Advertisement

கூடு – 4

பழங் காலத்தில் நடைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கு பெரும் தகுதி பெற்றிருந்தனர்

ஆட்சியர் மாளிகையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தில் தன் பிரத்யேக அறையில் அமர்ந்திருந்த நாட்சியின் மனம் ஒரு நிலையில் இல்லை

அவளும் இன்றைக்கு பணியில் திரும்பியதிலிருந்து மனதை ஒருமுகப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்துவிட்டாள். ஆனால் பலன் தான் பூஜியமாய் இருந்தது

குஷன் சோபாவில் அமர்ந்து இருந்தவள் தலையை சற்றே பின்னால் சாய்த்து, கண்களில் ஒரு கைவைத்து மறைத்த படி அமர்ந்திருந்தாள். பார்ப்பவருக்கு உறங்குவதைப் போன்ற தோற்றம் தரும். ஆனால் உண்மையில் அவள் உள்ளம் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது

எதையும் பார்க்க ப்ரியமற்று அப்படி அமர்ந்திருந்தாள். அறைக்குள் நுழைந்த முதல் வேலையாய் அணிந்திருந்த புடவையை கலைந்துவிட்டு இரவில் அவள் வழமையாய் அணியும் தளர்வான டீஷர்ட்டுக்கும் கணுக்கால் வரை தொடும் இலகுவான கால் சாராய்க்கும் மாறியிருந்தாள்.  

காலையில் அடக்கமாய் கொண்டையில் சுருண்டிருந்த முடி, தற்சமயம் அவள் முதுகில் படர்ந்து சுதந்திரமாய் வீசும் காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தது

முதலில் மனதை ஒரு முகப்படுத்த யோகாவில் இறங்கினாள். சிந்தை ஒரு புள்ளியில் குவியும் நேரத்தில், “யாஹூ…’’ கையில் வெற்றிக் கோப்பையை உயர்த்தி பிடித்தபடி உற்சாக கூச்சலிட்ட பரணியின் முகம் வந்து அக்குவியத்தை ஆக்ரமித்தது.

மீண்டும் மீண்டும் முயன்று தோல்வியை தழுவிய பின் கோபம் கொண்டு எழுந்தவள், கையில் ஸ்கிப்பிங் கையிறை எடுத்துக் கொண்டு குதிக்க தொடங்கினாள்

வேகம் வேகம் அப்படி ஒரு வேகம். அவள் குதித்துக் கொண்டிருக்கும் போதே, “யோவ் மாமா…. முடிஞ்சா என்னை முந்து…’’ தன் தந்தையை சாவாலுக்கு அழைத்தபடி அவர்கள் பண்ணைக் குளத்தில் வெற்று மார்போடு நீரில் குதிக்கும் பரணி

விடாது குதித்துக் கொண்டே இருந்தவள் அடுத்த நொடி நிலை தடுமாறி விழுந்து இருந்தாள். அங்கே சமையல் வேலையில் உதவியாக இருக்கும் சங்கரி ஓடி வந்து எட்டிப் பார்க்கவும்

வேகமாய் எழுந்துக் கொண்டவள், “ஒன்னும் இல்ல சங்கரிநீ போய் உன் வேலையைப் பாரு…’’ என அப்பெண்ணை அனுப்பிவிட்டு வெறுத்துப் போய் சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள்

அவன் முகம் ஏன் தன் மனதிற்கு இத்தனை நெருக்கமானது…?’’ அதற்கான பதிலை அவளே அறியாள். நாட்சிக்கு விவரம் தெரிந்தது முதல் ஊட்டி கான்வென்ட் பள்ளியில் தான் தங்கிப் படித்தாள்

பள்ளி விடுமுறைகளுக்கு மட்டுமே ஊருக்கு வருவாள். அவள் தாயும் தந்தையும் அவள் முன்னிலையில் சாதாரணமாய் பேசிப் பழகினாலும் ஏதோ ஒன்று சரியில்லை என அவளுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும்

அவர்கள் வீடு ஊருக்கு வெளியே சற்று ஒதுக்கு புறமாய் இருக்கும். இவள் வீட்டில் இருந்து யாரும் எதற்கும் ஊருக்குள் செல்ல மாட்டார்கள். அவர்கள் வீட்டில் அப்படி ஒன்றும் அதிகம் ஆட்கள் இருந்ததும் இல்லை

அவள் தாய் அல்லி மற்றும் அவளோடு, சமையல் வேலை செய்த பூங்கோதைப் பாட்டியும், மேல் வேலை செய்த அவர் பேரன் செங்கமும் மட்டுமே அந்த பெரிய வீட்டில் தங்கி இருந்தனர்

நாட்சி சிறுமியாய் இருக்கும் போது எல்லாம் அவள் விளையாட்டு தோழன் பதினைந்து வயதான செங்கன் மட்டுமே. அவளுக்கு ஐந்து வயதான போதே அவள் தந்தை அவளை ஊட்டி கான்வெட்டில் சேர்த்துவிட்டார்

அப்பொழுதில் இருந்து வருடம் ஒரு முறை கோடை விடுமுறைக்கு மட்டுமே அவள் ஊருக்கு வருவாள். அவர்கள் எது வாங்கவும், எதைத் தேடியும் ஊருக்குள் சென்றதில்லை. அவர்களுக்கு தேவைப்படும் அனைத்தும் அவர்கள் வீட்டு வாயிலுக்கு அவர்களைத் தேடியே வந்துவிடும்

அவர்கள் குடும்பத்தோடு எங்கே சென்றாலும் அது திருநெல்வேலியை தாண்டிய வெளி ஊராக மட்டுமே இருக்கும். அப்படி வெளியே வந்து அவளோடு நேரம் செலவழிக்கும் உற்சாக தந்தையை நாட்சியாவிற்க்கு மிகவும் பிடிக்கும்

ஆனால் அப்படி வெளியூர் பிரயாணம் முடிந்து திரும்பி வந்தால் அவள்  தந்தை இரண்டு மூன்று நாட்கள் வீட்டிற்கே வர மாட்டார். அவள் தாயிடம் அது பற்றிக் கேட்டால் அப்பாவிற்கு அதிக வேலை என்று சமாளிப்பார்

அவள் விடுமுறையில் இருந்தாலும் பகலில் அவளோடு விளையாட வரும் அவள் தந்தை இரவானதும் வேலை இருப்பதாக சொல்லிக் கிளம்பிவிடுவார். அவள் அவளுடனே தூங்க சொல்லி அடம் பிடிக்கும் நாட்களில் அவளை உறங்க வைத்து விட்டு அவர் கிளம்பி இருப்பார்

நாட்சி ஐந்தாம் வகுப்பு முடிந்த சமயம், வழக்கம் போல கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருந்தவளுக்கு வீட்டிலேயே அடைந்து கிடப்பது எரிச்சலைக் கொடுக்க, முதல் முறையாக தாயிற்கு தெரியாமல் ஊருக்குள் செல்ல முடிவுவெடுத்தாள்

அந்த முடிவை எடுத்ததும், தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த செங்கன் முன் சென்று நின்றாள். “என்ன சின்னம்மா..?’’ அவன் மண்ணை கொத்துவதை விட்டு விட்டு அடக்கமாய் கேட்கவும்

எனக்கு ஊருக்குள்ள போகணும் செங்காநேத்து டாடி கூட கார்ல வரும் போது  போஸ்டர்ஸ்ல பாத்தேன். ஊருக்குள்ள பொருட்காட்சி போட்டு இருக்காங்க போலநாம போகலாம் செங்கா…. ப்ளீஸ்..’’ 

நிலவரம் புரியாமால் தன்னிடம் கெஞ்சும் நாட்சியை பார்த்தவன், “சின்னம்மாஅம்மாக்கு தெரிஞ்சா ஏச போறாக…’’ அவன் தலையை சொரியவும்

அம்மாவும் உங்க பாட்டியும் அப்பா அனுப்பி வச்ச கார்ல ஏதோ வெளியூர் கோவிலுக்கு போய் இருக்காங்க இல்ல செங்காஅவங்க வரதுக்கு சாயங்காலம் ஆயிடும்அதுக்குள்ள நாம எக்சிபிஷன் போயிட்டு வந்துடலாம் செங்கா..’’ 

இருபுறம் போனிடைல்களும் கன்னத்தில் உரச, பளீர் சந்தன நிறத்தில், திராட்சை கண்கள் மின்ன, கொழுக் மொழுக் குழந்தையாய் நாட்சி கெஞ்சவும், செங்கனால் அதிக நேரம் மறுப்பு சொல்ல முடியவில்லை

அவனுக்கு தற்சமயம் இருபது வயதாகிறது. ஏனோ நாட்சியை கண்டால் அவனுள் ஒரு தாய்மை உணர்வு தோன்றும். சிறுவயதில் இருந்தே அவன் தூக்கி வளர்ந்த குழந்தை அவள்

சடுதியில் முடிவெடுத்தவனாக, “சரிங்க சின்னம்மாவாங்க போயிட்டு வந்துடலாம்..’’ காவலுக்கு கொள்ளையில் கட்டி வைத்திருந்த ராஜபாளைய வகையை சார்ந்த அலெக்சாண்டரை வீட்டின் முன் வாயிலில் கட்டி விட்டு வீட்டையும் பூட்டி விட்டு இருவரும் கிளம்பினர்

செங்கனின் எண்ணம் என்னவென்றால் ஊருக்குள் ஒருவருக்கும் நாட்சியை அடையாளம் தெரியாது. முடித்த அளவு விரைவாய் திரும்பிவிடலாம் என்பதே

இருவரும் பொருட்காட்சியில் நுழைந்து பஞ்சு மிட்டாய் தின்று, அப்பளம் கடித்து, சில பல ரங்க ராட்டினங்கள் சுற்றி முடித்து கிளம்பலாம் எனும் சமயம் தான் அந்த அனர்த்தம் நேர்ந்தது

பொருட்காட்சியின் நுழை வாயிலில், பரணியின் தோள் மேல் கைபோட்டபடி கஜபதி நுழைந்தார். அவர் பின்னோடே சிவாத்மிகாவும், அவரின் இரு மகள்கள் மதுஸ்ரீ, மற்றும் தேவிஸ்ரீயும் பட்டுப் பாவாடை சட்டையில் அடக்கமாய் தாயாரைப் பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தனர்.

அப்பாவைக் கண்ட நாட்சியா, செங்கத்தின் பிடியில் இருந்து நொடியில் வெளியேறி இருந்தவள், தன் தந்தையை நோக்கி ஓடி இருந்தாள், “டாடி..’’ என்ற உற்சாக அழைப்போடு

தங்களை நோக்கி ஓடி வந்த அழகிய குழந்தையை முதலில் கண்டது பரணி தான். “மாமாஅங்கப் பாரு மாமாயாரோ ஒரு குட்டிப் பாப்பா உன்ன பாத்து ஓடி வருதுயப்பா எவ்ளோ அழகா இருக்கு..’’ 

அவன் அந்தக் குழந்தையை ரசித்துக் கொண்டிருக்கும் போதே, தன் வெண்ணிற உடை காற்றில் பறக்க, ஓடி வந்து தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டிருந்தாள் நாட்சியா, “டாடி..’’ என்ற மற்றொரு உற்சாக அழைப்போடு

மகளை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் கஜபதி உறைந்து நிற்க, அவ்வளவு நேரம் அந்தக் குழந்தையின் அழகில் லயித்திருந்த பரணி, அவள் கஜபதியை அழைத்த முறைக் கண்டு, அவர் அருகிலிருந்து சட்டென்று பின்னால் நகர்ந்தான்

அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த சிவாத்மிகா, கணவனின் காலை கட்டிக் கொண்டிருந்த குழந்தையை குழப்பமாய் பார்க்கவும், பரணி எரிச்சல் குரலில், “அந்தப் பொம்பளை பொண்ணு போலஎன முணு முணுத்தான்.

அவ்வளவு தான் சிவாத்மிகா அது பொது இடம் என்பதையும் மறந்து, தன் தலையில் இருந்த பூவை ஆங்காரமாய் பிய்த்து எறிந்தவர், “எங்க அவஅந்த குடி கெடுத்தவ முகத்தை இன்னைக்கு நான் பாத்தே ஆகணும்..’’ 

வெறி பிடித்தவராய் அவர்க் கத்தத் தொடங்கவும், நாட்சி அவரின் கோபத்தில் மிரண்டு மேலும் தந்தையின் காலை இறுகக் கட்டிக் கொண்டாள். அவர்களுக்கு சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த செங்கன் என்ன செய்வது எனப் புரியாமல் கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தான்

பதட்டத்தில் கண்களை சுழற்றியவரின் கண்களில் செங்கன் சிக்கினான். அவனை அருகில் வருமாறு பார்வையிலேயே அழைத்தவர், அவன் அருகில் வரவும், ஓங்கி ஓர் அரை விட்டார்

அவர் கொடுத்த அரையில் செங்கன் தடுமாறி நிற்க, நாட்சி தன்னைப் போல தன் தந்தையை விட்டு ஒதுங்கி நின்றாள். கண்களில் அதீத பயம். முதன் முதலாய் அவர் கோபத்தை நேரில் கண்ட சிவாத்மிகாவும் உறைந்து நின்றார்

பரணி, “மாமாவுக்கு கோபம் கூட வருமா..?” என்பதைப் போல அவரைப் பார்த்து நின்றான். நாட்சியை கைகளில் தூக்கியவர், செங்கனின் கைகளில் கொடுத்து, “வீட்டுக்கு கூட்டிட்டு போ…’’ என இறுகிய குரலில் ஆணையிட்டார்

செங்கனின் கைகளில் கொடுக்கப்பட்டதுமே நாட்சி பயத்தில் அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள். செங்கன் அவளிடம் மென் குரலில், “பயப்படாதீங்க சின்னம்மாவீட்டுக்கு போயிடலாம்…’’ என பயந்தவளின் முதுகை நீவிக் கொடுத்தவாறே வெளியே நடக்க தொடங்கினான்.

செங்கனின் தோளில் இருந்த தலையை சற்றே நிமிர்த்தி, “உன்னால் தான் எல்லாம்..’’ என்ற விதத்தில் பரணியை தன் பழுப்புக் கண்களால் முறைத்துக் கொண்டே சென்றாள் வேலுநாட்சியா

அன்றைக்கு இரவு வீட்டிற்கு வந்த தந்தையை நாட்சி நிமிர்ந்தும்  பார்க்கவில்லை. அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவர், “பாப்பூஅப்பா மேல ராணிமாக்கு கோபமா..?’’ என கேட்க

அவள் அங்கிரந்து எழுந்து வெளிக் கூடத்தை நோக்கி நடந்தாள். அடுத்த நொடி கஜபதி தன் தலையில் வேக வேகமாய் அறைந்துக் கொண்டு கதறியழத் தொடங்கினார்

அவரை தொட்டு பேச விருப்பமில்லாத அல்லி, அவரை அன்று அணைத்து ஆறுதல்படுத்த வேண்டியதாயிற்று. நாட்சிக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் தந்தை அழுவது பொறுக்காமல் அவர் அருகே சென்று மண்டியிட்டவள்

ராணிமா வந்துட்டேன் டாடிஆனா டாடிக்கு தான் ராணிமாவை பிடிக்கலசெங்கனை நீங்க எப்படி அடிக்கலாம் டாடி…. பாவம் செங்கன்சே சாரி டூ ஹிம்..’’ 

நாட்சி தேம்பிக் கொண்டே சொல்லவும், தன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தவர், “இதோ ராணிமா..’’ என்றுவிட்டு அவள் முன்னிலையிலேயே செங்கனை அழைத்து

என்னை மன்னிச்சிடு செங்கா..’’ எனக் கேட்க, “ஐயோ ஐயாதப்பு என் பேர்ல தானுங்கநம்ம சின்னம்மா ஆசைப் பட்டாங்களேன்னு உங்கக்கிட்ட அனுமதி வாங்காம வெளியக் கூட்டிட்டு போன எம் பேர்ல தானுங்க தப்புஐயா தானுங்க என்னை மன்னிக்கணும்…’’ 

அவன் கைக் கூப்பி நிற்கவும், பெரிய மனுசியாய் எழுந்து நின்ற நாட்சி, “நோ செங்கா டாடி தான் தப்புஅவர் தான் சாரி கேக்கணும்.. நீ முதல்ல நேரா நில்லு..’’ 

என அவனை மிரட்டவும், அவள் காதைப் பிடித்து திருகிய அல்லி, “உன்ன விட பெரியவங்களை பேர் சொல்லிக் கூப்பிடுறது மட்டும் ரொம்ப சரியாக்கும்…’’ என கேட்கவும், “மம்மிநம்ம செங்கா மம்மி..’’ என அவளும்

நம்ம ராணிமா அப்படிக் கூப்பிட்டா தான் என் பேருக்கே பெருமை அம்மா…’’ என ஒரே நேரத்தில் இருவரும் தங்கள் தரப்பை நியாயப்படுத்தினர்

அவளை மடியில் அமர்த்திக் கொண்டவர், “ராணிம்மாரொம்ப ரொம்ப சாரிமாஇனி அப்பாக்கிட்ட சொல்லாம எங்கயும் போகக் கூடாது.. சரியா…?’’ எனக் கேட்கவும்

ஓகே டாடி…’’ என உடனே தன் சம்மதத்தை தெரிவித்தவள், “உங்களை திட்டினாங்களே அந்த ஆன்டி யாரு…? அப்புறம் என்னை பாத்ததும் தள்ளிப் போய் நின்னாரே அந்த அண்ணா யாரு…? பின்னாடி ரெண்டு அக்கா நின்னாங்களே அவங்க எல்லாம் யாரு டாடி…?’’ 

மகள் பார்த்தவை ஒன்றையும் மறக்காமல் கேள்வி கேட்பதில் அதி புத்திசாலி என அந்த நிமிடம் நிரூபித்தாள்

அவள் கேள்விக் கேட்க தொடங்கிய மறு நிமிடம் அல்லி அங்கிருந்து அகன்று இருந்தார்

உணர்ச்சியின் பிடியில் மனிதன் ஓர் நிமிடம் தடம் மாறினால் வாழ்க்கை அவனை எந்த அளவிற்கு துரத்தும் என்பதை கஜபதி அந்த நொடி அனுபவித்தார். அதீத வேதனையில் அவர் கண்கள் அடர் பழுப்பாய் மாறி இருந்தன.  

ராணிமாகண்டிப்பா அவங்க எல்லாம் யாருன்னு உங்களுக்கு ஒரு நாள் நான் சொல்றேன்ஆனா டாடி பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்தவர் உனக்கு அண்ணா இல்ல மாமா..’’ என சொல்ல,

ஐ அங்கிள்ளா..’’ என நாட்சி அவர் மடியில் இருந்து எழுந்துக் கொள்ளவும், தன் வேதனை மறந்து சிரித்தவர், “ராணிமா அவரை எங்கையாவது பாத்தா அங்கிள்னு கூப்பிட்டு வச்சிடாதீங்க…. நீங்க அங்கிள்னு கூப்பிடுற அளவுக்கு எல்லாம் அவருக்கு வயசாகலைஇந்த வருஷம் தான் டென்த் எழுத போறார்.. வேணும்னா நம்ம செங்கனை பேர் சொல்லிக் கூப்பிடுற மாதிரி அவரை பரணின்னு வேணா கூப்பிட்டுக்கோங்க….’’

அவர் சிரித்தபடியே தானும் எழவும், “டாடி பரணினா என்ன மீனிங் டாடி’’ எனக் கேட்டாள். இது நாட்சியின் நெடு நாள் பழக்கம். யார் புதிதாய் அறிமுகம் ஆனாலும் அவர் பெயரின் பொருளை அறிந்து கொள்வாள்

ராணிமா அவர் முழுப் பெயர் கலிங்கத்துப்பரணிமா…. அதுக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு ஒன்னு போர்க்களம்அதாவது சண்டை போடுற இடம்இன்னொன்னு தமிழ்ப் போயம்..’’ அவர் அவளுக்கு விளக்கி முடிக்கவும்

டாடிநான் வேலுநாட்சியாஅதாவது ராணிமாஅவங்க சண்டை போடுற இடம்சூப்பர்அப்ப இனி அவரைப் பார்த்தா நீங்க செஞ்சிக் கொடுத்த அட்டை வாளை எடுத்துக்கிட்டு சண்டைப் போடப் போறேன்….’’ 

சொல்லி முடித்த வேலுநாட்சியா தன் அறையை நோக்கி உற்சாகமாய் குதித்தோட, கஜபதியின் முகத்தில் மீண்டும் வேதனைப்படர்ந்தது. என் மகளால் என்றேனும் ஒருநாளாவது மாமன் மகளாய் அவன் அருகில் உரிமையாய் நிற்க முடியுமா..? என்ற எண்ணத்தில்

பாவம் அவர் அப்போது அறியவில்லைவானத்தில் பறந்து சென்ற தேவதை ஒன்று, “நா ராணிமா அவங்க போர்க்களம்பாக்கும் போது எல்லாம் சண்டைப் போடப் போறேன்…’’ என்று சொன்ன நொடி, “ததாஸ்து…’’ என்று ஆசிர்வதித்து சென்றதை.    

கூடு கட்டும். 

 

Advertisement