Advertisement

“நான் பேசினது எல்லாம் தப்பு தான். என்னை….. என்னை மன்னிச்சிடுங்க..’’ என்று மீண்டும் அழுகையில் கரைய, “உனக்கு நம்ம தாம்பத்யம் என்னோட வெறும் உடல் தேடலா இருந்து இருக்குன்னு நீ சொல்லும் போது எப்படி இருக்கும் தெரியுமா சிவா…?

அப்படியே உன் முன்னாடி என் இதயத்தைக் கிழிச்சி அது முழுக்க நீ தாண்டி இருக்க பைத்தியம்னு ஆஞ்சநேயர் சீதைக்கு ராமரைக் காட்டின மாதிரி எனக்கு உன்னைக் காட்ட தோணும்.

ஹும் என்ன செய்ய நான் சாதாரண மனுஷன் தானே. என்னால அதெல்லாம் செய்ய முடியாம போயிடுச்சி. உன்னோட இயல்பே மாறிப் போயி இருபத்திநாலு மணி நேரமும் தேனீ மாதிரி வார்த்தையில கொட்டிக்கிட்டே இருந்த.

உன்ன நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம நான் பட்ட பாடு இருக்கே. அதையெல்லாம் வெளிய சொல்லவே முடியாது சிவா. நெருங்கி வந்தா…. “ஏன் இன்னைக்கு அந்த வீட்டு பக்கம் போகலையோன்னு கேப்ப…

விலகிப் போனா, “நான் வெறும் பொம்மைப் பொண்டாட்டியா உங்களுக்குன்னு கேப்ப. சரி நீஇப்படித் தான் இருக்கப் போறன்னு… உன்னோட வாழ்கையை ஏத்துகிட்டு வாழ ஆரம்பிச்சேன் சிவா. ஆனா என்னோட காதல் தொலைஞ்சிப் போச்சே சிவா…? இனி அது எனக்கு திரும்ப கிடைக்குமா சிவா… சொல்லு சிவா கிடைக்குமா..?’’

கஜபதி தன் மனைவியை உலுக்க, சிவாத்காமிகாவோ, நீர் நிறைந்த விழிகளோடு கணவனைப் பார்த்தவர், “உங்க காதல் எப்படி தொலைஞ்சி போகும். அதான் ரெண்டுப் பொண்ணுங்களா என் கூடவே இருந்தாங்களே….!

உங்க மேல இருந்த கண் மூடித் தனமான காதல் தான் என் கண்ணை கட்டிருச்சி. உன் புருஷன் இப்படி செய்வானா முட்டாள்னு உள்ள ஒருத்தி கத்திக்கிட்டே தான் இருந்தா. ஆனா வெளிய இருந்த முரட்டு சிவா இந்த ஆம்பளைகளே இப்படித் தான்னு பிடிவாதமா தன்னோட வாழ்க்கைய தொலைச்சிட்டா …!

இனி எனக்கு புத்தி வந்துட்டுங்க. அதுக்கு நீங்க கொடுத்த விலை அதிகம் தான். ஆனாலும் இனி உங்க முகத்தைப் பாத்துக்கிட்டு வாழ்ந்தாலே போதும். என் ஜென்மம் ஈடேறிரும்.’’

சிவாத்மிகா புலம்லாய் சொல்லி முடிக்க, மனைவியின் முகத்தை தன் கைகளில் அள்ளிக் கொண்ட கஜபதியோ, “பனிரெண்டு வருஷம் வனவாசம் வீண் போகலை சிவா. எனக்கு என்னோட பழைய சிவா கிடைச்சிட்டா. உன்னோட பழைய காதலோட ஒரு நாள் வாழ்ந்தா போது. நிம்மதியா என் உசுரு போகும்.’’

அவர் அந்த வார்த்தையை உதிர்த்தும், சிவாத்மிகா விரைவாய் தன் கணவரின் வாய் மூடினார். தன் வாய் மூடிய உள்ளங்கையில் கஜபதி அழுத்தமாய் முத்தமிட, நொடியில் சிவந்த முகத்தோடு சிவாத்மிகா தன் கையை எடுத்துக் கொண்டார்.

மனைவியின் சிவந்த வதனத்தை ஆவலுடன் ரசித்த கஜபதி, “உன் முகத்தை இப்படிப் பாத்து ரொம்ப  வருஷம் ஆச்சு சிவா..” என்று ஆசையாய்க் கூறிக் கொண்டே மனைவியை அணைத்துக் கொண்டார்.

எத்தனை வயதானாலும் கணவன் மனைவி தாம்பத்யம், வெறும் உடல் வேட்கையை தணிக்கும் கருவியாய் அல்லாமல், உயிர் தேடலான அன்பை உணர்த்தும் காரணியாய் இருப்பதாலோ என்னவோ இன்னும் இவ்வுலகில் நேசம் நிலைப்பெற்றிருக்கிறது.

பரணியின் வீட்டில் நுழைந்தவர்கள், சற்று நேரம் கஜபதியுடனான தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து விட்டு, உணவையும் முடித்து விட்டு உறங்க செல்ல, பரணி அமைதியாவே இருந்தான்.

ஏதோ முதல் காதல் புறக்கணிக்கப்பட்ட வாலிபன் போல சோகம் வழியும் கண்களோடு அவன் நடமாட, அவன் நிலையை நாட்சியாவல் சகிக்க முடியவில்லை.

இருவரும் அவர்கள் அறைக்குள் நுழைந்ததும், “மாமா… அதான் அப்பா நல்லபடியா நமக்கு கிடைச்சிட்டாரே. இன்னும் ஏன் இப்படி சோகமா இருக்கீங்க..?’’  என ஆற்றாமையோடு வினவ,

நாட்சியாவைப் பார்த்தவனோ, “மயிலு… மாமா… என் மாமா என்கிட்ட பேசவே மாட்டேன்கிறார். நான் பெரிய பாவி. யார் என்ன சொல்லி இருந்தாலும்….நான் நம்பி இருக்க கூடாது. அந்த ஆளை அப்பவே நான் தேடி இருந்து இருக்கணும்.’’ என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்து,

“அந்த ஆள் என்னப் பாக்கும் போது எல்லாம்…. நீ கூட என்ன நம்பலையேடான்னு பார்வையாலையே கேக்கும் போது…. யாரோ கூரான கத்தியை எடுத்து இங்க சொருகுற மாதிரி சுருக் சுருக்குன்னு வலிக்குது மயிலு..” என்று தன் இதயம் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்ட, நாட்சியாவின் மொத்த உள்ளமும் அவன் பால் உருகி கரைந்தது.

எத்துனை வளர்ந்து இருந்தாலும், தன் மாமன் அன்பிற்கு ஏங்கும் சிறுவனாய் பரணியின் செய்கை அக்கணம் இருக்க,நாட்சி பாய்ந்து சென்று பரணியை கட்டிக் கொண்டாள்.

இதற்கு மேல் அவனை அப்படியே சிந்திக்கவிட்டால் அவன் சிந்தம் கலங்கும் என்பதைப் புரிந்துக் கொண்டவள், அடுத்த நொடி தன் இதழ்களை அவன் இதழ்களில் பதித்தாள். சில நேரம் தாம்பத்யம் மனக்காயம் ஆற்றும் மருந்தாகவும் மாறும் அற்புதம் அந்த நொடி அவர்கள் வாழ்வில் உண்மையானது.

செயலை துவக்கி வைத்தவள் என்னவோ அவள் தான், ஆனால் பரணியோ, சுழலும் அண்டத்தை முற்றிலும் மறந்து, பெண் அவள் உலகில் தன்னை மறந்து அவளோடு சேர்ந்து தானும் தொலைந்து போனான்.

யாரோ அவர்கள் அறைக்கதவை படபடவென தட்ட, முதலில் கண் விழித்தது நாட்சி தான். ஜன்னல் திரை சீலைக்கு பின்னே தெரிந்த வெளிச்சத்தில், பொழுது புலர்ந்துவிட்டதை உணர்ந்தவள்,  “இதோ வறேன்..’’ என்றுக் குரல் கொடுத்துவிட்டு, அருகில் கிடந்த இரவு உடையை எடுத்து பர பரவென அணிந்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் வெளியே மதுஸ்ரீயின் உற்சாக குரல்,“நாட்சி அப்பாவும், அம்மாவும் வீட்டுக்கு வந்து இருக்காக. சீக்கிரம் வா..’’ என சொல்ல, கதவு தட்டும் ஒலியில் லேசாய் உறக்கம் கலைந்து இருந்த பரணி படக்கென எழுந்து அமர்ந்தான்.

“என்னது மாமா வந்து இருக்கா..’’ என்றவன், போர்வையை உதறி விட்டு கதவை நோக்கி ஓட, அவன் வழியை வேகமாய் மறித்த நாட்சி, “ஐயோ லூசு மாமா… முதல்ல ட்ரசை போடுங்க…’’ என அவன் முகம் பார்க்க வெட்கி குனிந்துக் கொண்டே சொல்ல,

அசட்டுப் புன்னகையை இதழில் தேக்கியவன், “ஹி..! ஹி..! தேங்க்ஸ் மயிலு… நல்ல வேளை சொன்ன….” என்றவன் வேகமாய் தன் உடைகளைப் பொறுக்கி அணிந்துக் கொண்டான்.

இரவு கூடலில் விழைந்த சோபை முகத்தில் இன்னும் மிச்சம் இருந்தது. கலைந்த தலை முடியை கைகளால் நீவிக் கொண்டவன், அடுத்த நொடி கதவை திறந்துக் கொண்டு வேகமாய் படிகளில் இறங்கி இருந்தான்.

“மாமன் பெயர சொன்னா இந்த மனுசனுக்கு உலகமே மறந்துடும் போல..’’ என்று தன் கணவன் மேல் செல்லமாய் கோபம் கொண்ட நாட்சி கணவனைத் தொடர்ந்து கீழே இறங்கினாள்.

வரவேற்பரையில் இருந்த சோபாவில் கஜபதி கம்பீரமாய் அமர்ந்திருக்க, ராசு மதுரவன் ஒரு புறமும், மூர்த்தி ஐயா ஒரு புறமும், அவர் கைகளைப் பற்றிக் கொண்டு மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தார்.

சிவாத்மிகா ஏதோ மறுவீடு வந்த புதுமணப் பெண்ணைப் போல தாயின் முதுகின் பின் அமர்ந்துக் கொண்டிருந்தார். மகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அந்த தாய் நெஞ்சையும் நிறைத்து இருந்தது.

சோபாவின் நேர் எதிரே வந்து நின்ற பரணி எதிர்பார்ப்போடு தன் மாமனின் முகம் பார்க்க, கஜபதியோ முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.

அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே, “லேய்… இங்க வாலே..’’ எனக் கோபமாய் அழைக்க, பரணி கொஞ்சம் தயங்கிக் கொண்டே அவர் முன் வந்து நின்றான்.

கஜபதியின் அருகில் வந்து நின்றது தான் அவனுக்கு தெரியும். அடுத்த நொடி அவன் அந்தரத்தில் இருந்தான். “லேய் மாப்பிள்ளை…. நீ சாதிச்சிட்டலே…. கஜபதி பாண்டியன் வாரிசுன்னு நிரூபிச்சிட்டலே….. அடிச்ச பாரு கோலு பைனல் மேட்சுல… அப்போ தூக்கி சுத்த முடியல… இப்போ சுத்திக்கிடுதேன்…’’

அவர் ஓவ்வொரு வார்த்தையும் அவன் காதில் தேன் பாய்ந்ததைப் போல இருக்க, “யோவ் மாமா… போயா போ…. ஒன்னும் தேவையில்ல…. இறக்கி விடு மொதோ என்னை….ஒரு வாரமா என்கிட்ட பேசவேயில்ல இல்ல நீ..’’

அவன் மாமனிடம் சலுகையாய் கோபித்துக் கொள்ள, அவனை இறக்கி விட்டவர், “லேய்…பரணி….’’ என்றவர் அவனை இழுத்து அணைத்துக் கொள்ள, பரணியும் அவர் தோள் சாய்ந்துக் கண் கலங்கினான்.

அந்தக் காட்சியை கண்ட அனைவர் கண்களும் கலங்க, அந்த நொடி தன் தங்கை வீட்டிற்குள் நுழைந்து இருந்த பரஞ்சோதியின் விழிகளும் பனித்தன அவர்கள் அன்பில்.

ஒரு வழியாய் தன்னை தேற்றிக் கொண்டவன், அவர் அணைப்பில் இருந்து சற்றே விலகி, “யோவ் மாமா….. இன்னும் உடம்பை சும்மா கின்னுன்னு வச்சி இருக்க. செம ஸ்டாமினா. என்னையே அசால்ட்டா தூக்கி சுத்துற..’’ என அவர் நெஞ்சில் செல்லமாய் குத்த,

தன் முறுக்கு மீசையை நீவிக் கொண்டவர், “உன் மாமனை என்னலே நினச்ச… இன்னைக்கு சந்தைக்கு போனாலும்…. நூறு பேர் பொண்ணு கொடுப்பான்..’’ எனப் பெருமையாய் சொல்ல,

“அத்தை… உம் புருசனுக்கு நூறு பொண்டாட்டி வேணுமாம்..’’ என தன் அத்தையிடம் உடனே கோள் மூட்ட, அவரோ, “போடா… போக்கத்த பயலே..’’ என்றவர், சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தார்.

“யோவ் மாமா எங்க அத்தைக்கு ஒரே ராத்திரியில என்னய்யா சொக்குப் போடி போட்ட….. சொர்ணாக்கா ரேஞ்சுக்கு சவுண்டு கொடுக்குற அத்தை…. சினேகா மாதிரி சிரிச்சிட்டு போகுது..’’எனக் கேள்விக் கேட்க, அங்கிருந்த அனைவரும் சூழலின் இறுக்கம் தளர்ந்து சட்டென, ‘கொல்’ என சிரித்து வைத்தனர்.

கஜபதியே இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என விழித்துக் கொண்டிருக்கும் போது,அவரைக் காக்கும் ஆபத்பாந்தவளாய் மதுஸ்ரீ வந்து நின்றாள்.

“என் அருமைக் கொழுந்தனாரே…… மொதோ நாள் வீட்டு வாசல்ல கஷ்மொரா படத்துல வர நயன்தாரா ராணி மாதிரி வந்து நின்ன என் தங்கச்சிய…. இப்ப சந்தரமுகி படத்துல வர நயன்தாரா மாதிரி அடக்க ஒடுக்கமா மாத்தி வச்சி இருக்கீகளே… அந்த மந்திரத்தை தான் எங்க அப்பா கொஞ்சம் போட்டு இருப்பார்..’’ எனக் கவுண்டர் கொடுத்துக் கொண்டே வந்து கஜபதியின் அருகில்அமர,

“மயினி… நீங்க இங்க தான் இருந்தீங்களா… பாக்காம போயிட்டேனே… முருகா… என்னைக் காப்பாத்து…’’ என்றவன், அங்கிருந்த சூழலில் பொருந்தாமல் நின்ற பரஞ்சோதியின் அருகில் சென்று அவர் தோள் மேல் கைப் போட்டுக் கொண்டான்.

பரஞ்சோதியை நோக்கி, “வாங்க அண்ணா…’’ என மரியாதையாய் அழைத்த கஜபதி, மதுஸ்ரீயின் தலையை வாஞ்சையாய் கோதி விட்டு, “எத்தனை மாசம் குட்டிமா இப்ப..’’ என அன்பாய் வினவினார்.

“இதான் மாசம்பா..’’ என மதுஸ்ரீ வெட்கத்துடன் பதில் கொடுக்கவும், தரணி அவர் அருகில் வந்து, “மாமா உங்களை மொதோ மொதோ கிழவனாக்க பேரனை ரெடி பண்ணிட்டேன். மாப்பிள்ளை கவனிப்பு எல்லாம் ஒன்னும் இல்லையா..?’’என விளையாட்டாய் வினவ,

தன் கழுத்தில் வெகு நாட்களாய் அணிந்து இருந்த முறுக்கு செயினை கழட்டியவர், அதை தன் மருமகனின் கழுத்தில் அணிவித்தார்.

தரணி, “மாமா நான் சும்மா….’’ என்று தழு தழுக்க, அவன் கன்னத்தில் தட்டியவர், “ இப்போதைக்கு உடனே உனக்கு ஏதாச்சும் உசந்ததா கொடுக்கணும்னு தோணுச்சி. கொடுத்துட்டேன்.

இது வெறும் தங்க செயினு இல்ல தரணி. எங்க தாத்தா நான் அவரை மொதோ மொதோ கொள்ளுத் தாத்தாவாக்கினப்பா அன்பா எனக்கு எடுத்துப் போட்டது. உனக்கு இதை இப்போ போடுறது ரொம்ப சரிதேன்..’’என்றவர்,

தொலைவில் தூணில் சாய்த்து நின்றுக் கொண்டு, அவரையே ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த தேவியைக் கண்டவர், “ஏலே தேவிமா… ஏன் அங்கனையே நிக்குறீங்க…? வாங்க அப்பாகிட்ட என அழைக்க, அவர் அழைப்பிற்க்கென்றே காத்திருந்ததைப் போல, தேவிஸ்ரீயும் தந்தையைப் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

Advertisement