மஹாவுக்காக தர்மா சென்னை செல்ல வேண்டியிருந்த போது அம்மா மற்றும் மாமாவின் வீடுகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்படுகளை செய்து விட்டுத்தான் புறப்பட்டான். தம்பியும் தங்கையும் கல்லூரி முடித்து வீடு வந்த பிறகு வெளியில் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்து விட்டான்.
அஜய்க்கு நட்பாக பழகி வந்த பெண்ணுடன் அதை தாண்டிய உணர்வுகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. அந்தப் பெண்ணும் தனக்கும் அப்படித்தான் என்பது போலவே பழகினாள்.
நடு இரவில் அஜய்க்கு அழைத்த அந்தப் பெண் தான் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் உடனே என்னை பார்க்க வா எனவும் அழுது கொண்டே சொன்னாள். அடுத்து இவன் என்னவென விசாரிப்பதற்குள் அழைப்பு துண்டிக்க பட்டு விட்டது. அவன் அவளை தொடர்பு கொள்ள முயன்றும் அழைப்பு செல்லவே இல்லை.
தன்னை அவள் விரும்புவது தெரிந்து அவளது வீட்டினர் ஏதும் துன்புறுத்துகிறார்களோ எனதான் அவனுக்கு சந்தேகம். ஆகவே, போலீசை நாடாமல் வீட்டில் பாதுகாப்புக்கு என அண்ணன் நிறுத்தியிருந்த ஆட்களின் கண்களில் படாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
அருகில் குடியிருக்கும் நண்பன் ஒருவனுக்கு அழைத்து, அவனை எழுப்பி விட்டு அவனது பைக்கில் அவனோடு தான் விரும்பும் பெண் வசிக்கும் ஊருக்கு சென்றான்.
முன்னர் ஒரு சமயம் பாலாஜி என்பவனின் அம்மா இறந்த போது, கலப்புத் திருமணம் செய்த அவனது தம்பி இறுதி சடங்கில் பங்கெடுத்துக் கொள்ள உதவியிருந்தான் தர்மா. ஏ டி எம் ஒன்றில் இரவு பாதுகாவலராக வேலை செய்பவன். அவன் வேலை செய்யும் ஊரை சேர்ந்தவள்தான் அஜய் விரும்பும் பெண். ஏ டி எம் க்கு எதிரில் உள்ள லாட்ஜில் புதிய ஆட்கள் தங்கியிருப்பதை முதல் நாளிரவே கண்டிருந்தான்.
தமிழில் பேசிக் கொள்ளாத அந்த ஆட்களை பார்த்த உடனே இவர்கள் இந்தப் பகுதி ஆட்கள் இல்லை என்பது பாலாஜிக்கு தெரிந்திருந்தது. அவர்கள் இப்போது கார் ஒன்றில் புறப்பட்டு ஊருக்குள் சென்றனர்.
இந்நேரத்தில் ஊருக்குள்ளே என்ன வேலை இவர்களுக்கு என அப்போதே அவனுக்கு சந்தேகம். சற்று நேரம் கழித்து தன் நண்பனுடன் அந்த ஊருக்கு வந்த அஜய்க்கு அந்தப் பெண்ணின் வீடு செல்லும் வழி தெரியவில்லை.
ஏ டி எம் வாசலில் அமர்ந்திருந்த பாலாஜியிடம்தான் வழி விசாரித்தான். சொல்லி அவர்களை அனுப்பி விட்ட பாலாஜிக்கு என்னவோ நெருடல்.
வயதுப் பெண்ணின் பெயரை சொல்லி அவள் வீட்டுக்கு வழி கேட்கும் இவனை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே என யோசித்து, தன் நினைவுகளை கிளறி தர்மாவின் தம்பி என்பதை தெரிந்து கொண்டான்.
காதல் விவகாரம் போல, அந்தப் பெண்ணும் இந்த தம்பியும் வேறு வேறு இனமாகிற்றே என யோசித்தவனுக்கு சற்று முன் சென்ற ஆட்களின் நினைவும் வந்தது.
அவனுடைய கைப்பேசியில் தர்மாவின் எண் இல்லை, நம்பியின் எண்தான் இருந்தது. உடனே விவரம் சொல்லி விட்டான்.
உடனே நம்பி அஜய்க்கு அழைக்க, தான் வீட்டில் இல்லாதது தெரிந்துதான் கேட்க அழைக்கிறார் என நினைத்து அவரின் அழைப்பை அவன் ஏற்கவில்லை.
தன் மகளுக்கு அழைத்த நம்பி, அஜய் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார். தங்கையின் வீட்டிலுள்ள ஆட்கள் அங்கே துணைக்கு தேவை என்பதால் அவர்களை கூப்பிட்டுக் கொள்ளவில்லை. இங்கேயும் தன் அம்மாவுக்கு பாதுகாப்பு வேண்டுமென கருதி இரண்டு ஆட்களை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நம்பி.
இப்படி ஆட்கள் வந்து தங்கியிருப்பது நம்பியின் காதுக்கு செல்லவில்லை, பாலாஜியும் சந்தேகமாக சொன்னானே தவிர உறுதி பட ஏதும் சொல்லவில்லை. பழி வாங்கவென எதிரிகளை காவு வாங்கும் செயல்கள் இந்தப் பகுதியில் இதற்கு முன்பும் நடந்தேறியிருக்கிறது. எதிரியை எதிரி தாக்கிக் கொள்வார்களே தவிர்த்து வீட்டினரை யாரும் ஏதும் செய்தது இல்லை. ஏதாவது தொல்லை தரலாமே தவிர்த்து உயிரை எடுக்கும் அளவுக்கு யாரும் சென்றதில்லை.
தர்மாவுக்கும் தனக்கும்தான் எதிரிகளே தவிர, அஜய் சின்ன பையன் அவனை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என நம்பியிடம் சின்ன அலட்சியம்.
தான் விரும்பும் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவளை மிரட்டி அவளது குடும்பத்தினரை பிணையாக வைத்து இப்படி தன்னை தனியாக வரவழைக்க திட்டம் போட்டிருப்பார்கள் என அஜய் கனவு கூட கண்டிருக்க மாட்டான்.
மேகநாதனுக்கு தர்மாவையும் நம்பியையும் பழிவாங்க இதுதான் சிறப்பான வழியாக தெரிந்தது.
அஜய்யின் நண்பனை ஓடச் சொல்லி விட்டு அஜய்யை சுற்றி வளைத்துக் கொண்டனர் பணத்திற்காக எது வேண்டுமென்றாலும் செய்யும் அந்தக் கும்பல். அதற்குள் அங்கு நம்பி வந்து விட்டார். சின்ன மருமகனை காக்கும் போராட்டத்தில் பலத்த காயமடைந்து விட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அஜய்யின் மடியில்தான் உயிர் விட்டார்.
விழித்துக் கொண்டும் உணவருந்த செல்லாமல் படுத்தே இருந்தான் தர்மா. அன்று மட்டும் அவன் சென்னைக்கு செல்லாமல் ஊரில் இருந்திருந்தால் மாமா தன்னுடன் இருந்திருப்பார் என்ற நினைவோடு புரண்டு படுத்தான். சாப்பிட அழைத்த தங்கையிடம் வேண்டாம் என சொல்லி விட்டான். இரண்டு முறை வற்புறுத்திப் பார்த்தவள் அண்ணனின் அமைதியில் அவளும் அமைதியாகி வந்து விட்டாள்.
அன்றைய தினத்தில் அஜய் வீட்டை விட்டு தனியாக வெளியேறியதற்காக அவனை திட்டி அடித்து என தன் கோவத்தை அவனிடம் வெளிப்படுத்தினான் தர்மா. தாமரையோ அவனிடம் கோவப்படும் நீ ஒழுங்கா என பெரிய மகனைத்தான் திட்டினார்.
கத்தி எடுத்தவன் நிலை என்னவாகும் என உயிரை கொடுத்து உன் மாமன் உனக்கு சொல்லி விட்டு சென்றிருக்கிறார் என்றார், மனைவியை விட யாரோ முக்கியம் என எப்படி சென்றாய் என கேள்வி கேட்டார். இன்னும் நிறைய மனதுக்கு ஒவ்வாத பேச்சுக்கள்.
வினோத்குமாரோ மேகநாதனுக்கு சாதகமாக நடந்து கொண்டான். எதிர்பார்த்தே இருந்ததால் அதைப் பற்றி தர்மாவும் கவலை கொள்ளவில்லை.
மேகநாதனை போல வெளியாட்களை எல்லாம் அழைத்து வரவில்லை தர்மா, தன் ஆட்களை வைத்தே அவனை படுக்கையில் போட்டு விட்டான். அதன் பின்தான் தாமரை ஊரை காலி செய்து கிளம்பி விட்டார்.
அண்ணனுக்கு சாப்பாடு வேண்டாமாம் என கனியிடம் வந்து சொன்னாள் நிதிலா. அவர் சொன்னால் விட்டு விடுவாயா என கனி கோவப்பட, “அவர்கிட்ட பயமில்லாம பேசுற ஆள் நீதான், நீயே போ” என சொல்லி குழந்தையை தூக்கிக் கொண்டு பாட்டி இருந்த அறைக்கு சென்று விட்டாள்.
கனி தர்மா இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளட்டும் என நினைத்த பாட்டி எங்கேயாவது வெளியில் செல்வோம் வா என சொல்லி நிதியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டு விட்டார்.
தர்மாவாக சாப்பிட வருவான் என காத்திருந்த கனி, நேரம் நான்காகி விட அவளே அவனை அழைக்க சென்றாள்.
“நிதி சாப்பிட கூப்பிட்டா வர மாட்டியா, ஒழுங்கா வா மாமா” என்றாள்.
“சாப்பாடு ஒன்னுதான் குறைச்சல் எனக்கு?” என்றான்.
“இவ்ளோ நாள் நீ படுத்தி வச்ச வரைக்கும் போதும், வர்றியா என்ன?” அதட்டல் போட்டாள்.
தன்னிடம் கோவம் கொள்ளாமல் தள்ளி நிறுத்தியவள் இப்போது கோவப்படுவதை நினைத்து அவனுள் ஒரு வித நிம்மதி, உடனே எழுந்து கொண்டான்.
நேரத்தை பார்த்தவன் இன்று பகலிலேயே நன்றாக உறங்கியிருக்கிறோமா என வியந்து கொண்டான்.
மற்றவர்கள் எங்கே என அவன் கேட்டதற்கு அருகிலுள்ள பூங்கா சென்றிருப்பதாக சொன்னாள்.
அவன் முகம் கழுவி வரவும் தான் சமைத்ததை அவனுக்கு பரிமாறினாள்.
“நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
சமைத்த உடனே ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டிருந்தாள்தான், ஆனால் இப்போதும் பசியெடுப்பது போலிருந்தது. ஒன்றும் சொல்லாமல் தனக்கும் கொஞ்சம் போல பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினாள்.