கூடு – 11
ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.
பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது.
“ஒரு காலத்துல உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க…’’ பரணியின் மனதில் செங்கனின் இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
“கடைசியாய் நான் அவளைப் பார்க்கும் போது அவளுக்கு ஒரு பதினாலு வயது இருக்குமா…?’’ பரணி தன் மனதிடம் தானே கேள்விக் கேட்டுக் கொண்டான்.
“அந்த வயசுல அவளுக்கு என் மேல லவ் வந்து இருக்குமா…? இத்தனைக்கும் அவளை நான் அதிகம் பாத்தது கூடக் கிடையாது. கடவுளே என்னை சுத்தி என்ன நடக்குது….’’
பரணி செங்கன் பேசிச் சென்ற வார்த்தைகளுக்கு தன் மனதிற்குள் விளக்கம் தேட முற்பட்டு, அது முடியாத காரணத்தால் அது அவனுக்கு தீராத தலைவலியைக் கொடுத்தது.
பரணி அவர்கள் குடும்பத்திலேயே கோபத்திற்கு பேர் போனவன். அவர்கள் ஊர் திருவிழாவில் எப்பொழுதும் அங்காளி பங்காளிகள் சண்டை பட்டையைக் கிளப்பும்.
அப்பொழுது எல்லாம் அவன் தந்தை எந்தப் பக்கம் நின்று குரல் உயர்த்திப் பேசுகிறாரோ, அந்தப் பக்கம் போய் நிற்பவன், வார்த்தைகள் சற்று தடிக்கும் போதே எதிர் பக்கத்தில் இருப்பவர்களை ஒரு கைப் பார்த்துவிடுவான். யார் பக்கம் நியாயம் என்று எல்லாம் நின்று விசாரித்துக் கொண்டிருக்க மாட்டான்.
அவர்கள் வழக்கத்தில் பேச்சுவார்த்தையோ, அடிதடியோ இரு தரப்புமே காவல்நிலையத்தில் புகார் கொடுக்கக் கூடாது என்று ஒரு வரன் முறை இருந்ததால் மட்டுமே பரணி இதுவரை சுதந்திரமாய் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவன் முரட்டு வீரம் அப்படி. அவன் எதிராளிக்கு முதல் அடிக் கொடுக்கும் போதே கையில் எதிராளியின் ரத்தக் கரையோடு தான் அவன் கரம் திரும்பும்.
முதல் நாள் நாட்சியை பார்க்கும் போதே, அவளின் நிறம் மாறும் அந்த அடர் பழுப்பு நிறக் கண்களைப் பார்க்கும் போதே, பரணியின் மனம் அவனிடம் அனுமதிக் கேட்காமலேயே அவள் காலருகில், “நான் உன் சேவகன்..’’ என்ற ரீதியில் மண்டியிட்டு அமர்ந்திருந்தது.
இதுவே வேறு யாரவாது அவர்கள் குடும்பத்தோடு இந்த அளவிற்கு மோதி இருந்தால், பரணியே அவர்களை ஒரு வழி செய்திருப்பான். ஏன் என்றால் அந்த அளவிற்கு பரணி தன் குடும்பத்தை நேசித்தான்.
அதே சமயம் நாட்சி வந்து குமுறிவிட்டு சென்ற தினம் தான் முதன் முதாலாய் தான் எதையும் விசாரிக்காமல் அவர்களோடு சேர்ந்து நிற்பது தவறோ என்று சிந்திக்கத் தொடங்கினான்.
பதினாலு வயது பெண் குழந்தையை தந்தை அடைத்து வைத்து சித்ரவதை செய்திருப்பார் என்பதையும் பரணியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
எது எப்படி இருந்தாலும் இனி தான் மட்டுமே அவளுடன் துணை நின்று அவளுக்கான நியாயத்தை பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்.
தன் தந்தையின் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கை ஒரு புறம் அவனை வெட்கப்பட வைத்தது. அவளுக்கு இருக்கும் நம்பிக்கை 17 வருடம் தோழனைப் போல தாங்கி வளர்ந்த மாமனின் மீது தனக்கு ஏன் இல்லாமல் போயிற்று என்று வேறு ஒரு புறம் வேதனைக் கொண்டான்.
இனி என்ன நடந்தாலும் அவன் அவள் புறமே நின்றுப் போராட விரும்பினான். அதனாலேயே அவள் மீதான வரன் முறையற்ற உரிமைக்காக மட்டுமே அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்தான்.
அதே சமயம் தன் குடும்பத்தை வெளி சமூகத்தின் முன்பும் அவனால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அதனாலேயே அவசர அவசரமாய் அவள் அவர்களுக்கு ஏற்படுத்திய சிக்கல்களுக்கு தீர்வு கண்டவன், உடனே தன்னை மணந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் அவளுக்கு ஏற்படுத்தினான்.
இன்றைக்கு இரவு அவள் குடியிருப்பிற்கு அவளைச் சென்று சந்தித்து அது பற்றி பேசவும் எண்ணி இருந்தான். ‘உனக்கு யார் எல்லாம் என் குடும்பத்துல கொடுமை பண்ணினாங்களோ அவங்களுக்கு நீயே தண்டனைக் கொடு… உனக்கு துணையா நான் நிக்குறேன்…’ என்று தன் நிலையை அவளுக்கு உணர்த்த எண்ணி இருந்தான்.
ஆனால் திருமணம் முடிந்ததும், அவள் கரத்தை பிடித்ததற்கே வேலு நாட்சியா பார்த்த பார்வையில் முற்றிலும் சிதைந்திருந்தான். ‘அடேய் அற்பனே… என்னைத் தொடும் தகுதி உனக்கு இருக்கிறதா..?’ என்று கேட்காமல் கேட்டது அவள் பார்வை.
இப்படியே அவன் தெளிவாய் குழம்பிக் கொண்டிருக்க, அவன் செல்லிடைபேசி அவனை அழைத்தது. தன்னை அழைப்பது பயிற்சியாளர் சிதம்பரம் என்றதும், அலைபேசியை இயக்கி காதில் வைத்தவன், மரியாதையாய், “சொல்லுங்க.. சார்…’’ என்றான். அவரோ அந்தப் பக்கம் மிக மகிழ்ச்சியாய் பேசினார்.
“லே பரணி….இந்தியால நடக்குற லீக் ட்வென்டி புட் பால் பெஸ்டிவல்ல டைகர்ஸ் அணி சார்பா விளையாட உன்னை ஏலம் எடுத்து இருக்காங்கலே…. நீ தாம்லே கேப்டன்…. இந்த வாட்டி நம்மக் கூட வெளிநாட்டு ப்ளேயர்ஸ் விளையாடுறதால நமக்கு நல்ல ட்ரைனிங் கிடைக்கும்லே….. வர வெள்ளிக்கிழமை டெல்லிக்கு போகணும்லே… அங்க கான்ட்ராக்ட் சைன் பண்ணிட்டு அப்படியே அங்கயே ப்ராக்டிஸ் ஜாயின் பண்ணிடனும்லே…’’
அவர் பேசப் பேச அவனுள்ளும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து. “கண்டிப்பா மாஸ்டர்.. இந்த வாட்டி நம்மளை புறம் பேசின வடநாட்டுக்காரங்க முகத்துல கரியைப் பூசியே ஆகணும் மாஸ்டர்….’’ விளையாட்டை பற்றிய பேச்சை தொடங்கியதும் புது உற்சாகம் அவனுக்குள்.
அந்தப்பக்கம் அவரும், “சரிலே…. சரிலே…” என உதட்டில் மலர்ந்த முறுவலோடே அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “மாஸ்டர்…. இப்போ கிரௌண்டுக்கு வர முடியுமா…?’’ என அவன் கேட்கவும்,