Advertisement

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரணி அறியான். ஆனால் அவர் சொல்லியபடியே சிவாத்மிகா கஜபதியின் வீடு திரும்பி இருந்தார். பரணி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை. 

நாட்கள் வேகமாக நகர்ந்தன. “மாமா’’ என்று மரியாதையாய் அழைத்து வந்த மருமகன், “யோவ் மாமா…’’ என அவரை அழைக்கும் அளவிற்கு கஜபதியிடம் நெருங்கிப் போனான். 

அவன் வளரிளம் பருவத்தில் இருக்கும் பொழுது தோன்றிய அத்தனை சந்தேகங்களையும் தீர்த்து வைத்தது கஜபதி தான். 

அவன் பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது முதன் முதலில் கால்பந்தாட்ட போட்டியில் மாநில அளவிலான வெற்றியை ருசித்தான். 

அந்த சமயம் கஜபதி அவனுக்கு அந்த நேரத்தில் பரவலாய் இருந்த வேக வண்டியான பல்சரை வாங்கிப் பரிசுக் கொடுத்தார். அவனுக்கு வேக வண்டிகளின் மீதான மோகம் தோன்றுவதற்கும் அவரே காரணம். 

அந்த வண்டியை இன்று வரை அவன் பாதுகாத்து வருகிறான். கஜபாண்டியை யாரும் எளிதாக குறை சொல்லி விட முடியாது. நல்ல மனிதர் என்பதை விட மிக மிக நல்ல மனிதர். 

அவர் சறுக்கிய விசயம் என்றால் அவன் அறிந்து அந்தப் பெண் விஷயம் மட்டுமே. ஏனோ வளர்ந்து விவரம் வந்த பிறகும் அந்த விஷயம் பற்றி அவனால் அவரிடம் கேட்கவே முடியவில்லை. 

அவன் ஒருகாலும் நினைத்ததில்லை இனி அவரிடம் அது பற்றி கேட்க முடியாமலேயே போகும் என்று. 

அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்த நேரம், கஜபதி வீட்டிற்கு போகும் போது எல்லாம், “யோவ் மாமா… என்ன பொண்ணுங்களையா பெத்து வச்சி இருக்க… ஒன்னு அண்டா மாதிரி இருக்கு  இன்னொன்னு குண்டா மாதிரி இருக்கு… ஒண்ணாவது நான் சைட் அடிக்கிற ரேஞ்சில இருக்கா..’’ 

அவன் சலிப்பாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு காபியைக் கொண்டுவரும் சிவாத்மிகாவை பார்த்துக் கண்ணடிப்பவன், 

“ஆயிரம் சொல்லு மாமா… என் அத்தை ஸ்ட்ரக்சர் உம் மவளுங்களுக்கு இல்ல….’’ எனக் கூறி சிரிப்பவனின் முதுகில் ஒரு அடிபோட்டு விட்டு, 

“மாப்பிள்ளை கொழுப்பு கூடிப் போச்சுடி உனக்கு….’’ என அவனுடன் சேர்ந்து தானும் சிரித்துவிட்டே செல்வார். 

சிவாத்மிகா தான் தலையில் அடித்துக் கொள்வார். “கருமம்.. கருமம்…. மாமா மருமகன் மாதிரியா பேசிக்கிறீங்க ரெண்டு பேரும்…விளங்கிரும்..’’ அவர் திட்டிவிட்டு சென்றாலும் இவர்கள் தங்கள் இயல்பில் இருந்து மாறாமலேயே தான் இருந்தனர். 

அவன் கல்லூரியில் முதலாமாண்டின் இறுதியில் இருந்த சமயம், கல்லூரிக்கு சென்று திரும்பி வந்தவனை போர்க்களம் போல இருந்த வீடு தான் வரவேற்றது. 

இவன் விவரம் கேட்டபோது இவனிடம் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினர். அதில் கஜபதியின் கையெழுத்தில், “இனியும் போலியாய் வாழ பிரியமில்லை… என்னவளோடு கிளம்புகிறேன்… தேட வேண்டாம் தேடினாலும் கிடைக்க மாட்டேன்… ‘’ என்று இருந்தது. 

முதலில் அதை பரணி நம்பவே இல்லை. ஆத்திரத்தில் அக்கடிதத்தை கிழிக்கவே போனான். அவனைத் தடுத்த அவன் தந்தை, 

“ஏலேய் பரணி போலீசுக்கு ருசு வேணும்யா… நாம தான் அந்த ஆளை ஏதோ பண்ணிட்டோம்னு அவன் அப்பங்காரன் காலையில இருந்து ஆடிக்கிட்டு கிடக்கான்….

இந்த லட்டர் தான் நமக்கு இருக்க ஒரே சாட்சி….போனவன் அவன் பங்காய் தொழில்ல இருந்த முப்பது கோடி பணத்தையும் வாரி வழிச்சி எடுத்துட்டு தான் போயி இருக்கான் பரதேசி… 

நாளைக்கு கல்யாணம் முடிச்சா எண்ணி பத்து மாசத்துல பேரப் பிள்ளையை பெத்து தர அளவு மக வளந்த எண்ணம் கூட இல்லாம அந்த எடுபட்ட சிறுக்கி தான் முக்கியம்னு ரெண்டு பொட்ட புள்ளைங்களோட பொங்கி போட்ட பொண்டாட்டியை நிற்கதியா விட்டுட்டு போயிட்டான்… 

எங் கையில கிடச்சான் அவன பொலி போட்டு பொங்க வச்சிட்டு தான் மறு வேலை. ஏலே தரணி நீ குடும்பத்த பாத்துக்க…’’ அதிரிச்சியில் ஓரமாய் நின்றுக் கொண்டிருந்த மூத்த மகனிடம் பொறுப்பை ஒப்படைத்தவர் வீச்சரிவாளோடு வெளியே கிளம்ப யாரும் அவரைத் தடுக்க முடியவில்லை. 

பரணிக்கு மனதே ஆறவில்லை. அவனும் தந்தையோடு கிளம்பினான் அவரைத் தேடி. முதலில் அவர்கள் சென்றது ஊருக்கு வெளியே இருத்த அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தான். 

உள்ளே யாரோ ஒரு வயதான பெண் மணியும் ஒரு சிறுமியும் மட்டுமே இருந்தனர். அந்த சிறுமி அப்பொழுதே தெளிவாய், “அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போய்ட்டு வரதா சொல்லிட்டு போனாங்க..’’ என்றது அப்பாவியாய். 

அடுத்து அவர்கள் எல்லா இடமும் அலைந்து திரிந்து கடைசியாய் மலேசியா செல்லக் கூடிய கப்பலில் இருவரும் கிளம்பினர் என்றது வரைத் தான் அவர்களால் கண்டு பிடிக்க முடிந்தது. 

அதற்கு மேல் கஜபதி தந்தையின் பணமும், ராசுமதுரவனின் அரசியல் பலமும் எவ்வளவு முயன்றும் இறுதி வரை அவர் எங்கே இருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாமல் போனது.  

ஒரு மாதம் முழுதாய் ஒரு மாதம் தேடிக் கலைத்து இனி அவர் கிடைக்கவே போவதில்லை என்று உணர்ந்த பிறகு ராசுமதுரவன் தன் தங்கைக் குடும்பத்தை தன்னோடே அழைத்து வந்து விட்டார். 

எப்பொழுதும்  கல கலப்பாய் இருந்த பரணி அதன் பிறகு தனக்குள்ளே இறுகிப் போனான். இதற்கு நடுவில் தங்கள் கோபத்தை எல்லாம் ஒன்றும் அறியாத அப்பாவி சிறுமி மீது இரு குடும்பங்களும் காட்டி அவளை ஊரை விட்டே அனுப்பி இருந்தனர். 

பரணி அப்பொழுது அந்த விசயத்தை கண்டுகொள்ளக் கூட இல்லை. அவன் எண்ணம் எல்லாம் என் மாமன் எப்படி இப்படி செய்யலாம் என்பதிலேயே நின்றுவிட்டது. 

அவனுக்கு விவரம் புரிய தொடங்கிய ஆரம்பத்தில் கஜபதி அந்தப் பெண்ணை பற்றிய விளக்கத்தை அவனிடம் சொல்ல வருவார். பரணி தனக்கு விருப்பமின்மையை முகத்திலேயே காட்டி அவர் வாய்க்கு பூட்டு போட்டு விடுவான். 

அந்த நேரம் அவர் கண்கள் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறி அவர் மன வேதனையை காட்டிக் கொடுத்துவிடும். அவர் அதீத சந்தோசமாய் இருந்தாலும் சரி அதிக துக்கத்தில் இருந்தாலும் சரி அவர் கருவிழிகள் நிறம் மாறுவதை எப்பொழுதும் பரணி அதிசயமாய் பார்ப்பான். 

அவன் மாநில அளவில் கால்பந்தாட்ட போட்டியில் வென்ற தினம்… அவனை தூக்க முடியாமல் தூக்கி, “ஏலே மாப்பிள்ளை… ஜெயிச்சிடோம்டா…’’ என்ற வெற்றிக் கூச்சலிட்ட போதும் அவர் கருவிழிகள் நிறம் மாறியதை வியப்புடன் கண்டவன் அவன். 

“நீ புட் பால்ல பெருசா சாதிக்கணும்டா மாப்பிள்ளை… இந்த கஜபதியால முடியாததை என் பரணி சாதிக்கணும்…’’ அவர் வார்த்தையில் எப்பொழுதும் அவன் தன் வாரிசு என்ற உரிமை உணர்வே வெளிப்படும். 

“என்கிட்டக் கூட சொல்லாம எங்கப் போன மாமா…’’ முதலில் அவரின் பிரிவால் வேதனையில் வாடியவன், நாட்கள் கடக்க கடக்க கோபம் கொண்டு பின்பு அவர் மேல் அளவில்லா வெறுப்பை வளர்ந்து வைத்து இருந்தான். 

அந்த வெறுப்பு எல்லாம் தற்சமயம் இருந்த இடம் தெரியாமல் போய் ஒளிந்துக் கொண்டது. எப்பொழுது நாட்சியின் கண்கள் அவன் மாமாவைப் போன்றே மாறியதோ அந்தக் கணமே அவனுள் ஏதோ இடம் மாறி இருந்தது. 

நினைவுகளின் தாக்கத்தில் புரண்டு கொண்டிருந்தவனின் அலைபேசி கீதம் பாட, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவன், மறுபக்கம் என்ன சொன்னார்களோ, 

“ என்னது…’’ என அதிர்ந்து வேகமாய் எழுந்து நின்றான். தன் வண்டி சாவியை தேடி எடுத்துக் கொண்டே மாடிப் படிகளை தட தடவெனக் கடந்து வரவேற்பறைக்கு வந்தவன், கூடத்தில் அமர்ந்து மலர் தொடுத்துக் கொண்டிருந்த செல்வாம்பிகையை நெருங்கினான். 

“அம்மா நான் நைட் வர லேட் ஆகும்மா. மாஸ்டர் லோக்கல் டோர்னாமென்ட் போட்டிக்கு ப்ராக்டிஸ் கொடுக்க கூப்பிட்டு இருக்கார்…’’ சொன்னவன் அவர் பதிலையும் எதிர்பாராது வேகமாய் வெளியேறினான். 

தன் வண்டியில் ஏறி அமர்ந்தவன், “மச்சி… நீ சொல்றது உண்மை தானேடா…’’ என மீண்டும் மீண்டும் கேட்க, மறு முனையில் என்ன பதில் கிடைத்ததோ, “நான் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன் மச்சி… நீ போனை வைலே..’’ என்றவன் தன் வண்டியை அவர்கள் பண்ணை வீட்டை நோக்கி செலுத்தினான்.

அவன் சொல்வது மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஒரு நொடி பரணி கண்களை இறுக மூடித் திறந்தான். அடுத்த நொடி அதில் கொலை வெறித் தாண்டவமாடியது. 

“நாட்சி…. உன்ன சும்மா விட மாட்டேன்டி…. இந்த கலிங்கத்து பரணி யாருன்னு இன்னைக்கு நைட் நீ தெரிஞ்சிப்ப….’’ 

பாவம் பரணி அப்போது அறியவில்லை வெளி வர முடியாத வலையில் தானே சென்று விழப் போவதை அப்போது. 

கூடு தேடும். 

 

Advertisement