Advertisement

கூடு – 3

பண்டையக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்று தங்கள் தலையில் ஆலிவ் இலையை சூடி வரும் வீரர்களை மக்கள் ஹீரோ என்று அழைத்துள்ளனர்.

பரணி தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் மித மிஞ்சிய ஆத்திரம் இருந்தது. 

அவனுக்கு விவரம் தெரிந்தது முதல் அவனை யாரும் இந்த அளவிற்கு அவமானப்படுத்தியதில்லை. எங்கு சென்றாலும், “வா… வா..’’ என்ற வரவேற்பையே கேட்டுப் பழகியவனுக்கு முதல் முறையாக, “சார்…. கொஞ்சம் வெளிய போங்க..’’ என்று மரியாதையாய் வெளியேற்றி இருந்தாலும் அவனால் அந்த அவமரியாதையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

கோபம் கோபம் கண் மண் தெரியாத கோபம். அது முழுக்க அவன் வண்டி ஓட்டும் விதத்தில் வெளிப்பட்டது. தேவையில்லாமல் ஹாரனை அலறவிட்டான். வண்டியின் வேகம் மணிக்கு நூறு கிலோ மீட்டரைத் தொட்டு தொட்டு மீண்டுக் கொண்டிருந்தது.

வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தியவன், அதே கோபத்தோடு உள்ளே நுழைந்தான். அவனுக்கு தற்சமயம் யாரிடமும் பேச பிரியமில்லை. நேரே தன் அறைக்கு செல்ல மாடிப் படிகளில் கால் வைத்த நிமிடம், செல்வாம்பிகை அவன் முன் வந்து நின்றார். 

“ஐயா பரணி… காலைல இருந்து வெறும் வயிறா கிடக்க….ஒருவா சாப்பிட்டு அப்புறம் உன் ரூமுக்கு போய்யா…’’ கையில் உணவுத் தட்டை வைத்துக் கொண்டு கெஞ்சும் தாயைக் கண்டதும் அவன் மனது நொடியில் இளகியது.

தன் வண்டிச் சத்தத்தை வைத்தே அவசர அவசரமாக உணவைத் தட்டில் நிரப்பி இருக்கிறார் என்பதை அந்த தட்டைப் பார்த்தாலே அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. 

அவர் கையில் இருந்த தட்டைப் பெற்றுக் கொண்டவன், “ஏம்மா பசிச்சா தன்னைப் போல சாப்பிட போறேன்… நீங்க வேற…. விட்டா நேரம் தவறாமா ஊட்டிவிடுவீங்க போல…’’ அவரிடம் சலித்துக் கொண்டவன், 

சமையல் கூடத்தில் இருந்த உணவு மேஜையில் தட்டை வைத்து விட்டு, கை கழுவி விட்டு வந்து உணவை உண்ணத் தொடங்கினான். 

முதல் கவள உணவு தொண்டையில் இறங்கியதும் தான் அவனுடைய அகோரப் பசி அவனுக்கே தெரிந்தது. அவன் வேக வேகமாய் உணவை காலி செய்வதைக் கண்ட செல்வாம்பிகை அதை விட வேகமாய் உணவை அவன் தட்டில் நிரப்பத் தொடங்கினார். 

கணவனும், குழந்தைகளும் வேளை தவறாமல் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் சாராசரி இந்திய பெண் தான் செல்வாம்பிகை. அதிலும் அவர்கள் அளவிற்கு அதிகமாய் உணவு உண்டாலே தன் சமையல் திறனை புகழ்ந்து விட்டதாய் உச்சி குளிர்ந்து போய் அன்று முழுக்க மகிழ்ச்சியாய் உலா வரும் பெண்மணி அவர். 

தன் உணவை முடித்துக் கொண்டவன், “அம்மா நான் என் ரூம்ல ரெஸ்ட் எடுக்குறேன்… நான் கீழ எழுந்து வரலைன்னா… ஒரு நாலு மாணிக்கா என்னை எழுப்பி விடுங்கம்மா…’’ சொன்னவன் தன் அறை நோக்கித் திரும்ப, சரி என்பதாய் தலை அசைத்தவர்,

“ஏய்யா பரணி… மறுபடி அந்த புள்ளக்கிட்ட வம்பு தும்பு வச்சிக்காதையா…. சரியோ தப்போ நம்ம குடும்பத்துக்கு எப்பவும் பொம்பளை சாபம் வேண்டாம்யா….’’ 

அவர் குரலில் என்ன கண்டானோ, “சரிமா… நீங்க பதறாதீங்க…’’ வெளியே அவரை தேற்றியவன், “நானே நினச்சாக் கூட அவகிட்ட வம்பு தும்பு வச்சிக்க முடியாதும்மா…’’ என்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டான். 

அவர் சமாதானமடைந்தது அவர் முகத்தில் தெரிந்ததும் தன் அறையை நோக்கி நடந்தான். அறைக்குள் நுழைந்தவன், முதலில் கண்டது ஆளுயரப் புகைப்படத்தில் எட்டு வயது சிறுவனாய் தன்னை தூக்கிக் கொண்டு நின்ற கஜபதி பாண்டியனைத் தான். 

அந்தப் புகைப்படத்தைக் கண்டதும் அவனை அறியாமலேயே அவனுள் ஒரு பெரு மூச்சுக் கிளம்பியது. அருகில் சென்று புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த அவர் முகத்தை வருடிக் கொடுத்தான். 

அந்த முறுக்கு மீசையை மட்டும் அகற்றிவிட்டால்…. அவன் மனது காலையில் மருத்துவமையில் சந்தித்த நாட்சியின் முகத்தை அப்படியே அவன் கண் முன் கொண்டு வந்தது. 

கண்கள்… கருவிழிகள் கருப்பாய் அல்லாமல் சற்றே செம்பழுப்பு நிறத்தில் இருந்தவை அதிர்ச்சியில் விரியும் போது அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியதை கண் கூடாய் கண்டிருந்தான்…. 

அடர்த்தியான புருவங்கள், கூர் மூக்கு…தடித்த கீழுதடு, பதட்டத்தில் அதை மேல் பற்களால் சிறை செய்து வாயிற்குள் அடக்கி இருந்தாள். எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாய் அந்த முகம்…. அதில் தன்னைக் கண்டதும் ஒரு நொடி வந்து போன நெகிழ்வு… அத்தனையும் கண்டிருந்தான்… 

“மாமா…. உன்ன அப்படியே உரிச்சி வச்சி இருக்காளே.. அவளை எப்படி மாமா என்னால வெறுக்க முடியும்….’’ 

மானசீகமாய் அந்த புகைப்படத்திடம் கேள்விக் கேட்டான். மனம் முழுக்க குழப்பம். வயிற்றில் உணவு நிரம்பியதுமே கோபம் சற்று மட்டுப்பட்டிருந்தது.

அவள் சிறுமியாய் இருக்கும் பொழுது இரண்டொரு முறை பார்த்திருக்கிறான் தான். அப்பொழுதெல்லாம் வேண்டா வெறுப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவான். அவள்  தன் மாமனை அச்சில் வார்த்தெடுத்தார் போல முன் வந்து நிற்பாள் என இவன் கனவிலும் எண்ணவில்லை.  

கஜபதி பாண்டியன் என்றால் பரணிக்கு அவ்வளவு பிரியம். சிவாத்மிகா, கஜபதி திருமணத்தின் போது பரணிக்கு இரண்டு வயது. அவர்கள் திருமண புகைப்படம் முழுக்க முழுக்க பரணி அவர் மடியில் அமர்ந்தபடியே தான் இருப்பான். 

பரணியின் அண்ணன் தரணிக்கு அப்பொழுது ஐந்து வயது. அவன் புகைப் படத்தின் பின்னணியில் நின்றபடியே தான் இருப்பான். இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பின் ரகசியம் இதுவரை பரணிக்கு புரிந்ததே இல்லை. 

அவன் தங்கள் வீட்டில் இருந்ததை விட, கஜபதியின் வீட்டில் இருந்தது தான் அதிகம். அவன் இன்றைக்கு சிறந்த கால்பந்தாட்ட வீரன் என்று பெயர் வாங்கி இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் கஜபதி தான். 

மூன்று வயதில் இருந்தே அந்த விளையாட்டை அவன் வேரில் விதைத்தவர். ஏனெனில் அவரும் ஒரு கால்பந்தாட்ட வீரர். கஜபதி எப்போதும் அன்பாய் பரணியை, “ ஏலே மாப்பிள்ளை…’’ என்று வாஞ்சையாக தான் அழைப்பார். 

அதுவும் அவருக்கு பிறந்த இரண்டும் பெண் குழந்தைகள் என்று ஆனதும் எங்கே சுற்ற வெளியே கிளம்பினாலும் அவர் புல்லட்டின் முன் பகுதியில் பரணி அமர்ந்து இருப்பான். 

அவனுக்கு உயிர் கொடுத்தது வேண்டுமானால் அவன் தாய் தந்தையாக இருக்கலாம். ஆனால் உலகம் பயிற்று வித்தவர் அவன் மாமா கஜபதி பாண்டியனே. 

அவனுக்கு ஏழு வயது இருக்கும் பொழுது ஊருக்குள் யாரோ ஒரு பெண்ணை அழைத்து வந்து முறையின்றி குடும்பம் நடத்துகிறார் என்று மற்றவர்கள் பேசிய பேச்சு இவன் காதை அடைய விவரம் புரியாத அந்த வயதிலும், 

“மாமா… நீ யாரோ பொம்பளையை கூடிட்டு வந்து இருக்கியாமே… ஏன் மாமா எங்க அத்தைய உனக்கு பிடிக்கலையா…? எங்க அத்தை அழுதுகிட்டே இருக்கு… இனி எங்க வீட்ல தான் இருக்க போகுதாமே..? 

தாத்தா காலையில உன்ன பாக்க வரேன்னு தெரிஞ்சதும் என்னை அடிச்சிட்டார் மாமா….உன்ன பாக்க கூடாதுன்னு எல்லாரும் ஏசுதாக….நான் எங்க மிஸ்சுக்கு தெரியாம பின்பக்க வழியா ஓடிவந்து தான் இப்பக் கூட உன்ன பாக்கேன்..’’ 

அவர் தோளில் சாய்ந்து அழுபவனை சமாதானப் படுத்தும் போது தான் முதன் முதலில் கஜபதியின் கண்களில் பரணி அந்த வித்தியாசத்தைக் கண்டான். 

எப்பொழுதும் லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும் கண்கள் அதிர்ச்சியில் அப்படியே அடர் பழுப்பு நிறமாய் மாற, “மாமா… உன் கண்ணு கலர் மாறுது..’’ 

அந்த நேரத்திலும் தன்னிடம் தென்படும் மாற்றங்களை கிரகிக்கும் மருமகனை வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட கஜபதி, 

“ஏலே மாப்பிள்ளை… உனக்கு விவரம் வரும் போது நான் உனக்கு விளக்கம் சொல்றேன்… மறுபடி உங்க வீட்டு ஆளுங்க கூப்பிடுற மாதிரி பொம்பளை அது இதுன்னு எல்லாம் பேசக் கூடாது… அவளும் உனக்கு அத்தை தான்… உங்க சிவா அத்தையை யாரும் என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது. நாளைக்கே அவளை இங்க கூட்டிட்டு வந்துடுறேன்.  நீயும் எப்பவும் போல இங்க வந்து போவியாம்…’’ 

Advertisement