நெஞ்சை கொய்தாள் வஞ்சி-14

அத்தியாயம் -14

தர்மா தன் மனைவி மற்றும் மகனை நேரில் பார்த்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகி இருக்கும். 

அதியனின் நீண்டிருந்த சுருண்ட  தலை முடியை ஒற்றைக் குடுமியாக்கியிருந்த போதும் ஆங்காங்கே சிலுப்பிக் கொண்டிருந்தன அடங்காத முடியிழைகள். நெற்றியிலும் கன்னத்திலும் கருப்பு மை பொட்டு வைத்து, கொழு கொழு என இருந்தவன் தர்மாவின் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்தினான். 

மனைவியின் கன்னம் தொட்டு மழலையில் பிதற்றி ஏதோ விளையாடிக் கொண்டிருந்த மகனை காண காண அவனை அள்ளி வாரியணைத்துக் கொள்ள துடித்தான் தர்மா. 

அம்மாவை விட்டிறங்கி தரையில் மண்டியிடத் தொடங்கினான் அதியன். மண் தரை அவனை காயம் செய்து விடுமோ என பதறிப் போன தர்மா ஓடிச் சென்று தன் மகனை தூக்கிக் கொண்டான். 

மகனின் கன்னம் நெற்றி கை என ஆசை தீர முத்தமிட்டான். வழக்கமாக புதிய ஆளை கண்டால் அழும் அதியனோ அழாமல் ஆராய்ச்சியாக தன் தகப்பனை பார்த்தான். 

பிள்ளையின் கண்களுக்குள் தன் உருவத்தை கண்ட தர்மாவின் கண்கள் கலங்கிப் போக, “என்னடா அப்பாடா, அப்பா…” என சொல்லிக் கொடுத்தான். 

“பா பா…” என்றான் அதியன். பின் வாயால் குமிழிகள் விட ஆரம்பித்து விட்டான். குழந்தையின் நெற்றி முட்டி கொஞ்சி மார்போடு அணைத்துக் கொண்டான் தர்மா. குழந்தை அப்பாவின் சட்டையை உமிழ் நீரால் நனைத்துக் கொண்டிருக்க, தர்மாவின் பார்வை தன் மனைவியிடம் சென்றது. 

அதுவரை அவனையே பார்த்திருந்தவள் அவன் பார்வை தன்னை தீண்டவும் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“கனி…” என அழைத்துக் கொண்டே மகனுடன் அவளை நெருங்கி வந்தான் தர்மா. உள்ளே செல்ல நடந்தாள் கனி.  ஒரு கையால் மகனை அணைத்துப் பிடித்து, இன்னொரு கையால் அவளின் கையை பற்றி நிறுத்தினான்.  

இறுகிப் போன முகத்துடன் அவனை பார்க்க மறுத்து பக்கவாட்டில் முகத்தை திருப்பினாள் கனி. 

அவனது விழிகள் அவளின் தலையிலிருந்து பாதம் வரை அலசியது. கணுக்காலுக்கும் சற்று மேல் ஏறியிருந்த ஊதா நிற கவுனில் போனி டெயில் போட்டு பார்க்க சிறு பெண் போலிருந்தாள். 

லேசாக அவனை ஏறிட்டவள் அவனது பார்வையை கண்டு விட்டு அவனிடமிருந்த தன் கையை பிடித்து இழுத்தாள். 

“இன்னும் எவ்ளோ நாள் என்னை விட்டுட்டு இருக்கிறதா இருக்க கனி?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் கையை இன்னும் இறுகப் பிடித்தான். 

அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவனைப் பிரிந்து இவள் மட்டும் மகிழ்ச்சியாகவா இருக்கிறாள். 

தந்தையை இழந்த துக்கம், மஹாவுக்காக சென்றானே என்ற வலி, தன்னை விட அவள் அவனுக்கு முக்கியமா என்ற நினைப்பில் அவன் மீது பொங்கிய கோவம் எல்லாமுமாக சேர்ந்து ‘என்னிடம் வராதே’ என சொல்லி விட்டாள். 

என்ன சொல்லியும் மீண்டும் மீண்டும் தன்னிடமே வந்து வந்து நின்றவனை  திருப்பி அனுப்பினாள். 

அவன் என்ன செய்திருக்க வேண்டும், சமாதானம் செய்ய மீண்டும் வந்திருக்க வேண்டும், அதை விடுத்து அப்படியே போய் விடுவானா? அதுகூட பரவாயில்லை, அப்பா விட்டதை இவனும் பிடித்துக்கொண்டானே, முன்னர் அப்பா பாதி இவன் மீதி என செய்து கொண்டிருந்ததை மொத்தமாக இவன் ஒருவனே பார்க்க ஆரம்பித்து விட்டானே, அப்போது நான் இவனுக்கு ஒன்றுமே இல்லைதானே என்பதாகத்தான் இருந்தது அவளது எண்ணம். 

சாவகாசமாக வந்து நிற்பவனை வரவேற்க வேண்டுமா? கையை உதறியவள் அவனை திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் ஓடினாள். 

நிதிலா ஒரு அறையில் இருக்க, இன்னொரு அறையில் படுத்திருந்தார் பாட்டி. எங்கே போக என விம்மியவள் சமையலறை சென்று விட்டாள். கைகளுக்குள் முகத்தை பொதிந்து மௌனமாக அழுதாள்.

ஏமாற்றமாக கனி சென்ற திசையை பார்த்தான் தர்மா. அதுவரை தள்ளி நின்றிருந்த ஆசைத்தம்பி அவனிடம் வந்தான். 

“உங்களை நேர்ல பார்த்தும் கூட நம்ம கனியம்மா பேசாம போயிடுவாங்களா ண்ணா? உள்ள போங்க ண்ணா” என்றான் ஆசைத்தம்பி. 

 தர்மா குழந்தையுடன் நடக்க, “அட சின்னவரை என்கிட்ட கொடுங்க, என்னை அடிச்சி விளையாடுறாதுன்னா அவருக்கு ரொம்ப இஷ்டம்” என சொல்லி அதியனை வாங்க முற்பட்டான் ஆசைத்தம்பி. 

தர்மாவுக்கோ மகனை விட்டுப் பிரிய மனமில்லை, “அழாமதான் இருக்கான், என்கிட்டேயே இருக்கட்டும்” என சொல்லி விட்டான். 

தர்மாவின் வருகை பற்றி அவனது பாட்டிக்கும் தங்கைக்கும் இன்னும் தெரியவில்லை. ஒரு அறை அடை பட்டிருக்க இன்னொன்றில் பாட்டி உறங்குவதை பார்த்தவன் ஏதோ தோன்ற சமையலறைக்கே சென்றான். 

“கனி…” என அழைத்துக் கொண்டே அவன் அவளின் தோளை தொட, வேகமாக அவனது கையை தட்டி விட்டாள். அழுகிறாள் என தெரியவும் ஒற்றைக் கையால்  அவளை இழுத்து அவளின் முகத்தை  தன்  மார்பில் பதித்துக் கொண்டான். 

கோவம், வருத்தம், ஆதங்கம் என எதிர்மறை எண்ணங்கள் நிறைய அவன் மீதிருந்த போதும் அந்நேரம் அவளின் உள்மனம் நாடியது என்னவோ அவனது அரவணைப்பைத்தான். ஆனால் வீம்பாக அவனை விட்டு விலகப் பார்த்தாள். 

அவன் விடவில்லை, அவளாலும் போராட முடியவில்லை. அழக் கூடாது என நினைத்தாலும் அவளை மீறி கண்ணீர் உகுத்தாள். 

கைக்கு சிக்கிய அம்மாவின் தலைமுடியை தொட்டு தொட்டு பார்த்தான் அதியன். 

“என்னடா கண்ணா அம்மாவும் புள்ளையும் என்னைய குளிப்பாட்டி விடுறீங்களா?” என மகனிடம் கேட்டான் தர்மா. 

உடனே அவள் விலகிக் கொள்ள, மீண்டும் தன்னுடன் அவளை அணைத்துக் கொள்ள முற்பட்டான். கை வைத்து அவனை விலக்கி விட்டவள் சமையல் மேடையை பார்க்க திரும்பி நின்று கொண்டாள். 

அதியன் இறங்க முனைந்தான். விடாதவன், “இவன் என்கிட்டருந்து இறங்குறான், விடவா கனி?” எனக் கேட்டான். 

அவனிடம் பேசாமல் மகனை மட்டும் வாங்கியவள் ஹாலில் விட்டு விளையாட்டு சாமான்களை அவனிடம் எடுத்துப் போட்டாள். பின் மீண்டும் சமையலறை சென்று விட்டாள். 

மகனை தனியாக விட்டு செல்லத் தயங்கி தர்மாவும் ஹாலிலேயே மகன் விளையாடிக் கொண்டிருந்த பாயிலேயே அமர்ந்து விட்டான். குழந்தை சமத்தாக விளையாட, மீண்டும் மனைவியிடம் சென்றான். 

அவனை தவிர்த்து விட்டு அவள் செல்லப் பார்க்க, அவளுக்கு வழியை மறித்துக் கொண்டு நின்றான். அழுகையை அடக்கவென அவள் மூக்குறிய அவளிரு கன்னங்களையும் தன் கைகளில் தாங்கினான். பட்டென அவனது கைகளை தட்டி விலக்கி விட்டாள். 

மீண்டும் கன்னங்களை பிடித்துக்கொண்டவன், “என் மூஞ்ச பாரு கனி”  என கெஞ்சினான். 

அவள் விடாப்படியாக பார்வையை அவனிடம் வைக்க மறுக்க, கட்டாயப்படுத்தி முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான். 

எத்தனை அன்பு அவளுக்கு அவன் மீது? என்ன நடந்த போதும் கொண்ட அன்பு மாறிப் போய் விடுமா? உதடுகள் துடிக்க அவனை பார்த்தவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். மனம் பலஹீனமாக இருக்க, அவனை விட்டு அவளாலும் விலக முடியவில்லை. அவளும் அவனை தழுவிக் கொண்டாள். 

அவளது தலையில் மென்மையாக முத்தமிட்டான். தன் கையணைப்பில் அவள் இருக்கிறாள் எனும் உண்மையை மூச்சை உள் இழுத்து உணர்ந்து அனுபவித்துக் கொண்டான். 

“இப்படி விட்டுட்டு போகவா கனி அவ்ளோ அடம் பண்ணி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீ இல்லாம நான் எவ்ளோ கஷ்ட படுவேன்னு தெரிஞ்சும்… ஹ்ம்ம்…” என்றவனுக்கு மேலே பேச முடியவில்லை. 

கனிக்கு அழுகை நின்று மனம் ஓரளவு திடப் பட்டது. விலகிச் செல் என மூளை சொன்னாலும் ஏற்க மறுத்தது மனம். அவனது வாசமும் உடலின் வெப்பமும் இன்னும் வேண்டுமாக இருந்தது. 

மனைவியை அறிந்தவன் போல இன்னும் கொஞ்சம் அவளை தன்னுள் புதைக்க முயன்றான் தர்மா. 

சில நொடிகள் கூட கடந்திருக்கவில்லை, அவளின் கைப்பேசி ஒலித்தது. அவனது மார்பில் கை வைத்து தள்ளி தன்னிடமிருந்து அவனை விலக்கி நிறுத்தப் பார்த்தாள்.