Advertisement

கூடு – 13

ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் தவறாமல் பின்பற்றப்படுகிறது

நாட்சி ஆறாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பும் போது, அவளோடு பரணியின் புகைப்பட ஆல்பமும் பயணித்தது

வழக்கமாய் அவள் ஒவ்வொரு விடுமுறை முடிந்து திரும்பும் போதும், அவளுடைய அறைத் தோழிகள், தாங்கள் சென்று வந்த உறவினர் வீட்டின் அருமை பெருமைகளை அள்ளி விடுவார்கள்.

அதோடு, “இது எங்க சித்தி எனக்கு கொடுத்த பிரசன்ட்இது எங்க மாமா வாங்கிக் கொடுத்தது….’’ என்று பொருட்களையும் காட்டி மகிழ்வர்

நாட்சிக்கோ, தந்தை, தாய், செங்கன், அவனின் பாட்டி பூங்கோதை அதோடு அவர்கள் வளர்க்கும் அலெக்சாண்டர் இதைத் தவிர பிற உறவுகள் தெரியாது

அவள் எப்பொழுது ஊருக்கு சென்று திரும்பி வந்தாலும், அவள் பேச்சு இவர்களை சுற்றியே இருக்க, தோழிகள் இவளிடம் உனக்கு வேற ரிலேடிவ்ஸ் வீடே இல்லையா நாட்சி..?’’என இரக்கத்தோடு கேட்டுவிட்டு சென்றுவிடுவர்

ஒருமுறை நாட்சி அல்லியிடம் நமக்கு ஏன்மா ரீலேடிவ்ஸ் வீடே இல்ல…?’’ என ஏக்கமாய் கேட்க, அல்லி அவளுக்கு பதில் சொல்லும் வகை அறியாது, குலுங்கி குலுங்கி அழுதார்

அதன் பிறகு, நாட்சி அவள் தாய் தந்தையிடம் எதையும் கேட்பதில்லை. ஆனால் இம்முறை கஜபதி, “இவர் உங்க மாமா..’’ என்று புகைப்படதிலேனும் ஒரு உறவை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்

நாட்சி அந்த உறவை தன் தோழிகளிடம் காட்டிப் பெருமைபட்டுக் கொள்ள, அந்த புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் தன் பொருட்களோடு எடுத்து வைத்துக் கொண்டாள்

பள்ளிச் சென்று விடுதியை  அடைந்ததும் முதல் வேலையாக, நாட்சி அந்த புகைப்படத்தை தன் தோழிகளிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டதோடு, கஜபதி தனக்கு சொன்னக் கதைகளையும் சேர்த்து அளந்துவிட்டாள்

விழி விரித்து கதைக் கேட்ட தோழிகள், “வாவ்…. உங்க மாமா ரொம்ப கிரேட் நாட்சிஅவர் கூட இருந்தா போரே அடிக்காது போலையே…’’ என்று ஒரு தோழி கூற

மற்றவளோ, “ஹும் நாட்சி சோ லக்கிஎங்க மாமாக்கு எல்லாம் பெரிய தொப்பை இருக்கு…. விளையாட கூப்பிட்டா வரவே மாட்டாங்கபட் நாட்சி உங்க மாமாகூட எல்லாம் கேமும் விளையாடலாம் இல்ல..’’ என இன்னொரு தோழி பெருமூச்சு விட்டாள்.

மூன்றாம் தோழியோ, “மாமா ரொம்ப யங்கா இருந்தா எங்க வில்லேஜ் சைடு அவங்களுக்கே மேரேஜ் பண்ணிக் கொடுத்துடுவாங்கலாஸ்ட் டைம் ஹாப் இயர்லி எக்ஸாம் முன்னாடி எங்க பெரிய அக்கா மேரேஜ்க்கு லீவ் போட்டு ஊருக்கு போனேனே உங்களுக்கு நியாபகம் இருக்கா…. வரும் போது கூட உங்களுக்கு எல்லாம் நிறைய ஸ்வீட்ஸ் கொண்டு வந்தேனே….’’என சந்தடி சாக்கில் தான் தின்பண்டம் கொண்டு வந்ததையும் நினைவுறுத்த, மற்ற தோழிகளும், “எஸ்எஸ்நியாபகம் இருக்கு..’’ என்று அவளுக்கு ஒத்து ஊதினர்

அந்த அக்காவுக்கு அவங்க மாமாவை தான் மேரேஜ் பண்ணி வச்சாங்கநம்ம நாட்சி சோ லக்கி இல்ல…. அவளுக்கும் அவங்க மாமாவையே மேரேஜ் பண்ணி வைப்பாங்க….’’ என புதிய பேச்சு ஒன்றை துவக்கி வைத்தாள்

மற்ற தோழிகளும், “எஸ்..’’ “வாவ்அப்ப நாம எல்லாரும் அவ ஊருக்கு போலாம்..’’ “ஹே சூப்பர்….’’ “நாட்சிக்கு மேரேஜ்…’’ ஆள் ஆளுக்கு ஒவ்வொரு விதத்தில் அந்தக் கருத்தை வழி மொழிந்தனர்

அங்கிருந்த அனைவருமே பனிரெண்டு, பதிமூன்று வயதுக் குழந்தைகளே. ஆனாலும் அடுத்தவர்கள் பேசுவதை கவனிந்து அதன் அர்த்தம் முழுமையாக புரியாவிட்டாலும், அதைப் பிரதிபளிக்கக் கூடிய கண்ணாடிகளாய் இருந்தனர்

நாட்சிக்கு தோழிகளின் பேச்சு அப்படியே மனதில் பதிந்தது. “மேரேஜ்அப்படினா அப்பா அம்மா மாதிரி நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கலாமா?’’ ஏனோ அந்த எண்ணம் அவளுக்கு பிடித்துப் போக, தோழிகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல், அந்தப் புகைப்பட ஆல்பத்தை பொக்கிசமாய் தன் பையில் எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்தாள்

அதன் பிறகு அனைவரும் தங்கள் தங்கள் படிப்பில் கவனமாகிவிட, நாட்சியும் கவனமுடனே படித்தாள். அவள் படித்த பள்ளியில், நீச்சல், குதிரையேற்றம் அதோடு மேற்கத்திய நடனம், இசைக்கருவிகள் இசைத்தல் எனப் பல்வேறு பயிற்சிகளும் சேர்ந்து இருந்ததால் உற்சாகத்தோடே நாட்கள் அவர்களுக்கு கழியலாயிற்று

ஒரு வழியாய் அந்த வருடம் கோடைவிடுமுறை தொடங்க, அனைத்து தோழிகளும் ஒன்றே போல், “உங்க மாமாவை கேட்டதா சொல்லு நாட்சி…. இந்த முறை அவரோட நீயும் இருக்க மாதிரி போட்டோஸ் எடுத்துக் கொண்டுவா…. ஹாப்பிஹாலிடேஸ்…’’ என்ற வாழ்த்தை வித விதமாக சொல்லி அனுப்பினர்

நாட்சியா எப்பொழுதும் பரணியின் நினைவோடே இருந்தாள் என்று சொல்ல முடியாது. அதற்க்காக ஒரேடியாய் அவனை மறந்தாள் என்றும் சொல்ல முடியாது. அவ்வப்போது அவன் நியாபகம் அவளுக்கும் வரத் தான் செய்தது

கால் பந்தைக் காணும் போது, நீச்சல் குளத்தில் போட்டிகள் துவங்கும் போது, இப்படி ஏதோ ஒரு விஷயம், அவன் நினைப்பை கிளறி விடும். அந்த நேரத்தில் எல்லாம் அவன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஆள் அரவமற்ற இடத்தில் அமர்ந்துக் கொள்பவள்,  

தந்தை அவனைப் பற்றி கூறிய விசயத்தை எல்லாம் மனதிற்குள் கொண்டு வந்து தனக்கு தானே சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். எப்படியும் மாதத்திற்கு ஒரு முறை அப்படி அமர்வது நாட்சியின் வழமையாயிற்று.  

எந்த வருடமும் இல்லாத உற்சாகத்தோடு இந்த வருடம் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பினாள். வழக்கத்தை விட இந்த முறை கஜபதி அவளுடன் நிறைய நேரம் கழித்தார்

தாயும் மௌனத்துடன் எப்போதும் அவள் அருகிலேயே இருந்தார். இவர்களைத் தாண்டி பரணியை தேடி செல்வது அவளுக்கு சிரமமாக இருந்தது

தந்தையிடமே, “பரணி மாமாகிட்ட கூட்டிட்டு போங்கப்பா…’’ எனக் கேட்க அவளுக்கு ஆசை தான். ஆனாலும் அவள் தாயும், தந்தையும் சொந்தங்கள் என்ற பேச்சை எடுத்தாலே வேதனை அடைவது அந்த வயதிலேயே அவளுக்கு புரிந்து இருந்தது

அதனால் நாட்சி யாரிடமும் எதையும் கேட்காமல் பொழுதை நெட்டி தள்ளிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கைகொடுக்கும் விதமாக, வள்ளியூரில் ஊர்த் திருவிழா வந்தது

செங்கனை இம்முறையும் துணைக்கு அழைத்துக் கொண்டவள், “செங்கா ஊருக்குள்ள அப்பாவை பாத்தா அவர் கண்ல படாம வந்துடலாம். நான் பண்ணை வீட்டுக்கு புக்ஸ்படிக்க போறதா அம்மாட்ட சொல்லிட்டு வறேன். ரெண்டு பேரும் ஜாலியா திருவிழா பாக்க போலாம்…..’’ 

வாலிப வயதில் இருந்த செங்கனுக்கும், திருவிழாவில் உலாவும் தாவணிக் கன்னிகளை காணும் ஆவல் எழவே, நாட்சியிடம் மறுப்பு எதுவம் தெரிவிக்காமல் அவளுடைய திட்டத்திற்கு தலையை தலையை ஆட்டி வைத்தான்

அல்லியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் பண்ணை வீட்டின் ஒற்றையடி பாதை வழியே ஊருக்குள் செல்லும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவர்கள், அந்த சிற்றுந்தில் ஏறி ஊருக்குள் சென்றனர்

ஊர் திருவிழாவை முன்னிட்டு ஊரே கோலா கலமாய் இருந்தது. நாட்சி அத்தனையையும் விழி விரிய பார்த்துக் கொண்டே, அவளது பிறந்த நாளுக்கு, கஜபதி பரிசளித்து இருந்த உயர் வகை கேமராவில் அத்தனையையும் படம் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்

அவள் அருகில் நடந்துக் கொண்டிருந்த செங்கனோ, நாட்சியின் மீது ஒரு கண் வைத்த படி, பூச்சாற்றல் விழாவில் அம்மனுக்கு காணிக்கை செலுத்த அபிசேக நீர் சுமக்கும் பெண்களை ரசித்த படியும் நடந்துக் கொண்டிருந்தான்.

நாட்சி வழக்கமான தன் உடை அலங்காரத்தில் இருந்தாள். நீண்ட மஞ்சள் நிற ப்ரில் கவுன் அவளை  சிறகுகளற்ற குட்டி தேவதையாய் காட்ட, தோள் வரை இருபுறமும் வழிந்த போனி டைல்கள் அவள் நடக்கும் போது எல்லாம் காற்றோடு ஊஞ்சலாடி அவள் கன்னத்தோடு விளையாடிக் கொண்டிருந்தன.காலில் மஞ்சள் நிற கட்சூ

ஊர் திருவிழாவில் வருவோர் போவோர் எல்லாம், “யார் இந்தக் குழந்தையோஎன்று திரும்பி பார்த்த வண்ணமே சென்றனர். அதிலும் சிலர், அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டபடி, “யார் வீட்டுக்கு விருந்தாடி வந்து இருக்கீங்க குட்டி செல்லம்…’’ எனக் கேட்க, அவள் ஆபத்பாந்தவனாய் உடனே செங்கனைப் பார்ப்பாள்

அவனோ ஊரில் இருக்கும் யாரோ ஒருவரின் பெயரை சொல்லி, அவர்கள் மகள் வயிற்று பேத்தி, ஊர் திருவிழா பார்க்க வந்திருப்பதாகவும், பெரியவர்கள் டவுன் ஹோட்டலில் பயணக் களைப்பில் ஓய்வு எடுப்பதால், தான் குழந்தையை சுற்றிக் காண்பிக்க அழைத்து வந்து இருப்பதாகவும் புழுகித் தள்ளி அவர்களை சமாளிப்பான்

சிலர் உடனே ஒப்புக் கொண்டு கிளம்பினாலும், சிலர் நின்று, “நீ சொல்ற பேரை கேட்ட மாதிரியாவே இல்லையேலே….. ஹும்…. எதுக்கும் மணியகாரங்ககிட்ட கேட்டு பாப்போம்…. குழந்தை பத்திரம்லே…. நீ எங்குட்டாச்சும் பராக்கு பாத்துக்கிட்டு குழந்தைய விட்றாதலே….’’ என அவனை எச்சரிப்பவர்கள்

நாட்சியிடம் திரும்பி, “பாப்பா இவுக உங்களுக்கு தெரிஞ்சவுகளா…?’’ என கேட்டு அவள் தலை அசைத்த பின்பே அங்கிருந்து நகர்ந்தனர்.

பதிமூன்றாம் வயதின் தொடக்கத்தில் இருந்த நாட்சிக்கு உயரமும், உடல் வளர்ச்சியும் அதிகம் இருந்தாலும், அவள் உடை அலங்காரமும், அவள் குண்டு கன்னங்களும் அவளை சற்றே வளர்ந்த குழந்தை போலவே பிறருக்கு அடையாளம் காட்டியது

ஒரு வழியாய் கோவிலை சுற்றி முடித்தவர்கள், இறுதியாய் விளையாட்டு மைதானத்தை அடையவும், நாட்சி தேடி வந்த நபர் அவள் கண்களுக்கு சிக்கினான்

இரு அணிகளுக்கு இடையேயான கபடிப் போட்டி நடந்துக் கொண்டிருக்க, சுற்றி நிறைய இள வட்டங்கள் நின்று ஆர்பரித்துக் கொண்டிருந்தனர்

ஆரஞ்சு நிற டீசர்ட்டில், சிங்கத்தின் உருவம் பதித்த உடை அணிந்து இருந்த பரணி, “கபடி…. கபடி…’’ எனப் பாடிக் கொண்டு, பச்சை நிறத்தில் புலியை தங்கள் டீஷர்ட்டின் மத்தியில் பொரித்து இருந்த குழுவிற்குள் நுழைந்தான்.

இவன் எதிர் அணிக்குள் நுழைய தொடங்கிய நிமிடம் முதல், “ பரணிபரணி…. எங்க சிங்கம் பரணி….’’ என்ற குரல் நான்கு திக்கிலும் ஒலிக்க, அந்த சத்தம் எல்லாம் பரணியின் காதுகளை எட்டியதாவே தெரியவில்லை

அவன் கவனம் முழுக்க, களத்தில் இருக்க, இறுதியாய் எதிர் அணியில்  இருந்த நான்கு புலிகளை ஆட்டம் இழக்க செய்த சிங்கம் பலத்த கர கோஷத்தோடு தன் களம் மீண்டது

அப்பொழுதும் அவன் கவனம் ஆடுகளத்தில் தான் இருந்தது. தன் டீஷர்ட் மூலமே முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டவன், சக குழுவினருடன் கரம் கோர்த்த படியே அடுத்து பாடி வரும் புலியை அமுக்க வியூகம் வகுத்தான்

இப்படியே ஆட்டம் தொடர நாட்சி பரணியை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். “வாவ்…. மாமா சூப்பர் ஸ்போர்ட்ஸ் மேன்…’’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவன் விளையாடுவதை தன் கேமராவில் படம் பிடிக்க தொடங்கினாள்

இறுதியாய் பரணியின் சிங்கம் அணி வெற்றியை தட்டி செல்ல, அணிந்து இருந்த டீஷர்டை கழட்டியவன், அதை தலைக்கு மேலே சுற்றிய படி ஆடுகளத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான்

அங்கிருந்த தாவணிப் பெண்கள் அவன் கட்டுடலை கண்டு ரசித்திருக்க, நாட்சியாவோ, அல்லி காலையில் அவள் தலையில் சூடி இருந்த மஞ்சள் நிற ரோஜாவை தன் தலையில் இருந்து எடுத்தவள், மனதில் தோன்றிய உறுதியோடு அவனை நோக்கி நடக்க தொடங்கினாள்

செங்கன், நாட்சியா விளையாட்டை தான் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணத்தில், அருகில் ஆர்பரித்துக் கொண்டிருந்த தாவணிப் பெண்களின் மீது தன் கவனத்தை பதித்து இருந்தான்

நாட்சியா அவனை நெருங்கும் போதும் செங்கன் மற்ற தோழர்களோடு வெற்றி ஆர்பாட்டத்தில் குதித்துக் கொண்டு தான் இருந்தான். அவனை எப்படி அழைப்பது என ஒரு நிமிடம் திணறிய நாட்சியா மறுநொடி, இடையில் கட்டியிருந்த பனியனை பின்பக்கமாய் பிடித்து இழுத்தாள்

யாரோ தன் உடையை பிடித்து இழுக்கவும் பரணி, “என்ன’’ என்பதைப் போன்ற பாவத்துடன் திரும்பியவன், பூச்செண்டோ எனும் படி ஒருக் குழந்தை கையில் பூவுடன் இவனை ஆர்வமாக பார்த்தபடி நிற்கவும், உடனே அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான். அவனுக்கு நாட்சியை கொஞ்சம் கூட அடையாளம் தெரியவில்லை.  

என்ன செல்லம்…’’ அவள் முகத்தருகே அமர்ந்து அவன் கேட்கவும், தன் கையில் இருந்த ரோஜாவை அவன் புறம் நீட்டியவள், “உங்க கேம் ரொம்ப அமேசிங்கா இருந்தது….. பெஸ்ட் ஆப் லக்…’’ என அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள்

முகத்தில் விரிந்த புன்னகையோடே அவளின் குண்டுக் கன்னத்தை செல்லமாக கிள்ளி முத்தமிட்டவன், திகைத்து போய் நின்றுக் கொண்டிருதவளின் கைகளில் இருந்த மலரை வாங்கிக் கொண்டான்.

எழுந்து நின்றவன் மீண்டும் ஒரு முறை செல்லமாக அவள் கன்னத்தை தட்டிக் கொடுக்கும் போதே, மைக்கில் அவன் பெயர் ஒலிக்கவும், “தாங்யூ மை டியர் ஏஞ்சல்….’’ என மறு கன்னத்திலும் ஒரு கிள்ளு  முத்தத்தை பரிசளித்து விட்டு அங்கிருந்து துள்ளல் நடையோடு தன் குழுவினரை நோக்கி ஓடினான்

மைக்கில் பரணியின் குழு வென்றதாக அறிவிக்கவுமே, தீமிதி விழாவிற்கான ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்த கஜபதி, அதை அருகில் இருந்த மற்றொருவரிடம் விட்டு விட்டு வேக வேகமாய் விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடி வந்து இருந்தார்

வந்தவர் கண்ட காட்சியில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தன்னை தந்தை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாத நாட்சியாவோ, தன் கன்னத்தை தடவிக் கொண்டே முகத்தில் மலர்ந்த முறுவலோடு செங்கனைத் தேடி நடக்க தொடங்கினாள்

கூடு நெய்யும். 

 

Advertisement