“உன் வீட்டுக்குள்ள  வந்தா வேடிக்கை பார்க்கிறேன், ரோட்ல நிக்க உன் பெர்மிஸன் தேவையில்லை” என தர்மாவும் காட்டமாக சொன்னான். 

எங்கே அவர்களுக்குள் சண்டையாகி விட போகிறதோ என இருவருக்கும் இடையில் குழந்தையுடன்  வந்து நின்றாள் மஹா. ரியா இப்போது அம்மாவின் தோளில் சோர்ந்து போய் படுத்திருந்தாள். 

குழந்தையை அப்படி பார்க்க பார்க்க தர்மாவுக்கு வேதனையானது. 

“என்னாச்சு மஹா, ஏதும் ஹெல்ப் வேணுமா?” எனக் கேட்டான் தர்மா. 

“நீ ஒரு மண்ணும் செய்ய வேணாம், கிளம்பு இங்கேருந்து” என கோவப்பட்டான் மஹாவின் அண்ணன். 

“உன்கிட்ட பேசலடா, உன் தங்கச்சிக்கு நீ பார்த்து செஞ்சு வச்ச கல்யாணம் என்னாச்சு? இப்பவாவது வாயை மூடிக்கிட்டு தள்ளி நில்லு” என்றான் தர்மா. 

“உன்னாலதான் பிரச்சனையே. நீ ஹெல்ப் பண்றேன்னு சொல்லுவ, உன் மாமன் ‘என் மருமகனை விட்டு ஒதுங்கி இருக்க சொல்லு உங்க பொண்ண’ன்னு எங்கப்பாகிட்ட மிரட்டுவாரு. நல்ல ஆளுங்க நீங்கல்லாம்” என்றான் மஹாவின் அண்ணன். 

அவன் சொன்னதை நம்ப முடியாமல் உண்மையை அறிய மஹாவை பார்த்தான் தர்மா. 

“என்னால உங்க லைஃப்ல பிரச்சனை வேணாம், என் விஷயத்தை நானே பார்த்துக்கிறேன், ப்ளீஸ் போயிடுங்க” என்றாள் மஹா. 

“என் மாமா என்ன பண்ணினாரு?” உன் அண்ணன் பொய் சொல்கிறான் எனும் தொனியில் கேட்டான் தர்மா. 

என் அண்ணன் சொல்வது உண்மைதான், அதனால்தான் உங்கள் திருமணத்திற்கு செல்ல அனுமதி கேட்ட போது என் அப்பா என்னை அடித்து விட்டார் என்பதை சொன்ன மஹா, அழுகையுடன் காரில் அமர்ந்து கொண்டாள். 

“உன்கிட்ட நான் சொல்றேன், என் தங்கச்சிய விட்டு தள்ளி இரு!” என முகத்தை கொடூரமாக வைத்துக்கொண்டு சொல்லித்தான் காரை எடுத்தான் மஹாவின் அண்ணன். 

தர்மாவின் கார் வந்து நின்ற வேகத்தை கண்ட நம்பி, நல்ல கோவத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார். கார் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் கனி. 

மனைவியை கண்டு கொள்ளாமல் நம்பியின் முன் வந்த தர்மா, “மஹாவோட அப்பாகிட்ட என்ன சொன்னீங்க மாமா?” என கோவமாக கேட்டான். 

அதிர்வை காட்டிக் கொள்ளாமல், “சாப்பிட்டு தூங்கு, காலைல பேசிக்கலாம்” என்றார் நம்பி. 

“கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க மாமா” என்றவனின் தோளை தொட்டு, “அமைதியா இரு மாமா” என்றாள் கனி. 

அவளின் கையை தட்டி விட்டவன், “என்ன நினைச்சு அவ அப்பாகிட்ட போய் அப்படி சொன்னீங்க? உங்க பொண்ணுக்காகவா?” எனக் கேட்டான். 

“டேய் டேய்!” தவித்துப் போனார் நம்பி. 

“என்னை பத்தி என்ன எண்ணம் மாமா உங்களுக்கு? அப்படியே நீங்க எது சொல்றதா இருந்தாலும் என்கிட்டதானே சொல்லியிருக்கணும்? வேறொரு பொண்ணு இப்படி இருக்கணும் இருக்க கூடாதுன்னு போய் மிரட்டுவீங்களா?” 

“ஆத்திரத்துல பேசாதடா” என்ற நம்பி, மகளை பார்த்து, “அவனை  அழைச்சிட்டு போ” என்றார். 

தர்மாவை உள்ளே அழைத்துச் செல்ல இழுத்தாள் கனி. 

“விடுறி என்னை!” என அவளிடமும் கோவப்பட்டான். 

பயத்தில் முகத்தை பின்னுக்கு இழுத்தாள் கனி. 

“அவகிட்ட எதுக்குடா கோவ படுற?” என குரல் உயர்த்தினார் நம்பி. 

“உங்க பொண்ணுக்குன்னா பொங்கிக்கிட்டு வருமா மாமா கோவம்? அடுத்தவன் பொண்ணுன்னா இளப்பமா போச்சா?” என தர்மாவும் பதிலுக்கு கோவப்பட்டான். 

“வேற பொண்ணும் என் பொண்ணும் ஒன்னாடா உனக்கு?” என சீறினார் நம்பி. 

“இந்த கேள்வி அவசியம் இல்லாதது” 

“பதில் சொல்லாம மழுப்பாதடா, பின்னாடி பிரச்சனை வரக்கூடாதுன்னுதான் ‘ஏதும் சிபாரிசு தேவைப்பட்டா நீ நேரா என்கிட்ட வா, உன் பொண்ண தர்மாகிட்டருந்து தள்ளி நிக்க சொல்லு’ன்னு சொல்லிட்டு வந்தேன். மிரட்டினதா யார் சொன்னா உனக்கு?”  எனக் கேட்டார் நம்பி. 

“யாருக்கு பிரச்சனை வர போகுது?” கண்களை சுருக்கிக் கொண்டு கேட்டான் தர்மா. 

பெரிய மூச்சை எடுத்துக் கொண்டவர், “என் பொண்ணுக்குத்தான் பிரச்சனைடா. கனியை கல்யாணம் பண்ணிக்க போற சமயத்துல பழைய கதை எதுக்கு உனக்குன்னு நினைச்சுதான் போய் பேசினேன். நீ சாதாரணமா பழகினாலும் பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க, கனியும் வேதனை பட மாட்டாளா?” எனக் கேட்டார். 

தர்மா ஏதோ சொல்லப் போக, “அப்பாகிட்ட பதிலுக்கு பதில் பேசிட்டே இருக்காத மாமா. எனக்காக உள்ள வா மாமா” என கெஞ்சினாள் கனி. 

“காலைலிருந்து புள்ளைக்கு ஒரே மன உளைச்சல். சோர்ந்து போயிட்டா, அவளுக்காக உள்ள வாடாப்பா” என பாட்டியும் சொன்னார். 

நம்பியை அதிருப்தியாக பார்த்துக் கொண்டேதான் உள்ளே சென்றான் தர்மா. 

நேராக அறைக்கு சென்று படுத்து விட்டவனை சாப்பிட அழைத்தாள் கனி. 

“எதுவும் பேசாம என்னை தனியா விடு கனி” என அவன் சொன்ன தொனி, மேலும் அவனிடம் அவளை நெருங்க விடாமல் தள்ளி நிறுத்தியது. 

அரை மணி நேரம் கழித்து திரும்பி படுத்தவன் அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டு விட்டு, “இன்னும் தூங்கலையா நீ?” எனக் கேட்டான். 

“அப்பா செஞ்சது சரி தப்புன்னு நான் எதுவும் சொல்லலை, ஆனா அவர் என்ன செஞ்சாலும் நான் எப்படி பொறுப்பாவேன் மாமா?” எனக் கேட்டாள். 

“நான் எங்க கனி அப்படி சொன்னேன்?” 

“என்கிட்டேயும் கோவப்பட்டதானே?”

“எங்க கோவப்பட்டேன், உம்மேல கோவம் வர நீ என்ன செஞ்ச?”

“அதை நீதான் சொல்லணும்”

“எனக்கு தெரியாமதான் உன்கிட்ட கேட்கிறேன். அபப்டியே கோவம் வர்ற அளவுக்கே நீ ஏதும் செஞ்சிருந்தாலும் உன்கிட்ட போய் கோவப்படுவேனா?”

“சும்மா சொல்லாத மாமா. என்கிட்ட மூஞ்சு திருப்பிகிட்டு படுத்துகிட்ட, சாப்பிட கூப்பிட்டப்போ எரிஞ்சு விழுந்த. உன் பக்கத்துல வரவே பயமா இருந்துச்சு. ஒரு வாரம் வாழ்ந்த வாழ்க்கைலாம் ஒன்னுமே இல்லைனு தோண வச்சிட்ட”

“நீயா நினைச்சுக்காத. மாமா மேலதான் கோவம், மனசும் சரியில்லை, அதுல ஏதோ பேசிருப்பேன். உனக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன்,  வர்ற வழில… ப்ச் அதை விடு, என் பக்கத்துல வந்தா என்ன பண்ணிடுவேன் உன்னை? ஒரு வாரம் உன்கூட குடும்பம் பண்ணியிருக்கேன், பயமுறுத்துற மாதிரி என்ன பண்ணினேன்னு கிட்ட வர பயமா இருக்குதுங்கிற?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் மடியில் தலை வைத்துக்கொண்டான். 

“தனியா விட சொன்ன” 

“நான் சொல்வேன் நீ ஏன் போற? நீயும் பதிலுக்கு சத்தம் போடு, சைலன்ட் ஆகிடுவேன்” என்றான்.

“இப்ப ஏதேதோ பேசி சமாளிக்கிற. நிஜமா ரொம்ப டெரரா பேசின நீ” 

“உன் மாமாதானே, வேணும்னு பேசலை அப்படி, என்னை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கனி” என அவன் சொன்ன விதத்தில், அவனை குறை சொல்வதை நிறுத்தி விட்டாள். 

“அப்பா தப்பான எண்ணத்துலலாம் மஹா…” அவனை சமாதானம் செய்யலாம் என நினைத்து ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். அவளை முழுதும் பேச விடாமல் அதைப் பற்றி பேசாதே என தீர்மானமாக சொல்லி விட்டான். 

சாப்பிட சொன்னதற்கும், “சாப்பிட முடியும்னு தோணல கனி. நீ சாப்பிட்டிட்டு லிக்விடா ஏதாவது எடுத்திட்டு வா” என்றான். 

அவள் எழப் போக, “ஒரு பத்து நிமிஷம் இரு” என சொல்லி அவளது இடுப்பை சுற்றி வளைத்து அணைத்த படி கண்களை மூடிக் கொண்டான். 

இருபது நிமிடங்கள் கடந்தும் அவன் அசையாமல் அப்படியே அவளின் மடியில் கிடக்க, எங்கே உறங்கிவிடப் போகிறானோ என நினைத்து அவளே அவனை நகர்த்தி விட்டு சென்றாள். 

பாட்டியும் இன்னும் உறங்க செல்லாமல் காத்திருந்தார். உன் மகனுக்கும் பேரனுக்கும் சாதாரண வாக்குவாதம்தான்,  பெரிதாக ஏதுமில்லை என அவரை சமாதானம் செய்து அனுப்பிய கனி, வேகமாக சாப்பிட்டு விட்டு அவனுக்கு பால் கலந்து எடுத்து சென்றாள். 

பால் பருகி விட்டு படுத்தவனின் முகம் சுணங்கிப் போய் காணப்பட்டது. 

“எதையும் யோசிக்காம தூங்கு மாமா” என்றாள். அவள் அரவணைப்புக்குள் இருக்கும் படி தன்னை மாற்றிக் கொண்டு உறங்க முற்பட்டான். 

அவனுக்கு ஆறுதலாக இருக்குமே என நினைத்து மிகுந்த தயக்கத்தோடு அவனுடனான தன் நெருக்கத்தை அதிகப் படுத்தினாள். 

அவளை புரிந்தவன், “இன்னிக்கு வேணாம், தூங்கலாம் கனி” என சொல்ல, அவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. 

“ஸாரி மாமா” என்றாள். 

“எதுக்குடி இப்போ ஸாரி? நீயும் சேர்ந்துகிட்டு இம்சை பண்ணாத. என்கிட்ட உனக்குன்னு இல்லாத உரிமை எதுவும் இல்லை, இங்க இந்த நேரத்துல வேற யார் பேரையும் சொல்லக்கூட எனக்கு பிடிக்கல கனி. ஆனா கஷ்டமா இருக்கு, மாமா அவகிட்ட அப்படி நடந்துகிட்டதை ஏத்துக்க முடியலை. உடம்பும் டயர்டா இருக்கு, புரியாம ஸாரி சொல்ற” என வருத்தமாக சொன்னான். 

“நான் இப்படித்தான்  வித்தியாசமா யோசனை பண்ணி சொதப்புவேன். நீ தூங்கு” என சொல்லி அவனை தட்டிக் கொடுத்தாள். 

“என்ன வித்தியாசமா யோசிச்ச?” என அவன் கேட்கவும் தான் நினைத்ததை அப்படியே சொன்னாள். 

லேசாக சிரித்தான். 

“கிண்டலா மாமா?” என ரோஷமாக கேட்டாள்.

“இதுல என்ன கிண்டல்? நீ எப்போலேருந்து இவ்ளோ புத்திசாலி ஆனேன்னு பெருமையாதான் சிரிச்சேன். இன்னிக்கு நிஜமா டயர்ட், ஆனா இந்த யோசனை நல்ல யோசனை, இப்படி நல்ல விதமாவே எப்பவும் யோசி” என்றவனை விட்டு விலகிப் படுத்து முறைத்தாள். 

“நான் தூங்குறதா என்ன?” என அவன் அதட்டவும் மீண்டும் அவனை தன் அரவணைப்புக்குள் கொண்டு வந்தாள். 

இன்று தனக்கு உறக்கம் வரப் போவதில்லை என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அவளின் அருகாமையில் விரைவிலேயே ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டான். 

விடியலில் கண் விழித்த  கனி, தன்னிடமிருந்து தள்ளிப் போயிருந்த கணவனை மீண்டும் அரவணைத்துக் கொண்டாள்.

 அதில் விழிப்படைந்தவன்  இவளின் அன்பும் அரவணைப்பும் காலத்துக்கும் நிலைத்து விட்டால் போதும், வேறெதுவும் வேண்டாம் என நினைத்துக் கொண்டான்.