அவன் சம்மதமாக தலையசைக்க, “நீ எனக்கு மாப்ள பார்த்தா, கட்சி சார்ந்த யாரையோ இல்லைனா உனக்கு தெரிஞ்ச யாரையோதான் பார்ப்ப. கனி மாதிரி கஷ்ட பட நான் தயாரில்ல ண்ணா. எனக்கு கல்யாணமே வேணாம்” என்றாள்.
தர்மா புருவங்களை நெறிக்க, “உன்னை ஹர்ட் பண்றேன்னு நினைக்காத ண்ணா, நீ கல்யாண பேச்சை எடுக்கவும் எனக்கு தோணினதை சொல்லிட்டேன். அம்மா கனியெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்றாள்.
“அதுக்காக கல்யாணம் வேணாம்னு சொல்லுவியா? அப்புறம் பேசலாம். நீ போ” என சொல்லி தங்கையை அனுப்பி வைத்து விட்டான். திருமணமே வேண்டாம் என சொல்லும் அளவுக்கு மனதளவில் பாதிக்க பட்டிருக்கிறாளே என உள்ளுக்குள் அவனுக்கு வருத்தம்.
இரவில் கனிதான் துணைக்கு இருந்தாள். மகனை நிதியிடம் விட்டிருந்தாள். துணையில்லாமல் தர்மாவால் நடக்க முடியவில்லை. அதீத கவனிப்பு தேவைப்பட்டது.
தங்கையை பற்றி கனியிடம் சொல்லி வருத்தப் பட்டான்.
“இந்த சண்டை சச்சரவு ஏதும் இல்லாத ஊருல மாப்ள பார்த்து கல்யாணம் பண்ணி அங்கேயே அவளை அனுப்பி வச்சிட்டா போச்சு” என்றாள் கனி.
நம்பி கூட இப்படித்தான் கனிக்கு இந்த பக்கமாக மாப்பிள்ளை வேண்டாம் என நினைத்தார். அதை பகிர்ந்தான் தர்மா.
“நீயா?” எனக் கேட்டு சிரித்தவன் வலிக்கவும் முகத்தை சுளித்தான்.
“முடியாதுன்னு நினைச்சியா? நீயே ஒத்துக்காம போனாலும் கிட்னாப் பண்ணியாவது என்னோட அழைச்சிட்டு போகத்தான் போறேன்” என சபதம் போல சொன்னாள்.
அவள் பேசுவதை ரசித்தானே ஒழிய வேறேதும் சொல்லவில்லை.
பகலில் கனி சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள தாமரையும் அஜய்யும் பார்த்துக் கொண்டனர். அஜய் இன்னும் விடுப்பில்தான் இருந்தான்.
கட்சி ஆட்கள் எல்லாம் மருத்துவமனைக்கே வந்து பார்த்து விட்டு சென்றிருந்தனர். வீடு தேடி வருபவர்களையும் கோபுவே சமாளித்து அனுப்பி வைத்தான்.
கோபுவும் ஆசைத்தம்பியும் தர்மாவிடம் வந்து புகழரசனை ஏதாவது செய்ய வேண்டும் என வெறியோடு கூறினார்கள். தர்மாதான் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் அமைதியாக இருங்கள் என சொல்லி விட்டான்.
படுத்து கிடப்பவனை கூட ஏற்றி விடுவீர்களா என தாமரையும் அவர்களை நன்றாக திட்டி விட்டார்.
தாக்க வந்தவர்களில் பிடிபட்ட இருவரும் கூட உயிர் பிழைத்துக் கொண்டனர். புகழரசன்தான் இதன் பின்னணியில் இருப்பவன் என ஊர் உலகத்துக்கே தெரிய, அவர்கள் தங்கள் சொந்த பகைதான் தர்மாவை தாக்க காரணம் என சொல்லி விட்டார்களாம்.
முன் எப்போதோ யாரிடமோ நடந்த தகராறில் தாங்களும் பாதிக்க பட்டதாக கதை சொல்லியிருக்கிறார்கள்.
வினோத்குமார்தான் இந்த வழக்கை விசாரிப்பது, அவனும் புகழரசனை காப்பாற்றி விடவே பார்த்தான். பணம் வாங்கிக் கொண்டோ அல்லது வேறு எந்த உபகாரத்துக்காகவோ அவன் இதை செய்யவில்லை, தன் தந்தை மரணிக்க காரணமாக இருந்த குடும்பத்தை சேர்ந்த தர்மாவை அழிக்க முனைபவன் யாரும் எனக்கு நண்பன் என்ற எண்ணத்திலேயே இப்படி செய்தான்.
இப்போது மாவட்ட எஸ் பி கூட மாறியிருந்தார். புதிய எஸ் பி கறாராக இருந்தார், வினோத்திடம் பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக வழக்கை விசாரி என சொல்லி விட்டார். ஆனாலும் தர்மாவுக்கு எதிராகவே செயல்பட்டான் வினோத்.
வினோத் பற்றி தெரிந்த போதும் தர்மா அலட்டிக் கொள்ளவே இல்லை, இந்த வழக்கிலும் அதிக ஈடுபாடு காட்டிக் கொள்ளவில்லை, எழுந்து நடமாடவும் தானே பார்த்துக் கொள்வேன் என விட்டு விட்டான்.
செய்தி அறிந்து கனிக்குத்தான் அத்தனை ஆற்றாமை. தாமரையும் தன் கணவன் விஷயத்தில் கூட இப்படித்தான் ஆனது, அதனால்தான் என் அண்ணன் வன்முறையை கையில் எடுத்து பழி தீர்த்துக் கொண்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.
“இன்ஸ்பெக்டர்கிட்ட நாம பேசி பார்க்கலாமா அத்தை?” என கனி கேட்கவும், சரியாக வருமா என யோசித்தார் தாமரை.
கனிதான் முயன்று பார்க்கலாமே, மாமா மீதுள்ள வன்மத்தினால் அந்த இன்ஸ்பெக்டர் இப்படி செய்கிறார், அவரது தந்தையின் மரணத்தில் மாமாவுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை எடுத்து சொல்வோம், அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மேலதிகாரியை பார்க்கலாம்’ என்றாள்.
“எதுவும் வேலைக்கு ஆகாது கனி, ஒரு மாசம் போகட்டும், உன் புருஷன் டிராவல் பண்ற நிலைக்கு வந்ததும் எல்லாரும் வைஸாக் போயிடலாம்” என சொல்லிப் பார்த்தார் தாமரை.
கனி ஒத்துக் கொள்ளவில்லை. அநீதி செய்ய நினைத்தவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனையை பெற்றுத் தந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் தர்மா மீண்டும் இந்த மீள முடியாத சுழலில் சிக்கிக் கொள்வான் என்ற தன் பயத்தை சொன்னாள். ஒரு வேளை தர்மாவை கட்டாயப் படுத்தி இங்கிருந்து அழைத்து சென்றாலும் ஆபத்து காத்துக் கொண்டே இருக்கும், ஆகவே புகழுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் கனியும் தாமரையும் வினோத்குமாரை சந்திக்க காவல் நிலையம் சென்றனர். வினோத்தும் பழி உணர்ச்சியில் இப்படி நடக்கிறானே தவிர, அத்தனை கெட்டவன் இல்லை. சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு தன்னை காண வந்த பெண்களை சந்திப்பதை புறக்கணித்து விட்டான்.
அவர்கள் விடவில்லை, நேராக அவனது வீட்டுக்கே சென்று விட்டனர்.
ஹாலில் மாட்டப் பட்டிருந்த வினோத்தின் அப்பாவின் புகைப்படத்தை காணவுமே தாமரைக்கு வயிரெல்லாம் கொதிக்க ஆரம்பித்து விட்டது. கடைசியாக இந்த வீட்டு வாசல் படியை மிதிக்க வைத்து விட்டானே என தர்மா மீதும் கோவம்.
வினோத்தின் அம்மா பவானி தன் கணவர் இறக்கவுமே ஊரை விட்டே சென்று விட்டார். வினோத் இங்கு வேலைக்கு வந்தது கூட தற்செயலானது என்றே அவரை நம்ப வைத்திருந்தான்.
மகன் இங்கு இருந்தால் கூட பவானி மட்டும் இங்கு வரவே இல்லை. வினோத்தின் மனைவி தலைப்பிரசவத்துக்காக அவளின் தாய் வீடு சென்றிருக்க, வினோத்தும் வற்புறுத்தி அழைத்ததால் இப்போதுதான் இங்கு வந்திருக்கிறார்.
வேறு வழியின்றி தன்னை தேடி வந்தவர்களை அமர வைத்து என்னவென கேட்டான் வினோத்.
உங்கள் தந்தை எப்போதோ இறந்து விட்டார், அவர் செய்த தவறுக்கு சட்டத்தால் தண்டிக்க முடியாத நிலையில் என் அண்ணன் ஒரு பாதகத்தை செய்தார், அவரும் இப்போது உயிருடன் இல்லை, என் மகனுக்கு அதில் சம்பந்தம் இல்லை. ஆகவே பழைய விஷயத்தை நினைவில் வைத்துக்கொண்டு இந்த வழக்கில் அதை காட்ட வேண்டாம் என பொறுமையாக சொன்னார் தாமரை.
கனியும் தன் மாமியாரை ஒத்து பேசியவள் புகழரசன்தான் இதற்கு முக்கிய காரணம், அவன்தான் முதன்மை குற்றவாளி என்பதை சொன்னாள்.
நான் சரியாகத்தான் வழக்கை விசாரிக்கிறேன், இனி இப்படியெல்லாம் வீடு தேடி வரவேண்டாம் என்றான் வினோத். அவனது தொனியே இவர்களுக்கு அவன் உதவ போவதில்லை என்பதை தெளிவு படுத்தியது.
கனியும் தாமரையும் ஒருவரை ஒருவர் ஏமாற்றமாக பார்த்துக் கொண்டனர்.
உள்ளிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பவானி, வந்தவர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்.
தாமரை, பவானி இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன. இன்றுதான் இருவரும் நேரில் பார்த்துக் கொள்கின்றனர்.