நெஞ்சை கொய்தாள் வஞ்சி -20 (final)

அத்தியாயம் -20

விசாகப்பட்டினத்தில் சொந்தமாக வாங்கியிருந்த அந்த வீட்டில் தர்மா மற்றும் கனியின் வரவுக்காக காத்திருந்தார் தாமரை. புகழரசன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களால்  தர்மா தாக்கப் பட்டு  இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகியிருக்க, அந்த வழக்கில் நேற்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

முதலில் புகழரசன்  கைது செய்யப் பட்டாலும் ஆறு மாத கால சிறை வாசத்துக்கு பின் பெயில் கிடைத்து வெளியில் வந்து விட்டான். கோவத்தில் மீண்டும் தர்மாவுக்கு ஆபத்து உண்டாக்க முயன்றான்தான். ஆனால் தற்காப்பாக இருந்து கொண்டான் தர்மா.

ஓராண்டுக்கு  முன் அதியனுக்கு காதணி விழா நடந்தது. அன்று மாலை தர்மா குடும்பமாக கோயிலுக்கு சென்று விட்டு காரில் திரும்புகிற போது விபத்து ஏற்படுத்த பார்த்தான் புகழ். அவனது திட்டத்தை பற்றி நன்கு அறிந்தே அந்தப் பயணத்தை மேற்கொண்ட தர்மா, சாதுர்யமாக தப்பித்து விட்டான். அத்தோடு அதை காரணமாக்கி புகழின் பெயிலை நீக்கி மீண்டும் சிறைக்கும் அனுப்பி வைத்து விட்டான்.

வினோத்குமார் தீவிரமாக  வேலை செய்து தர்மாவை தாக்கியவர்களில் தப்பித்து சென்றவர்களையும் பிடித்து விட்டான். அந்த கும்பல் மேலும் சில கொலை வழக்குகளில் ஏற்கனவே தேடப் பட்டுக் கொண்டிருந்த கும்பல் என்பது தெரிய வந்தது. வலுவான ஆதாரங்களோடு வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தான் வினோத்.

அந்தக் கும்பலை பிடித்ததற்காக அவனது துறையில் அவனுக்கு நல்ல பெயர் கிட்டியது. விரைவில் பதவி உயர்வு கிடைக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அரசியல் வாழ்க்கையிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பித்து விட்டான் தர்மா.  வீடு, ஃபேக்டரி மற்றும் மிச்சமிருந்த சொத்துக்களை விற்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டான்.

விசாகப்பட்டினத்தில் சொந்தமாக வீடு வாங்கியவன் ஏற்கனவே செயல் பட்டுக் கொண்டிருந்த பதப் படுத்தும் ஃபேக்டரி விற்பனைக்கு வரவும் அதையும் வாங்கி விட்டான்.

சிறிய ஊரிலிருந்த சொத்துக்களை விற்று பெரிய நகரத்தில் குடியேறும் போது பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டனதான். கனி தன்னிடமிருந்த நகைகளை கொடுத்து விட்டாள், தாமரையும் தன் சேமிப்பு முழுவதையும் கொடுத்து உதவினார்.

பழைய ஃபேக்டரி விட சிறியதுதான், சின்னதாக இருந்தாலும் கடன் என்கிற சுமையில்லாமல் ஆரம்பிப்போம், உழைத்து முன்னேறி கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை விரிவு படுத்திக் கொள்ளலாம் என கனிதான் சொல்லியிருந்தாள்.

ஃபேக்டரி வாங்கியதுமே கனியை இங்கேயே இருக்க சொல்லி விட்டான். தர்மா அங்கிருந்து கட்சியில் தனக்கடுத்து  வேறொருவன் வசம் பொறுப்பை கொடுத்து, தன்னை நம்பி இருந்தவர்களுக்கும் வழி செய்து என எல்லாம் முடிக்க மேலும் ஆறு மாத காலம் ஆகி விட்டது.

அங்கே எல்லாம் சுமூகமாகி விட்ட பின் அவனும் விசாகப் பட்டினத்திற்கே நிரந்தரமாக வந்து விட்டான். தீர்ப்பு என்பதால் முந்தாநாள்தான் மனைவியுடன் ஊருக்கு சென்றிருந்தான்.

இப்போது ஊரில் மேகநாதனின் பெரிய மகன்  தலையெடுத்திருக்கிறான். ஆள் கொஞ்சம் சரியில்லை, போக போக மிகவும் மோசமானவனாக மாறக்கூடும் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது.

ஊருக்கு ஒருவன் இப்படித்தான் இருப்பான், இவனை திருத்துவதோ அல்லது எதிர்த்து நிற்பதோ உன் வேலையில்லை, குடும்பத்தை மட்டும் மனதில் நிறுத்து என கணவனிடம் கண்டிப்போடு சொல்லி விட்டாள் கனிஹா.

புகழரசனும் தனக்கு கிடைத்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக சொல்லிக் கொண்டார்கள். தர்மாவின் வக்கீலோ புகழின் தரப்பு மிகவும் பலவீனமாக இருப்பதால் எங்கு சென்றாலும் நமக்கே சாதகமாக இருக்கும் என சொல்லியிருந்தார்.

நிதிலாவுக்கு வெளிநாட்டு வாழ் பையனாக பார்த்து மணமுடித்து அங்கேயே அனுப்பி வைத்து விட்டான் தர்மா. அஜய்யும் மேல் படிப்புக்காக லண்டன் சென்று விட்டான்.

ஆசைத்தம்பி காரை நிறுத்த தர்மாவும் கனியும் இறங்கினார்கள். இரண்டு நாட்களாக பெற்றோரை நேரில் காணாத அதியன், ஓடிச் சென்று அப்பாவின் கால்களை கட்டிக் கொண்டான்.

வலது காலை தர்மாவால் மடக்க முடியாது, அறுவை சிகிச்சைக்கு பின் இப்படியாகி விட்டது. புதிதாக பார்ப்பவர்களுக்கு இப்படியொரு குறை இவனிடம் இருக்கிறது என கண்டுகொள்ள முடியாது.

இடது காலை மட்டும் மடித்து வலது காலை சாய்வாக வைத்து மகனின் உயரத்துக்கு குனிந்த தர்மா, “என்னடா கண்ணா… அப்பாவை தேடினீங்களா?” என ஆசையாக கேட்டுக் கொண்டே முத்தமிட்டான்.

அப்பாவின் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்ட அதியன், “அப்பத்தா திட்டிச்சு” என குறை சொல்ல ஆரம்பித்தான்.

“ அப்படியா அப்பா கேட்கிறேன் டா கண்ணா. நீங்க என்ன பண்ணுனீங்க செல்லம்?” என மகனோடு பேசிக் கொண்டிருந்தான்.

“எதுக்கு சிரம படுற மாமா,  எந்திரி” என கனி சொல்லவும் மகனை தூக்கிக் கொண்டேதான் எழுந்தான். சமநிலை கிட்டாமல் விழுந்து விடுவானோ என கனிக்கு பயம், ஆனால் அப்படியெல்லாம் ஆகவில்லை.

அங்கே விட்டுச் சென்ற தன் பைக்கை எடுத்த ஆசைத் தம்பி, “நானும் வீட்டுக்கு போய் ஒரு அட்டனென்ஸ் போட்டுட்டு வந்திடுறேன் ண்ணா” என சொல்லி கிளம்பினான்.

தர்மா தனக்கு மிகவும் நெருங்கியவர்களை தன்னுடனே வைத்துக்கொண்டான். விசுவாசிகளான அவர்களும் தங்கள் குடும்பத்துடன் இங்கேயே வந்து விட்டனர். கார் டிரைவர்களாக ஆசைத்தம்பியும் கோபுவும் இருக்க, மற்றவர்கள் ஃபேக்டரியில் இருக்கிறார்கள்.

முற்றும் முழுதாக ஆபத்து நீங்கி விட்டது என சொல்ல முடியாதே, ஆகவே தர்மாவின் ஆட்கள் எப்போதும் சுற்றத்தை கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

இன்னும் ஆபத்து இருக்கிறது என்றெல்லாம் வீட்டினரிடம் சொல்லவில்லை தர்மா, பாதுகாப்பாக இருக்கிறோம் எனும் எண்ணத்தைத்தான் அவர்களுக்கு கொடுத்திருந்தான், ஆகவே அவர்களும் நிம்மதியாக இருந்தனர்.

தான் வாழ்ந்த வாழ்க்கை பல வருடங்கள் கடந்து கூட பகையை இங்கு அழைத்து வரும் என தர்மாவுக்கு தெரியும். தகுந்த ஏற்பாடுகளுடன் ஜாக்கிரதையாக இருந்தான்,  அதெல்லாம் கனிக்கு கூட தெரியாது. அவள் அளவில் தான் விரும்பிய அமைதியான வாழ்வு கிட்டி விட்டது என மகிழ்ச்சியாகவே இருக்கிறாள்.

தாமரைக்கும் மகன் இங்கே வந்து புதிய வாழ்க்கையை துவங்கி விட்டான் என பெரும் ஆனந்தம். ஆனாலும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்தான், அம்மாவுக்கு அடங்காமல் திரிந்த தர்மாவும்  இப்போதெல்லாம் அவரின் அதட்டலுக்கு கோவம் கொள்வதில்லை, உனக்கு அடங்கிய நல்ல பிள்ளைதான் நான் எனும் திருப்தியை காலம் கடந்து என்றாலும் அவருக்கு கொடுக்கிறான்.

சாப்பிட்டு விட்டுத்தான் அறைக்கு சென்றார்கள். சற்று நேரம் ஓய்வெடுத்த கனி ஃபேக்டரிக்கு புறப்பட்டாள். இன்று வீட்டில்தான் இருக்க போகிறேன் என சொல்லி விட்டான் தர்மா.

கோபு வந்து கனியை அழைத்து சென்றான். தர்மா மகனோடு ஒரே ஆட்டம்.

வேலம்மாள் பாட்டிதான், “அவனோட விளையாட இன்னொன்னு ரெடி பண்ணினீனா நீ ஃபிரீயா இருக்கலாமா இல்லையாடா? அதை விட்டுட்டு நீ துள்ளி குதிச்சிட்டு இருக்கிற” என அங்கலாய்த்தார்.

“நல்லா சொல்லுங்க, இதான் கரெக்ட்டான நேரம்” என்றார் அன்னலக்ஷ்மி பாட்டி.

அவர்களின் பேச்சை காதில் வாங்கிக் கொண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை தர்மா. எப்போது பார்த்தாலும் இதே பேச்சென்றால் அவனுக்கும் சலித்துப் போய் விட்டது.

மாலையில் வீடு வந்து சேர்ந்தாள் கனி. அப்பாவை கண்டதும் அதியன் இன்று பகலில் உறங்கியிருக்கவே இல்லை என்றார் வேலம்மாள் பாட்டி.