Advertisement

கூடு – 28

ஒலிம்பிக் விளையாட்டில் இதுவரை முதல் பத்து இடங்களை பிடித்துள்ள வீரர்களில் இடம் பிடித்துள்ள ஒரே பெண் லரிசா ஆவார். அவர் பதினெட்டு பதக்கங்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்

தன் முன்னால் கோபத்துடன் வந்து நின்ற பரணியை கஜபதி மௌனமாய் பார்த்திருந்தார்

யோவ் மாமாஉனக்கு புத்தி கித்தி கலங்கிப் போச்சா என்ன..? உன் வீட்ல வேலை செய்யிற ஆள் விசுவாசமா இருந்தா காசு பணம் கொடு…. அதை விட்டுட்டு நம்ம வீட்டு பொண்ணை தூக்கி கொடுக்கப் பாக்குற..?

சாதி, மதம் எல்லாம் வேண்டாம்…. நாம தகுதி தரா தரம் எல்லாம் பாக்க வேண்டாமா..? அவனே ஒரு படிக்காத தற்குறி. அவனெல்லாம் உனக்கும் உன் மகளுக்கும் அடியாள் வேலை பாக்க தான் லாயக்கு. அதை விட்டுட்டு  பொண்ணு கொடுங்கன்னு கேக்குற..? இதே கேட்டது நீன்னு நான் சும்மா நிக்குறேன். வேற யாராவது இப்படி பேசி இருக்கணும்….’’ 

பரணி பேசிக் கொண்டே செல்ல, தேவி அவனை விட அதீத ரௌத்திரம் நிரம்பிய குரலில், “என்ன செஞ்சிடுவீங்க மாமா…?’’ என அவனை இடை மறித்தாள்

பரணி அவளை திகைப்புடன் பார்க்க, “உங்களைத் தான் கேக்குறேன். வேற யாராவது கேட்டா அவங்களை என்ன செஞ்சிடுவீங்க. தினம் மயிலு மயிலுன்னு கொஞ்சுறீங்களே உங்கப் பொண்டாட்டி…. அவ இன்னைக்கு உசிரோட இருக்கவேநீங்க சொன்னீங்க இல்ல படிக்காத தற்குறின்னு அந்த தற்குறி தான் காரணம்.

நீங்க உங்க மாமானைத் தேடி அலைஞ்சப்ப எல்லாம் வேரா நின்னு உங்க குடும்பத்தை தாங்கினது நீங்க இப்போ சொன்னீங்களே ஏதோ அடியாள்னு அந்த அடியாள் தான்

அவர்கிட்ட காசு பணம் இல்லாம இருக்கலாம். ஆனா நல்ல மனசு இருக்கு. யாருக்கும் துரோகம் பண்ணத் தெரியாத நேர்மை இருக்கு. எல்லாத்தையும் விட, பத்து பேர் ஒண்ணா வந்து எதிர்த்து நின்னாலும் அவங்களைப் பந்தாடுற வீரம் இருக்கு

ஒரு பொண்ணுக்கு புருசான இருக்க இத்தனை தகுதி இருந்தா போதும். நானா விரும்பி அவர் பக்கத்துல போனாலும், தன்னோட முதலாளி குடும்பத்துக்கு துரோகம் பண்ணக் கூடாதுன்னு விலகி விலகி போனார் பாருங்க…. அவர் நம்ம எல்லாரையும் விட ரொம்ப பெரிய மனுஷன் மாமா.’’

சொல்லி முடித்த தேவி அப்படியே மடிந்து அழத் தொடங்கவும், அதுவரை தன்னை அடக்கிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த செங்கன், “தேவிமா..’’ என அவளை தாங்கிக் கொண்டான்

கஜபதியை நிமிர்ந்து பார்த்தவன், கையெடுத்துக் கும்பிட்டபடி, சற்றே கரகரத்த குரலில், “ஐயா…. நான் அப்படியெல்லாம் கேக்க கூடாது தான். ஆனாலும் கேக்குறேன். தேவிமாவை எனக்கு கொடுத்துடுங்க ஐயா. உங்களை மாதிரியே நான் அவங்களை கண்டிப்பா நல்லா பாத்துக்குவேன் ஐயா..’’ 

என யாசகம் போல கேட்க, அதற்கு மேல் பொறுக்க முடியாத கஜபதி அவர்களை தூக்க வர, அதற்கு முன் பரணி அவனை எழுப்பி இழுத்து  அணைத்திருந்தான்

சகலை…. வாழ்த்துக்கள்…. யப்பா உங்க வாயில இருந்து எங்க தேவிமாவை நீங்க விரும்புறதை வாங்குறதுக்குள்ளடயலாக் பேசியே நாக்கு தள்ளிடும் போல…. நாட்சி எப்படி என் பர்பாமான்ஸ்…. சூப்பர் இல்ல’’ என நாட்சியைக் கேட்க

அவளோ, “நான் எதிர் பார்த்ததை விட கொஞ்சம் சுமார் தான். இருந்தாலும் ஓகே மாமா..’’ என்று பரணிக்கு பதில் சொல்லிக் கொண்டே தேவியை எழுப்பி இருந்தாள்.

தேவியை அணைத்துக் கொண்டவள், “நாங்க எல்லாரும் சோகத்துல இருந்தா உங்களை கண்டுக்க மாட்டோம்னு நினைப்பா…. அடேங்கப்பா என்னமா பார்வையிலேயே கதை பேசுனீங்கரெண்டு பேரும். ஐயோ இனி செங்கனை அத்தான் சொல்லணும் இல்ல..’’ என போலியாக வருத்தப்பட, பரணியின் பிடியில் இருந்த செங்கன்

ஐயோ ராணிமா நீங்க செங்கன்னு கூப்பிட்டா தானுங்க என் பேருக்கே மரியாதை..’’ என சற்றே வெட்கப்பட்டபடி சொல்ல, மீண்டும் அங்கே சிரிப்பலை ஒன்றுக் கிளம்பி அந்த இடத்தை நிறைத்தது

ஒருவழியாய் செங்கன், கஜபதி, சிவாத்மிகா மூவர் மட்டும் கஜபதியின் இல்லம் திரும்பினர். தேவி திருமணத்திற்கு பிறகு முறையாக கஜபதியின் இல்லம் அனுப்பப்படுவாள் என்று ராசு மதுரவானால் அறிவிக்கப்பட அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது

அன்று இரவு மொத்தக் குடும்பத்தையும் ஒன்றாய் அமர வைத்த செல்வாம்பிகை, கையில் கல் உப்பை வைத்துக் கொண்டு, “ஊர் கண்ணுஉறவு கண்ணுநாய்க் கண்ணுநரிக் கண்ணு…. நல்லக் கண்ணு நொள்ளக் கண்ணுஎல்லாக் கண்ணும் கழிய…’’ என்று அனைவரயும் சுற்றிவிட்டு

எல்லாரும் துப்புங்க..’’ என அவர் அவர் முகத்திற்கு நேரே கையைக் கொண்டு செல்ல, “துது..’’ என அனைவரும் சம்பர்தாயமாய் அந்தக் கைகளில் துப்பினர்

அந்த உப்பை முற்றத்து தொட்டியில் கரைத்து விட்டு வந்தவர், “இனி இந்தக் குடும்பம் இப்படித் தான் எப்பவும் சந்தோசமாநிம்மதியா இருக்கணும்..’’ என்று சொல்லியபடி தரையில் கால் நீட்டி அமர, வானத்தில் பறந்த தேவதை ஒன்று, ‘ததாஸ்துசொல்லிச் சென்றது

அடுத்த மூன்று மாதங்களில், ஊரையே திருவிழா கொண்டாட்டமாக்கி, தேவி செங்கன் திருமணம் கோலாகலாமாய் நடந்தேறியது. மருத்துவமனையில் இருந்து உடல் நலம் பெற்று வெளியேறியிருந்த பிரேம் நாட்சியின் அன்பான அழைப்பிற்க்கிணங்க, திருமணத்திற்கு வருகை புரிந்து இருந்தார்.

அப்படி வந்திருந்தவர், “ஐயம் பேக்..’’ என்ற வாசகம் பொறித்த டீஷர்டை அணித்துக் கொண்டு, கண்களில் குளிர் கண்ணாடி சகிதம் அங்கும் இங்கும் அலைய, தாவணிப் பெண்கள் பலரின் பார்வை அவரைத் தொடர்ந்துக் கொண்டிருந்தது

திருமண வரவேற்ப்பில் முதலில் மண மகனை மண்டபத்திற்குள் அழைக்கும் பொழுது, “தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்மட்டியான் வரான் மம்மட்டியான் வரான்..’’ என்ற பாடல் உச்சஸ் தொனியில் ஒலிக்க, ஷெர்வானி அணிந்து தன் முறுக்கு மீசையை நீவிய படியே உள்ளே வந்த செங்கன் முன், பரணி, தரணி விஜய் மூவரும் ஆடிக் கொண்டு வந்தனர்

ஆர்வக் கோளாறில் பரஞ்சோதியும் அவ்வப்போது அவர்கள் ஜோதியில் ஐக்கியமானார். அடுத்து, “ கற்பூரக் கண்ணகியே வாராய்அடி நடந்து நடந்து வியந்து வியந்து  வாராய் நீ இந்திர மகராணியே வலது காலெடுத்து வாராய் நீயே…’’ என்றப் பாடல் ஒலிக்க

நாட்சியாவும், மதுஸ்ரீயும், இன்னும் சில இள வயது உறவினர் பெண்களும் ஆடி வர, ‘அடி அதிருதே அதிருதே உன் குத்தமா…’ என்ற வரிகள் தொடங்கையில் அவர்களுடன், பரணி குழுவினர் இணைந்துக் கொண்டனர்

முடிவில் இரண்டு குழுக்களும் மணமக்களோடு மேடையேற, அடுத்த நொடி, அங்கே, “அட மாங்கல்யம் தந்துனானேனா மவ ஜீவிதம் துந்தனானேனா…’’ என்றப் பாடல் ஒலிக்க, இரண்டு குழுவினரும் இணைந்து நடனமாடி, மாப்பிள்ளை பெண்ணையும் சற்றே ஆட்டி வைத்து விட்டு அதன் பிறகே  மேடையிலிருந்து இறங்கினர்

செல்வாம்பிகை, தனது மூன்று மாதப் பேரன், ‘நித்யன் மதுரவனைக்’  கையில்  வைத்துக் கொண்டு அங்கு நடந்துக் கொண்டிருந்த கொண்டாட்டங்களை ஆர்வமுடன் ரசித்துக் கொண்டிருந்தார்

ஆம் மதுஸ்ரீ தரணி தம்பதிகள், மகனால் ஆசிர்வதிக்கப்பட்டு இருந்தனர். தன் தங்கையின் திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த மதுஸ்ரீ, இரு மணி நேரத்திற்கு  ஒரு முறை, மகனுக்கு தாய்ப் பால் மட்டும் கொடுத்துவிட, செல்வாம்பிகை தன் பேரனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்

கஜபதி தன் இரண்டு மகள்கள் திருமணத்தை முன் நின்று நடத்தி கண் குளிரப் பார்க்காத ஏக்கத்தை, தன் தேவிமாவின் மூலம் தீர்த்துக் கொண்டார்

சிவாவிற்கும் கூட தன் கணவர் அருகிருக்க, மகளை கன்னிகா தானம் செய்துக் கொடுத்த நிறைவில் அக மகிழ்ந்து இருந்தார்.

இறுதியாய் மொத்தக் குடும்பமும், குழுப் புகைப்படதிற்க்காய் மேடையேற, அனைவர் முகத்திலும் இருந்த புன்னகை அப்படியே அந்த  புகைப்படத்தில் பதிவாகி அவர்கள் கொண்டாத்தின் கால சாட்சியமாய் புகைப்படமாகியது

அங்கே அவரவர் இணையின் நெஞ்சாங்கூட்டில் அவர்கள் அன்பின் துணை நீக்கமற, நிறைந்து நின்றது

ஆறு ஆண்டுகளுக்குப் பின்…..

அந்த மனநல மருத்துவமனை வளாகத்தில் மன நலம் பிறழ்ந்தோர் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்க, பயத்தில் தன் ஆள்காட்டி விரலை இன்னும் அழுத்தமாய் பிடித்திருந்த தன் ஐந்து வயதுப் பேத்தி அல்லிராணியை கஜபதி மெதுவாய் அங்கிருந்த ஒரு அறை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றார்.

அல்லி, சிறு வயது நாட்சியாவின் புகைப்படம் உயிர் பெற்று வந்தார் போன்ற தோற்றம். அடர்ந்த சிகை இருபுறமும் போனிடைல்களாய், அக்குழந்தை நடக்கும் பொழுது எல்லாம் அவள் கன்னம் உரசி சென்றது

அதே இளம் பழுப்பு நிறக் கண்கள். அதீத கோபம் அல்லது சந்தோசம் எந்த உணர்வை அவள் வெளிக்காட்டினாலும் முதலில் அதை வெளிப்படுத்துபவை அடர் பழுப்பாய் நிறம் மாறும் அந்த திராட்சைக் கண்களே.  

அங்கே சற்றே இருள் சூழ்ந்த அறையில் உருவம் ஒன்று கட்டிலில் முதுகுக்காட்டி அமர்ந்திருந்தது. ‘சண்முகம்அவரின் அழைப்பிற்கு அந்த உருவம் திரும்பிப் பார்கவில்லை

தாத்தாயார் இவங்க…” தன் முன் கேட்ட பிஞ்சுக் குரலில் சண்முகம் படாரென திரும்பினார். அங்கே  நாட்சி சிறு பெண்ணாய் உருப் பெற்று வந்ததைப் போல, அழகிய பெண் குழந்தை ஒன்று நின்றுக் கொண்டிருக்க

சண்முகம் கஜபதியை கேள்வியாய் பார்த்தார். “உன்னோட பேத்தி தான் சண்முகம். நான் நாட்சியாவை எவ்வளவு வற்புறுத்தியும் உன்னை அப்பானு கூப்பிட மாட்டேன்னும், உன்னை பாக்க வர மாட்டேன்னும் சொல்லிட்டா

இந்த ஏழு வருஷ சிகிச்சையில நீ குணமாயிட்டதா டாக்டர் எல்லாம் சொல்றாங்க. இன்னும் ஒரு வருசத்துல உனக்கு விடுதலை. நீ பழைய சண்முகமா வெளிய வரணும். எந்தப் பொண்ணை பாத்து பாத்து வளக்க முடியலைன்னு தினம் தினம் வேதனைப்பட்டியோ, அந்தப் பொண்ணு பெத்த பொண்ணை நீ தான் வளக்கணும்.’’ 

அவர் சொல்லி விட்டு நிறுத்த, சண்முகம், அந்தக் குழந்தையை நோக்கி தன் கைகளை நீட்டினார். ஒரு முறை தன் தாத்தாவை நிமிர்ந்துப் பார்த்த குழந்தை, அவர் போஎன்பதைப் போல தலைஅசைக்கவும் சண்முகத்தை நோக்கி ஓடியது

அந்தப் பிஞ்சுக் குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்தவர், அதன் முகம் எங்கும் முத்தம் பதித்துவிட்டு, “உன் பேர் என்னமா..?’’ என வாஞ்சையாய்க் கேட்க, “அல்லி….. அல்லிராணி…’’ என அழகாய் சொல்ல, சண்முகம் மறுபடி குழந்தையை அணைத்துக் கொண்டார்

தம்பியை கண் கலங்கப் பார்த்த கஜபதி, “போன வருஷம் தான் உன் தோஸ்து அந்த நல்லசிவம் பய ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்தான். நான் தான் அவனுக்கு நம்ம மில்லுல வேலை போட்டு கொடுத்து இருக்கேன் ஷண்முகன். அவன் இப்ப ரொம்ப மாறிட்டான். நாட்சி இப்போ தலைமை செயலகத்துல வேலையில இருக்கா. பரணிப் பயலும் இந்தியாவோட புட் பால் டீம் கேப்டன் ஆயிட்டான். போன வருசம் நடந்த வோர்ல்ட் கப் மேட்ச்ல செமிபைனல் வரைக்கும் போய்ட்டு வந்தாங்க….’’ 

கஜபதி பெருமையாய் அவர் குடும்ப விவரங்களை உரைத்துக் கொண்டிருக்க, சண்முகம் எதையும் காதில் வாங்காமல், மடியில் இருந்த குழந்தையை ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷம் போல அவளின் மென்பட்டு உடலை தடவிக் கொண்டிருந்தார்

அவரின் நெஞ்சாங் கூடு முழுதும் நிரம்பி இருந்த வன்மம் என்ற விஷம் முழுதும் நீங்கி, அங்கே அன்பென்ற வானமிழ்த்தம் நிலைப் பெற, அவர் மடியில் குழந்தை வடிவில் இருந்த நாட்சி அவர் நெஞ்சாங்கூட்டை முழுமையாய் ஆக்கிரமித்து இருந்தாள்.  

கூடு நிறைந்தது.

 

Advertisement