அங்கிருந்தவர்களின் கண்களில் பயம் குறைந்து ஒருவித திருப்தி படர்ந்தது.

குறுகிய காலத்துக்குள் தர்மாவும் அவனுக்கென அங்கே ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.

பொது இடத்தில் நேருக்கு நேர் ஒருவன் தன்னுடன் மோதுவதே தன் மீதான மதிப்பை குறைத்து விடும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர் நாதன். ஆகவே, “சின்ன பசங்களோட என்னடா வெட்டி பேச்சு, கிளம்புங்க” என சொல்லி,  தர்மாவை கண்டு கொள்ளாதது போல அங்கிருந்து வெளியேறினார்.

என்ன இது ஏதேதோ சொல்லி கூட்டி வந்து, அவரும் ஒன்றுமே செய்யாமல், நம்மையும் ஒன்றும் செய்ய சொல்லாமல் இப்படி அமைதியாக போகிறாரே என்ற வியப்புடனே அவரது ஆட்களும் அங்கிருந்து சென்றனர்.

“இந்தாளுக்கு பயந்து போயெல்லாம் உன் தம்பிய உடனே அனுப்பி வச்சிடாத, என் பசங்க இங்க இருப்பாங்க. எல்லாம் முடிச்சிட்டு அனுப்பி வை” என பாலாஜியிடம் சொன்ன தர்மாவும் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

தர்மா வீடு வரும் போது நன்றாக விடிந்து போயிருந்தது. அவனுடைய தாய்மாமன் தமிழ் நம்பி  காவலுக்கிருக்கும் கோம்பை இன வகை நாயை அழைத்துக் கொண்டு நடைப் பயிற்சிக்கு சென்று திரும்பியிருந்தார்.

மாநிலத்தின் எதிர்க் கட்சியின் அந்த மாவட்டத்தின் முக்கிய பிரமுகர் தமிழ்நம்பி. கட்சிப் பணிகள் ஏராளமாக அவருக்கு காத்துக் கிடக்கும். தர்மா கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது, ஆனால் மாமனுக்காக எந்த வேலை சொன்னாலும் செய்வான்.

“என்னடா அதுக்குள்ள வந்திட்ட?” என விசாரித்தார் நம்பி.

விவரம் சொன்னவன், “கனி ஊர்லேருந்து வருதுல்ல மாமா, அதான் வந்திட்டேன்” என்றான்.

“ஏன் நான் இல்லையா? இல்லை வேற யாரும் போக மாட்டாங்களா? அவளுக்கு ஓவரா செல்லம் கொடுக்குற நீ” என குறையாக சொன்னார் நம்பி.

“எது சென்னையிலேருந்து வர்ற புள்ளய போய் அழைச்சிட்டு வர்றது செல்லமா உங்களுக்கு? நான் போயிட்டா அத்தோட போச்சு இல்லைனா கூப்பிட வரலைல அப்ப புதுக்கோட்டை கூட்டிட்டு போன்னு சொல்லுவா, ஆளுதான் வளர்ந்திருக்கு செயல் எல்லாம் இன்னும் குழந்தை புள்ளையாட்டம் தான்” என தர்மா சொல்லும் போதே தன்னை மீறி புன்னகைத்தான்.

அவனுக்கு அவனது மாமன் மகள் கனிஹா என்றால் மிகவும் பிடிக்கும், இவன் இங்கு வந்த நாளிலிருந்து அவளும் இவனிடம்தான் சலுகை கொண்டாடுவாள். அவள் கேட்டால் எதுவென்றாலும் மாமனை மீறிக் கூட செய்து கொடுத்து விடுவான்.

“அவ கேட்டா… உனக்கு நேரம் இருந்தாதான் செய்ய முடியும் இல்லைனா முடியாதுன்னு சொல்லிட்டு போவியா? அதை வுட்டுட்டு அவளுக்கு போய் பயப்படுற” என அலுத்துக் கொண்டார் நம்பி.

தர்மா வீட்டுக்குள் கூட செல்லவில்லை, காரை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை கிளம்பி விட்டான்.

இரயில் நிலையத்தில் ஏற்கனவே வந்து விட்ட கனி, இவனது வரவுக்காகத்தான் காத்திருந்தாள்.

தர்மாவை கண்டதும் மலர்ந்த முகத்துடன் கொஞ்சம் வேகமாக அவனிடம் சென்றவள், “என்ன மாம்ஸ் தூங்கிட்டியா?” எனக் கேட்டாள்.

அவளது தோள் பையை இயல்பாக தன் தோளுக்கு மாற்றிக் கொண்டவன், “நைட் வேற வேலையாகிப் போச்சு, தூக்கம்லாம் இல்லை, லக்கேஜ் எங்க?” எனக் கேட்டான்.

“என்ன  ஏதும் அடிதடி  பிரச்சனையா?” என கடுப்பாக கேட்டாள் கனி. பதில் தராதவன், அவளுடைய டிராலிகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

“உங்கப்பாவை கோவ படுத்தணும்னே ஜீன்ஸ் போட்ருக்கியா? சென்னைல என்ன வேணா போட்டுக்க, இங்க நம்மூருக்கு தக்க போடுன்னு எத்தன தடவ சொல்றது?” என கண்டிப்போடு கேட்டான் தர்மா.

“ஏசி கோச்ல இதான் குளிர் தாங்கும்னு போட்டுக்கிட்டேன், உன் மாமாவை நீயே சமாளிச்சுக்க, என்னை கொண்டு போய் அத்தை வீட்ல விட்ரு” என்றாள் கனி.

“உன் இஷ்டத்துக்கு பிளான் போட கூடாது, வீட்ல விடுறேன், அப்புறம் எங்க வேணும்னாலும் நீயே போயிக்க” என்றவன் அவளுக்கு முன் நடந்து விட்டான்.

தர்மா என்ன நினைத்து பேசுகிறான் என்பதையெல்லாம் சட்டென கணித்து விடுவாள் கனிஹா. இப்போது மிகவும் உறுதியாக சொல்கிறான், என்ன கெஞ்சி கேட்டாலும் மறுக்கத்தான் செய்வான் என்பதை புரிந்து கொண்டு அமைதியாகி விட்டாள்.

லக்கேஜை வைத்துக் கொண்டிருப்பவனுக்கு அவள் உதவி செய்யப் போக, “ஏய் வாண்டு தள்ளிப் போ” என்றான்.

“நான் ஒன்னும் வாண்டு இல்லை மாமா” என சிணுங்கினாள்.

“அப்புறம் என்ன பூண்டா? உன் டிராலிக்குள்ள உன்னை சுருட்டி வச்சாலும் பாதி இடம் பல் இளிக்கும்” என சொல்லி சிரித்தான்.

உடனே அவன் பக்கமாக அவன் தோள் உரச வந்து நின்றவள் இருவரின் உயரத்தையும் அளவீடு செய்து காட்டினாள்.

அவனது தோளில் அவளின் தலை முட்டி நிற்க இன்னும் கொஞ்சம் எம்பியவள், “கொஞ்ச நாள் போனா உன்னை தாண்டி வளர்ந்திடுவேன் மாம்ஸ்” என்றாள்.

“குழந்தைதான் வளரும், நீ யாருன்னு நீயே ஒத்துக்கிட்டியா?”

“எம் காம் முடிச்சிட்டேன், நீங்களே சொல்லிக்கோங்க குழந்தைனு. என்ன தாடி முன்னாடி விட நீளமாகியிருக்கு, மஹா நினைப்பு ஓவராகிடுச்சோ?” என கிண்டலாக கேட்டுக் கொண்டேதான் காரில் ஏறினாள் கனி.

“ஏய்!” என அதட்டியவனின் கண்கள் கோவத்தில் சிவந்து போயிருந்தன.

கனியின் விழிகள் கலங்கிப் போக, வேறேதும் சொல்லாமல் காரை எடுத்தான்.

கனி எப்போதுமே இப்படி கிண்டல் செய்வாள்தான். மற்ற யாருக்கும் இவனிடம் இல்லாத சலுகைகள் இவளுக்கு மட்டும் உண்டு. தாயில்லா பிள்ளை என்பதாலோ நம்பியும் அதீத கண்டிப்பு காட்டுகிறார் என்பதாலோ இவள் என்றால் இவன் வேறு மாதிரி ஆகிடுவான். இன்றைய அவனது கோவம் அவளுக்கு புதிதுதான்.

கனியின் விசும்பல் சத்தம் அவள் அழுகிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. ஆனாலும் அவள் பக்கமாக பார்க்கவில்லை.

மஹா அவனது முன்னாள் காதலி, கல்லூரி காலத்தில் பழகி வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு இவன் முயன்று தோல்வியில் முடிந்து விட்ட காதல். வேறொருவன் மனைவியாகி வெளிநாடு சென்று விட்ட மஹா, கடந்த மாதம் ஊரோடு வந்து விட்டாள். கணவனோடு விவாகரத்து ஆக போவதாகவும் கேள்வி பட்டான்.

மஹா மீது தர்மாவுக்கு எந்தக் கோவமும் இல்லை, அவளுடன் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்பதில் நிறைய கனவுகள் அவனிடம் இருந்தது தான், ஆனால் இப்போது அவளை பற்றிய நினைவுகள் அபத்தமானதாக என்று எதுவுமில்லை. முதல் காதலை மறக்க இயலாதே, அப்படி அவனது நினைவில் ஓரமாக இருக்கிறாள். ஆனால் அவள் நன்றாக இருக்க வேண்டும் என மனதார நினைப்பவன்.

மஹாவுக்கும் அவளது கணவனுக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, மூன்று வயதில் மகள் இருக்கிறாள், இப்போது ஏதாவது கிண்டலாக பேசப் போய் அது கூட அவளின் வாழ்வை பாதித்து விடுமோ என எண்ணினான். இப்போது காட்டுகிற கடுமையில் இனி எப்போதும் மஹாவின் பெயரை கனி எடுக்கவே கூடாது என நினைத்தவன் இன்னும் இளக்கம் கொள்ளாமலே காரை செலுத்தினான்.