“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? கட்டிகிட்டவ மாசமா இருக்கும் போது அவளை இப்படியா போட்டு இம்சை பண்ணுவ?” என கோவப்பட்டார் பாட்டி.
“நடந்தது தெரியாம பேசாத அம்மாச்சி, அவளை எங்க?” எனக் கேட்டான் தர்மா.
“உன் அம்மாகிட்ட போயிட்டா” என இரைந்தார் பாட்டி.
“அங்கதானே போயிருக்கா, கூட்டிட்டு வர்றேன்” என்றவன் அறைக்கு சென்று விட்டான். உறக்கமில்லாமல் கண்கள் எரிய அசதியில் உடலும் சோர்ந்திருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குளித்து தயாராகி மனைவியை காண கிளம்பி விட்டான்.
விடிந்த உடனே மாமியார் வீட்டுக்கு வந்து விட்டாள் கனி. அத்தையை கட்டிக் கொண்டு அழுது கொண்டே அவள் எல்லாம் சொல்ல, அவருக்கு சொல்லொனா கோவம்.
“கேட்க ஆள் இல்லைனு இப்படி பண்றானா? இந்த விஷயத்துக்கு முடிவு கிடைக்காம நீ அங்க போக வேணாம்?” என்ற தாமரை கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு மருமகளுடன்தான் இருந்தார்.
மகள் வீட்டை விட்டு சென்றது அம்மா சொல்லித்தான் நம்பிக்கே தெரியும், அவருக்கும் மருமகன் மீது கோவம், மகள் செய்வது சரியே, அவனே பேசி சமாதானம் செய்யட்டும் என விட்டு விட்டார்.
ஊஞ்சலில் அமர்ந்து நிதிலாவுடன் பேசிக் கொண்டிருந்த கனி, கணவனை கண்டதும் வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
“அவளை அழைச்சிட்டு வாம்மா” என தங்கையிடம் சொல்லி ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான் தர்மா.
“ரெண்டு நாள் இங்க இருக்கட்டுமே ண்ணா” என்றாள் நிதிலா.
நிதிலா உள்ளே செல்ல, மனைவிக்காக காத்திருந்தான் தர்மா. வெளியில் வந்ததோ தாமரைதான்.
“அவளுக்கு எதிர்த்து பேசத் தெரியாது, என்ன வேணா பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டியா? நட்ட நடு ராத்திரில ப்ரெக்னெண்ட்டா இருக்கிறவளை தனியா விட்டுட்டு எவளையோ பார்க்க போவியா, அசிங்கமா இல்லடா உனக்கு?” என சத்தம் போட்டார் தாமரை.
ஊஞ்சலை விட்டு ஆத்திரத்தோடு அவன் இறங்கிய வேகத்திற்கு ஊஞ்சல் தாறு மாறாக ஆடியது.
“என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ மோசமா பேசுறம்மா நீ? நான் அவளைத்தான் பார்க்க வந்தேன், கனி எங்க?” என கோவமாக கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் சென்றான்.
நிதிலா பயத்தோடு அண்ணனை பார்க்க, “எந்த ரூம்ல இருக்கா அவ?” என தங்கையிடம் அதட்டலாக கேட்டான். அவள் கை காட்ட, அந்த அறையின் கதவை வேகமாக தட்டினான்.
“அவளை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ? வெளில போடா” என சத்தமிட்டார் தாமரை.
பாட்டியும், “ரகளை பண்ணாத டா, அவ பயந்துக்க போறா” என பேரனிடம் சொன்னார்.
கோவத்தை கட்டுப்படுத்தியவன், “கனி வெளில வா, உனக்கு இங்க இருக்கணும்னா இருக்கலாம். நான் பேசணும், கதவை தொற கனி” என்றான்.
தன்னை திரும்பிக் கூட பாராமல் நடு இரவில் அவன் புறப்பட்டு சென்றதை நினைவு படுத்திக் கொண்ட கனி கதவை திறக்கவில்லை.
“கனி… அவளோட பொண்ணு… மூனு வயசு குழந்தை… பார்த்திருக்கதானே நீயும், அவ புருஷன் குழந்தையை கிட்னாப் பண்ணிட்டு போயிட்டான். கூட மேகநாதன் ஆளுங்க வேற. எனக்கென்னன்னு எப்படி தூங்க முடியும்? என்னை உனக்கு தெரியாதா கனி? மத்தவங்க என்ன வேணா பேசட்டும் நினைக்கட்டும், நீ தப்பா நினைக்கலாமா?” என மூடியிருந்த கதவை பார்த்து பேசிக் கொண்டிருந்தான் தர்மா.
வேகமாக மகனிடம் வந்த தாமரை அவனது முதுகிலேயே இரண்டு கைகளாலேயும் அடித்தார்.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட. யாருக்கும் ஏதும் பிரச்சனைனா போலீஸ்க்கு போகணும்னு தெரியாதாடா அறிவு கெட்டவனே? அந்த மேகநாதன் பத்தி என்னென்ன பேச்சு அடிபடுது, அவன் கூட எதுக்கு வம்பு வச்சிக்கிற? எல்லார் முன்னாடியும் உன்னை வேணாம்னு சொல்லி உன் மூக்கறுத்தவ கூட என்ன சகவாசம் வேண்டி கெடக்கு உனக்கு? அப்பன்தானே புள்ளைய கூட்டிட்டு போனான், அது கடத்தலா உனக்கு? எப்படி இருந்தாலும் நீ யாருடா அந்த பிரச்சனைல தலையிட. உன் பொண்டாட்டி விட அப்படி என்னடா வேறொருத்தன் பொண்டாட்டி உனக்கு முக்கியமா போனா?” அடித்துக் கொண்டே பொரிந்த தாமரை தன் கைகளில் வலி எடுக்கவும்தான் ஓய்ந்தார்.
பாட்டி அழுகையோடு ஓரமாக அமர்ந்து விட்டார். நிதிலா அண்ணனின் கை பிடித்து, “எல்லாரும் எமோஷ்னலா இருக்காங்க ண்ணா, அப்புறம் வந்து கனிகிட்ட பேசலாம் அண்ணா” என்றாள்.
செவ்வரி ஓடிய விழிகளோடு தங்கையை பார்த்தவன், “வெளில போன்னு சொல்றியா?” எனக் கேட்டான். பயத்தோடு இல்லை என தலையாட்டியவள் தள்ளி நின்று கொண்டாள்.
கதவை இன்னொரு முறை வேகமாக அடித்து, “கனி…” என சத்தமாக அழைத்தான்.
கதவு திறக்கப்படுவது தெரிந்தது. அழுத முகத்தோடு கணவனுக்கு காட்சியளித்தவள், அவனது முகத்தை காணாமல் பாதங்களை பார்த்த படி நின்றாள்.
“என்ன கனி இதெல்லாம்?” என இரைஞ்சலாக கேட்டான்.
“எனக்கு அங்கு வரணும்னு தோன்றப்போ வர்றேன், நீ கிளம்பு” என்றாள் கனி.
“நான்தான் சொல்றேன்ல… அவளுக்கு…” என தர்மா விளக்கம் சொல்லப் போக, மீண்டும் கதவை அடைத்து விட்டாள் கனி.
அஜய் அப்போதுதான் வீட்டுக்கு வந்தான். அம்மாவிடம் போய் “என்னாச்சும்மா?” என அண்ணனை முறைத்துக் கொண்டே கேட்டான்.
“அவனை கிளம்ப சொல்லுடா” என சோர்வாக சொன்னார் தாமரை.
குழப்பமாக அண்ணனை பார்த்தான் அஜய்.
“என்னை பெத்ததையே மறந்திட்டாங்க உன் அம்மா. இனி இங்க வர போறதில்ல” என தம்பியிடம் சொன்னவன் தங்கையிடம், “அவளை பார்த்துக்க, என்னிக்கு என்கிட்ட வரணும்னு நினைக்கிறாளோ அன்னிக்கு வரட்டும்” என சொல்லி வெளியேறி விட்டான்.
மகள் இவனோடு வரவில்லை எனவும் நம்பிக்கு யோசனையானது. இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்தவர் அவரே நேரில் சென்று மகளை அழைத்தார். அப்பாவை எதிர்த்து பேச முடியாமல் தன் அத்தையை பார்த்தாள் கனி.
“இந்த நேரத்துல இவ விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது, என் பொறுப்புலேயே இருக்கட்டும்” என சொல்லி விட்டார் தாமரை.
மகள் கருவுற்றது தெரிந்த நாள் முதலே நம்பிக்கு பயம்தான். ஆகவே மகளை அதட்டி மிரட்டி எல்லாம் அழைத்து வர முனையாமல் அமைதியாக, “என்ன நடந்தாலும் அவனை விட்டுட்டு போக கூடாதுன்னு உனக்கு சொல்லியிருக்கேன், ரெண்டு நாள் பொறுத்து வந்து சேரு” என சொல்லி கிளம்பி விட்டார்.
வீட்டிலேயே இருக்க பிடிக்காமல் ஃபேக்டரி செல்ல ஆரம்பித்தாள் கனி. அவளுக்கு காரோட்ட என ஆசைத்தம்பி இங்கேயே வந்து விட்டான். அலுவலகத்தில் இருந்தவளை சந்தித்து பேச வந்தான் தர்மா.
“எனனை அமைதியா இருக்க விடு மாமா, இங்கேயும் வந்து நின்னா அப்புறம் வீட்லேயே இருந்திடுவேன்” என்றாள் அவள். அப்போது சென்றவன்தான், பின் அவளை சந்திக்க முயலவே இல்லை.
கனி உடனில்லாத போதுதான் அவளின்றி வாழ்வது எத்தனை கடினம் என்பதை புரிந்து கொண்டான் தர்மா. அவள் சாதாரணமாக இருந்திருந்தால் கட்டாயப் படுத்தி தூக்கிக் கொண்டு வந்திருப்பான். இந்த நிலையில் அப்படியெல்லாம் செய்ய அவனுக்கு பயமாக இருந்தது.
எத்தனை நாட்கள் என்னை விட்டு பிரிந்திருக்க முடியும், விரைவில் என்னிடமே வந்து சேருவாள் என்ற நம்பிக்கையை பிடித்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருந்தான்.
மஹாவின் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தது. ரியாவை தன் அனுமதியின்றி வீடு புகுந்து தூக்கி சென்றான் அருண் என்பதை நீதிமன்றத்தில் சொல்லி, குழந்தையை அவன் பார்ப்பதற்கு இடைக்கால தடை வாங்கலாம் என யோசனை சொன்னார் அவளது வக்கீல். சாட்சியாக யாராவது தேவைப்பட்டனர்.
தான் இல்லாமல் தன் அண்ணனை தர்மாவிடம் அனுப்பி உதவி கேட்டாள் மஹா.
அருண், மஹா இருவரின் திருமணம் நடந்தது சென்னையில்தான். இருவரது அடையாள அட்டைகளில் சென்னை முகவரிதான் இருக்கிறது. வழக்கும் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில்தான் நடக்கிறது. ஆகவே அங்கு சென்றுதான் தர்மா சாட்சி சொல்ல வேண்டும்.
கனிக்கு தெரிந்தால் இன்னும் கோவம் கொள்வாள் என்பதால் வர முடியாது என சொன்னான் தர்மா.
“குழந்தையை பார்க்கிறத சாக்காக்கித்தான் திரும்ப திரும்ப இங்க வந்திட்டு இருக்கான். அதை ஸ்டாப் பண்ணிட்டா போதும், எந்தங்கச்சி நிம்மதியா இருப்பா. இந்த ஒரு உதவி செஞ்சா அதுக்கு மேல தொந்தரவு செய்ய மாட்டோம்” என நயந்து பேசி தர்மாவை சம்மதிக்க வைத்து விட்டான் மஹாவின் அண்ணன்.
தர்மா ஊரில் இல்லாத நாள்தான் மேகநாதனுக்கு தேவையாக இருந்தது. தன் திட்டத்தை செயல் படுத்த சொல்லி விட்டான் அவன்.