அவள் கைகளில் கலைந்த சிகையோடு, காதோரம் சூடாகி, கண்கள் மயங்க, மதியும் அவளிடம் மயங்க, மோகத்தில் நிலை குலைந்து தன் விருப்பம் போல காதல் செய்தான் தர்மா.
விலக்கி விடாமல் அவனுக்கு இசைந்து நடந்தாள் கனி.
பிள்ளை சுமக்கிறாள் என்ற நினைவு வரவும்தான் “உசுப்பேத்தி விடாத கனி” என பாவமாக சொல்லி அவளிடமிருந்து விடுபட்டான்.
அவள் சிரிக்க “ஆளை விடுடி மயக்கி” எனக் கூறி ஓடியே சென்று விட்டான்.
கனிக்கு குழந்தை உண்டான பிறகு எல்லாம் சரியாக நடப்பது போலவே இருந்தது.
ஆனால் அந்த இடப் பிரச்சனை வலுப் பெற்று விட்டது. ஆட்களை அனுப்பாமல் நேரடியாக தானே மேகநாதனின் பினாமியை கவனித்தான் தர்மா. அடித்து மிரட்டி அக்ரிமெண்டை முறிக்க வைத்து பணத்தையும் பெற்றுக் கொள்ள செய்து விட்டான் தர்மா. அந்த பினாமி மேகநாதனுக்கு பயந்து இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடிச் சென்று விட்டான்.
ஊரில் அதுதான் பேசு பொருளாகிப் போனது.
கலப்புத் திருமணம் செய்ய இருந்த ஒரு காதல் ஜோடியை மேகநாதன் மிரட்டி பிரிக்க பார்த்தான். நம்பி தன் தலைமையிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, பையன் வேலை செய்யும் பெங்களூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டார்.
உள்ளாட்சி தேர்தல் வரவிருந்த சமயத்தில் ஊரில் தன் மரியாதை குறைந்து விட்டதே என நினைத்து உள்ளுக்குள் மாய்ந்து கொண்டிருந்தான் மேகநாதன்.
தர்மாவும் நம்பியும் ஏதாவது கேஸில் சிக்குவார்கள் என எதிர்பார்த்து வினோத்குமாரும் சோர்ந்து விட்டான்.
கட்சியில் மேகநாதனுக்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் குறைவது போல அவனுக்கு தோன்றியது. கட்சியில் உள்ள மற்றவர்கள் இவனுக்கான முக்கியத்துவத்தை குறைக்க முயன்றார்கள் என்பதே உண்மை.
தன் மீதான பயம் அனைவருக்கும் விட்டுப் போனதே இதற்கு காரணம் என நினைத்த மேகநாதன் அந்தப் பயத்தை மீண்டும் எல்லாரிடத்திலும் விதைக்க முடிவு செய்தான். திட்டம் வகுத்தவன் அதற்கான காலம் கனிய காத்திருந்தான்.
மஹா தன் மகளை பள்ளியில் சேர்க்கவே இல்லை. வீட்டை விட்டு வெளியில் சென்றாலே எங்கே தன் கணவன் தன் மகளை அவனுடன் அழைத்து சென்று விடுவானோ என பயந்து போயிருந்தாள்.
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. அருண் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருந்த காரணத்தால் ஆறு மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. ஒரு முறை இருவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். நேர்மறையாக அமையவில்லை அது.
அருண் மஹாவுக்கு சொந்தம்தான், அவளது காதலை பற்றி நன்றாக தெரிந்துதான் மணம் செய்து கொண்டான். அவளுடன் சேர்ந்து நன்றாக வாழ வேண்டும் எனதான் முயற்சி செய்தான். திருமணத்துக்கு பின் அவர்களின் வாழ்க்கையை சேர்ந்து வாழ ஆரம்பிக்கவே ஒரு வருடமானது.
அதன் பின்னரும் மஹாவால் அவனோடு மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவளுள் தர்மாவை ஏமாற்றி விட்ட குற்ற உணர்ச்சி. ரியா பிறந்த பிறகும் இப்படியே தொடர, அருணின் பொறுமை பறந்து விட்டது. அவனை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா என அவளை வார்த்தைகளால் துன்புறுத்த ஆரம்பித்து விட்டான்.
அருணின் இந்த செயல் மனதளவில் மஹாவை அவனிடமிருந்து இன்னும் தூரமாக்கி விட்டது. விருப்பமே இல்லாமல் அவனுடன் வாழ்ந்தவள் மகளோடு பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.
மனைவி விட்டுச் சென்ற பின்னர்தான் தன் தவறை உணர்ந்தான் அருண். உடனே மனைவியை தேடிக் கொண்டு வர முடியாமல் அவனுடைய வேலை அவனை தடுத்தது. அவள் விவாகரத்து கேட்கவும்தான் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து மஹாவை சமாதானம் செய்ய பார்த்தான். அவனது வார்த்தைகளில் பலத்த மனக்காயம் அடைந்திருந்தவள் அவனுடன் செல்ல மறுக்க, தர்மாவை மனதில் வைத்துதான் இப்படி நடக்கிறாள் என இன்னும் பேசினான்.
அருணின் வீட்டினரே ‘அவளை விடு, வேறொரு திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்’ என சொல்லி விட்டனர். அவனால் மஹாவையும் ரியாவையும் பிரிய முடியாது. ஆதலால் வேலையையும் விட்டு விட்டு தன் குடும்பத்தை தன்னோடு நிலை நிறுத்திக் கொள்ள எந்த பைத்தியக்காரத் தனத்தையும் செய்ய தயாராக இருந்தான்.
அருணின் நண்பன் ஒருவன் உன் மகளை உன்னோடு அழைத்து சென்று விடு, உன் மனைவி தன்னால் உன் பின்னால் வருவாள் என யோசனை சொல்லிக் கொடுத்திருந்தான். அதை செயல் படுத்தி விடுவது என முடிவு செய்து விட்டான்.
மேகநாதன் மஹா பக்கத்தில் நியாயம் பேசுவதால் அவனிடம் பணம் கொடுத்து தனக்கு சாதகமாக நடந்து கொள்ளும் படி செய்திருந்தான் அருண்.
மஹாவின் இரண்டாவது அண்ணன் தொழில் முறை பயணமாக வெளியூர் சென்று விட்டான். பெரிய அண்ணனின் மாமியார் சமீபத்தில் இறந்து போயிருக்க அவருக்கு காரியம் நடக்க இருந்ததால் மஹாவின் பெற்றோரும் பெரிய அண்ணன் குடும்பமும் மதுரைக்கு சென்று விட்டனர்.
மஹா மட்டும் மகளுடன் தனியாக இருந்தாள். அந்த நேரம் பார்த்து மகளை தூக்கி செல்ல மேகநாதனின் ஆட்கள் இருவரை அழைத்துக் கொண்டு வந்து விட்டான் அருண்.
நடு இரவில் இப்படி வருவான் என சத்தியமாக நினைத்திருக்கவில்லை மஹா. மிகவும் பயந்து விட்டாள். கதவு பூட்டப் பட்டிருந்தாலும் திறக்க முயன்று கொண்டிருந்தனர்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூட, புருஷன் பொண்டாட்டி தகராறு நமக்கு எதற்கு வம்பு என இருந்து கொண்டனர்.
சத்தம் போட்டால் உள் அறையில் உறங்கும் மகள் மிகவும் பயந்து போவாள் என நினைத்தவள் கைப்பேசியை எடுத்தாள். தன் வீட்டினருக்கு சொன்னாலும் மதுரையில் இருப்பவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதால் தர்மாவுக்கு அழைத்து விட்டாள்.
கைப்பேசியின் சத்தம் கேட்டு முதலில் விழித்தது கனிதான். மஹாவின் பெயரை திரையில் கண்டதுமே அழைப்பை துண்டிக்க போனாள். தர்மாவும் விழித்துக் கொண்டவன் யாரென கேட்டுக் கொண்டே கைப்பேசியை வாங்கினான். அதற்குள் அழைப்பு முடிந்து போயிருந்தது.
இந்த நேரம் அழைத்திருக்கிறாள் என்றால் என்ன பிரச்சனையோ என பதறியவன் அவனே மஹாவுக்கு அழைத்தான். அழுது கொண்டே விவரத்தை சொன்னாள் மஹா.
உடனே வருவதாக சொல்லி எழுந்து கொண்டான் தர்மா. என்ன பிரச்சனை என்றெல்லாம் கனி கேட்டுக் கொள்ளவில்லை.
“எதுவா இருந்தாலும் இந்த நேரம் நீ போகக் கூடாது மாமா, வேணும்னா வேற யாரையும் அனுப்பி வை” என தீர்மானமாக சொன்னாள்.
“ஏய் எந்த நேரத்துல என்ன சொல்லிட்டு இருக்க?” என எரிச்சலாக கேட்டவன் வேகமாக வெளியேறி விட்டான்.
கனிக்கு அப்படியொரு கோவம்.
தர்மா அங்கு செல்வதற்குள் கதவை திறந்து மகளை தூக்கிக் கொண்டு சென்று விட்டான் அருண். என் மகளுடன் சென்னைக்கு சென்று விடுவான், உடனே என் மகளை மீட்டுத் தா என தர்மாவிடம் மஹா ஒரே அழுகை.
தன் ஆட்களை வைத்து அருண் எங்கு செல்கிறான் என்பதை கண்டு பிடித்து விட்டான் தர்மா.
மஹா பயந்தது போல சென்னை நோக்கி போவது போல தெரிந்தது. பதட்டத்தில் அவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. குழந்தையை நான் மீட்டுத் தருகிறேன் என அவளுக்கு உறுதி சொன்னவன் அவளையும் அழைத்துக் கொண்டு தன் ஆட்களுடன் புறப்பட்டு விட்டான்.
குழந்தையை மஹாவிடம் திரும்ப பெற்றுக் கொடுத்து, அவளை வீட்டில் விட்ட போது அவளின் சின்ன அண்ணன் திரும்பியிருந்தான். இந்த முறை தர்மாவுடன் சண்டை ஏதும் போடாமல் தங்கையின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டு தர்மாவை நன்றியாக பார்த்தான்.
ஏதும் பேசாமல் புறப்பட்டு விட்டான் தர்மா.
தர்மா வீடு வந்து சேர, நம்பியும் பாட்டியும் அவனை முறைத்துக் கொண்டு வரவேற்றனர். அவர்களை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அறைக்கு சென்றான். கனி அங்கே இல்லை. வீடு முழுதும் அவள் இல்லாமல் போக ஃபேக்டரியில் இருப்பாளோ என நினைத்து அவளுக்கு அழைத்தான். கைப்பேசி அணைத்து வைக்க பட்டிருந்தது.