தான் அழுதும் சமாதானம் செய்யவில்லை என்பதில் ரோஷம்  கொண்டவள் பாதி வழியிலேயே காரை நிறுத்த சொன்னாள்.

“நான் அத்தை வீட்டுக்கு போறேன், ஸ்டாப் பண்ணுங்க” என அவள் சொன்னதை கேட்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை அவன்.

கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்த படி  இருந்தாள். பிரயாணம் முழுக்க அப்படித்தான்.  வீடு வரவும் லக்கேஜ்களை இறக்கினான் தர்மா.

மகளை கடின பார்வை பார்த்துக் கொண்டே, “வா, ட்ரெயின் டைத்துக்கு வந்துச்சா?” எனக் கேட்டார் நம்பி.

கனியிடமும் திடீரென ஒரு பவ்யம் வந்து ஒட்டிக் கொண்டது.

“வந்திடுச்சு ப்பா, எப்படி இருக்கீங்க ப்பா?” எனக் கேட்டாள்.

“ம்ம்… இருக்கேன், உள்ள போய் முதல்ல ட்ரெஸ் மாத்து” என்றார்.

அப்பா ஏதோ நல்ல மூடில் இருக்கிறார் போல, அதுதான் திட்டாக ஏதும் சொல்லவில்லை என எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் விரைந்து விட்டாள் கனி.

கனி தாயின் முகத்தை பார்த்திராதவள். நம்பிக்கு திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்கு பின் பிறந்த பெண் இவள். பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலால் அவளின் அம்மா அப்போதே இறந்து விட்டார். பின் அவளை வளர்த்து எடுத்தது எல்லாம் நம்பியின் தாயார் வேலம்மாள்தான்.

மனைவி என்றால் நம்பிக்கு உயிர், அவர் மறைந்ததும்  என்னவோ ஆள் மிகவும் கடினமாக மாறிப் போய் விட்டார். அதற்கு பின் நடந்தவைகள் இன்னும் முரட்டு ஆளாக அவரை மாற்றி விட்டன.

“புதுக்கோட்டை போகணும்னு சொல்லிட்டு இருக்கா, போறதுன்னா போய்ட்டு வரட்டும் மாமா, எதுவும் சொல்லாதீங்க” என மாமன் மகளுக்காக மாமனிடம் சிபாரிசு செய்தான் தர்மா.

“நீ அழைச்சிட்டு போறியா?” என விசாரித்தார்.

“நான் இல்லை, ஆசைத்தம்பிய அனுப்பி வைக்கிறேன். குளிருக்கு ஏத்த மாதிரின்னு ஜீன்ஸ் போட்டுட்டு வந்திட்டா, வந்தன்னிக்கே ஏதாவது அவளை அரட்டிகிட்டு இருக்காதீங்க. வரும் போது நானே கொஞ்சம் கோவமா பேசிட்டேன்” என்றான்.

எதற்கு கோவம் என்றெல்லாம் அவர் விசாரித்துக் கொள்ளவில்லை, தனக்கு தன் மகள் மீதிருக்கும் எல்லா உரிமையும் தர்மாவுக்கும் இருக்கிறது என நினைப்பவர். மகளை விட இவன் ஒரு படி மேல்தான்.

கடல் உணவுகளை பதப் படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்தான் இவர்களுடையது. தன் காதல் பிரச்சனையில் மாமன் வீட்டுக்கு வந்த தர்மா பின் இங்கேயே இருந்து விட்டான்.

இவனது அம்மா மற்ற இரு பிள்ளைகளுடன் புதுக்கோட்டையில் இருக்கிறார்.  அங்குதான் செல்ல வேண்டும் என கேட்டிருந்தாள் கனி.

தர்மா குளித்து தயாராகி சாப்பிட வர, கனியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். முன் கோவப்பட்டதற்கு சமாதானம் மன்னிப்பு என்றில்லாமல், “ஆசை தம்பி வருவான், உன் அத்தை வீட்டுக்கு போய்ட்டு வா” என சாதாரணமாக சொன்னான் தர்மா. ஆசைத்தம்பி அவனிடம் வேலை பார்ப்பவன், மிகவும் நம்பகமானவன்.

அவள் முகம் திருப்பிக் கொள்ள, “ஏன் போகலையா?” எனக் கேட்டான்.

எங்கே செல்ல முடியாதோ என பயந்தவள், “போறேன்” என்றாள்.

“ம்ம்… நல்லா சாப்பிடு”

“அப்பாவோட பழகி பழகி நீயும் அப்படியே ஆகிட்ட மாமா”

“எப்படி ஆகிட்டேன்?”

“ரொம்ப மோசம் ஆகிட்ட”

“அப்பாவை அப்படிலாம் சொல்லக்கூடாது”

“நல்லா சொல்லுவடா, என்னத்துக்கு அந்த பய அப்படி முறைச்சானாம் எம்பேத்திய? பேண்ட் போட்டுக்கிட்டது குத்தமா? கையில்லாத கவுன் வாங்கி தரப் போறேன் இவளுக்கு, அவனால முடிஞ்சத பார்த்துக்க சொல்லு” என சொல்லிக் கொண்டே பேத்திக்கு சூடாக பூரி பரிமாறினார் வேலம்மாள்.

“வயிறு ஃபுல் அப்பத்தா, எதுக்கு வச்ச?”  என சலித்தாள் கனி.

“வயசுப் பொண்ணு நல்லா சாப்பிடணும்டா தங்கம்” என  பாசமாக சொன்னார் பாட்டி.

“அவதான் வயசுப் பொண்ணு, நீயில்ல, எப்படி மூச்சு வாங்குது பாரு உனக்கு, முதல்ல உட்காரு அம்மாச்சி” என்றான் தர்மா.

“அவனோட சேர்ந்துகிட்டு நீயும் இவளை  திட்டியிருக்க, புள்ள வந்ததும் வராததுமா கலங்கிப் போய் சொல்லுது, தாயில்லா புள்ளைய ஏன்டா இப்படி போட்டு படுத்துறீங்க?” கோவப்பட்டார் பாட்டி.

“அப்பத்தா… விடு” என கனி சொல்லியும் கேட்பதாக இல்லை. தர்மா பதிலே பேசவில்லை, அவராக பேசி ஓய வேண்டும், என்ன சொன்னாலும் அவரிடம் எடுபடாது.

நம்பி சாப்பிட வரவும் தானாக வாயை மூடிக் கொண்டு எழுந்து சென்று விட்டார் வேலம்மாள். மகன் என்றால் அவருக்கும் கொஞ்சம் பயம்தான்.

 கனியும் எழப் போக, “ஏய் ஒழுங்கா சாப்பிட்டு போ” அதட்டினார் நம்பி.

நம்பிக்கு மகளிடம் தன்மையாகவே பேச வராது. அவளுக்கு அப்பா என்றாலே வெறுப்புதான். அவரின் அன்புக்கு ஏங்கி ஏங்கி ‘சீச்சி இந்த பழம் புளிக்கும்’ என்ற மன நிலைக்கு எப்போதோ வந்து விட்டாள்.

கனி சாப்பிட முடியாமல் திணறுவதை கண்ட தர்மா, “போதும்னா விட்ரு, நீ போ ரெஸ்ட் எடு” என்றான்.

அவளும் எழப் போக, “சாப்பாடு வேஸ்ட் ஆகுது, வேணுங்கிறத வச்சு சாப்பிடணும்னு தெரியாதா உனக்கு?” எனக் கேட்டார் நம்பி.

அவள் தர்மாவை பாவமாக பார்க்க, “இவகிட்ட கேட்காமலே அம்மாச்சி  வச்சிடுச்சு, இவ என்ன பண்ணுவா?” எனக் கேட்டு அவளை அனுப்பி வைத்து விட்டான் அவன்.

“ரொம்ப ரஃப்பா இருக்கீங்க மாமா, நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்” என எச்சரிக்கை போல சொன்னான் தர்மா.

“படிச்சு முடிச்சிட்டால்ல, கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு இருக்கேன்” என்றார் நம்பி.

என்ன அவசரம் எனக் கேட்டான் தர்மா. நான் நன்றாக இருக்கும் போதே செய்து விட வேண்டும், இந்த ஊர் வேண்டாம், சென்னையாக இருந்தால் சரியாக இருக்கும் என தான் நினைப்பதை சொன்னார்.

“யாரையும் பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் மாமா” என தர்மா சொல்லவும் அவனை கோவமாக பார்த்தார்.

“ஏன் அவ ஆசை படக்கூடாதா? நீங்களே குறுக்க வந்தாலும் அவ ஆசை படி நான் பண்ணி வைப்பேன்” என சிரித்துக்கொண்டே சொன்னான்.

“அதெல்லாம் என் பொண்ணு அப்படி கிடையாது, நாம பார்க்கிற பையனை பண்ணிப்பா” என உறுதியாக சொன்னார் நம்பி.

“தெரியதானே போகுது” என்றவன் சாப்பிட்டு முடித்திருக்க, சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.

மகள் எதுவும் வில்லங்கமாக சொல்லி விடக்கூடாதே என யோசனையாகி விட்டார் நம்பி.