இதென்ன மாமாவை உள்ளே வைத்து விட்டுத்தான் ஓய்வார் போல இவர் என கனிக்கு தன் மாமியாரை நினைத்து பயமாகி விட்டது.
என்ன சொல்வான் வினோத்? மேகநாதன் தரப்பிலிருந்து தர்மா மீதுதான் சந்தேகம் என புகார் கொடுக்க கூட யாரும் தயாராக இல்லையே, கோர்ட் கேஸ் என பல வருடங்கள் இழுத்துக் கொண்டிருக்க எங்களுக்கு விருப்பமில்லை, நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனதான் சொன்னார்கள்.
“இப்படிலாம் வன்முறை நடக்க கடமையை சரியா செய்யாத உங்களை மாதிரி அதிகாரிங்களும் முக்கியமான காரணம்ங்கிறதை மறந்திடாதீங்க” என காட்டமாக சொன்னார் தாமரை.
“ஒரு வகையில அப்படித்தாங்க. என் புருஷன் இறந்தப்போ அதுக்கு காரணமானவங்களை தண்டிக்க நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன், அன்னிக்கு உங்களை மாதிரி இருந்த அதிகாரிங்களாலதான் என்னால ஏதும் செய்ய முடியலை. அப்ப எனக்கு நியாயம் கிடைச்சிருந்தா சட்டம் மேல என் மகனுக்கும் நம்பிக்கை இருந்திருக்கும்” என்றார் தாமரை.
தன் அப்பாவை குறித்த பேச்சு என்பதால் வினோத்தின் முகம் இறுகிப் போனது.
“இப்பவும் உங்கள்ட்ட நியாயத்தை எதிர் பார்த்து வந்தது எங்க தப்புதான்” என்ற தாமரை எழுந்து கொண்டார்.
“உட்காருங்க ப்ளீஸ்!” என நிதானமாக சொன்னார் பவானி.
அவரின் அமைதியான பேச்சில் தெரிந்த உறுதியில் தன்னால் அமர்ந்தார் தாமரை.
“வினோத், நியாயமா நடந்துக்கணும் நீ” என்றார் பவானி.
“என்னம்மா நியாயம்? அப்பா இல்லாம போக காரணமா இருந்த குடும்பத்துக்கு ஃபேவர் பண்ணினா என்னால எப்படிம்மா நிம்மதியா தூங்க முடியும்?” கோவமாக கேட்டான் வினோத்.
“உங்கப்பா இறக்க காரணம் இவங்க குடும்பன்னு நினைக்கிறியா? இல்லடா” என பவானி சொல்ல, மற்ற மூவரும் திகைப்பாக அவரை பார்த்தனர்.
தாமரையை சுட்டிக் காட்டிய பவானி, “வயித்துல புள்ளையோட இந்தம்மா விட்ட கண்ணீர், அந்த கண்ணீர்தான் உன் அப்பாவோட உயிரை பறிச்சுது” என்றார்.
“ம்மா!” அதிர்வாக அழைத்தான் வினோத்.
“சத்தியமான உண்மை அதுதான். நான் விட்ட கண்ணீர் இவங்க அண்ணனுக்கு நல்ல சாவை தரல. இந்த பொண்ணோட புருஷனுக்கு இப்படி ஆக காரணம் கூட யார் விட்ட கண்ணீரோ” என பவானி சொல்ல, கனி ஆறுதலுக்காக தன் அத்தையின் கையை பிடித்துக்கொண்டாள்.
“கத்தி வீச்சரிவா துப்பாக்கி இதெல்லாம்தான் ஆயுதம்னு நினைச்சுகிட்டியா வினோத்? உலகத்திலேயே வலிமையான ஆயுதம் பாதிக்க பட்டவங்க வேதனையில விடுற கண்ணீர்தான். காத்திருந்து வேர் அறுக்குற சக்தி அந்த கண்ணீருக்கு உண்டு” என சத்தமில்லாமல் வினோத்தின் இதயத்தை தாக்கினார் அவனது அம்மா.
“இன்னிக்கு நியாயம் தப்பி நீ நடந்தா இதோ இந்த பொண்ணு கண்ணீர் விடும், அது உனக்கு நல்லது இல்லடா. உங்கப்பா இறப்புக்கு காரணமான குடும்பத்துக்கு உதவி செஞ்சதா நினைக்காத. அவங்க குடும்பத்துக்கு கூட நியாயமா நடந்துகிட்டேன்னு நினைச்சுக்க. நிம்மதியான தூக்கம் தன்னால வரும்” என்றார்.
வினோத்தால் பேசவே முடியவில்லை.
கனி நன்றியோடு அவரை பார்த்தாள். தாமரைக்கு அவரின் மீது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் அகலவில்லை.
தாமரையை பார்த்த பவானி, “வன்முறையை கையில் எடுக்கிற ஆம்பளைய கட்டிக்கிட்டா ஒன்னு பாதில வாழ்க்கைய இழந்து நிக்கணும் இல்லைனா தினம் தினம் சாவை எதிர்பார்த்துகிட்டு வாழ்க்கைய கடத்தணும். இங்க இல்லாம எங்கேயோ ஓடிப் போய் மாங்கு மாங்குனு உழைச்சு ஒத்த பொம்பளையா புள்ளைங்கள வளர்த்து ஆளாக்கினோம். உங்க புள்ள தப்பான வழியில போனா என் புள்ள யூனிஃபார்ம் போட்டு கூட அதே வழியிலதான் போறான். நம்ம கஷ்டத்துக்கு எல்லாம் அர்த்தமே இல்லாம போயிடுச்சு” என்றார்.
தாமரையும் தன் மகனின் நினைவில் சோர்ந்தவராக வினோத்தை பார்த்தார்.
“குடும்பத்தை பத்தி கொஞ்சமும் நினைக்காம பழிக்கு பழின்னு அடிச்சிகிட்டவங்க போய் சேர்ந்திட்டாங்க. உங்கப்பா இறக்கும் போது அந்த பையனுக்கும் உன் வயசுதான் இருக்கும், அவனுக்கு கெடுதல் செய்ய என்ன காரணம்டா வச்சிருக்க? நான் சொல்லி கொடுத்த நேர்மைங்கிற வார்த்தையை மறந்திட்டியா வினோத்?” என கோவப்படாமல் மகனிடம் கேட்டார் பவானி.
“போதும்மா” என கெஞ்சலாக சொன்னான் வினோத்.
சில நிமிடங்கள் யாருக்கும் என்ன பேசவென தெரியவில்லை. மௌனமாகவே கழிந்தது.
பவானிதான் “என் பையன் நிச்சயமா நியாயமா நடந்துப்பான்!” என உறுதியாக சொல்லி மௌனத்தை கலைத்தார்.
ஒதுக்கி வைத்த தண்ணீர் கிளாசை எடுத்த தாமரை முழுதையும் பருகி கொதித்துக் கொண்டிருந்த தன் வயிறை குளிரச் செய்தார்.
பவானியின் கைப் பற்றி கண்ணீர் மல்க கனி நன்றி சொல்ல, அவரைப் பார்த்து தலையசைத்து தன் நன்றியை சொன்னார் தாமரை.
வீடு வந்ததும் அஜய்யிடம் எல்லாம் சொன்னாள் கனி. கணவனிடமும் மறைக்க முடியாதே, அவனிடமும் சொன்னவள், “எல்லாம் சரியானதும் இந்த ஊரை விட்டே போக போறோம் மாமா. மனசளவுல ரெடி ஆகிக்கோ” என்றாள்.
“உன்னை யாருடி அங்க போக சொன்னது? எனக்கு தெரியாம இதெல்லாம் என்னடி?” என கோவப்பட்டான் தர்மா.
“வேற என்ன பண்ணலாம்னு நினைச்சிருந்த மாமா?” என கனியும் கோவப்பட்டாள்.
“வினோத் என்ன பெரிய கடவுளா? அவன் உள்ள வச்சா கூட அந்த புகழ் வெளில வருவான், என்ன பண்ணணுமோ நான் பண்ணுவேன், அதையெல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு இல்லை” என்றான் தர்மா.
“இவ்ளோ வெறி நல்லதுக்கு இல்லை மாமா. யார் செஞ்ச புண்ணியமோ இன்னிக்கு என் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்க நீ, இல்லைனா எங்கப்பா படத்துக்கு பக்கத்திலேயே…” என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல இயலவில்லை. முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
தர்மாவும் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான். தானாக அழுகையை விட்டவள் அவனை நெருங்கி தாடையிலிருந்த காயத்தை நோகச் செய்யாமல், “எப்படி பழி வாங்கலாம்னு திட்டம் போட்ருப்பதானே மாமா? அந்த அறிவை எப்படி அவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தரலாம்ங்கிறதுல கூட காட்டலாம்ல மாமா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது கனி” என அவனும் தன்மையாக சொன்னான்.
“எனக்காக ஒரு முறை ட்ரை பண்ணு மாமா” என வேண்டுதல் போல கேட்டாள்.
சரி என சொல்வதை தவிர அவனிடம் வேறு வழி இருந்திருக்கவில்லை.
அவனது நெற்றியில் முத்தமிட்ட கனி, “உனக்கு மறு பொறப்பு மாமா இது, பழசையெல்லாம் தூக்கி போட்டுட்டு புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்” என்றாள்.