Advertisement

“உங்களை நாங்க எல்லாம் தப்பா நினைச்சிட்டோம் ப்பா…. ரொம்ப சாரிப்பா…’’ என தேம்பி அழ, “தேவிக் குட்டி…. அப்படியெல்லாம் இல்லமா… இதோ பாருங்க… நீங்க அழுதா அப்பாவுக்கு பிடிக்காதுன்னு தெரியுமா தெரியாதா உங்களுக்கு…. அழுகையை முழுங்குங்க மொதோ..’’

என அவளை சமாதானம் செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் தேறிய, தேவி தன் அப்பாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டு, சொகுசாய் அமர்ந்துக் கொள்ள, மறுபுறம் மதுஸ்ரீ அமர்ந்துக் கொண்டாள்.

இருவரும் தங்கள் தந்தையின் தோளில் உரிமையாய் சாய்ந்துக் கொள்ள, நாட்சியா அவர்களைப் பாசத்தோடு பார்த்திருந்தாள். கஜபதியும் தன் மகளைப் பெருமைப் பொங்கப் பார்த்தார்.

அடுத்த நொடி அவரை நெருங்கி இருந்த நாட்சியா, அவர் மடியில் தலைவைத்து, கீழே அமர்ந்து இருந்தாள். அந்தக் காட்சி காண்பதற்கே ரம்யமாய் இருந்தது.

அவள் தலையை வாஞ்சையாய் கோதியவர், “நான் சொன்னதை மட்டும் இல்லமா நான் சொல்லாத ஆசையும் என் ராணிமா நிறைவேத்திட்டாங்க போல..?’’ என்ற அவரின் கேள்விக்கு,

நாட்சியா அவரை நிமிர்ந்துப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள். இவர்கள் அன்யோன்யத்தை எல்லாம் சற்றே தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்த பரணி, வேகமாய் அவர்களை நெருங்கியவன்,

“சரி… சரி… எல்லாம் இடத்தைக் காலிப் பண்ணுங்க. மாமனும், மருமகனும் ஆயிரம் விஷயம் பேச வேண்டி இருக்கு…’’ என அவர்களை அங்கிருந்து நகர்ந்த முயல, மூவரும் ஒரே சமயத்தில்,

“நாங்க ஏன் நகந்து போகணும்.’’ எனக் கேட்டபடி அவரை மேலும் நெருங்கி அமர்ந்தனர். பரணி அவர்களை பொறாமையைப் பார்த்துக் கொண்டே அவர்களுக்கு எதிர் சோபாவில் சென்று அமர்ந்தான்.

அதே நேரம் பரணியின் எதிரே வந்து அமர்ந்த, பரஞ்சோதி, “எங்களை எல்லாம் நீங்க மன்னிக்கணும் தம்பி. உங்களை அந்தப் படுபாவி அடைச்சி வச்சி என்ன எல்லாம் பண்ணி இருப்பான்னு நினைச்சாலே  மனசு பதறுது..’’என்று சொல்ல மூன்று மகள்களும் நிமிர்ந்து தந்தையின் முகம் பார்த்தனர்.

அனைவரையும் நோக்கி ஒரு சாந்தப் புன்னகையை செலுத்திய கஜபதி, “எனக்கு என்ன நடந்ததுன்னு நான் ஒரு முறை சொல்லித் தான் ஆகணும். எல்லாரும் நம்ம வீட்ல கூடி இருக்க இந்த சமயம் அதுக்கு சரியா இருக்கும்னு எனக்கு தோணுது..’’ என்றவர்,

“அல்லி…. அல்லி உயிர் பிரிஞ்சது தெரிஞ்சதும், நான் எந்தம்பிகிட்ட பயங்கரமா வாக்கு வாதம் பண்ணத்  தொடங்குனேன். அவனை போலிஸ்ல சரணடைய சொன்னேன்.

ஆனா அவன் என்கிட்ட ரொம்பக் கெஞ்சினான். அவனை மன்னிச்சி காப்பாத்த சொல்லி. ஆனா நான் அவன்கிட்ட தொடர்ந்து கோபமா பேசிக்கிட்டே இருந்தேன். அப்போ நான் எதிர் பார்க்காத சமயம், என்னை தலையில அடிச்சி மயக்கமாக்கிட்டான்.

அப்புறம் நான் கண்ணு முழிச்சி பாக்கும் போது, எங்க தாத்தாவோட தாத்தா காலத்துல, வெள்ளைக்காரங்கக்கிட்ட இருந்து, கோவில் பொக்கிசங்களை பாத்துக்க உருவாக்கி இருந்த சுரங்கப்பாதை நிலவறையில நான் இருந்தேன்.

எங்க தாத்தா நாங்க சின்னப் பசங்களா இருக்கும் போது, அந்த இடத்தை ஒரு முறை எங்களுக்கு காட்டி இருந்தார். அதை அந்த நேரத்துல சண்முகம் சரியா பயன்படுத்திக்கிட்டான்.

வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு, அந்த இடம் தோப்போட சரிவு மாதிரி தெரியும், ஆனா மேல இருக்க செடி, கொடியை நகத்திட்டு பாத்தா, சுரங்கப் பாதை தொடங்குற இடம் தெரியும்.

என்னை இங்க அடைச்சி வச்சதும், அந்த சரிவு தொடங்குற இடம் முழுக்க, கருவேல மரத்தை நட்டு முழுசா மறைச்சி இருக்காங்க. எனக்கு நினைவு திரும்பினதும், என்னோட தம்பி அவனோட செல்போன்ல, நீங்க எல்லாம் என்னை திட்டின வீடியோவை என்கிட்ட காட்டினான்.

எல்லா உறவும் என்னைப் புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானான்னு தோணின அந்த நிமிஷம், எனக்கு செத்துடலாம் போல இருந்தது. அப்போ தான் என் மக நாட்சி, “எங்க அப்பா வருவார்னு திடமா பேசினதையும் பாத்தேன்…”

எனக்கு அப்போ இருந்த ஒரே நம்பிக்கை, நாட்சி ஒரு நாள் கண்டிப்பா என்னைத் தேடி வருவா அப்படிங்கிறது தான். இத்தனை வருசமா தினமும், நல்லசிவம் தான் எனக்கு தேவையான சாப்பாடு தண்ணி எல்லாம் தினமும் கொண்டு வந்து கொடுத்துட்டு போவான்.

என் தம்பி மாசம் ஒருக்கா வந்து என் மொத்தக் குடும்பத்தையும் விடியோவா காட்டிட்டு, அவங்களைப் பாத்ததும், அவங்களோட இருக்கணும்னு என் கண்ணுல வழியிற ஏக்கத்தை குரூரமா ரசிச்சிட்டு,

“எனக்கும் இப்படி தானே இருந்து இருக்கும். என்னோட பொண்டாடியையும், மகளையும் என்கிட்டே இருந்து இப்படி தானே நீயும் தூரமா பிரிச்சி வச்சி இருந்த. உனக்கு நான் திருப்பி கொடுக்குற தண்டனை அதே தான்.

நீயும் அனுபவி. பொண்டாட்டி பிள்ளைங்க பக்கத்துல இருந்தும், அவங்களை உறவு கொண்டாட முடியாத வேதனையை நீயும் அனுபவின்னு’’ சொல்லி வெறி வந்தவன் மாதிரி சிரிச்சிட்டு இருப்பான்.

ரெண்டு முறை அந்த நிலவறையில இருந்து தப்பிக்க பாத்தேன். ஆனாலும் என்னால முடியல. என் பொண்ணுங்க வளந்தது, பரணி புட் பால்ல சாதிச்சது, நாட்சியா கலெக்டர் ஆனது, நாட்சி பரணி கல்யாணம் இப்படி எல்லாமே வீடியோவா சண்முகம் காட்டிட்டு போவான்.

அவன் அந்த விடியோல காட்டாத ஆள், என்கிட்டே விசுவாசமா இருந்த செங்கனைத் தான். அது தான் நான் கண்ணு முழிச்சதும் மொதோ செங்கனை கேட்டேன். உங்க எல்லாரையும் இந்த பனிரெண்டு வருசமா நான் பாத்துக்கிட்டு தான் இருந்தேன்.

கஜபதி பேசி முடித்ததும் அங்க பலத்த மௌனம். மீண்டும் தொண்டையை செருமிக் கொண்டவர், “நாட்சி என்னோட ரத்தம் இல்ல. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் உள்ள அப்பா மகள் உறவு ரொம்ப அற்புதமானது. நான் இன்னைக்கு நாட்சியோட அப்பான்னு சொல்லிக்க ரொம்ப பெருமைப்படுறேன்..’’

அவர் குரல் தழு தழுக்க சொல்லி முடிக்கவும், கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட சிவாத்மிகா, “அது என்ன உங்க மக…. அவ எனக்கும் தான் மக..’’ என நாட்சியை அணைத்துக் கொள்ள,

“எங்களோட தங்கச்சி..’’ என மதுவும், தேவியும் ஆளுக்கு ஒருப் பக்கம் அணைத்துக் கொண்டனர். சொந்தங்கள் சந்தோஷத்தில் மூழ்கி இருக்க, “எல்லாத்தையும் விட அவ என் பொண்டாட்டி…. ஆள் ஆளுக்கு கட்டிப்பிடிக்குறீங்க…..என் மயிலுக்கு வலிக்க போகுது….’’ பரணி மீண்டும் இடையில் வர,

மதுஸ்ரீ அவனை கிண்டலாய் பார்த்த பார்வையில் சட்டென அடங்கியவன், “அண்ணி வேண்டாம் ஏதும் விவகாரமா சொல்லிடாதீங்க. நீங்க அக்கா தங்கச்சிங்க கூடி கும்மி அடிங்க… மாமா வா நாம தனியா போலாம். உன் பொண்ணு ரொம்ப டெரர்யா…. கோபம் வந்தா எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைக்கிறா. அவளை எப்படி அடக்குறதுன்னு நீ தான் எனக்கு கிளாஸ் எடுக்கணும்…’’ என புலம்பியபடியே தன் மாமானை தோட்டத்துப் பக்கம் தள்ளிக் கொண்டு சென்றான். அங்கே மாமனும், மருமகனும் தங்கள் இருவருக்குமான உலகில் தொலையத் தொடங்கினர்.

மாப்பிள்ளை வருகையை கொண்டாட பரணியின் வீட்டில் தடபுடல் விருந்து சமைக்கப்பட்டிருக்க, மொத்தக் குடும்பமும், நெடுநாட்கள் கழித்து நிம்மதியுடன் ரசித்து ருசித்து உண்டனர்.

பரஞ்சோதியின் குடும்பமும் அங்கே வருகை புரிய, வீடே களைக் கட்டி இருந்தது. எல்லாரும் கஜபதியை சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் அவருக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

மாலை கவிழ்ந்து அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நேரம் வர, கஜபதியின் கைகளை பற்றிக் கொண்ட பரணி, “யோவ் மாமா…. எங்களோடையே இருந்துடேன். போதும்யா நாம இத்தனை நாள் பிரிஞ்சி இருந்தது..’’ என ஏக்கத்தோடு கேட்க,

அவனை நோக்கி ஒரு புன்சிரிப்பை சிந்திய கஜபதி, சற்றே தள்ளி தந்தை கிளம்பப் போகிறாரே என்று சோகத்தில் ஆழ்ந்திருந்த நாட்சியை கரம் பற்றி அழைத்து வந்து பரணியின் பக்கத்தில் நிறுத்தியவர்,

“அதான் என் ஜெராக்ஸ் காபி ஒன்னை கூடவே வச்சி இருக்கியே. இன்னும் என்ன..? வேணா இன்னொரு சூப்பர் ஐடியா தரவா மாப்பிள்ளை…. நீ தீயா வேலை செய் இன்னும் பத்து மாசத்துல என்னோட இன்னொரு ஜெராக்ஸ் காபி உனக்கு கிடைக்கும்… ஹா.. ஹா..’’

அவர் சொல்லிவிட்டு சிரிக்க, நாட்சியா, “அப்பா…’’ என சிணுங்கலாய் வெட்கப்பட, பரணியோ, “யோவ் மாமா…. நாமா தனியா இருக்குற நினைப்பா… சுத்தி எல்லாரும் இருக்காங்க… கொஞ்சம் அடக்கி வாசி… இப்ப என்ன சொல்ல வர. இனி நீ இங்க தங்க மாட்ட அவ்ளோ தானே…. விடு நானே தினம் உன் வீட்டுக்கு வந்துடுறேன். சின்ன வயசுல வந்த மாதிரி. உன்னோட ரூம்ல வந்து உனக்கும் அத்தைக்கும் நடுவுல ஹாயா படுத்துக்குறேன்…’’

அவன் அப்படி சொன்னதும், கஜபதி “அடப்பாவி…. மறுபடியுமா…?’’ என அதிர, நாட்சியாவோ, “ஓ…. அப்போ நாளையில இருந்து ரூம்  காவலுக்கு நான் ராஜேஷை வர சொல்லிடட்டுமா….?’’ என அவனைக் கேட்டாள்.

வேகமாய் அவளை நெருங்கி நின்றவன், “நோ மயிலு…. நோ மாமா விளையாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போது எல்லாம் நீ சீரியஸ் என்ட்ரி கொடுக்க கூடாது. சரி மாமா நீ கிளம்பு. கிளம்பு. ரொம்ப டயார்டா இருப்ப..’’

என அவரைக் கிளப்ப முயல, மறுபடி அங்கே சிரிப்பலை ஒன்று கிளம்பி அடங்கியது. ஒருவழியாய் கஜபதியும், சிவாத்மிகாவும் கிளம்பத் தொடங்க, தன் மூட்டை முடிச்சிக்களோடு செங்கன் அங்கு வந்து நின்றான்.

கஜபதி அவனை கேள்வியாய் பார்க்க, “ஐயா…. நான் உங்க காலுக்கு கீழ உக்கார பிரியப்படுற அனுமானுங்க. நீங்க இல்லாதப்ப ராணிமாவை பாத்துகிறது என் கடமைங்க. இனி மறுபடி என்னோட வேலை உங்களுக்கு சேவை செய்யிறது தானுங்களே.’’என்று சொல்ல, தேவியும் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வந்து நின்றாள். இருவரையும் சற்று நேரம் பார்த்தவர், ராசுமதுரவனை நோக்கி,

“மச்சான்…. என் ரெண்டு மகள்களை நீங்க தான் வளத்து ஆள் ஆக்கி இருக்கீரு. பொறப்பால நான் தகப்பன்னா வளப்பால நீங்க தகப்பன். என் மொதோ பொண்ணை உங்க குடும்பத்து மருமக ஆக்கிட்டீரு. கடைசி மகளும் உங்க மருமகளாயிட்டா….. இப்போ உங்க மகளாவே இன்னும் இருக்குறது என் தேவிமா தான்.

என் தேவிமா சின்ன வயசுல இருந்து என்னை ரொம்ப தேடுவா. அவளை கடைசி வரை என் கூடவே வச்சிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. உங்க வளர்ப்பு மகளை என்னோட வளர்ப்பு மகன் செங்கனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா…?’’

கஜபதி இப்படிக் கேட்டதும், அனைவரும் அதிர்ந்துப் போய் அவரைப் பார்த்தனர். கஜபதியும் மருத்துவமையில் இருந்து கவனித்துக் கொண்டே தான் இருந்தார். தன் இரண்டாம் மகள் தேவி செங்கனை விழுந்து விழுந்து உபசரிப்பதையும், அவன் விலகி விலகிப் போவதையும்.

இப்பொழுது கூட செங்கன் கிளம்பவும், தானும் கிளம்பி வந்து நிற்பதையும் மனதில் கொண்டே அவர் அப்படிக் கேட்டது. மொத்தக் குடும்பமும் அமைதியாய் நிற்க,

பரணி கோபத்துடன் முன்னால் வந்து நின்றான். “மாமா இதுக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்..’’ என்று கொதித்தபடி.

கூடு நெய்யும்.

Advertisement