Advertisement

கூடு – 6

பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறுபடியும் கி.பி 1896 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டன

பரணி கடந்த ஆறு நாட்களாய் வரையறுக்க முடியாத மன அழுத்தத்தில் இருந்தான். ஆறு நாட்களுக்கு முன் தன்னிடம் சவால்விட்ட நாட்சியின் கண்களில் சற்று நேரம் திகைத்து நின்றிருந்தாலும்

அவன் பிறந்த மண்ணின் வேகம் அவனை உசுப்பிவிட, அவளை மேலும் நெருங்கி நின்றவன், இரு கைகளாலும் மீசையை முறுக்கியபடி, “உன்னமுழுசா ஜெயிக்கல நான் கஜபதி பாண்டியன் மருமவன் கலிங்கத்துப்பரணி இல்லடிபாப்போம் இனி நீயா..? நானான்னு..?’’ என்றவன் எப்படி உள் நுழைந்தானோ, அதே வழியில் வெளியேறி இருந்தான்.

கடந்த ஆறு நாட்களாய் தூக்கமின்றி பிரச்சனை என அவனுக்கு தோன்றிய குடோன்களை எல்லாம் லீசுக்கு விட்டிருந்ததைப் போல ஆவணங்கள் தயார் செய்து வைத்தான்

ஊருக்கு சென்றிருந்த தரணியை வரவழைத்தவன் தங்களுடைய கணக்கு வழக்கை எல்லாம் முழுதாய் சரி பார்த்தான். தொழில் வரிகள் எல்லாம் சரியாய்க் கட்டி இருந்தார்கள். எந்த இடத்திலும் சட்டத்திற்கு புறம்பான சிறு தடம் மாறுதலும் இல்லை. அந்த வகையில் பரணி நிம்மதியாய் உணர்ந்தான்

அவன் தந்தை ராசு மதுரவனுக்கு மகன் தொழில் பார்ப்பதில் மகிழ்ச்சி தான் இருந்தாலும் அவனுள் இருந்த பதட்டத்திற்கு காரணம் அவருக்கு விளங்கவில்லை

காலையில் ஓட்டப் பயிற்சியையும் விடாது தொடர்ந்துக் கொண்டிருந்தான். முன்பு பத்து நொடிகள் தாமாதப்பட்ட இலக்கு தற்சமயம் பதினைந்து நொடிகள் தாமதத்தை எட்டி இருந்தது. பயிற்சியாளர், “என்னலே..’’ என இவனிடம் அடிக்கடி கேட்கும் படி அவன் கவனம் சிதறிக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் தங்கள் அலுவலகத்தில் தனியாய் இருந்த தந்தையை சென்று சந்தித்தவன், “அப்பாஅவரோட அந்த பொண்ணுஅந்த நாட்சியா அவளை ஊரை விட்டு அனுப்ப என்ன பண்ணீங்க?’’ 

மகனிடம் இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்கவே இல்லை என்பதை அவர் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது. அவன் கண்களை நேராய் சந்திக்காமல் சடாரென தழைத்துக் கொண்டவர், “எனக்கு ஒன்னும் அதிகமா தெரியாதுலேஎல்லாம் உங்க மாமன் பரஞ்சோதிப் பய பாத்து செஞ்சது தான்…’’ 

அவர் குரலில் இருந்த குற்ற உணர்ச்சியே சொன்னது தன்னிடம் எதையோ மறைக்கிறார் என. மகன் அவரை நம்பாமல் பார்க்கவும், நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவர்

ஏலே பரணிசும்மா கிடந்தது சலம்பாத என்ன.. உம் மாமன் வந்ததும் அந்த சிறுக்கிய ஏதோ வட நாட்டுப் பக்கம் பத்தி விடுறதா சொல்லி இருக்கான்அதுக்குள்ள அவளை நேர்ல பாத்து ஏதோ கத்திட்டு வரேன்னு போன பய திரும்பி வந்ததுல இருந்த மந்திரிச்சி விட்டவன் மாதிரி திரியுறநீ ஒன்னையும் நினச்சி மனச குழப்பிக்காம விளையாடுறதுல கவனத்தை செலுத்துவேமத்ததை உன் அப்பங்காரன் பாத்துக்கிடுதேன்…’’ 

மகனைத் தேற்றுகிறேன் பேர்வழி என பேச்சை திசை திருப்பி அவனை அங்கிருந்து அனுப்ப முயல்வதை அவனாலும் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. இருந்தாலும் அப்போதைக்கு தந்தையை எதுவும் கேட்க முடியாமல் அவனும் திரும்பிவிட்டான்

நாளைக் காலை சென்னையில் இருந்து உள்  நாட்டு விமானம் மூலம் அவன் தாய் மாமா பரஞ்ஜோதி திருநெல்வேலி வருகிறார். வருவது வரட்டும் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த பழுப்பு நிறக் கண்கள் விடாமல் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தன

அன்றைக்கு வெள்ளிக் கிழமை. பரணி வழக்கம் போல தன் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தான். அவன் பையின் அருகே நின்றுக் கொண்டிருந்த, பயிற்சியாளர், “லே பரணிபோனு விடாம அடிக்கிதுஎன்னனு பாரு…’’ 

அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தனது பையை நெருங்கி இருந்தவன், விடாது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை இயக்கிக்  காதில்  வைத்தான்

அந்தப்பக்கம் அவன் நண்பன் விஜயன் பேசினான். “என்னலே பரணி இப்படியாகிப் போச்சு…’’ அவன் துக்கம் விசாரிக்கவும், பரணிக்கும் ஒன்றும் புரியவில்லை

என்னடா..’’ எனக் கேட்க, “லே பரணிஉனக்கு விசயமே தெரியாதாமொதல்ல போன்ல நெட்டை ஆன் பண்ணிப் பாரு.. நான் அப்புறம் கூப்பிடுதேன்…’’ 

அவசரமாக நண்பனின் அழைப்பை துண்டித்தவன், தன் அலைபேசியில் இணையத்தை இயக்க, அவன் வாட்ஸ் அப் மற்றும் முக நூல் முழுக்க ஒரே விதமான வீடியோக்கள் வந்து குவிந்தன

பரணி பட படக்கும் நெஞ்சத்தோடு அந்த தொடு திரையை இயக்கினான். அதன் பச்சை வட்டம் பூர்த்தியடைந்ததும், திரையில் அவன் மாமன் பரஞ்சோதி வெறும் பட்டா பட்டி ட்ராயரோடு முதலில் தெளிவாய்த் தோன்றினார்

அவர் நின்றுக் கொண்டிருந்த இடம் சேரும் சகதியுமாய் இருந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் அரை குறை ஆடையணிந்த வெளிநாட்டு யுவதிகள் நால்வர் வந்து அவரோடு இணைந்தனர்

அதில் ஒரு பெண்ணின் கையில் பந்து ஒன்று இருக்க, அதை அவள் வீசியெறிய, மற்ற நால்வரும் பந்தை சேற்று மணலில் கால்கள் புதைய ஓடியபடிப் பிடிக்க முயன்றனர்

அதில் நான்கு பெண்களும் அவரோடு விளையாடிய விளையாட்டுகள் சென்சாரை எல்லாம் மீறியதாக இருந்தது. விளையாட்டு தொடங்கிய சில நொடிகளிலேயே அனைவர் உடல் முழுதும் சகதி ஆடை போல மாறியிருந்தது

அடுத்து அந்தப் பெண்கள் தங்கள் மிச்ச ஆடைகளையும் துறக்க, இவர் இறுதியாய் தன் மிச்ச உடையை துறக்க இடுப்பில் கைவைத்த நொடி விடியோ முடிந்து இருந்தது

பரணி அலைபேசியை கீழே போட்டு விட்டு நெற்றியில் அறைந்துக் கொண்டு அப்படியே அமர்ந்தான். அவன் பயிற்சியாளர் அருகில் வந்து, “ஏலேபரணி..’’ என அவனைத் தொட

தன் உணர்வு வரப் பெற்றவன், வேக வேகமாய் தன் முகநூலைத் திறந்து பார்த்தான். இந்தியாவின் வேளாண் துறையை முன்னேற்ற வெளிநாட்டுப் பயணம் சென்ற அமைச்சர் செய்துவிட்டு வந்த காரியம் மொத்த இந்தியாவையும் தலைக் குனியவைக்க, ஒட்டு மொத்த சமூக வலைதளங்களும் அவரைக் தலை கீழாய் கிழித்து தோரணம் கட்டிக் கொண்டிருந்தன

பரணி நெஞ்சு பொறுக்க முடியாமல், மனதிற்குள் அவரை அவன் இதுவரை பயன்படுத்தி அறியாத கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே, தன் அலைபேசியில் செய்தி தொலைக்காட்சி ஒன்றை இயக்கினான்

அதில் முக்கிய செய்தியாக, ஆங்காங்கே துண்டிக்கப்பட்ட அந்த வீடியோ காட்சிகளும், அவர் கட்சித் தலைமை அவரை கட்சியின் அடிப்படை உரிமையில் இருந்து கூட நீக்கி இருந்ததையும் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்

பரணி உடனே யூ டூயூப்பிற்குள் நுழைந்து அந்த காணொளிக் காட்சி எப்பொழுது பார்வைக்கு வைக்கபட்டது என ஆராய்ந்தான். அது விடியற்காலை நான்கு என நேரத்தைக் காட்டியது

அதற்குள் கிட்டத்தட்ட, முப்பது லட்சம் பார்வையாளர்கள் அந்த காணொளியைப் பார்த்து இருந்தனர். அவன் அலைபேசியை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது

அவன் அழைப்பை இயக்கி காதில் வைத்தானோ இல்லையோ, “ஏய்யா பரணி…’’ என்ற தாயின் அழுகுரல் தான் அவன் காதுகளை முதலில் நிறைத்தது

பரணியின் கை முஷ்டி இறுகியது. அடுத்த நொடி, அவன் தந்தையின் கர கரத்த குரல், “ஏலே பரணிசீக்கிரம் வீட்டுக்கு வாயா…’’ என அழைக்க, “இதோப்பா..’’ என்றவன், “ சார்.. இன்னும் ஒரு வாரம் நான் ப்ராக்டிஸ் வர மாட்டேன்நாம அப்புறம் பாக்கலாம்..’’ சொல்லிவிட்டு அவன் விரைவாய் நடக்க

அவனின் பின்னால் நடந்துக் கொண்டே, “ஏலேஎன்ன ஆச்சுபரணி…’’ என்று விசாரித்துக் கொண்டே உடன் நடந்தார். நின்று அவர் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலையை பரணிக் கடந்து இருந்தான்

வேகமாய் தன் வண்டியை உதைத்துக் கிளம்பியவன், நேரே தன் வீட்டிற்கு சென்று தான் நின்றான். வீட்டின் வாயிலில் உரத்துக் கேட்ட அழுகைக் குரலே அவன் மாமன் மனைவி பரிபூரணத்தின் வருகையை அறிவித்தது

இவன் கூடத்திற்குள் நுழைய, இவனைக் கண்டதும் அவன் தாய் செல்வாம்பிகை ஓடி வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டார்

ஏய்யாஎங்கண்ணன் அப்படி ஒரு ஈன செயலை செஞ்சி இருக்காது பரணி…. அந்த படத்துல காட்றது எங்கண்ணன் இல்லையாஎஞ்சாமிஉங்க அத்த வந்ததுல இருந்து சாகப் போறேன் சாகப் போறேன்னு கிணத்தடிக்கு ஓடுதாயா…’’

பரணி எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வான். ஆனால் அவன் தாய் வருத்தப்ட்டாலே அவனால் தாங்க முடியாது. அதில் அவர் கண்ணீர் சிந்தினால்…. 

பரணி அடுத்துக் கொடுத்த, “போதும் நிறுத்துங்க..’’ என்ற ஒரு குரலில் மொத்த இடமும், மயான அமைதியை தத்தெடுத்து. அவன் தந்தையும், அண்ணனும் அவனை கசங்கிய முகத்தோடு பார்த்தனர். 

வீட்டின் பெண்களும், பரஞ்சோதியின் மக்களான சைந்தவியும், முகிலனும் அவனைப் பயத்தோடு பார்த்தனர். அவர்களை கோபத்தோடுப் பார்த்தவன்,

யாரு செத்துப் போயிட்டான்னு கிடந்து இப்படி ஒப்பாரி வைக்கீகஇப்ப நான் சொல்றதை எல்லாரும் கவனமா கேட்டுக்கோங்கமாமா தப்பு செஞ்சார் செய்யலஅது அடுத்த பிரச்சனை. மொதோ பிரச்னையை சந்திக்க நாம தயார் ஆகணும்.” என்றவன் அனைவரையும் கூர்ந்து பார்த்து விட்டு பேச தொடங்கினான். 

Advertisement