்கான பதிலை அவன் சொல்லவில்லை.

பின்னே வீட்டினரின் அனைத்து விஷயங்களும் நொடிக்கு நொடி தன் கவனத்துக்கு வரும்படிதானே வைத்திருக்கிறான். ஊரில் கூட எதிரிகளின் செயல்பாடுகள் கூட இவனுக்கு தெரிய வந்து விடும். மஹா கூட அருணோடு இணக்கமாக வாழ்கிறாள், அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது என்பது வரை இவனுக்கு தெரியும்.

ஆனால் எதுவும் தெரியாதது போல அமைதியாக இருந்து கொள்வான். எப்போதும் விழிப்புடன் இருக்கிறான் என்பது அடுத்தவருக்கு தெரியாமல் இருப்பான்.  அவனையும் அவனை சுற்றி உள்ளவர்களையும் யாரும் சீண்டாத வரை அவனது இந்த அமைதி தொடரும்.