“குரல் உசத்தாம ரொம்ப மெதுவாத்தான் சொல்ற மாமா. ஆனா நறுக் நறுக்குன்னு குத்துது” என்றாள்.

“என்ன குத்துது?”

“உன் வார்த்தை? நான் நல்ல பொண்டாட்டி இல்லைனு சொல்றதானே நீ?”

“கூட வாழாத பொண்டாட்டி பத்தி என்ன கருத்து சொல்ல?” என அவன் கேட்கவும் முகம் சுண்டிப் போனாள்.

“எப்பவும் நீ எனக்கு நல்ல பொண்டாட்டி தான் கனி, நான்தான் உனக்கு நல்லவனா இல்லை போல. இங்க இருக்கிற வரைக்கும் நல்ல படியா சுமூகமா இருன்னுதான் சொன்னேன்” என்றவன், சில நொடி அமைதிகு பின், “என் நெஞ்சறிஞ்சு எந்த தப்பும் செய்யல கனி, இவ்ளோ கொடுமையா என்னைய தண்டிக்க வேணாம் நீ. இதுக்கு மேல என்னத்த சொல்ல? சாப்பிடு” என சொல்லிக் கொண்டே ஒரு வாய் உணவு கொடுத்தான்.

அதன் பின் அவளாகவே சாப்பிட்டுக் கொண்டாள்.

கடந்த சில நாட்களாக தன் அன்றாடப் பணி எதையும் தர்மா பார்த்திருக்கவில்லை. அரை நாளில் திரும்பி விடுகிறேன் என சொல்லி வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டான்.

மதியம் வீடு வந்தால் மகனுடன் நேரம் பறந்தது. கனி பாட்டியுடனே இருந்து கொண்டாள். இரவில் தனித் தனி அறைகளில் உறங்குகிறார்கள் என்பதே பாட்டிக்கு தெரியவில்லை.

அடுத்த நாள் இரவில் அதியன் படுக்கையில் இருக்க மறுத்து அவளின் தோளிலேயே கிடந்தான். அறைக்குள்ளேயே மகனை தூக்கி வைத்துக்கொண்டு நடை போட்டவள் சோர்ந்து விட்டாள். கணவனை அழைக்கலாம் என நினைத்தவள் உறங்கியிருந்தால் அவனுக்கு தொந்தரவாகி விடுமே என நினைத்து மகனோடு அவனிருந்த அறைக்கு சென்றாள்.

தர்மாவோ அறைக்கு வெளியில்தான் நடந்து கொண்டிருந்தான். அவளை காணவுமே, “என்ன கனி, இன்னும் தூங்கலியா? இவனுக்கு என்ன?” என பதறினான்.

அவள் விவரம் சொல்லவும் மகனை தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவன், “ஏன் இப்படி செய்றான்? ஏதாவது உடம்புக்கு தொந்தரவோ?” என விசாரித்தான்.

“அப்படிலாம் தெரியலை மாமா, ரெண்டு மூனு தடவ இப்படி பண்ணியிருக்கான். ஏதாவது பயந்து போயிருப்பான்னு ஆத்தா சொல்வாங்க. கொஞ்ச நேரத்துல டீப் ஸ்லீப் போயிட்டான்னா பெட்ல படுத்துப்பான்” என்றாள்.

“சரி நீ தூங்கு, இவன் நல்லா தூங்கினதும் நானே உன் பக்கத்துல படுக்க வச்சிடுறேன்”  என்றான்.

அவள் அங்கேயே நிற்க, “உன் கண்ணு முன்னாடிதானே அதையெல்லாம் ஊத்தி கவுத்தேன்? இன்னும் சந்தேகம?” எனக் கேட்டான்.

“சேச்ச, சொல்லிட்டா செய்ய மாட்டேன்னு தெரியும். ஆனா இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருந்த?” எனக் கேட்டாள்.

“தூக்கம் வரலை கனி, காரணம் கேட்காத, உன்கிட்ட சொல்லி சொல்லி அலுத்து போச்சு” என்றவன் குழந்தையுடன் நடக்க ஆரம்பித்தான்.

அவளுக்கு மிகுந்த சோர்வாக இருக்கவும் அவனுடன் இருக்க நினைத்தாலும் முடியாமல் அறைக்கு சென்று விட்டாள். படுத்தாலே தவிர கணவனை பற்றிய யோசனையில் உறக்கம் வரவில்லை.

ஒரு மணி நேரம் சென்றுதான் குழந்தையை எடுத்துக் கொண்டு இவளிடம் வந்தான் தர்மா.

“இவன் நல்லா தூங்கிட்டான் கனி, இவனை நினைச்சிட்டே தூங்காம இருந்தியா?” எனக் கேட்டுக் கொண்டே மகனை படுக்கையில் கிடத்தினான்.

எழுந்து கொண்டவளுக்கு அவனை அங்கேயே இருக்க சொல்ல எண்ணம். ஆனால் எப்படி சொல்லவென தயக்கம்.

அவன்தான் அவளை கவனித்து விட்டு என்னவென கேட்டான்.

“திடீர் திடிர்னு மேல ஏறி படுத்துப்பான். எனக்கு இன்னிக்கு முடியலைல மாமா, வந்து… நீ இங்க இவன் பக்கத்துல படுத்துக்கிறியா?” எனக் கேட்டாள்.

அவளை ஊன்றிப் பார்த்தவன், “என் ரூமுக்கு தூக்கிட்டு போயிடுறேன், நீ ஃப்ரீயா தூங்கு” என்றான்.

“வேணாம் வேணாம்” என வேகமாக மறுத்தவள், “இடைல பசிக்கு அழுவான், நான் அவன் கூட இருக்கணும்” என சமாளிப்பாக சொன்னாள்.

“அழுதா தூக்கிட்டு வர்றேன்” என்றான்.

“உன் தூக்கம் கெட்டு போகும்”

“அது கெட்டு போயி ஒன்றரை வருஷம் ஆகிப் போச்சு. பொண்டாட்டி கெடுத்த தூக்கத்தை இன்னிக்கு ஒரு நாள் எம் புள்ள கெடுத்தா தப்பில்ல” என்றான்.

“படுன்னு சொன்னா பேசாம படுக்க வேண்டியதுதானே மாமா? எதுக்கு பதிலுக்கு பதில் பேசிட்டே இருக்க?”

“இவனுக்காக இங்க இருக்க சொன்னா இப்படித்தான் பேசுவேன் கனி” என அப்போதும் பேசினான் தர்மா.

வேக மூச்சுகளோடு கோவமாக பார்த்தவள், “ஒழுங்கா பக்கத்துல படு” என்றாள்.

வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமா என கேட்க நினைத்து வாய் திறக்க போனான்.

“வேற ஏதும் பேசாத, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மகனே என்னை எழுப்பி விட்ருவான், அது வரைக்குமாவது என்னை தூங்க விடு” என அவள் சொல்லவும் அமைதியாக இருவருக்கும் இடையில் படுக்க போனான்.

“இந்த ஓரம் படு, அவன் எழுந்தா நான் படுத்துகிட்டே அவனை கவனிச்சுப்பேன்” என்றாள்.

“எப்படியும் மூஞ்சு திருப்பிகிட்டு தூங்க போற, இவன் பக்கத்துல இருந்தாலாவது இவன் கையை புடிச்சுக்குவேன். அப்படியே சீக்கிரம் தூங்கிடுவேன்” என்றான்.

“நான்தானே படுக்க சொன்னேன், மூஞ்செல்லாம் திருப்ப மாட்டேன்” என சின்னக் குரலில் அவள் சொல்லவும், மகிழ்ச்சியாக படுக்கையின் ஓரம் அவளை அணைத்த படி படுத்துக் கொண்டான்.

மனைவியுடன் கிட்டிய நெருக்கம் அவனை சும்மாயிருக்க விடவில்லை. அடிக்கடி அவளுக்கு முத்தமிட்டான், அவளுக்கு முடியாமல் இருக்குமே என்ற அக்கறையில் இடுப்பை அழுத்திக் கொடுத்தும்  வயிறை தடவிக் கொடுத்தும்  இருந்தான்.

அவளுக்கும் உறக்கம் விட்டுப் போனது.

“என் மனசு வாடினா உனக்கு பொறுக்காதுன்னு எனக்கு தெரியும் கனி, என் கூடவே இருந்திருந்தா எப்பவோ எம்மேல உள்ள கோவம்லாம் உனக்கு போயிருக்கும். இனிமேல்லாம் சும்மா போறேன் போறேன்னு சொல்லக்கூடாது என்ன?” என்றான்.

அவள் அமைதி காக்க, “உன்னை அதியனை எல்லாம் பாதுகாப்பா வச்சுப்பேன் கனி. கவலை படாம இங்க இரு” என்றான்.

அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, “என்ன கனி ஏதாவது சொல்லேன்” என்றான்.

“இந்த அன்பு காலத்துக்கும் எனக்கு நிலைக்கணும்னுதான் மாமா ஆசை படுறேன். எங்களை பாதுகாப்பா வச்சுப்ப, ஆனா உன் பாதுகாப்பு மாமா? உன்னை சுத்தி வரிசை கட்டி நிக்கிற ஆபத்து? எங்கப்பா…” என அப்பாவை பற்றி பேச நினைத்தவள் உணர்ச்சி மிகுதியால் மௌனமாகி விட்டாள்.

“கனி…” என அழைத்தான்.

“கண்டிப்பா நான் அத்தைகிட்ட போயிடுவேன் மாமா, என்னை தேடி நீ அங்க வா, நிரந்தரமா அங்கேயே இருக்கலாம்” என அவள் சொல்லவும் அவன் அமைதியாகி விட்டான்.

இருவருமே கண்களை மூடிக் கொண்டனர், உறங்கினார்களா உறங்கியது போல பாசாங்கு செய்தார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படித்தான் ஐந்து நாட்களும் கடந்திருந்தன. பேத்தி இங்கேயே வந்து விட்டாள் எனதான் நினைத்திருந்தார் பாட்டி.

“நான் எவ்ளோ நாள் இருப்பேன்னு எல்லாம் தெரியாதுடி தங்கம், அதனால இப்பவே சொல்லி வச்சிடுறேன். இவனுக்கு ரெண்டு வயசு ஆகும் போதே இன்னொன்னு பெத்தெடுத்திடு, சின்ன சின்னதா இருக்கும் போதே ரெண்டையும் ஒன்னா சேர்த்து வளர்த்து எடுத்திடலாம். இல்லைனா உனக்குத்தான் கஷ்டம்” என்றார் பாட்டி.

பாட்டியை ஏமாறச் செய்ய மனமில்லாமல் நிரந்தரமாக இங்கே இருக்க போவதில்லை என்பதை தெரியப்படுத்தி விட்டாள் கனி.

பாட்டிக்கும் பேத்திக்கும் பேச்சாக ஆரம்பித்த விஷயம் கார சாரமாக மாறி வாக்குவாதத்தில் போய் முடிந்தது.

“கூடவே இருந்து இவனை மாத்த நினைச்சா அது நல்லதுக்கு அடையாளம், வெட்டிகிட்டு போவேன்னு நின்னா இவனுக்கு ரெண்டாவதா யாரையும் பார்த்து கட்டி வச்சிடுவேன்” என சொல்லி விட்டார் பாட்டி.

அவ்வளவுதான் கனி கோவமடைந்து விட்டாள்.  தர்மாவுக்கு அழைத்தவள் உடனே இங்கே வா என அடமாக சொன்னாள்.