“கஷ்ட பட்டு சம்பாதிக்கிறாங்க அத்தையும் நிதியும், நான் தண்டத்துக்கு இருக்கேன், வேஸ்ட் பண்ண மனசு வரலை” என்றாள்.
சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, “என்னை கோவ படுத்தி பார்க்க நினைக்கிறியா கனி?” எனக் கேட்டான்.
“இல்லை மாமா, குடும்பத்தை நினைச்சு பார்க்காம இஷ்டம் போல வாழற ஆம்பளைங்கள நம்பி வர்ற பொண்ணோட நிலைமை எப்படி இருக்கும்னு சொல்றேன்” என்றாள்.
கையை உதறி விட்டு எழப் போனவனை இடது கை கொண்டு பிடித்துக்கொண்டவள், “நான் எதுவும் பேசல, ப்ளீஸ் சாப்பிடு” என்றாள்.
அவனுக்கு சாப்பிட விருப்பமே இல்லைதான், தான் சாப்பிடவில்லை என்றால் வருத்தமடைவாள் என அவளுக்காக சாப்பிட்டான். கனியும் அமைதியாக இருந்தாள்.
அவன் சாப்பிட்டு முடிக்கவும் பாத்திரங்களை உள்ளே எடுத்து வைத்தவள் தேநீர் போடவா எனக் கேட்டாள்.
“எவ்ளோ வேலை பார்க்கிற நீ? ஏன் கனி கஷ்ட படுறீங்க எல்லாரும்? நீயெல்லாம் என்னடா மனுஷன்னு என் மனசாட்சி என்னை பார்த்து காறித் துப்புதுடி” என்றான்.
கனி ஏதோ சொல்வதற்குள் தாமரை வந்து விட்டார். ஆசைத்தம்பி பூங்காவிலிருந்த படியே கல்லூரிக்கு சென்று இவரை அழைத்து வந்து விட்டு மீண்டும் பூங்காவுக்கு சென்று விட்டான்.
வீட்டுக்குள் நுழையவுமே தர்மாவை கண்டவர் ஏன் வந்தாய் எதற்கு வந்தாய் என ஒரே சத்தம்.
அம்மாதான் என்னை தனிமை படுத்தி விட்டார் என அவர் மீது ஏற்கனவே கோவத்திலிருந்தவனுக்கு அவர் பொறுமையாக பேசாமல் கோவம் கொண்டதில் ஆத்திரம் பெருகியது.
என் மனைவியும் மகனும் இங்கிருக்க எனக்கு வர உரிமை இருக்கிறது என பதிலுக்கு சத்தம் போட்டான்.
இருவரையும் சமாதானம் செய்யும் வழி தெரியாமல் விழித்தாள் கனி.
“நீ ஏன் இவன் முன்னாடி நிக்கிற? பொண்டாட்டியாம் பொண்டாட்டி! அன்னிக்கு உன்னை விட்டுட்டு எவளுக்கோ என்னவோன்னு ஓடினவன் பொண்டாட்டிய பார்க்க வந்து நிக்கிறானாம்! உள்ள போ நீ, இவன் கண்ல படவே கூடாது” என மருமகளிடம் அழுத்தமாக சொன்னார் தாமரை.
அத்தைக்கு பயந்து கனியும் உள்ளே செல்ல போக, அவளின் கையை பிடித்துக் கொண்டவன், “போய் பாரு உள்ள, நான் யாருன்னு உன் அத்தைக்கு காட்டுறேன்!” என்றான்.
“ச்சீ விடுறா அவ கையை, இத்தனை மாசம் என்ன பண்ணினா எப்படி இருந்தான்னு எட்டி பார்த்தியா? பொம்பளைங்களா எவ்ளோ நாள் தனியா இருப்பாங்க, உன்னைத் தேடி வந்துதான் ஆகணும்னு இறுமாப்புல இருந்திட்டு, வரவே மாட்டோம்னு தெரிஞ்சதும் வந்திருக்கியா?” என சீறினார் தாமரை.
“ம்மா!” என கண்டனமாக அழைத்தான்.
“அம்மாதான் டா, தர்மான்னா பெரிய இவன்னு ஊர்ல பேர் வாங்கியிருக்கீல்ல? உன்னை பெத்தவளுக்கு எவ்ளோ இருக்கும்? எம்பேச்சை கேட்காத உங்கப்பாவை வாரிக் கொடுத்தேன், உன்னையும் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன். அந்த பயலும் உன் கூட சேர்ந்திட்டான்ல… அதுக்காகலாம் அசந்திட மாட்டேன். இந்த பொண்ணுங்கள தனியாளா நின்னே ஆளாக்குவேன், பார்க்கிறியா?” என ஆவேசமாக பேசினார்.
அம்மாவின் மனவேதனையின் எதிரொலிப்புதான் இந்த பேச்சுக்கள் என்பது தெரியாதவனா? கோவத்தை கை விட்டவன், “அமைதியா இரும்மா, முதல்ல தண்ணி குடி” என சொல்லி கனியை பார்த்தான்.
கனி உள்ளே ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினாள். தாமரைக்கும் தொண்டை வறண்டு போயிருக்க, வேகமாக தண்ணீரை பருகி நாற்காலியில் அமர்ந்தார்.
கார் நிற்கும் சத்தம் கேட்க, பூங்காவிலிருந்து வந்து விட்டார்கள் போல என எண்ணிக் கொண்டான் தர்மா. சில நிமிடங்களில் சத்தம் கேட்கவும் மூவரும் வெளியில் விரைந்தனர்.
காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்திய ஆசைத்தம்பி அவனது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டே காரிலிருந்து இறங்கி விட்டான்.
பாட்டி இறங்க உதவிய நிதிலா, வழியில் வாங்கியிருந்த காய்கறி பையை எடுத்து விட்டு உறங்கியிருந்த குழந்தையை தூக்கலாம் என நினைக்க, கதவு அடை பட்டிருந்தது. கார் சாவியோ காரின் உள்ளேயே சிக்கியிருந்தது.
கார் கதவை திறக்க முடியாமல் நிதிலா பதற்றம் கொள்ள, ஆசைத் தம்பியும் முயன்று விட்டு முடியவில்லை என சொல்ல, சத்தம் போட ஆரம்பித்து விட்டார் பாட்டி.
இன்னொரு சாவி இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் காணாமல் போயிருந்தது.
வெளியே வந்த கனி அழ ஆரம்பிக்க, குழந்தையும் விழித்துக் கொண்டு விட்டான். உடன் யாருமில்லாமல் பயந்து போன குழந்தை அழுது கொண்டே இருக்கையிலிருந்து விழுந்து விட்டது.
மகன் விழுந்ததை பார்த்த கனி சத்தமெடுத்து அழ ஆரம்பித்து விட்டாள். மற்ற பெண்களுக்கும் என்ன செய்வதென தெரியவில்லை.
ஆசைத் தம்பி முன் பக்க கதவின் கண்ணாடியை கழட்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்க, அவனை இழுத்து தள்ளிய தர்மா தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து குறுவாள் ஒன்றை எடுத்தான். கனமான அதன் பிடியைக் கொண்டு கண்ணாடியை குத்தினான். நான்காவது குத்தில் கண்ணாடி உடைந்து விட்டது.
ஆயுதத்தை கீழே போட்டவன் உள்ளே கை நுழைத்து கார் சாவியை எடுத்து விட்டான். வேகமாக கதவை திறந்து மகனை அள்ளிக் கொண்டான் தர்மா.
அதற்குள் மயக்கமடைந்திருந்தாள் கனி. குழந்தைக்கு அடி ஏதும் படவில்லை என உறுதி செய்து கொண்ட தர்மா, தங்கையிடம் அவனை ஒப்படைத்து விட்டு மனைவியைப் பார்த்தான்.
தாமரை தண்ணீர் தெளித்தும் அவள் கண் விழிக்கவில்லை. அவளை தூக்கிச் சென்று அறையில் படுக்க வைத்து கன்னங்களை தட்டிக் கொண்டே அவளின் பெயரை சொல்லி அழைத்தான்.
விழித்துக் கொண்டவள் அதியனின் பெயரை சொல்லி அழவும், “நல்லாருக்கான் கனி, அழாம இரு, இல்லனா பயந்துக்குவான்” என்றான்.
“எங்க அவனை?” எனக் கேட்டுக் கொண்டே எழப் போனவளை தடுத்து படுக்க வைத்தவன் ஆசைத் தம்பியிடம், “நிதிகிட்ட அதியை தூக்கிட்டு வரச் சொல்லு” என அனுப்பி வைத்தான்.
இன்னும் அழுகையை நிறுத்தாத குழந்தையுடன் வந்தாள் நிதிலா. கனியிடம் சென்று கூட குழந்தையின் அழுகை ஓயவில்லை. பாட்டியும் தாமரையும் அடி எதுவுமோ என நன்றாக ஆராய்ந்து விட்டனர், அப்படி ஏதுமில்லை. பயத்தில்தான் இவ்வளவு அழுகையும்.
பசியாற்றி பார் அழுகை நிற்கும் என கனியிடம் சொன்னார் பாட்டி. மற்றவர்கள் வெளியேற, தர்மா மட்டும் மகனை விட்டு வர மறுத்து அங்கேயே இருந்து விட்டான்.
பசியாறவும் மறுத்து அழுதான் குழந்தை, அவனை பார்த்து கனியும் ஒரே அழுகை. தர்மா தவித்துதான் போனான்.
மருத்துவமனை செல்லலாம் என முடிவெடுத்தவன் அவளை கிளம்ப சொல்ல, இன்னொரு முறை அவனுக்கு பசியாற்ற முயன்றாள். தேம்பிக் கொண்டே பசியாற ஆரம்பித்து விட்டான் அதியன். குழந்தையை மார்போடு மென்மையாக அணைத்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள் கனி. பின் அவனை தொட்டு தடவி வருடிக் கொடுத்தாள். கண்ணில் மட்டும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
வெளியேறியவன் கனிக்கு பருக ஏதாவது தரச் சொல்லி தங்கையிடம் கேட்டான். அதியன் சரியாகி விட்டானா என கேட்டறிந்து கொண்டார் பாட்டி.
நிதி ஜூஸ் போட்டு எடுத்து வரவும் வாங்கப் போன தாமரையை முந்திக் கொண்டு தானே வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றான்.
உறங்கிப் போயிருந்த மகனை மடியிலேயே வைத்திருந்தாள் கனி. அதீத அழுகையின் காரணமாக இப்போதும் தேம்பி தேம்பி மூச்சு விட்டான் அதியன். அவனது மார்பை வருடி விட்டவள் அவனது கையை பற்றி முத்தமிட்டாள்.