நெஞ்சை கொய்தாள் வஞ்சி -17

அத்தியாயம் -17

தன்னோடு சேர்ந்து கொண்டு அதியனும் விழித்து விட்டதால் தர்மாவுக்கு அழைத்து அவனை வரச் சொன்னாள் கனி.

“கொஞ்ச நேரம் வச்சுக்க மாமா, ஒரு நிமிஷம் தனியா விட முடியலை. நான் குளிச்சிட்டு வந்து தூக்கிக்கிறேன், கஞ்சி செய்ய சொல்லிருக்கேன், நான் வர்றதுக்குள்ள வந்திடுச்சுன்னா நீயே ஊட்டி விட்ரு” என்றாள்.

“இவனை கவனிச்சிட்டு அப்புறம் குளிக்க கூடாதா கனி?”

“ஏன் ஒரு நாள் இவனை பார்த்துக்க அவ்ளோ கஷ்டமா இருக்கா உனக்கு?”

“பார்த்து பேசு கனி! என்கிட்ட சாப்பிடுவானோ என்னவோ… காலங்காத்தால புள்ளைய அழ வைக்க வேணாம்னு சொன்னேன்”

“அழுதாலும் இப்ப நான் குளிச்சுதான் ஆகணும்” என்றவள் தான் வீட்டுக்கு விலக்கு என்பதை சொன்னாள்.

சரி பார் என்றவன் மகனோடு சென்று விட்டான். குழந்தைக்கு உணவூட்டி விடும் போது அதியனின் ஆடையெல்லாம் கஞ்சியாகி விட்டது. தண்ணீர் குடிக்கும் போதும் அதுவும் மேல் ஊற்றி ஆடையை கழட்டும் படியாகி விட்டது.

குளித்து தயாராகி மகனை காண வந்தாள் கனி. நெஞ்சு வரை கட்டப் பட்டிருந்த துண்டை அவிழ்க்க  முயற்சித்துக் கொண்டிருந்தான் அதியன்.

“என்னடா அதிக்குட்டி காஸ்ட்யூம் இது?” என கேட்டுக் கொண்டே மகனை தூக்கிக் கொண்டாள்.

“வச்சு செஞ்சிட்டான் என்னை. ஒரு வாய் சாப்பிட வைக்கிறதுக்குள்ள தலை கிறு கிறுத்து போச்சு” என்றான் தர்மா.

“சும்மா கம்ப்ளைண்ட் பண்ணாத என் செல்லத்த, அம்மாகிட்ட சமத்தா சாப்பிட்டுக்குவான். உனக்கு ஊட்டி விட தெரியலை, என்னடா குட்டி?” என கேட்டுக் கொண்டே மகனின் கன்னத்தில் முத்தமிட்டாள் கனி.

அதியனும் பதிலுக்கு அம்மாவின் கன்னத்தில் முத்தமிட, “அப்பாக்கு இல்லையாடா?” என ஆசையாக கேட்டான் தர்மா.

கனிக்கு என்னவோ போலாக, “நீ ஃபர்ஸ்ட்  கிஸ் பண்ணிட்டு அவன்கிட்ட கன்னத்த காட்டு, தருவான்” என்றாள்.

தர்மாவும் அப்படியே செய்ய, அதியனின் கவனம் காற்றில் அசைந்தாடும் திரைசீலையின்  பக்கம் சென்று விட்டதால் அப்பாவுக்கு முத்தமிடவில்லை. கணவனை ஏமாற விட மனமில்லாமல் மகனின் முகத்தை திருப்பி அவனது இதழ்கள் தர்மாவின் கன்னத்தில் படும் படி செய்தாள்.

நிமிர்ந்த தர்மா மனைவியின் முகத்தை ஊடுருவிப் பார்த்து, “இதுதான் கனி நீ, எப்பவும் இப்படி இருக்க மாட்டியா? உனக்காக ஏங்கி கெடக்குற எம்மனச உனக்கு தெரியலையா?” எனக் கேட்டான்.

பதில் தர இயலாமல் கனி மனதில் மருக, குழந்தை அவளிடமிருந்து விடுபட்டு இறங்கி தவழ்ந்து கொண்டே திரை சீலையின் பக்கம் சென்று அதைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான்.

மனைவியின் முகத்தை கைகளால் பிடித்துக் கொண்டவன் அவளிரு கன்னங்களிலும்  முத்தமிட்டு, இதழ்களிலும் இதழ்களை பதித்து விட்டு விலகினான்.

அவள் ஏதும் சொல்லாமல் கீழே பார்த்தவாறு  நின்றிருந்தாள்.

“ஒரு நேரம் கல்யாணம் பத்தியெல்லாம் யோசனையே இல்லாம இருந்தேன் கனி. நீ எனக்கு கிடைச்சதுக்கப்புறம்தான் வாழ்க்கை நல்லா போச்சு. அது கெட நானும் ஒரு காரணமா இருக்கலாம்… ப்ச்… என்னை நீ விட்ருவேன்னு நினைச்சதில்லை, விட்டுட்டு போயிட்டேங்கிறதை நம்ப முடியாம எப்படி போனான்னு யோசிச்சு யோசிச்சு மண்டைய உடைச்சுகிட்ட ராத்திரி நிறைய” என்றான்.

கலங்கி விட்டன கனியின் விழிகள்.

சமாதானமாக அவளின் கன்னத்தை தட்டிக் கொடுத்தவன், “பசிக்கும்ல உனக்கு, போ கனி, சாப்பிடு, நான் குளிச்சிட்டு வர்றேன்” என சொல்லி குளியலறை சென்று விட்டான்.

நல்ல பசியோடுதான் இங்கு வந்தாள். அவளுடைய பிரிவால் துயரப்பட்டுக் கொண்டிருப்பவன் பசியை மறத்து போக செய்து விட்டான்.

அதியன் திரை சீலையை விட்டுவிட்டு கப்போர்ட் பக்கமாக நகர்ந்து சென்றான். அதை திறக்க நினைத்து  கையால் கதவில் தட்ட ஆரம்பித்தான்.

சிந்தனை கலைந்தவள் மகனை தூக்கி வைத்துக்கொண்டு, “உள்ள பார்க்கணுமா? என்னடா இருக்க போகுது? உங்கப்பா ட்ரெஸ்தான் இருக்கும். பார்க்கிறியா?” எனக் கேட்டாள்.

அதியன் மீண்டும் கப்போர்ட்டில்  தட்ட, திறந்து காண்பித்தாள். துணிகளை இழுத்து கீழே போட்டான் அவன்.

“அப்பா திட்டுவாங்க!” என மகனை செல்லமாக கண்டித்தவள், மேல் அடுக்கில் இருந்த இரண்டு மது பான  பாட்டில்களை கண்டு ஸ்தம்பித்தாள்.

தர்மா குளித்து விட்டு வந்தவன் இன்னும் கனி அங்கேயே இருப்பதை கண்டு விட்டு, “ஏய் போகலையா நீ?” எனக் கேட்டான்.

பதில் தராமல் சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கனி.

“கனி…” மெதுவாக அழைத்தவன் பார்வையில், அவள் வெளியில் எடுத்து வைத்திருந்த பாட்டில்களும் தென் பட்டன.

நேற்று இரவே இவளின்  பார்வையில் விழுந்து விடக்கூடாது எனதான் உள்ளே ஒளித்து வைத்திருந்தான்.

மீண்டும் எடுத்து உள்ளே வைக்க போனான் தர்மா.

“இதெல்லாம் என்ன மாமா?” என கவலையாக கேட்டாள்.

“என்ன பண்ண சொல்ற? மருந்து மாதிரி கொஞ்சம் போலத்தான் சாப்பிடுவேன், இல்லைனா தூக்கம் வர்றதில்லை கனி” என விளக்கம் சொன்னான்.

“இப்ப எதுக்கு உள்ள வைக்கப் போற? தூக்கி கடாசு அதை!”

“பத்து நாள் கழிச்சு நீ போயிடுவ, இதுதான் என்னை தூங்க வைக்கும். நேத்திக்கு கூட இது இல்லாம தூக்கமே இல்லை, இருந்தாலும் நீ இந்த வீட்ல இருக்கிறப்ப சாப்பிட கூடாதுன்னு சாப்பிடல. இனியும் நீ கிளம்புற வரை இதை டச் பண்ண மாட்டேன், ஆனா பின்னாடி தேவைப்படும்ல?”

“இது இருக்கிற வீட்ல நான் இருக்க மாட்டேன் மாமா!” என தீவிர தொனியில் சொன்னாள்.

அவன் கெஞ்சலாக பார்க்க, அவளோ கடுமையாக பார்த்தாள்.

 அவனும் பாட்டிலில் இருந்ததை ஊற்றி விட்டு காலி பாட்டிலை குப்பைத் தொட்டியில் போட்டான்.

“இனிமே தொடக்கூடாது சொல்லிட்டேன்! இவனுக்கு ட்ரெஸ் போட்டு கீழ அழைச்சிட்டு போறேன், நீயும் ரெடியாகி வா, சேர்ந்து சாப்பிடலாம்” என சொல்லி மகனோடு சென்றாள்.

தர்மாவிடம் சின்னதாக புன்னகை.

அண்ணன் அண்ணியுடன் சேர்ந்து அஜய்யும் உணவருந்தினான். ‘அத்தைக்கு ஒரு மகனோடு சேர்ந்து இருக்கத்தான் கொடுப்பினை இல்லை, நீயாவது அவருக்கு உறுதுணையாக இருக்கக் கூடாதா?’ என அஜய்யிடம் கேட்டாள் கனி.

“அதுக்கென்ன அண்ணி? நீ அண்ணனோட இருந்தா எனக்கென்ன வேலை இங்க?”  எனக் கேட்டான் அஜய்.

“எப்படி… நான் இல்லாத குறைய நீ தீர்த்து வைக்கிறியா?” எனக் கேட்டாள் கனி.

“அது தெரியலை. மாமா கடைசியா சொன்ன வார்த்தை அண்ணா பேர்தான். என் உயிரை காப்பாத்தினவருக்கு செய்ற நன்றிக் கடன் இது. மாமா இப்ப இருந்திருந்தா உன்னையும் இங்கதான் இருக்க வச்சிருப்பாரு” என்றான் அஜய்.

என்ன நடந்தாலும் தர்மாவை விடக்கூடாது என தந்தை அறிவுறுத்தியது எல்லாம் அவளின் நினைவுக்கு வர, கனியின் கை சாப்பாட்டில் அலைந்தது.

“சாப்பிடும் போது ஏன் இதெல்லாம் பேசுற டா?” என தம்பியை கடிந்து கொண்டான் தர்மா.

“அண்ணிதான் ஸ்டார்ட் பண்ணிச்சுண்ணா. இனி பேசல” என்ற அஜய், வேகமாக சாப்பிட்டு கிளம்பி விட்டான்.

பாதி சாப்பாட்டில் எழப் போனவளை தடுத்தவன், “மாமா இருக்கிறப்ப உன்கிட்ட சொன்னதுக்காகலாம் நீ என் கூட இருக்க வேணாம். உனக்கா தோணும், நல்லா சாப்பிடு கனி” என தன்மையாக சொன்னான்.

அப்போதும் அவள் சாப்பிடாமலே இருக்க, “என் பையன் பின்னாடி ஓட தெம்பு வேணாமா கனி?” எனக் கேட்டு ஊட்டி விடப் போனான்.

அவள் தயக்கமாக பார்க்க, “என்னவோ புதுசா என் கையால சாப்பாடு வாங்குற மாதிரி லுக் விடாத, பத்து நாள்தான் இருப்பேன்னு சொல்லிட்ட, கூட இருக்க வரைக்குமாவது எனக்கு பொண்டாட்டியா வேணாம் ஒரு காலத்துல என்னையவே எல்லாமுமா நினைச்ச என் மாமன் பொண்ணு கனியா இருந்திட்டு போயேன்” என்றான்.