கனி கருவுற்று இருப்பதை வேலம்மாள் பாட்டியிடம்தான் முதலில் சொன்னான் தர்மா. அவருக்கு அத்தனை ஆனந்தம். அவர்தான் மற்றவர்களுக்கு சொன்னார்.
அன்று மாலையே தாமரையும் நிதிலாவும் கனியை நேரில் பார்த்து விட்டு சென்றனர். அன்னலக்ஷ்மி பாட்டி கைப்பேசி வாயிலாக கனியிடமும் தர்மாவிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழ்த்தினார்.
நம்பிக்கு தன் மனைவிக்கு நடந்தது வைத்து மகளை நினைத்தும் பயம், அதை தன் அம்மாவிடம் சொன்னார்.
“உன் பொண்டாட்டிக்கு அப்படி ஆனா அது அந்தக் காலம் டா, இப்ப வைத்தியத்துல எவ்வளவோ வசதி வந்திடுச்சு, நல்ல படியா பெத்து பொழைப்பா கனி” என மகனுக்கு தைரியம் சொன்னார் வேலம்மாள்.
சாலையில் மஹாவை பார்த்தது பற்றியெல்லாம் யாரிடமும் வாய் திறக்கவில்லை கனி. வீடு வந்த பிறகு தர்மாவும் அது பற்றி பேசாமல் நல்ல விதமாகவே அவளிடம் நடந்து கொண்டான்.
இரவெல்லாம் குழந்தை பற்றிய பேச்சிலேயே திளைத்திருந்தான் தர்மா. அவளது வயிற்றை வருடி விடுவதையும் நிறுத்தவே இல்லை.
“கல்யாணமே வேணாம்னு சொன்னதானே? குழந்தை வர போகுதுங்கவும் ரொம்ப துள்ற மாமா நீ” என கிண்டல் செய்தாள் கனி.
“உனக்குத்தான் கோவம்லாம் அதிகமா வருது. ரோட்ல நின்னு மல்லுகட்டிகிட்டு இருக்க” என அவன் சொல்லவுமே அவளின் முகம் மாறி விட்டது.
கவனித்தவன், “நம்மள பத்தி மட்டும்தான் பேசிட்டு இருக்கேன் கனி. இனிமே இப்படிலாம் மூஞ்சு சுருக்க கூடாது. நீ சொன்ன படி இருந்துப்பேன்” என்றான்.
“பார்க்கிறேன்” என சந்தேகமாகத்தான் சொன்னாள்.
ஆனால் மஹா விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தான் தர்மா. கனியை முன்பை விட அதிக அக்கறை எடுத்து கவனித்துக் கொண்டான்.
ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கிறதா வேறு ஆசைகள் ஏதாவது இருக்கிறதா என கேட்டு கேட்டு அவளுக்கு வேண்டியதை செய்தான்.
கனிக்கு மசக்கை தொந்தரவுகள் என பெரிதாக ஏதுமில்லை. நிறைய பசியெடுக்கவும் நன்றாக சாப்பிட்டாள். ஆட்கள் இருந்தாலும் வேலம்மாள் பாட்டி என்னென்ன சமைக்க வேண்டும் என சொல்லி பேத்தியும் சாப்பிடுகிறாளா என பார்த்துக் கொண்டார்.
“உன் பேத்திக்கு செய்றதுனா மட்டும் உனக்கு வாலிபம் திரும்பிடுமே அம்மாச்சி!” என தர்மா கூட பாட்டியை கிண்டல் செய்வான்.
நம்பி கூட மகளை எதற்காகவும் அதட்டுவதோ கடுமையாக பேசுவதோ கிடையாது. பார்த்து நட, சாப்பிட்டாயா, ஏதாவது வேண்டுமா என அக்கறையான விசாரிப்புகள் வேறு.
“ஆக மொத்தம் வர போற குழந்தைக்குத்தான் எல்லா செல்லமும். நல்ல ஆளுங்க நீங்கல்லாம்” என கணவனிடம் சலுகையாக குறை சொன்னாள் கனி.
“யார் சொன்னா அப்படி? எனக்கு நீதான் முத செல்லம்!” என அவளை அவன் கொஞ்ச, நம்பாத பார்வை பார்த்தாள்.
“சில விஷயங்களை சட்டுன்னு மாத்த முடியாது கனி. இதையெல்லாம் விட்டா நிம்மதியா இருக்கலாம்னு நீ அம்மால்லாம் நினைக்கிறீங்க, அப்படி விட்டா பாதுகாப்பு இல்லாம போயிடும்” என்றான்.
கணவனின் தோளில் சாய்ந்து கொண்டவள், அவனது கையை எடுத்து தன் வயிற்றோடு சேர்த்து அழுத்தி பிடித்துக்கொண்டாள்.
“நம்மள நம்பி வர்ற இந்த குழந்தைக்கு அமைதியான வாழ்க்கையை தரணும் மாமா. உன்னை சுத்தி வன்முறை இருக்கும், இதுலதான் நீ வளரணும்னு சொல்றது இதுக்கு செய்ற அநீதி இல்லையா?” எனக் கேட்டாள்.
தர்மாவுக்கு நெஞ்சை ஏதோ செய்தது.
“நீ நம்ம குழந்தைக்கு நல்ல அப்பாவா இருக்கணும். அன்பு பாசம் வைக்கிறதுல உன்னை மிஞ்ச முடியாதுன்னு தெரியும். அது மட்டும் போதாது, நம்ம பாப்பாக்கு அமைதியான சூழலை உருவாக்கி தரணும். ஒரு வேளை என் நிலைமை நம்ம குழந்தைக்கு வந்தா கூட என்னை மாதிரி அப்பாக்கு பயந்து வளரக் கூடாது பாப்பா” என வேண்டுதலாக கேட்டாள்.
“இப்படிலாம் பேசினா அடிச்சு பிச்சிடுவேன் பார்த்துக்க. உன் நிலைமை ஒரு நாளும் பாப்பாக்கு வராது. ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா வளர்க்கலாம்”
“நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு பார்த்துக்கணும்ல மாமா? நினைச்சா எப்படி பார்த்துப்பேன்னு பயமா இருக்கு”
“இப்படித்தான் ஏதாவது யோசிச்சிட்டே இருப்பியா? கூடவே நான் இருக்க போறேன், ஏன் நான் பார்க்க மாட்டேனா?”
“யாராவது ஏதாவது பிரச்சனைன்னு கூப்பிட்டா விட்டுட்டு போயிடுவ”
“முக்கியமான விஷயம்னா மட்டும்தான் போவேன், அதுவும் நீ ஓகே சமாளிச்சுப்பேன்னு சொன்னா மட்டும். இல்லைனா ஆளுங்கள அனுப்பி வச்சுப்பேன்”
“நிஜமா?”
“அப்புறம் பொய்யா? உன்னை விட வேற ஏதும் முக்கியமில்லை. குழந்தை பொறந்ததுக்கு அப்புறம்ன்னு இல்லை இப்பலேருந்தே அப்படித்தான் இருக்க போறேன்” என அவன் சொன்ன விதத்தில் அவனை கட்டியணைத்துக் கொண்ட கனி, அவனை விட்டு விலகவே இல்லை.
“போதும் கனி ஒட்டிக்கிட்டது, ஃபிரீயா படு” என சொல்லி அவளை படுக்க வைத்தான்.
“புள்ள வந்ததும் இப்படி நினைச்ச நேரம்லாம் உன்னை கட்டிக்க முடியாது, இல்லை மாமா?” என ஏக்கமாக கேட்டாள்.
“எப்போல்லாம் கட்டிக்கணும்னு சொல்லு, நமக்கு நாலு புள்ள பொறந்தா கூட உன் மாமன் உன் ஆசைய நிறைவேத்தி வைப்பேன்” என்றான்.
தங்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்க, அவர்கள் ஆளாளுக்கு இவளை தொல்லை செய்ய, கட்டிக்கொள்ள வேண்டுமென இவள் தன் மாமனிடம் சாடை காட்ட, அவனும் உடனே மனைவியை கட்டிக் கொள்ள, பிள்ளைகள் எல்லாம் தங்கள் தகப்பனை பிடித்து இழுப்பது போல கற்பனை செய்து பார்த்தவள் சத்தமாக சிரித்தாள்.
என்னவென கேட்டவனிடம் தன் கற்பனையை பகிர்ந்தாள் கனி. செல்லமாக முறைத்தவன், “அதெல்லாம் பிரிச்சு விடக்கூடாதுன்னு சொல்லு. போய் விளையாட சொல்லுடி” என்றான்.
“நீ சொன்னாதான் கேட்கும்ங்க நீயே சொல்லிடு மாமா” என நமுட்டு சிரிப்போடு சொன்னாள்.
“நாலெல்லாம் அதிகம், ரெண்டு போதும்”
“ஆசைதான் ஒன்னுதான் பெத்து தருவேன், அதை ஒழுங்கா வளர்த்தா போதும்” என்றாள். இப்படியாக குழந்தையை சுற்றியே அவர்களுக்குள் நிறைய பேச்சுக்கள்.
சுமூகமாக சென்றது கனியின் நாட்கள். ஆரோக்கியமான வகையில் எடை கூடி பூரிப்போடு காணப் பட்டாள்.
கண் படுகிறது உனக்கு என சொல்லி அவளின் காலில் கருப்புக் கயிறு கட்டி விடப் போனார் பாட்டி. கனி மறுக்க, பேரனின் கையில் கயிறை கொடுத்து, “பெரியவங்க சொன்னா அர்த்தம் இருக்கும்னு அவகிட்ட சொல்லு, நீயே கட்டி விடு” என சொல்லி சென்று விட்டார்.
தர்மாவுக்கும் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, ஆனாலும் பாட்டியின் திருப்திக்காக அவளுக்கு கட்டி விடப் போனான். அவள் காலை தராமல் அவனிடம் விளையாடினாள். அவளை அறியாமல் அவனது மார்பிலேயே உதைத்து விட்டாள்.
பயந்து போனவள் “ஸாரி…” என்றாள்.
“ச்சீ ஸாரியாம்…” என்றவன் அவளது பாதத்தை பிடித்து முத்தங்களாக வைத்து விட்டு அவளை பார்த்து சிரித்தான்.
“அந்த கால் என் கால் இல்லையா? பார்ஷியாலிட்டி காட்டுறியா?” என அவள் கிண்டல் செய்ய, உடனே அடுத்த பாதத்திற்கும் முத்தங்கள் வைத்தான்.
வெட்கமும் பெருமையுமாக சிரித்தவளின் காலில் கயிறை கட்டி விட்டான். அவனை தன்னிடம் இழுத்து வைத்து இதழ்களில் முத்தங்களை பதித்தாள் கனி.