“உனக்கு மட்டும் எந்த ரெஸ்ட்ரிக்ஸன்ஸும் இல்லை, அடுத்தவங்களுன்னா ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவண்ணா நீ” என பழையபடி சிலிர்த்துக் கொண்டான் அஜய்.

“அப்படித்தான் டா!” என ஒரே வார்த்தையில் தர்மா உறும, அஜய் கப்சிப். கனி அவனை கண்களால் கிண்டல் செய்ய, “என்ன அவ நம்பர் அப்புறம் தர்றியா? வேணாம் அண்ணி” என சொல்லி அவளை அண்ணனிடம் கோர்த்து விட்டே எழுந்து சென்றான் அஜய்.

‘விளையாட்டா போச்சா உனக்கு?’ என தர்மா மனைவியை திட்ட, அஜய்தான் விளையாடுகிறான் என்பதை கணவனுக்கு புரிய வைப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

அதியனுக்கு பிறந்தநாள் நடந்தது. விசாகப்பட்டினதிலிருந்து யாரும் வரவில்லை, கனிக்கு மிகுந்த வருத்தம். வரவில்லையே தவிர கைப்பேசியில் அதியனை வாழ்த்தினார்கள். தர்மாவும் பெரிதாக செய்யாமல் எளிமையாகவே விழாவை நடத்தியிருந்தான்.

காதணி விழாவையாவது சிறப்பாக செய்ய வேண்டும் என வேலம்மாள் பாட்டி விருப்பப் பட்டார். அது இப்போதைக்கு இல்லை, அம்மாவுடன் சுமூகமான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி விட்டான் தர்மா.

சீரான ரிதத்தில் நாட்கள் நகர்ந்தன.

புகழரசன் ஒரு பக்கம் தர்மாவுக்கு தலைவலியாகத்தான் இருந்தான். தர்மாவும் சளைக்காமல் அவனை சமாளித்தான்.

மேகநாதனுக்கு இரண்டு மகன்கள், பெரியவன் இப்போதுதான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தான். கல்லூரி ஒன்றில் படிப்பவன், படிப்பில் கவனம் வைக்காமல் தந்தையின் வழியை பின்பற்ற ஆசை கொண்டான்.

மதுரையிலிருந்து வரும் அரசுப் பேருந்து ஒன்றை வழி மறித்து போன நிறுத்தத்தில் ஏன் நிற்கவில்லை என ஒரே தகராறு. இறங்குவதற்கோ ஏறுவதற்கோ  பயணிகள் யாருமில்லாமல் எப்படி நிறுத்த என டிரைவர் கேள்வி கேட்க, அவனை அடித்து விட்டான்.

போலீஸ் வருவதற்குள் தர்மா அங்கு சென்று விட்டான். மேகநாதனின் மகனிடம் பேசவே முடியவில்லை, தர்மாவை கண்டதுமே ரகளை செய்ய ஆரம்பித்து விட்டான். உடனே கை நீட்டி விட்டான் தர்மா.

புகழரசன் ஊரில் இல்லை என்பதால் அவன் தரப்பு ஆட்கள் தர்மாவுக்கு பயந்து அந்தப் பையனை டிரைவரிடம் மன்னிப்பு கேட்க வைத்து அவர்களுடன் அழைத்து சென்று விட்டனர்.

வினோத்குமாரும் அங்கு வந்து சேர்ந்தவன் நீ எதற்கு தலையிட்டாய் என தர்மாவிடம் கேட்டு அவர்களுக்குள் வாக்குவாதம்.  சில பிரமுகர்கள் வந்து சமரசம் செய்யவும்தான்  ஓய்ந்தனர்.

ஊரிலும் அதேதான் பேச்சாக இருந்தது. கனியின் காதுக்கும் இந்த செய்தி வர, திரும்ப அந்த குடும்பத்தினருடன் உனக்கென்ன தகராறு என கணவனை கடிந்து கொண்டாள்.

“நான் வம்புக்கு போகல, சின்ன பையன் இப்பவே எப்படி துள்றான்ங்கிற, இவனையெல்லாம் அடக்கி வைக்கலைனா நாளைக்கு மொத்த அராஜகத்தையும் பயமில்லாம செய்வான்” என்றான் தர்மா.

“ஊர்ல என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? மேகநாதனை படுக்க வச்சது மட்டுமில்லாமல் அவர் பையன் அதும் சின்னவன்… அவனை போய் அடிச்சு வச்சிருக்கான்னு உன்னைத்தான் தப்பா சொல்றாங்க மாமா” என்றாள்.

அப்படியும் ஒரு சிலர் பேசினார்கள், ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தர்மா செய்ததில் உடன்பாடுதான்.

“ஊர்ல பேசிக்கிறதெல்லாம் என்னைய விட உனக்கு நிறைய தெரியுமா?” என்றவன் பேச்சை மாற்ற பார்த்தான். ஆனால் அவள் விடவில்லை, அந்த குடும்பம் மோசமானது, அவர்களை கண்டாலே தள்ளி போய் விட வேண்டும் நீ என தொண தொணத்துக் கொண்டேதான் இருந்தாள்.

தர்மாவும் சரி என்றும் சொல்லாமல் முடியாது என மறுக்கவும் செய்யாமல் அமைதியாக இருந்தே அந்த நாளை கடத்தினான்.

புகழ் ஊர் திரும்பியதும் மேகநாதனின் மனைவி அள்ளி சொருகிய புடவையும் அவிழ்த்து விட்ட கூந்தலுமாக அவனிடம் போய் நின்று விட்டாள். என் கணவன் படுத்ததும் நீ அவர் இடத்தை பிடித்துக்கொண்டாய், அவன் என் மகனையும் அடித்து விட்டான், என்ன செய்தாய் நீ? அவனுக்கு பயப்படுகிறாயா என ரகளை செய்து விட்டாள்.

மேகநாதன் செயல்படாமல் போகவும் தனக்கென ஒரு இடத்தை புகழ் பிடித்து விட்டான் என்பது என்னவோ உண்மைதான், ஆனால் தர்மா இல்லாமல் போனால்தான் இங்கே செல்வாக்கு பெற முடியும் எனதான் மனதில் நினைத்திருந்தான்.

தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி மேகநாதனின் மனைவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவன் தர்மாவை சாய்க்க தீவிரமாக திட்டமிட ஆரம்பித்து விட்டான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மதியம் வீடு வந்த தர்மா வெளியில் எங்கேயும் செல்லவில்லை. மகனுடன் ஹாலில் இருந்தான். கட்சி சார்பாக நாளை மறுநாள் ஏதோ விழா நடக்க இருக்க, அந்த வேலைகளுக்காக தன் வீட்டில் காவலுக்கு என இருந்த ஆட்களில் இருவரை மட்டும் இருக்க செய்து மற்றவர்களை அங்கு அனுப்பியிருந்தான்.

வளர்ப்பு நாய்க்கு ஏதோ உடல்நலக் கேடு, காலையிலேயே கால்நடை மருத்துவர் பார்த்து சென்றிருந்தார்.

 வேலை செய்யும் பெண், நாய்க்கு மருந்து கொடுக்க, கனியும் அங்குதான் இருந்தாள்.

கார் ஒன்று வந்தது. வாசலிலேயே யார் என்னவென விசாரித்தனர் ஆட்கள். நம்பியின் பெயரை சொல்லி அவர் செய்த உதவியால்தான் என் மகனுக்கு வேலை கிடைத்தது, அவனுக்கு கல்யாணம், பத்திரிகை கொடுக்க வந்திருக்கிறோம் என்றனர்.

காரில் இரண்டு பெண்மணிகளும் இருக்க, சந்தேகம் இல்லை. இருந்த போதும் பத்திரிக்கையை காட்ட சொல்லி கேட்டனர். அவர்களும் எடுத்து காட்டினார்கள்.

 பார்த்திருந்த கனி, “என்ன செய்றீங்க, உள்ள பொம்பளைங்க கூட இருக்காங்க, இப்படி நிறுத்தி வச்சிருக்கிறது மாமாக்கு தெரிஞ்சா திட்ட போறாங்க” என்றாள்.

அழைப்பிதழில் கட்சித் தலைவர் உருவப்படமெல்லாம் இருக்க,  அவர்களும் காரை உள்ளே விட்டனர்.  உடல் நலமில்லாமல் படுத்திருந்த நாய் திடீரென சக்தியை திரட்டி தலையை உயர்த்தி குரைக்க ஆரம்பித்தது.

நாயின் சத்தம் கேட்டு அதற்கு ஏதோ முடியவில்லை போல என மகனுடன் வெளியில் வந்தான் தர்மா.

நாயின் பார்வை, காரில் இருந்தவர்கள், அவர்களின் உடல்மொழி, பார்வை என கண நேரத்தில் கண்டு கொண்ட தர்மா, கனியிடம் குழந்தையை கொடுத்து உள்ளே செல்லும் படி உத்தரவிட்டான்.

பயந்த கனி “என்னாச்சு மாமா?” என பதட்டப் பட்டாள். தர்மா வேலைக்கார பெண்ணை பார்க்க, உடனே கனியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் அந்தப் பெண். வேகமாக கதவையும் அடைத்து விட்டாள்.

“என்ன செய்ற நீ?” என அந்தப் பெண்ணிடம் கோவப்பட்டாள் கனி.

“அண்ணன் சாடை காட்டி இதைத்தான் செய்ய சொன்னாங்க, வெளில ஏதோ ஆபத்து போல” என்றாள் அந்தப் பெண்.

வெளியில் கேட்ட சத்தத்தில் கனிக்கு உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்திருந்தது.

சத்தம் கேட்டு பாட்டி அறையிலிருந்து வெளி வர, அஜய்யும் மாடியிலிருந்து ஓடி வந்தான்.

வேலை செய்யும் பெண் அவர்களிடம் வேகமாக நடந்ததை சொன்னாள். நம்பி இறந்த தினம் நினைவுக்கு வரப் பெற்ற அஜய் கதவை திறக்க போனான்.  அதற்கு அனுமதிக்காத பாட்டி தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.

காவல் நிலையத்துக்கு அழைத்து விஷயத்தை சொன்ன அஜய், பாட்டியை மீறிக் கொண்டு கதவை திறக்க போக, அவனது கால்களை கட்டிக் கொண்டவர், “உனக்கும் ஏதாவது ஆகிப் போகும்டா, போவாதடா” என அழுதார்.

பயத்தில் உறைந்த கனி குழந்தையோடு அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.