தன்னை வந்து பார்க்க சொல்லி மேகநாதனிடமிருந்து இட உரிமையாளருக்கு செய்தி வரவும் மீண்டும் நம்பியிடம் வந்து நின்றான்.
அந்தப் பிரச்சனை பேசி முடித்தாகி விட்டது, நீ போக தேவையில்லை, என்ன பிரச்சனை என்றாலும் எந்நேரமாக இருந்தாலும் தர்மாவுக்கு சொல், அவன் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை சொல்லி அனுப்பி வைத்து விட்டார் நம்பி.
அப்படி ஒரு நாள் உரிமையாளருக்கு பிரச்சனை வர, தன் ஆட்களை அனுப்பி வைத்தான் தர்மா.
அச்சமயத்தில் மேகநாதனின் ஆட்களுக்கும் தர்மாவின் ஆட்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பாகியும் போனது. சண்டையில் ஈடுபட்ட அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டான் வினோத்குமார்.
காவல்நிலையத்திற்கு நம்பிதான் சென்றார். மேகநாதனும் வந்திருந்தான். இந்த பகுதியே கலவரத்திற்கு பெயர் போனது என்பதால் எஸ் பி வரை செய்தி சென்று அவரும் வந்து விட்டார்.
இரு தரப்புக்கும் சமரசம் செய்து அனுப்பி வைத்தார் எஸ் பி.
இந்த அரசியல் ஆட்களை விட பெரிய பஞ்சாயத்துக்காரர் எஸ் பி தான் என அவருக்கு பின்னால் கடுப்பாக சொன்னான் வினோத்.
அந்த இட பிரச்சனைக்கு முடிவு கிட்டாமல் அப்படியேதான் இருந்தது.
மேகநாதனிடம் யாராவது பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என சென்றால் பணம் வாங்கிக் கொண்டு பஞ்சாயத்து செய்து வைத்தான். அவனால் பாதிக்க பட்டவர்கள் நம்பியிடம்தான் வந்து நின்றனர். ஒரு தரப்பின் சார்பாக நம்பி பேசும் போது இன்னொரு தரப்பு அவருக்கு பகையாளியாக மாறிப் போனார்கள். அவர் சொல்வதை செய்து தர்மாவும் சேர்ந்தே பகையை வளர்த்துக் கொண்டான்.
நம்பி நியாயம் யார் பாக்கமோ அவர்களின் பக்கம் பேசியதாலோ என்னவோ பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் அவரின் கையே ஓங்கியிருந்தது.
மேகநாதனுக்கோ சொந்த ஊரிலேயே செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. தன் கண் பார்த்து பேச பயந்தவர்கள் எல்லாம் தனக்கு பின்னால் ஏளனமாக சிரிப்பதை அறிந்து கொண்டவனுக்கு பழைய படி தன் செல்வாக்கை மீட்டு எடுக்கா விட்டால் விரைவில் செல்லாக்காசு ஆகிவிடுவோம் என்பதும் புரிந்தது.
ஊரில் தானே முதன்மையானவன் என்ற நிலையை கொண்டு வருவதற்கு என்ன செய்யவும் தயாராக இருந்தான் மேகநாதன்.
புதுக்கோட்டை வீட்டில் செக்யூரிடி இருந்த போதும் கூடுதலாக தனது ஆட்கள் இருவரை பாதுகாப்புக்கென நிறுத்தி வைத்தான் தர்மா. வீட்டினர் வெளியில் செல்லவும் நிறைய கெடுபிடிகள். எதற்காக இப்படியெல்லாம் என கனி மூலமாக மகனிடம் கேட்டார் தாமரை.
முன்னரே தோன்றியதுதான், இப்போது செய்திருக்கிறேன் என மேலோட்டமாக மட்டுமே பதில் சொன்னான் தர்மா.
மஹாவின் கணவனுக்கு விவாகரத்தில் விருப்பமில்லை, அவர்கள் சமுதாயத்தில் உள்ள பெரிய ஆட்களை வைத்து மஹாவுடனும் அவளது வீட்டினருடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறான். அவளது அப்பாவை தவிர மற்றவர்கள் அவளை அனுப்ப தயாராக இல்லை. மஹாவும் இனி கணவனுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்றே சொல்கிறாள்.
மேகநாதன்தான் மஹா தரப்பில் பேசி விவாகரத்து வாங்கிக் கொள் என அவளது கணவனிடம் நியாயம் பேசுகிறான். எல்லாம் செவி வழிச் செய்தியாக தர்மாவை சேர்ந்து கொண்டுதான் இருந்தன.
மஹா பற்றி தன் கணவனிடம் ஏதும் கேட்டுக் கொள்ள மாட்டாள் கனி. அவனுக்கும் தன் முன்னாள் காதலியின் இந்நாள் வாழ்க்கை பற்றி கழுத்தளவு கவலை இருந்த போதும் அவளைப் பற்றி மனைவியிடம் பேச மாட்டான்.
கனியிடம் இணக்கமாக, அன்பாக, ஆசையாகத்தான் இருக்கிறான் தர்மா. ஆயினும் திருமணம் முடிந்த பின் முதல் ஒரு வார வாழ்க்கையில் இருந்த எதையோ மிஸ் செய்கிறாள் கனி. அவ்வப்போது ஏதோ சிந்தனைக்கு சென்று விடுகிறான், என்னவென அவள் விசாரித்தால் ஒன்றுமில்லை என்கிறான்.
அன்றைய இரவு கனி விடவில்லை.
“உண்மையை சொல்லு மாமா, உன் மனசுல என்னதான் இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்ற” என அடமாக கேட்டாள் கனி.
“என் மனசுல நீதான் இருக்க” என அவளது கன்னத்தை கிள்ளி கொஞ்சிக் கொண்டே சொன்னான் தர்மா.
அவள் முறைக்க, “நல்லாத்தான் கனி இருக்கேன். எனக்கு ஆறுதலா இருக்கணும்னு தோணலையா?” என் அவளின் முகத்தில் உதடுகள் உரச கேட்டான்.
அவன் முகத்தை தள்ளியவள், “அப்பப்ப ஆஃப் ஆகிடுற? என் கூட சந்தோஷமா இல்லையா மாமா?” எனக் கேட்டாள்.
அவளது கன்னங்களை தாங்கிப் பிடித்துக்கொண்டவன், “என்ன சந்தேகம் உனக்கு? நீதான் என்னோட ஒரே சந்தோஷம்” என்றான்.
மனம் விட்டு பேச மறுக்கிறான் என்பதில் அதிருப்தியாக முகத்தை திருப்பிக் கொண்டாள் கனி.
“எவ்ளோ நாள் மாமா இப்படி இருப்ப?” வருத்தமாக கேட்டாள்.
“நிதி, அஜய் ரெண்டு பேரும் படிப்பை முடிக்கட்டும். ஏதாவது செய்யலாம்” என சோர்வான குரலில் சொல்லி மல்லாக்க படுத்துக் கொண்டான். சற்று முன் கனியிடம் உரசி விளையாடிய தர்மா காணாமல் போயிருந்தான்.
தனக்கு தெரிந்த வகையில் அவனுக்கு ஆறுதல் அளிக்க முற்பட்டாள் கனி. மனைவியின் காதலில் மூழ்கி, தனக்குள் இருக்கும் அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றான் தர்மா.
நாட்கள் நகர்ந்தன. அன்றிரவு தாமதமாக வீடு வந்த தர்மா படுத்திருந்த கனியிடம் சாப்பிட்டாயா என விசாரித்தான்.
பதில் சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
“உன்னைத்தான் கனி, எங்க இருக்கு சிந்தனை?” எனக் கேட்டான்.
“இல்லை மாமா, எனக்கென்னமோ நான் ப்ரெக்னெண்ட்டா இருப்பேனோன்னு டவுட்டா இருக்கு” என்றாள் கனி.
சட்டையை கழற்றிக் கொண்டிருந்த தர்மாவுக்கு சில நொடிகள் எதுவும் புரியவில்லை.
“கனி…” பரவசமாக அழைத்தான்.
அருகில் வந்தவனை அவனது இடையோடு சேர்த்து கட்டிக் கொண்டவள், “மதியத்திலிருந்து இதே டவுட்தான். பாப்பா வந்தா நல்லாருக்கும்தானே?” எனக் கேட்டாள்.
வாஞ்சையாக அவளின் தலையை வருடிக் கொடுத்தவன், “எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை கனி, நான் நினைக்கவே இல்லை. இன்னும் நாளாகும்னு நினைச்சேன்” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நல்லா நினைப்ப, என்னை விட்டு நீ தள்ளி இருக்கிறதே கம்மி, உன் வேகத்துக்கு ரெண்டு மூனு பாப்பா கூட வயித்துல உண்டாகியிருக்கும்” என்றாள்.
சிரித்தவன் அவளை விலக்கி, முட்டியிட்டு அமர்ந்து அவளின் வயிற்றை தொடப் போனான். அவனது கையை பிடித்துக்கொண்டவள், “இன்னும் உறுதியா தெரியாம ஓவர் பெர்ஃபாமன்ஸ் பண்ணாத மாமா” என்றாள்.