Advertisement

மணி இப்ப தான் காலையில ஆறரை ஆகுது. அதுக்குள்ளையே அந்த வீடியோ வைரலாகிப் போச்சு. எப்படியும் என் கணக்குப் படி இன்னும் ஒரு மணி நேரத்துல தமிழ் நாட்டுல இருக்க மொத்த பத்திரிக்கை, நியூஸ் சேனல் எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும். அவங்க முன்னாடியும் இப்படி தான் நிக்க போறீங்களா….? 

அம்மா அந்த ஆளுக்காக எல்லாம் இனி நீ அழுதஅப்புறம் நான் ஜென்மத்துக்கும் உன் கையால சாப்பிட்ட மாட்டேன் சொல்லிட்டேன்….

அப்பாமாமா ப்ளைட் திருநெல்வேலிக்கு காலையில ஏழு பத்துக்கு வருதுஅவர் அரசியல் அடி பொடிகளையும் பர்சனல் செக்யூரிட்டி கார்ட்சையும் கூட்டிட்டு போயி அவரை பத்திரமா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க… 

எந்த பிரஸ் கேள்வி கேட்டு வழி மறிச்சி நின்னாலும் மாமாவை இப்போதைக்கு வாயை திறக்க வேண்டாம்னு சொல்லுங்கஉங்க கூட துணைக்கு விஜயன் வருவான்இப்ப நீங்க உடனே கிளம்புங்க…’’

அவரை வெளியேற்றி முடித்தவன், தரணியை நோக்கித் திரும்பி, “லேய்.. நீ மொதோ காரியமா தி பெஸ்ட் கிரிமினல் லாயர் சேசாத்திரி தெரியும் இல்ல.. அவர்கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கு.,.. இன்னைக்கு நைட்குள்ள அவர் திருநெல்வேலியில இருக்கனும்அப்புறம் சைபர் கிரைம் ஆளுங்களை பிடிச்சி வீடியோ அப்லோட் பண்ணவங்களை கண்டு பிடிக்கணும்அதோட அந்த வீடியோ ஒரிஜினல் தானானும் பாக்கணும்நீ உடனே சென்னைக் கிளம்பு…’’ 

அவன் அப்படி சொன்னதும், தரணி, “சரிலேநான் உடனே போய் ப்ளைட் டிக்கெட் போடுதேன்..’’ என்றபடி தன் அலுவல் அறையை நோக்கி ஓடினான்

தன் அன்னையிடம் திரும்பியவன், அவர் அழுகையை அடக்க முடியாமல் அடக்குவதைப் பார்த்து, “அம்மாஎதுனாலும் நான் இருக்கேன்நான் பாத்துகிடுதேன்நீங்க உங்க நெல்லையப்பருக்கு காணிக்கை முடிஞ்சி வைங்க போங்க…’’ என அவரைப் பூஜை அறைப் பக்கம் நகர்த்தியவன் இறுதியாக தன் அத்தை பூரணியை நோக்கித் திரும்பினான்

அவர் முகத்தைப் பார்த்தாலே அவனுக்கு புரிந்தது. அவர் எவ்வளவு வேதனையில் இருக்கிறார் என்று. அவருக்கு வலப்பக்கம் சிவாத்மிகாவும், இடப்புறம் அவன் அண்ணி மதுஸ்ரீயும் நின்றுக் கொண்டு மென் குரலில் அவருக்கு ஆறுதல் உரைத்துக் கொண்டிருந்தனர்

நெடு நேரம் அழுததின் பயனாய் விழிகள் சிவந்திருக்க, முகம் வீங்கி இருந்தது. பத்தாம் வகுப்பில் இருக்கும் சைந்தவியும், ஒன்பதாம் வகுப்பில் இருக்கும் முகிலனும் கண் முழுக்க, “இனி என்ன ஆகுமோ..?’’ என்ற பயத்தை பிரதிபளித்தபடி நின்றுக் கொண்டிருந்தனர்

அவன் கண்களாலேயே அவர்களை அருகில் அழைக்கவும், இருவரும், “மாமா..’’ என்ற கூவலோடு வந்து அவனைத் தழுவிக் கொண்டனர்

விட்ட அழுகையை அவர்கள் தொடரவும், “ப்ச்அழக் கூடாதுநம்ம அப்பா அப்படி செய்யிற ஆளா என்னயார் எது பேசினாலும் தைரியமா அவங்க முகத்தைப் பார்த்து எங்க அப்பா யார்னு எங்களுக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்கன்னு சொல்லிட்டு கம்பீரமா கடந்து போகணும்..

டேய் முகிலா.. மீசை முளைச்ச முகத்தோட அழாதடா நம்ம வம்சத்துகே கேவலம்சைந்தவி நீ மூணு கோட்டிங் போட்ட பவுடர் மாமா சட்டையில சுண்ணாம்பா அப்பிடுச்சி அழுகையை நிறுத்துடி…’’

அவன் அவர்கள் கவனத்தை திசை திருப்பவும், கண்களைத் துடைத்துக் கொண்டே, “நான் ஒன்னும் அழுகல..’’ என இருவரும் அவன் அணைப்பில் இருந்து ரோசத்தோடு வெளியே வந்தனர்.

சைந்தவி.. மாமா ரூம் கம்ப்யூட்டர்ல நியூ வெர்சன் ஆங்ரி பேர்ட் கேம் டவுன்லோட் பண்ணி வச்சி இருக்கேன் போய் விளையாடுங்க…’’ அவன் அப்படி  சொன்னதும்

வாடா போகமலாம்..’’ என்றபடி இருவரும் மாடியறை நோக்கி ஓடிப் போயினர். பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள். இதுவே நடுத்தர வீட்டு கஷ்டம் புரிந்து வளர்ந்த குழந்தைகள் என்றால் அவர்கள் வயதிற்கு அடுத்து என்ன செய்வது என அவர்களே கூட சிந்திப்பார்கள்

இருவருமே பிறந்ததில் இருந்தே மிகப் பெரும் அரசியல்வாதியின் செல்லக்  குழந்தைகளாகவே வளர்க்கப்பட்டனர். வெய்யில் கூட அதிகம் அவர்களை தீண்டியதில்லை. நம் பள்ளி பாடத் திட்டங்கள் எங்கே நிதர்சனத்தை போதிக்கின்றன

இருவரும் சற்றே வளர்ந்த குழந்தைகள் அவ்வளவு தான். அவர்களை எண்ணி வேறு பரணிக்கு ஒரு பெரு மூச்சுக் கிளம்பியது. அடுத்து இறுதியாய் தன் அத்தையை நோக்கி நகர்ந்தான்

அத்த உங்க மனசு எனக்கு புரியுது. வீடியோ மட்டும் உண்மைன்னு தெரியட்டும் உங்க கால் செருப்பை சாணியில முக்கி நான் தரேன்விடிய விடிய நீங்க அவரை அடிங்கஇல்ல நீங்க வேற என்ன சொல்றீங்களோ அதை செய்யலாம். ஆனா இப்போ நீங்க உலகத்துக்கு முன்னாடி அவரை விட்டுக் கொடுத்துடாதீங்க அத்தையார் எது பேசினாலும் நிமிர்ந்து நில்லுங்கஇன்னும் கொஞ்ச நேரத்துல மீடியா வீட்டு வாசலுக்கு வந்துடும்யார் என்ன கேள்வி கேட்டாலும்எம் புருஷன் நல்லவர்இதெல்லாம் எதிர்க் கட்சி சதிசதியை முறியடித்து உண்மைய உலகத்துக்கு உணர்த்துவோம்…’’ இந்த மூணு வார்த்தைகளைத் தான் நீங்க பேசணும்

அவருக்கு கிட்டத் தட்ட ஆணையிட்டவன், தன் அத்தை சிவாத்மிகாவை நோக்கி திரும்பினான்.“அத்தைதேவிஸ்ரீ இன்னைக்கு காலேஜ் போக வேண்டாம்யாரும் இன்னைக்கு சாப்பிடுற நிலமையில இல்லஇருந்தாலும் அண்ணி ரெண்டு உசுருக்காரங்க, அவங்களுக்கும் சைந்தவி முகிலுக்கும் மட்டும் லேசா ஏதாவது சமைச்சிடுங்க…’’ என்றவன்,

தாத்தா…. எங்க அத்தை..?’’ என்றான். “பரணிஐயாவுக்கு இன்னும் யாரும் எதுவும் சொல்லல…. மேல் மாடிக்கு அவரு தியானம் செய்ய போன புறவு தான் பூரணி வந்தாப்புல.’’ தயங்கியபடியே நிலவரத்தை உரைத்தார் சிவாத்மிகா.

சரி அத்தை இப்போதைக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். அண்ணி தாத்தாவ பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க..’’ என்று தன் அண்ணியிடமும் ஒரு பொறுப்பை ஒப்படைத்து முடித்தவன், தங்கள் அலுவல் அறைக்குள் நுழைந்தான்

கணினியின் முன் அமர்ந்தவன், அவர் ஆட்சிக் காலத்தில் செயல் வடிவம் கொடுக்கப்பட்ட திட்டத்தை எல்லாம் தகவலாக திரட்டிக் கொண்டிருந்தான். நடுவில் விஜயனையும் அழைத்து அடுத்து என்ன செய்வது என ஆலோசனைக் கேட்டுக் கொண்டான்

சரியாய் எட்டு இருபது மணிக்கு அவன் மாமா அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் பின்னோடே ஏகப்பட்ட பத்திரிக்கையாளர்கள், செய்தி சேகரிப்பாளர்கள் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டனர்

பரணி அவர்களை ஒரு எல்லைக்குள் தடுத்து நிறுத்த ஏற்கனவே ஆட்களை நியமித்து இருந்தான். எனவே அவர்களால் முன் கதவை நெருங்க முடியவில்லை. மற்றபடி அடுத்த வீட்டு மாடிகளில் நின்று லென்ஸ் கண்களால் அவர்கள் வீட்டைக் கண்காணிக்க தொடங்கினர்

மதுரவனோடு உள்ளே நுழைந்த பரஞ்சோதியை பரணி ஒரே கேள்வி தான் கேட்டான். “அது நீ தானா…?’’ என்று. அவமானத்தில் தலைக் குனிந்துக் கொண்ட பரஞ்ஜோதி, “நான் தான்.. ஆனாபரணி…’’ அடுத்து அவர் பேச அவன் இடம் கொடுக்கவில்லை

கட கடவென்று அவன் கையில் ஒரு பேப்பரை திணித்தவன், “இன்னும் பத்து நிமிசத்துல நீ பேச வேண்டிய வசனம்பாத்துக்கோஅப்புறம் உன் வாயால இனி பரணின்னு கூப்பிட்ட…’’ அவன் முறைத்து சென்றதும் அவர் கண்களில் கண்ணீர் பெருகி கன்னத்தை தொட்டது

லேய் ஜோதிபொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான்நீ அடுத்து ஆக வேண்டியதைப் பாரு….’’ எனவும் கையில் இருந்த வசனத்தில் கண்களை ஓட்டினார்

அவர் கை தேர்ந்த அரசியல்வாதி தான். எந்த பிழை புரிந்தாலும், “நான் உத்தமன்..’’ என உரத்துக் கத்தும் வலிமையுடையவர் தான். ஆனாலும் பெண்கள் விசயத்தில் இப்படி ஒரு அவமானம் அவர் சந்தித்திராதது

அவர் அப்படிப்பட்ட ஆளும் கிடையாது. அவர் சபலம் எல்லாம் வெளிநாட்டு உயர் மதுபான வகைகளோடு நின்று விடக் கூடியது. இது எப்படி சாத்தியம் என்று அவருக்கே புரியவில்லை

இனி எண்ணி பலன் இல்லை என்று உணர்ந்தவராய் கையில் இருந்த தாளில் எழுதி இருந்ததை படித்து மனதில் ஏற்றினார்

அடுத்த பதினைந்து நிமிடத்தில் சில முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நிறுவங்கள் வீட்டிற்குள் அழைக்கப்பட்டனர். வரவேற்ப்பறை சோபாவில் ஜம் என்று தன் குடும்பத்தோடு அவர்களுக்கு பேட்டியளிக்க, பரஞ்சோதி தெளிவான முகத்தோடு கம்பீரமாய் அமர்ந்திருந்தார்

பத்திரிகையாளர்களே அவர் தோரணையில் அசந்து விட்டனர். அடுத்து அங்கே கேள்விக் கணைகள் பறந்து வர அனைத்தையும் பரஞ்சோதி திடமாய் எதிர்க் கொண்டு கோல்கள்ஆக்கிக் கொண்டிருந்தார்

பேட்டி முடிந்த மறு நிமிடம் உலகம் முழுவதும் அப்பேட்டி ஒளிபரப்பப் பட, கட்சித் தலமை உடனே, “பரஞ்சோதி குற்றமற்றவர் என நிரூபிக்கும் பட்சத்தில் அவர் பதவி அவர் வசம் ஒப்புவிக்கப்படும்’’ என அறிவித்தது

சமூக வலைதளங்களில் பரஞ்சோதிப் பெயரில் ஆங்காங்கே பட்டி மன்றங்கள் நடந்துக் கொண்டிருக்க, வீட்டில் தண்டச் சோறாய் திரியும் குடி மகனும் பொறுப்பாய் கருத்துக் சொல்லிக் கொண்டிருந்தான்

வீடு சற்றே இயல்பிற்கு மீண்டு இருந்தது. ராசுமதுரவன், செல்வாம்பிகையிடம் என்ன கூறினாரோ, “அதானே பாத்தேன்…’’ என்றவர் தன் உலகமான சமயலறையை தேடிச் சென்றார்.

காலைல இருந்து எல்லாரும் பட்டினி இருக்காகலே..?’’ என்ற வருத்தக் குரல் அவர் வாயில் இருந்து வெளிப்படும் பொழுதே அவர் இயல்பாகி விட்டதை மதுரவனால் உணர்த்துக் கொள்ள முடிந்தது

இதற்கிடையில் பரணியை தொடர்புக் கொண்ட தரணி, “லேய் வக்கீல் அப்பான்மென்ட் வாங்கிட்டேன்லேஅப்புறம் அந்த வீடியோ யாரோ ராணிமா செங்கன் அப்படிங்கிற ஐ.டில இருந்து அப்லோட் ஆகி இருக்குஅதையும் விசாரிச்சிட்டே இருக்கோம்லேஅப்புறம்பரணி அந்த வீடியோ உண்மை தாம்லே..’’ 

இறுதி வாக்கியத்தை உரைக்கும் போது அண்ணனின் குரலில் இருந்த வலியை உணர்ந்துக் கொண்ட பரணி, “லேய் விடுலேஅந்த ஆளுக்கு எல்லாம் வருத்தப்பட்டுகிட்டுநீ அடுத்து ஆக வேண்டியதைப் பாருலே.. அம்மாக்காக பண்றோம் அவ்ளோ தான்சரி சரி நீ நைட்டு கிளம்பி வீட்டுக்கு வந்து சேரு..’’ என்றவன் அலைபேசியை துண்டித்து விட்டு மீண்டும் கணினி முன் அமர்ந்து தன் விட்ட பணியைத் தொடர்ந்தான்

சரியாய் பனிரெண்டு மணிக்கு வீட்டுக்கு நீதி மன்றத்தில் இருந்து சம்மன்  வந்திருப்பதாக அஞ்சல்காரர் வந்து நின்றார். கூடத்தில் அமர்ந்து வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த சிவாத்மிகா, “யாருக்கு..?’’ என்றபடியே பதறி எழுந்தார்

அப்பொழுது தான் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த பரணி நேராய் அவரை நோக்கி நடந்தான். “என்ன சம்மன்..’’ என்றபடி

ஐயா.. சிவாத்மிகா அப்படிங்கிற பேருக்கு சம்மன்…’’ அவர் சொல்லவும், பரணி கண்களால் அத்தையை அருகே அழைத்தான். அவர் அருகில் வந்ததும், “கையெழுத்து போட்டு சம்மனை வாங்குங்க அத்தைஎன்றான்.

சிவாத்மிகா, முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளோடு கையெழுத்திட்டு அந்த சம்மனை வாங்கிய மறு நொடி, பரணி அவர் கையில் இருந்து அதை  ஏறக் குறைய பிடுங்கி, அதன் உறையை வேக வேகமாய் பிரித்து படிக்க தொடங்கினான்

படித்தவன் முகம் கருக்க, கோபத்தில் உடல் விறைக்க, எதையாவது போட்டு உடைக்க மனம் துடிக்க, அந்த நேரம், “மாமா யூ வான்ட் டூ ஹேட் மீ…. ஹே மாமா யூ வான்ட் டூ ஹேட் மீ…. ஹே மாமா யூ வான்ட் டூ ஹேட் மீ…’’ 

என்ற பாடல் பின்னணியில் உச்ச தாளத்தில் ஒலிக்க, ஒயிலாக நடை பழகி அவன் வீட்டினுள் வலது காலெடுத்து வைத்து உள்ளே வைத்தாள் வேலு நாட்சியா கஜபதி பாண்டியன்

கூடு நெய்யும். 

 

Advertisement