மேடையிலிருந்து கீழே இறங்கும் போது இவனை பார்த்தவர்கள் பலர் வணக்கம் வைக்க, சிலர் சிறு குழந்தைகள் பூச்சாண்டியை கண்டால் பயம் கொள்வது போல இவனை கண்டு மிரண்டு அனிச்சையாக தள்ளி நின்றனர்.
இதெல்லாம் தினசரி வாழ்வில் தர்மா எதிர்கொள்ளும் சங்கடங்கள். சாதாரண மனிதனாக தன்னை பார்ப்பதில்லை யாரும் என எண்ணியவன் இதற்கு முழுக்க முழுக்க தான் மட்டுமே காரணம் என்பதை புரிந்து நீண்ட மூச்செடுத்துக் கொண்டான்.
தர்மா வெளியில் எங்கும் சாப்பிடுவதில்லை. சாப்பிடும் படி கேட்டுக் கொண்ட மணமகனின் தந்தையின் கை பிடித்து சிறு சிரிப்புடன் விடை பெற்றுக் கொண்டான்.
அடுத்து புதுக்கோட்டை நோக்கி சென்றது கார். வழியில் அவனது அம்மா வாழ்ந்த வீடு. வேறொருவர் வாங்கி விட்டார். முகப்பு மாற்றப் பட்டு புதுமையாக தெரிந்தது. அம்மா, மனைவி, மகன், தங்கை, அப்பத்தா என எல்லார் நினைவும் அலை போல பொங்கி எழுந்தது.
பிரியமானவர்களை விட்டு பிரிந்து வாழும் இந்த வாழ்க்கைத்தான் எத்தனை கொடுமையானது! அவன் செய்யும் செயல்களுக்கான தண்டனை இதுவோ.
வணிக வளாகம் ஒன்றின் திறப்பு விழா. எம் எல் ஏ திறந்து வைக்க, தர்மா சிறப்பு விருந்தினர்.
புதிதாக வியாபாரம் தொடங்குபர்கள், எந்த கட்சி சார்பும் இல்லாதவர்கள் இரு கட்சிகளுடனும் நல்லிணக்கத்தை கடை பிடிப்பார்கள். அப்படித்தான் அந்த வணிக வளாகத்தின் உரிமையாளரும். விழா முடிந்து தர்மா புறப்படும் நேரத்தில் அங்கு வந்தான் புகழரசன், மேகநாதனின் தம்பி.
தர்மாவும் புகழும் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல, சுற்றி உள்ளோரிடம் ஒரு வித பதற்றம். இருவரும் வரப் போகும் நேரத்தை வைத்து இவர்களின் சந்திப்பு நிகழாது என நினைத்திருந்த உரிமையாளர் தீ மேல் நிற்பது போல உணர்ந்தார்.
கண்களால் வெறித்துக் கொண்டார்களே தவிர அசம்பாவிதமாக ஏதும் நிகழவில்லை.
தர்மாவின் கட்சி அலுவலகத்தின் முன் தனது ஆள் வைத்திருந்த பேனர் அவனை கொண்டே அகற்றப் பட்ட செய்தி சில நிமிடங்கள் முன்புதான் புகழின் காதுக்கு வந்து சேர்ந்தது.
பதிலுக்கு என்ன செய்யலாம் என அப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
எப்படி நம்பிக்கு பின் தர்மாவோ அதைப் போலவே மேகநாதனுக்கு பின் புகழரசன். என்ன… மேகநாதன் இன்னும் உயிருடன் இருக்கிறான், நடமாட முடியாத நிலையில், கைங்கர்யம் தர்மாவேதான்.
பொதுவாழ்க்கைக்கான பணிகள் முடியவும் ஃபேக்டரி சென்று விட்டான் தர்மா. முன்பு போல அதிக நேரமெல்லாம் இங்கே செலவிடுவது இல்லை. பொறுப்பான ஆட்களை நியமித்திருந்தான். வளர்ச்சியும் இல்லாமல் நட்டமும் உண்டாக்காமல் நடந்து கொண்டிருந்தது தொழில்.
மாலை வீட்டுக்கோ அல்லது கட்சி அலுவலகத்துக்கோ செல்வான். ஏதாவது பஞ்சாயத்து காத்திருக்கும். இரவு உணவுக்கு பின் அளவாக சோமபானம். இதன் துணையின்றி உறக்கம் இவனை சீண்டிக் கூட பார்ப்பதில்லை.
கனி ஆசையாக கேட்ட அனைத்தையும் செய்து கொடுப்பவன், அவளை கடந்த முறை அவன் சந்தித்த போது அவள் கேட்டுக் கொண்டதன் படி அவளை பார்க்க செல்வதில்லை.
அவளை அழைத்து வருகிறேன் என எளிதாக பாட்டியிடம் சொல்லி விட்டான், அவளின் வார்த்தையை மீறிக் கொண்டு எப்படி அவளிடம் செல்வது என அவனுக்கு பயம். ஆமாம் மனைவியை நினைத்து பயம்தான்.
கணவனிடம் சண்டையிடவில்லை, ஒரு வார்த்தை அதிர்ந்து பேசவில்லை, ஏன் கண்களில் கூட கோவத்தை காட்டவில்லை. இனி நீ எனக்கு வேண்டாம் என்னை விட்டு விடு என சொல்லி விட்டாள்.
தன்னை விட்டுச் சென்றவளை விடாமல் தொடர்ந்து சென்றான். அவளுடன் துணை நிற்க வேண்டிய நேரத்திலும் அதற்கு அனுமதிக்காத தன் அம்மாவை மீறிக் கொண்டு அவரின் திட்டுக்களையும் அவமானப் படுத்தும் சொற்களையும் பொறுத்துக் கொண்டு அவள் இருக்கும் இடத்தில் ஒட்டிக் கொண்டு நின்றான்.
தன் பிள்ளையை தன் கையில் தர மறுத்த அம்மாவின் செயலில் வேதனை என்றால் தன்னை பார்க்க மறுத்து விட்டாள் கனி என்பதைத்தான் அவனால் தாளவே முடியவில்லை.
அம்மாவின் எதிர்ப்பையும் கனியின் மறுப்பையும் மீறிக் கொண்டு மனைவியிடம் சென்றவனிடம் அவள் கேட்டது ‘என்னை விட்டு போய் விடு, என் கண்ணில் படாதே’ என்பதைத்தான். உயிரை உருவி அவளின் காலடியிலே போட்டு விட்டு வெற்றுக் கூடாக திரும்பி விட்ட தர்மா மீண்டும் அவளிடம் செல்லவில்லை.
படுக்கையில் வந்து வீழ்ந்தவன் அன்றைய நாளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, அடுத்த நரக நாளை எதிர்நோக்கி கண்களை அடைத்து விட்டான்.
கனியை பார்க்க வேண்டும் என்ற பாட்டியின் அனத்தல் அதிகமாகி விட்டது. கனியும் பாட்டியிடம் அடிக்கடி காணொளி அழைப்பில் பேசிக் கொள்ள மாட்டாள், வாரத்தில் ஒரு நாள் எனதான் பாட்டியிடம் பேச்சு இருக்க, அவரின் தற்போதைய உடல்நிலை சீர்கேடு பற்றி அவளுக்கு தெரிய வரவில்லை.
கனியிடம் சொல்ல வேண்டாம் என தம்பியிடம் சொல்லியிருந்தான் தர்மா. இங்கே வருவது பற்றிய அவளது மனநிலை பற்றியும் அம்மாவின் எண்ணம் எப்படி இருக்கும் என்பதை பற்றியும் அவனுக்கு சரியாக தெரியவில்லை. ஆதலால் பாட்டியை பற்றி சொல்லி மனைவியை வேதனைப் படுத்த வேண்டாமென நினைத்தான்.
“சொல்லாமலே இருக்க முடியாது அண்ணா. ஏன் சொல்லலைன்னு கேட்பாங்க” என்றான் அஜய்.
“ஃபோன்ல சொல்ல வேணாம், நானே அங்கு நேர்ல போலாம்னு இருக்கேன்” என தர்மா சொல்லவும், முதலில் அதிர்ந்த அஜய், மகிழ்ச்சியாக அண்ணனை பார்த்தான்.
தர்மாவுக்குள் அப்போதே பரபரப்பு. இப்போதாவது ஏன் வந்தாய் என கேள்வி எழுப்பாமல் மாமா என்று அழைப்பாளா என் கனி என நினைத்தான்.
கைப்பேசி வழியாக மட்டுமே கண்டு கொண்டிருக்கும் தன் மகனை அள்ளி கொஞ்ச முடியுமா என நினைக்கும் போதே, இப்படியொரு நிலை எந்த தகப்பனுக்கும் வர வேண்டாம் என ஆதங்கப் பட்டான்.
அண்ணனின் மனநிலை ஓரளவு புரிய, “அங்க போக ரெடி ஆகு அண்ணா, நல்லதே நடக்கும்” என தைரியம் சொன்னான் அஜய்.
விசாகப்பட்டினத்தில் இருந்த அந்த சிறிய வீட்டில் தன் மருமகன் அதியனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் நிதிலா. பதினோரு மாத குழந்தையான அதியன் தன் அத்தையை விட்டு விட்டு கொள்ளு பாட்டி அன்னலக்ஷ்மியை நோக்கி மண்டியிட்டு சென்று கொண்டிருந்தான்.
“வா வா வாடா கண்ணா… அம்மா இன்னுமா உனக்கு மம்மு செய்யுறா?” எனக் கேட்டுக் கொண்டே கொள்ளு பேரனை தூக்க முயன்றார் பாட்டி.
“குனியாத அப்பத்தா” என சொல்லிக் கொண்டே சென்ற நிதிலா, குழந்தையை தூக்கி அவரது மடியில் அமர வைத்தாள்.
பாட்டி கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையின் மீதுதான் அவனுக்கு கண். அதைப் பிடித்து விளையாடியவன் சற்று வேகமாக இழுத்து விட, அறுந்து முத்துக்கள் எல்லாம் தரையில் சிதறியது.
பேரனை செல்லமாக முறைத்த பாட்டி, “கைலேயே ரெண்டு போடணும் டா உனக்கு படவா” என சொல்லிக் கொண்டிருந்தார்.
சிரித்த அதியன் கீழே இறங்க முற்பட்டான்.
“ஒரு இடத்துல உட்கார மாட்டார் ஸார்” என சொல்லிக் கொண்டே அவனை இறக்கி விட்டாள் நிதிலா.
சிதறியிருந்த முத்துக்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள போனவனின் கையை தட்டி விட்ட நிதிலா பொய்யாக மிரட்டினாள். உதடு பிதுக்கி அழ ஆரம்பித்து விட்டான் அதியன்.
“கொஞ்ச நேரம் அழ வைக்காம அவனை பார்த்துக்க முடியாதா உன்னால?” என கேட்டுக் கொண்டே சாப்பாட்டுக் கிண்ணத்துடன் வந்தாள் கனி.
“கொஞ்சிகிட்டே இருந்தாதான் உன் பையன் சிரிப்பான், செய்றதெல்லாம் கேடி வேலை” என குறை சொன்னாள் நிதிலா.
“அத்தை திட்டுற அளவுக்கு என்னடா பண்ணி வச்சீங்க அதிக்குட்டி?” என தன் மகனிடம் கேட்ட கனி, சிதறியிருந்த முத்துக்களை பார்த்து விட்டு, “பெரிய வேலைதான் பார்த்து வச்சிருக்க” என்றாள்.
குழந்தையை தூக்கி கனியின் கையில் கொடுத்த நிதிலா, “டைம் ஆச்சு கனி, நீ பாரு” என சொல்லி அவளின் அறைக்கு சென்று விட்டாள்.
ஐ டி நிறுவனம் ஒன்றில் பணி புரியும் நிதிலாவுக்கு அன்று வீட்டிலிருந்த படியேதான் வேலை.
இங்கு இவர்கள் வந்து ஓராண்டுக்கும் மேல் ஆகி விட்டது. தனியாக இருந்த சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். கனியும் நிதியும் ஒரு அறையை பகிர்ந்து கொள்ள, பாட்டியும் தாமரையும் இன்னொரு அறையை எடுத்துக் கொண்டனர்.
வீட்டை விற்ற பணத்தைக் கொண்டு எதுவும் செய்து கொள்ளவில்லை தாமரை. மகளின் திருமணத்துக்கு பாதி, மீதி மருமகளின் எதிர்காலத்துக்கு என பத்திரப்படுத்தி விட்டார்.
தர்மாவிடமிருந்துஒருபைசாஇங்குவரக்கூடாதுஎனஉறுதியாகசொல்லிவிட்டார். தன்னுடன் வராத தன் பேச்சை கேட்காத சின்ன மகனின் உதவியையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். தாமரை தன் அரசுப் பணியிலிருந்து விடுபட்டு விட்டவர் இங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணி புரிகிறார்.
கணவனைஇழந்துமூன்றுபிள்ளைகளுடன்தனியாகபோராடியவர் இன்றும் அந்த மனோதிடத்தை விட்டு விடவில்லை.
சற்று முன்புதான் வேலைக்கு சென்றிருந்தார் தாமரை.
தர்மாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்தால் இப்போது இருக்கும் அதியனின் புகைப்படம் என்றே தோன்றும். உருவத்தில் அப்படியே அப்பாவை உரித்து வைத்துக் கொண்டிருந்தது குழந்தை.
தாமரையை கல்லூரியில் விட்டு இந்நேரம் வந்திருக்க வேண்டிய ஆசைத்தம்பியை இன்னும் காணவில்லை. அவன் இவர்களுடன்தான் இருக்கிறான். ஆண் துணையின்றி இருப்பது சிரமம் என்பதால் அவனது வரவை மட்டும் தடுக்கவில்லை தாமரை, ஆனால் அவனுக்கு சம்பளம் தாமரைதான் கொடுக்கிறார்.
அதே வீட்டின் மாடியிலிருக்கும் ஒற்றை அறையில் தங்கிக் கொள்வான் ஆசைத்தம்பி.