“பிரச்னைன்னு வந்து சொல்லிருக்க எத்தனையோ பேருக்காக ஓடிருக்கேன் கனி. அவளும் அப்படித்தான். ஆனா அவ விஷயத்துல உன் மனச பத்தி கண்டுக்காம விட்டுட்டேன். இனிமே அப்படிலாம் நமக்குள்ள பிரச்சனை வராது, அதான் சொல்ல முடியும் என்னால” என்றான்.
அதற்கு மேல் பேசினால் எரிச்சல் படுவான் என அவளுக்கு புரிந்தது, அவளுக்கும் அந்த நேரத்தை இனிமையாக செலவிடவே விருப்பம். ஆகவே மஹாவின் பேச்சை விட்டு விட்டாள்.
மஹா விஷயத்தை கையாள்வதில் கூட மனைவியிடம் எங்கே தவறினோம் எங்கே சுதாரித்திருக்க வேண்டும் என்றெல்லாம் தர்மாவுக்கு புரிப்பட்டு விட்டது. கனி அதை தொடர்ந்து பேசவில்லை என்றாலும் இவனுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவு உண்டாகியிருக்கிறது.
வழிபாடு முடிந்து வெளிவந்த பின் கோயிலின் பின்னணியில் செல்ஃபி எடுத்து நிதிலாவுக்கு அனுப்பி வைத்தாள். நிதியும் வீட்டில்தான் இருந்திருப்பாள் போலும், உடனே அன்னலக்ஷ்மி பாட்டியிடம் காண்பித்து, அவரும் தன் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் வாய்ஸ் நோட் ஆக அனுப்பி வைத்திருந்தார்.
காரில் ஏறிய பின் பாட்டிக்கு அழைத்து அவரிடமும் நிதிலாவிடமும் பேசினார்கள் இருவரும்.
வீட்டுக்கு வந்த பின் மகனை இருவரும் சேர்ந்தே கவனித்தார்கள். அதிக்கும் தர்மாவிடம் நல்ல ஒட்டுதல் ஏற்பட்டிருந்தது.
வேதனை தரும் விஷயங்கள் பற்றி பேசாமல் பெரும்பாலும் அதியனை குறித்தே பேசினார்கள். இடையிடையில் தான் இங்கு வந்த புதிதில் கனி எப்படியெல்லாம் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறாள் என்பதையெல்லாம் சொல்லி கிண்டல் செய்தான் தர்மா.
அன்னலக்ஷ்மி பாட்டி சொன்ன தர்மாவின் சிறு வயது கதைகளை கொஞ்சம் கூட்டி குறைத்து மிகைப் படுத்தி சொல்லி அவளும் அவனை கிண்டல் செய்தாள்.
இரவில் உணவு முடித்த பிறகு முகிழ்ந்து விட்ட புன்னகையை தாங்கிக் கொண்டுதான் இருவரும் அறைக்குள் வந்தார்கள். மகனை மனைவி உறங்கச் செய்யும் வரை அவளை சீண்டாமல் படுத்துக் கிடந்தான். அதி உறங்கிய பின் அவள் திரும்பிப் படுக்கவும் அவள் விழி தன்னை நோக்க காத்துக் கிடந்தவன் போல அவளை பார்த்தான்.
“மாமா என்ன இது? புதுசா கல்யாணம் ஆனது போல ஃபீல் வர வைக்கிற?” என சிணுங்கினாள்.
“அப்படி இல்லைன்னாலும்… ம்ம்… அப்படித்தான் எனக்கும் ஃபீல் ஆகுது” என சொல்லி வெட்கம் கொண்டவனின் மார்பில் ஒன்றிக் கொண்டாள் கனி.
பிரிவுக்கு பின் தன் இணையோடு இணை சேர்ந்தவர்களின் மனங்களில் ஆழ்ந்த அமைதி.
அடுத்த நாள் இனிமையாக புலர்ந்தது.
வீட்டிலேயே இருக்க போகிறாயா, பழைய படி ஃபேக்டரிக்கு வா என மனைவியிடம் சொன்னான் தர்மா.
கடந்த ஒன்றரை வருடங்களாக ஒரு வித அழுத்தத்திலேயே சென்றது, அதியனுக்கும் இன்னும் தாய்ப்பால் கொடுக்கிறேன், விசாகப்பட்டினத்தில் எனக்கு அத்தை வேறொரு வேலைக்கு ஏற்பாடு செய்யும் போதே எப்படி இவனை விட்டு இருக்க போகிறேன் என நிறைய பயந்தேன், அவனை வேறொருவர் கவனிப்பில் விட பிடிக்கவில்லை, ஆகவே சில மாதங்கள் போகட்டும் என சொல்லி விட்டாள்.
ஒருமுறை நேரில் வந்து பார்க்கவாவது செய் என சொல்லி அவளை ஃபேக்டரிக்கு அழைத்து சென்றான். அப்படியே பேசி பேசி தினம் ஒரு தடவை வந்து செல்ல அவளை சம்மதிக்க வைத்து விட்டான்.
தொழில் வளராமல் தான் விட்டு சென்ற இடத்திலேயே தேங்கி நிற்பது கண்டு அவளுக்கும் உள்ளூர வருத்தம். மனம் இளைப்பாற கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொண்டு தொழிலை கவனித்துக் கொள்ள வேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள்.
கனி இங்கு வந்து விட்டதால் அம்மாவுடன் நீ இருக்க வேண்டும் என தம்பியிடம் கேட்டான் தர்மா. இங்கு வேலையை விட சில நடைமுறைகள் இருந்தன, அதை அவன் சொல்ல, தான் பார்த்துக் கொள்வதாக சொன்னான் தர்மா.
இந்த பேச்சின் போது, “நீ வந்ததும் என்னை அனுப்பி விடுறியா அண்ணி?” என விளையாட்டாக கேட்டான் அஜய்.
“எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை அஜய், நான் வந்திட்டதால அத்தை இப்போ ரொம்ப லோ வா இருப்பாங்க, நீ கூட இருக்கணும்னு நினைக்குது மாமா” என்றாள் கனி.
“அதான் நிதி இருக்காளே” என்றான் அஜய்.
“அவளுக்கு கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன் டா” என தர்மா சொல்லவும், மற்ற இருவரும் வியப்பாக பார்த்தனர்.
“அப்பத்தா மூலமா அம்மாகிட்ட பேசணும். நிதிக்கு எப்படிப்பட்ட பையன் வேணும்னு அவகிட்டேயும் பேசணும். இந்த நேரம் நீ அங்க இருந்தாதான் நல்லாருக்கும்” என்றான் தர்மா.
அதற்குள் அவளுக்கு திருமணமா என அஜய் கேட்டதற்கு கூட, அவசியம்தான் என்றானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை.
பேச்சுவாக்கில் உன் காதல் என்னவானது என விசாரித்தாள் கனி. அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டது என உதடுகள் பிதுக்கினான் அஜய்.
“சரி விடு விடு, வேற நல்ல பொண்ணா கிடைப்பா. இதெல்லாம் உங்க குடும்ப ராசி அஜய்!” என கனி சொல்ல, தர்மா அவளை நன்றாக முறைத்து வைத்தான்.
“அப்படியா! ஆனா எனக்கு வேற மாமா பொண்ணு இல்லையே” என பொய்யாக கவலை பட்டான் அஜய்.
“அப்படியா பேர் என்ன? இன்ஸ்டால இருக்காளா?” என அக்கறையாக விசாரித்தான் அஜய்.
“மேல படிக்க பிரிப்பேர் பண்றீல்லடா, அதுல ஃபோகஸ் பண்ணு!” என தம்பியிடம் கண்டிப்போடு சொன்னான் தர்மா.
கனி ஏதோ சொல்லப் போக, அவளிடமும் “உனக்கும்தான் கனி! திரும்ப ஏதாவது அவன் டிஸ்ட்ராக்ட் ஆகுற மாதிரியான ஐடியாஸ் கொடுக்காத. இவன் என் தம்பிங்கிற ஒரே காரணத்துக்காகவே உன் பெரியம்மா இவனுக்கு பொண்ணு தர விட மாட்டாங்க” என்றான் தர்மா.