தோழிகளுடன் வெளியே செல்லக் கூட கட்டுப்பாடுகள் உண்டு, அப்பாவிடமும் அத்தையிடமும் பொய் சொல்லவும் கனிக்கு வராது. இருவரும் அவர்களின் அடக்குமுறைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டுமென்றால் தர்மாவின் உதவியைத்தான் நாடுவாள்.

அவனும் சில எல்லைகளுக்கு உட்பட்டு அவளை சுதந்திரமாக இருக்க விடுவான். இல்லையென்றால் அவனே சென்னைக்கு நேரில் வந்து அவளை வெளியில் அழைத்து சென்று வேண்டியது செய்து கொடுத்து திரும்புவான்.

தற்போது இரண்டு மாதங்கள் ஆசுவாசம் கொள்ள வேண்டியது அவளுக்கு அத்தியாவசியம், அதை புரிந்து கொள்ளாமல் அத்தை இப்படி சொன்னதும் அவளின் மனம் சுணங்கித்தான் போனது.

சற்று நேரத்தில் கனிக்கான உடைகளை எடுத்துக் கொண்டு வந்தான் தர்மா. அன்னலக்ஷ்மி பேரனுடன் பேசிக் கொண்டிருந்தார். மகனின் வரவு தெரிந்தும் வெளியில் தலை காட்டவே இல்லை தாமரை. நிதிலா வந்து அட்டனன்ஸ் போட்டு விட்டு சென்று விட்டாள்.

பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் தர்மா.

“அத்தையை தேடுறீங்களா மாமா?” எனக் கேட்டாள் கனி.

“உன் அத்தை பையனை, போ அவனை அழைச்சிட்டு வா” என கனியை ஏவினான்.

சலித்துக் கொண்டேதான் வந்தான் அஜய். தம்பியை அலசுவது போல பார்த்த தர்மா, “வெளில வா” என சொல்லி வெளியேறி விட்டான்.

அஜய் அவனுடன் படிக்கும் பெண் ஒருத்தியுடன் நட்பாக பழகுகிறான். அதை தவறாக புரிந்து கொண்ட சீனியர் மாணவனும் அந்தப் பெண்ணின் உறவினனுமான  தீபக் அவளுடன் பழகக் கூடாது என மிரட்டியிருக்கிறான். உன் மிரட்டலுக்கு பயந்த ஆள் நானில்லை என சொல்லி விட்டான் அஜய்.

இரு பக்கமும் அவர்களின் நண்பர்கள் ஆதரவு கொடுக்க, அவர்களுக்குள் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்தனை விரைவில் அண்ணன் காதுக்கு விஷயம் செல்லும் என நினைத்திருக்கவில்லை அஜய்.

“படிக்கிற இடத்துல படிச்சா மட்டும் போதும்” கண்டிப்போடு சொன்னான் தர்மா.

மனதில் எரிச்சல் மூண்டாலும், “படிக்க மட்டும்தான் செய்றேன்” என்றான் அஜய்.

“கேள்வி படுறதெல்லாம் அப்படி தெரியலை. எவனும் வம்பு பண்ணினா காலேஜ்ல சொல்லணும் இல்லை வீட்ல பெரியவங்ககிட்ட சொல்லணும். தனியா ரௌடித்தனம் பண்ணுவியா?” தம்பியை கூர்மையாக பார்த்துக் கொண்டே கேட்டான் அஜய்.

“யாரு யாருக்கு அட்வைஸ் பண்றது? நான் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது” வேகத்தில் சொல்லி விட்ட அஜய், அண்ணனின் உற்று நோக்கும் பார்வையில் தலை குனிந்தான்.

“அம்மாவை கஷ்ட படுத்த நான் ஒருத்தன் போதும். பிரச்சனை வேணாம், அந்த பொண்ணோட பழகுறத நிறுத்திடு” என்றான் தர்மா.

“நாங்க வெறும் ஃபிரெண்ட்ஸ் அண்ணா”

“தெரியும், ஃபிரெண்ட்தானே, சொல்லி புரிய வச்சு விலகி நில்லு. உனக்கு பிரச்சனைனு மத்தவங்க வந்து சொல்றதுக்கும் நீயே என்கிட்ட சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. இனிமே பார்த்து நட. அம்மாவை பார்த்துக்க”

“நான் என்ன அம்மாவை பார்க்க? ஏன் உனக்கில்லையா அந்த பொறுப்பும் கடமையும்? உன்னை நினைச்சு நினைச்சு உள்ளுக்குள்ள அம்மா படுற பாடு தெரியுமா உனக்கு? அந்தாளுக்கு நேந்து விட்ருக்காங்களா உன்னை?” கோவமாக பேசிக் கொண்டே போனான் அஜய்.

தன் மாமனை அந்தாளு என தம்பி சொன்னதில் ஆத்திரமடைந்த தர்மா, “வாயை மூடுடா ராஸ்கல்!” என அதட்டினான்.

‘நீயெல்லாம் திருந்தவே மாட்டாய்’ என்பது போல பார்த்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான் அஜய்.

உள்ளே செல்லாமல் வராண்டாவில் மாட்டியிருந்த ஊஞ்சலில் அமர்ந்து விட்டான் தர்மா. மருமகள் செய்து வைத்திருந்த கொழுக்கட்டைக்களை பேரனுக்காக எடுத்து வந்தார் பாட்டி.

“வேணாம் அப்பத்தா”

“சின்னதுல எப்படி விரும்பி சாப்பிடுவ, என் காலம் போறதுக்குள்ளயாவது இங்கேயே வந்திடேன் டா, நீ கூட இல்லாம உன் அம்மா தவிக்கிறா. வீம்பு புடிச்சவ வெளில காட்டிக்காம வீராப்பா இருக்கா” என்றார் பாட்டி.

“உன் மகன் எப்படி மாண்டு போனாருன்னு நீ மறந்திட்ட போல அப்பத்தா. உண்மை தெரிஞ்சதிலேருந்து கண்ண மூடினா குடல் சரிஞ்சு கிடக்குற என் அப்பாதான் வந்து நிக்கிறார்” என்றான் தர்மா.

“எல்லாம் முடிஞ்சு போன கதை, உன் மாமனும் சும்மா இல்லையே. அது எதுவும் வேணாம்னுதானேடா உன் அம்மா அவ அண்ணனை விட்டு எங்களோடவே வந்திட்டா. இந்த ஊர் கூட வேணாம் மதுரைக்கு போயிடலாம்னு உன் அம்மா சொன்னப்போ உன் தாத்தாதான் சொந்த ஊரை விட்டு வர யோசிச்சாரு. அப்படி போயிருந்தா கூட நீ உருப்பட்டு நின்னுருப்ப”

“இப்ப என்ன உருப்படாம நிக்கிறேன்? எதாவது வாய்க்கு வந்தத பேசாத”

“நான் எதுவும் பேசல, இந்தா இதை சாப்பிடு” என பாட்டி சொல்ல, அவரை முறைத்த வண்ணம் எடுக்காமலேயே இருந்தான்.

பாட்டி வெளியே வரவுமே கனி, நிதிலா இருவருமே அவரை தொடர்ந்து வந்திருந்தனர். தர்மாவின் அருகில் வராமல் தள்ளியே நின்றிருந்தனர்.

கனி வேகமாக ஊஞ்சல் அருகில் வந்தாள். ஒரு கொழுக்கட்டை எடுத்து தர்மாவிடம் நீட்டினாள். போடி என அவன் பார்த்திருக்க, அவனது வாயில் திணித்து விட்டாள்.

‘அம்மாடியோ ஆனாலும் இவளுக்கு தைரியம்தான்!’ என நினைத்துக்கொண்டே வேடிக்கை பார்த்தாள் நிதிலா.

வாயில் இருந்ததை மென்று விழுங்கிய தர்மா, “அறிவில்ல உனக்கு?” என சத்தம் போடாமல் கேட்டான்.

“நீதான் மாமா சொல்லணும், உங்கம்மா திரும்ப என்னை சென்னைக்கு பேக் பண்ண பார்க்கிறாங்க. காப்பாத்தி விடு” என்ற கனி, தாமரையின் எண்ணத்தை சொன்னாள்.

“ஏன் உங்கப்பா வச்சிருக்க ஃபேக்டரிய என்ன செய்றதாம்? ரெண்டு மாசம் சும்மா இரு, அப்புறம் ஃபேக்டரிக்கு வந்து சேரு. மாமாகிட்ட பேசிக்கிறேன், உன் அத்தை ஓவரா உன் விஷயத்தை தலையிட்டுக்க வேணாம்னு சொல்லு” என்றான் தர்மா.

காலையில் தன் வீட்டிலிருந்து கிளம்பும் போதே திருமண பேச்சை எடுத்து விட்டார் நம்பி. பாட்டியின் தயவால்தான் அப்பாவின் பேச்சில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்து இங்கு வந்திருந்தாள்.  அத்தைக்கு வேறு எண்ணம், இப்போது தர்மா வேறேதோ சொல்கிறான்.

எல்லாம் உங்கள் முடிவுகளா என் விருப்பத்தை கேட்கவே மாட்டீர்களா? எனும் ரீதியில் கனி பேசிக் கொண்டிருக்க, “இப்ப கேட்கிற மூட்ல இல்லை. வீட்டுக்கு வந்ததும் சொல்லு உன் விருப்பத்தை” என சொல்லி எழுந்து கொண்டான் தர்மா.

நிதிலாவிடம் நன்றாக படிக்க வேண்டும் என சொல்லி விட்டு பாட்டியிடமும் விடை பெற்றுக் கொண்டவன் கனியை பார்த்தான்.

அவள் கோவமாக நின்றிருக்க, “அப்புறமா என்ன விருப்பம்னு சொல்லு, நான் எதுக்கு இருக்கேன்?” என சின்ன புன்னகையோடு சொன்னான்.

“நிஜமா, நான் சொன்னதுக்கு அப்புறம் உன் மாமா சொல்றதை எல்லாம் கேட்டுக்காம என் ஆசைய நிறைவேத்தி வைப்பியா?” எனக் கேட்டாள் கனி.

“என்னத்தடி வில்லங்கமா கேட்க போற இவன்கிட்ட?” பேரனை வசமாக சிக்க வைக்க பார்க்கிறாள் என கணித்து விட்ட பாட்டி கோவமாக கேட்டார்.

“விடு அப்பத்தா” என பாட்டிக்கு சொன்னவன், “எவ்ளோ கஷ்டமான காரியம்னாலும் செஞ்சு வைக்க நான் பொறுப்பு” என உறுதி கூறி விட்டு சென்றான் தர்மா.

அப்படி என்ன கேட்க போகிறாள் என நிதிலாவும் பாட்டியும் கனியை பார்க்க, மாமாவை தவிர யாரிடமும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டாள் கனி.