“தம்பியண்ணா கொஞ்சம் வேகமா டிரைவ் பண்ணக்கூடாதா?” சலித்துக் கொண்டாள் கனிஹா.
“அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டி குமிச்சிடுவார், கார் ரேஸ் கணக்கா பறக்க ரோடு நல்லாருக்க வேணாமா?” எனக் கேட்டான் ஆசைத் தம்பி.
“ஏதாவது சொல்லுங்க” எனும் போதே அவளுக்கு தர்மா அழைத்தான்.
வீட்டில் இறங்கி விட்டு உடனே ஆசைத்தம்பியை அனுப்பி வைத்து விட வேண்டுமாம், வேறு வேலை அவனுக்கு காத்திருக்கிறதாம்.
“அது மாமா…” என இவள் இழுக்கும் போதே, “நிதிலாவை லீவ் எல்லாம் போட சொல்லி வர வைக்காத, வேணும்னா ரெண்டு நாள் அங்கேயே தங்கிட்டு வா, மாமாகிட்ட நான் சொல்லிக்கிறேன்” என சொல்லிவிட்டான்.
நிதிலா இவளை விட இரண்டு வயது சின்னவள், பொறியியல் கடைசி வருடத்தில் இருக்கிறாள். இருவருக்கும் நல்ல நெருக்கம், ஒன்றாக வெளியில் சுற்றுவது என்றால் உடனே கிளம்பி விடுவார்கள்.
நிதிலாவும் அஜய்யும் இரட்டையர்கள். உடனில்லா விட்டாலும் தங்கை தம்பியின் பாதுகாப்பில் மிகவும் அக்கறை காட்டுவான் தர்மா.
அருகில் என்றால் பரவாயில்லை, அது கூட அண்ணனுக்கு செய்தி அனுப்பி விட்டுத்தான் செல்ல வேண்டும். நிதிலா கூட அண்ணனுக்கு அடங்கி நடப்பாள், அண்ணனின் கெடு பிடிகளை அறவே வெறுத்தான் அஜய்.
அவர்கள் இருவரும் பள்ளியில் படித்த நேரத்திலேயே வீட்டிலிருந்து வந்து விட்டான் தர்மா, ஆகவே அண்ணன் என்றால் பயம்தான். கனி போல அவர்களால் அவனிடம் எதையும் வெளிப்படையாக பேசி விட முடியாது. அப்பா இல்லாத காரணத்தால் இப்படி என்னிடம் பயந்தே இருக்கட்டும் என தர்மாவும் விட்டு விட்டான்.
இவர்களின் அம்மா தாமரைச்செல்வி, பெரிய மகனோடு சரியான பேச்சுவார்த்தை கிடையாது. இருப்பினும் அண்ணனுக்கு கட்டுப் பட வேண்டாம் என்றெல்லாம் சொல்லித் தர மாட்டார். அம்மாவிடம் கேட்டு காரியம் சாதிக்கலாம் என அவர்கள் திட்டமிட்டு எது கேட்டாலும் கூட, விவரமாக “அண்ணன்கிட்ட கேட்டுக்க” என முடித்து விடுவார்.
கணவரின் இறப்புக்கு பின் மாமனார் மாமியாரோடு இருந்து விட்டார். மாமனார் சென்ற வருடம் தவறிப் போயிருக்க, மாமியார் அன்னலக்ஷ்மியை கவனித்து கொள்கிறார்.
மதிய உணவு நேரத்திற்கு அத்தையின் வீடு வந்து விட்டாள் கனி. அன்னலக்ஷ்மிதான் அவளை வரவேற்றார். வீட்டில் எப்போதும் காவலாளி உண்டு, எந்நேரமும் வீட்டில் இருப்பது போன்ற வேலையாளும் உண்டு. கண்காணிப்பு கேமரா வழியே எல்லாம் இருந்த இடத்திலிருந்து கவனித்துக் கொள்வான் தர்மா.
கனியை வீட்டில் விட்டு விட்டதாக தர்மாவுக்கு அழைத்து சொன்ன ஆசைத்தம்பி உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
பாட்டியுடன் சேர்ந்து சாப்பிட்ட கனி, சீக்கிரம் வரும் படி நிதிலாவுக்கு செய்தி அனுப்பி விட்டு, அவள் வந்தால் தங்கும் அறைக்கு சென்று படுத்து விட்டாள்.
அரசுக் கல்லூரியில் கணித துறையில் பேராசிரியரான தாமரை வீட்டுக்கு வந்த போது கனி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
கல்லூரியிலும் வீட்டிலும் கண்டிப்புக்கு பெயர் போன தாமரை, அம்மா இல்லாத பெண் என்பதால் கனிக்கு மட்டும் சலுகைகள் கொடுப்பார். மன வருத்தம் காரணமாக அண்ணனை விட்டு தள்ளியே நின்றாலும் மருமகளை தள்ளி நிறுத்தாமல் அன்பாக இருப்பார்.
தங்கை தன்னை ஒதுக்கி விட்டாலும் மகள் மூலமாக அந்த உறவை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டார் நம்பி.
மூத்த மகன் காதல் என்று வந்த போது கன்னம் கன்னமாக அடித்திருந்தார். பின்னே, இருபத்தியிரண்டு வயதில், ‘காதலிக்கிறேன், அவள் வீட்டில் கட்டாய கல்யாணம் செய்ய பார்க்கிறார்கள், அவளை அழைத்து வரப் போகிறேன்’ என சொன்னால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்?
மூத்த மகனாக பொறுப்பாக இல்லாமல் சின்ன வயதில் இப்படி வந்து நிற்கிறானே என அவருக்கு ஆதங்கம், கோவம். காதல் என்ன சொல்லிக் கொண்டா வரும், கல்யாணத்தையெல்லாம் தர்மாவும் உடனே செய்து கொள்ள நினைத்திருக்ககில்லை. மஹா வீட்டினர் நடந்து கொண்ட முறை அப்படி.
நீ இல்லை என்றால் இறந்து போவேன் என்பவளை என்ன செய்வது, வயதின் வேகம் என்பதை விட நம்பிய பெண்ணை எப்படியாவது கைவிட்டு விடக்கூடாது என்ற எண்ணம்.
அம்மாவின் வார்த்தையை மீறிக் கொண்டு மஹாவை அழைத்துக் கொள்ள சென்று, அவளின் வீட்டினருக்கு தெரிந்து விட்டது. மேகநாதன் மஹாவின் இனத்தவர்தான், இன பாதுகாவலர் தன் கடமையை ஆற்ற கிளம்பி வந்து விட்டார், அங்கே கலவரமாகிப் போனது.
மருமகனுக்கு பிரச்சனை எனவும் தள்ளியிருந்த நம்பி ஓடோடி வந்து விட்டார். என்ன பேச்சுக்கள், மிரட்டல்கள் நடந்தது என எதுவும் புரியவில்லை, தர்மா வேண்டாம் என அனைவரின் முன்பும் வந்து சொல்லிவிட்டாள் மஹா.
அவளை மிரட்டியதால் இப்படி சொல்கிறாள், அவள் இல்லாமல் செல்ல மாட்டேன் என தர்மா ஒரே பிடிவாதம். இரு தரப்புக்கும் பொதுவாகவும் சில முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். மஹா உறுதியாக நின்றிருந்தால் நம்பி என்னவும் செய்து மருமகனின் காதலை நிறைவேற்றி கொடுத்திருப்பார், அப்படி இல்லாத நிலையில் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை.
தர்மாவை இழுத்துக் கொண்டு வந்து வீடு சேர்ந்தார். எண்ணி பத்தே நாட்களில் மஹாவுக்கு அவளது உறவுக்கார பையனுடன் திருமணம் முடிந்து விட்டது. அவளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தர்மா ஒரு நாள் குடித்து விட்டு வீடு வந்தான். தோளுக்கு மேல் வளர்ந்தவனை தாமரையால் என்ன செய்ய முடியும்?
அண்ணனுக்கு அழைத்து விட்டார். ‘என் மகனை அழைத்து செல், கொஞ்ச நாட்களுக்கு உன்னுடன் வைத்திரு’ என சொல்லி விட்டார்.
அம்மா அப்படி சொல்லவும்தான் தன் தவறின் வீரியம் தர்மாவுக்கு புரிந்தது. இனி ஒழுங்காக இருப்பேன், எங்கேயும் போக மாட்டேன் என அம்மாவிடம் சொன்னான். அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
தாய் மாமன் என்றாலும் தர்மாவுக்கு நம்பியுடன் அதிக பழக்கம் இல்லை, அவர் வீட்டுக்கு கூட அடிக்கடி சென்றவன் இல்லை. அம்மா அங்கு அனுப்புகிறாரே என கோவத்துடன்தான் சென்றான்.
தனக்கு மேல் முறுக்கிக் கொண்டு திரியும் தர்மாவை என்ன செய்வது என நம்பிக்கு புரியவே இல்லை, அவரின் முறைப்புக்கு கோவத்துக்கு உருட்டல் மிரட்டலுக்கு என எதற்கும் பயம் கொள்ளாமல் அலட்சியமாக நின்றான்.
தங்கையின் கணவனாக ஆவதற்கு முன்பிலிருந்தே தனக்கு ஆருயிர் தோழனாக இருந்த தர்மாவின் அப்பாவை அவனிடத்தில் கண்டார் நம்பி. கரடு முரடான மாமனுக்கே டஃப் கொடுத்தான் தர்மா.