Advertisement

கூடு – 27

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற, அதில் 11000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று இருந்தனர்.

உடலெல்லாம் புழுதி படிந்து, ஏதோ சித்தம் கலங்கியவன் போல அமர்ந்திருந்த பரணியைக் காணும் போது எல்லாம் நாட்சியின் விழிகள் உவர் நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தன.

உள் நோயாளியாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தையை எண்ணி அழுவதா…? அல்லது, தந்தையை மீட்டு மருத்துவமனைக்குள் அனுமதித்த நிமிடத்தில் இருந்து உண்ணாமல், உறங்காமல் ஏன் இயற்கை உபாதைகளுக்கு கூட இருந்த இடத்தை விட்டு நகரமால் கிட்ட தட்ட பதினெட்டு மணி நேரமாய் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கும் கணவனை எண்ணி கலங்குவதா எனப் புரியாமல் நாட்சியா அழுது கொண்டிருந்தாள்.

கஜபதியை தேடிச் சென்ற பரணி, மண் சரிவிற்குள் சிக்கிக் கொள்ள, இவர்களைத் தொடர்ந்துக் கண்காணித்துக் கொண்டிருந்த குழு, உடனே மீட்புப் பணியை துரிதப்படுத்தியது.

என்னதான் அவர்கள் விரைவாய் செயல்பட்டாலும், சுரங்கப் பாதையில் இறங்கி இருந்த நால்வருக்கும் சுமார் ஒரு மணி நேர முதல் உதவி தேவைப்பட்டது அவர்கள் சீராய் சுவாசிக்க.

அதோடு, அதே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கஜபதியும் சுயநினைவின்றி உயிருடன் மீட்கப்பட்டார் . அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற,

பரணியின் மொத்தக் குடும்பமும், மருத்துவமனை வாயிலில் நல்ல செய்திக்காய் காத்திருக்க தொடங்கியது. அதிலும் முதல் உதவி முடிந்து தெளிந்து அமர்ந்த பரணி, “மாமா……….. மாமா ….’’ என மருத்துவமனை வளாகமே அதிரும் வண்ணம், கதறி தீர்த்து இருந்தான்.

யார் சொன்னார்கள் ஆண் பிள்ளை அழமாட்டான் என்று. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அழுது ஓய்ந்தவன், இறுதியாய் விட்டத்தை வெறித்த படி ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து விட்டான். சிவாத்மிகா செல்வாம்பிகையின் மடியில் சுருண்டு இருக்க, தேவியோ மதுவை மடி தாங்கி இருந்தாள்.

நாகம்மை, தன் மகன் ராசுமதுரவன் அருகில் இருக்க, கிருஷ்ண மூர்த்தியோ நாட்சியின் அருகில் அமர்ந்து இருந்தார். செங்கனும், தரணியும் மட்டுமே அவ்வப்போது, அவர்களுக்கு அருந்த தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஒரே மனதாய் உணவை துறந்து இருந்தனர். சிவாத்மிகா வேறு செல்வாம்பிகையின் மடியில் அழுது கரைந்த படி, “பாவி நான் அவரை நம்பாம போயிட்டேனே…’’ என நொடிக்கொரு முறை புலம்பிக் கொண்டிருந்தார்.

திறக்குமோ இந்த சொர்க்க வாசல் என அவர்கள் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவின் கதவைத் திறந்துக் கொண்டு, வெளிப்பட்ட மருத்துவர் ஒருவர்,

“பேசன்ட் கஜபதி கூட இருக்கவங்க யாரு..?’’ எனக் குரல் கொடுக்க, மொத்தக் குடும்பமும் வேகமாய் எழுந்து நின்றது. அந்தக் கூட்டத்தை குழப்பத்துடன் பார்த்தவர்,

“பேசன்ட் கண் முழிச்சிட்டார். யாராவது ரெண்டு பேர் உள்ள வந்துப் பாருங்க.!’’ அவர் அந்த வாக்கியத்தைக் கூட முடித்திருக்கவில்லை, அதற்குள் அவரை இடித்துத் தள்ளி விட்டு அவர்கள் மொத்தக் குடும்பமும் கஜபதி அனுமதிக்கப்பட்டிருந்த கட்டிலை நெருங்கி இருந்தது.

அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். கஜபதியின் மூக்கில் ஆக்ஸிசன் மாஸ்க்  சொருகப்பட்டிருக்க, வலது கையில் சொட்டு சொட்டாய் குளுகோஸ் இறங்கிக் கொண்டிருந்தது.

தன்னைக் காண வந்த கூட்டம் முழுமைக்கும் தன் பார்வையை சுழற்றி முடித்தவர், திக்கி திணறி, “செங்கன்…’’ எனக் கேட்க, “நான் இங்க இருக்கேன் ஐயா..’’ எனக் கூட்டத்தை விளக்கிக் கொண்டு செங்கன் முன்னால் வந்து நின்றான்.

உடனே அவர் முகத்தில் தானாக ஒரு அமைதி வந்துக் குடியேற அடுத்த நொடி அவர் மீண்டும் அயர்வாய் விழிகளை மூடிக் கொண்டார். அதற்குள் பயந்துப் போன பரணி,

“ஐயோ டாக்டர்… என் மாமாக்கு என்னை அடையாளம் தெரியல… என்ன என்ன கேக்கவே இல்ல…. மயங்கி வேற போயிட்டார். சீக்கிரம் வந்து பாருங்க..’’ என அங்கிருந்த மருத்துவரை உலுக்கி கொண்டிருந்தான்.

“சார் அவருக்கு மூணு நாளா சாப்பிடாம இருந்ததால வந்த ஹைபோ கிளைசீமிக் தவிர வேற எந்த தொந்திரவும் இல்ல. இன்னும் ஒரு ரெண்டு நாள் அப்படி தான் இருப்பார். அப்புறம் சரியா ஆயிடுவார். மொதல்ல கூட்டம் போடாம நீங்க எல்லாம் வெளிய போங்க..’’ என அவர் குரல் கொடுத்தார்.

“ஏம்லே யாரை வெளிய போக சொல்லுத..?’’ என்றபடி அங்கே பரஞ்சோதி வந்து நின்றார். “ சார் ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர்..’’ அந்த மருத்துவர் சற்றே தயங்கியபடி நிறுத்த,

“உள்ள படுத்து இருக்குறது என் மருமவன் உசுரு. அவனுக்கு பதறத் தான் செய்யும். நீ தான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கணும். அதை விட்டுப் புட்டு…. ஏலே நீ வாலே உன் மாமன் உடம்பு வைரம் பாஞ்சக் கட்ட…மொதோ சீக்காளிப் பய மாதிரி இருக்க இந்த உடுப்பை மாத்து. அப்பந் தான் உன் மாமனுக்கு உன்னை அடையாளம் தெரியும். வாலே என் கூட..’’ என்று விடாப்பிடியாய் தன் மருமகனை வெளியே அழைத்து சென்றார்.

வெளியே செல்லும் முன் பரணியோ, “என்னை விட… என் மாமனுக்கு இவன் எந்த விதத்துல உசத்தி…’’ என செங்கனை ஒரு பொறமை பார்வை பார்த்துவிட்டே சென்றான்.

ஒரு வழியாய் அவர்களை கெஞ்சி கெஞ்சி மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பி இருந்தது. அப்பொழுது சிவாத்மிகா அங்கிருந்த கட்டிலின் கீழ் அமர்ந்துக் கொள்ள, அவரை யாராலும் வெளியேற்ற முடியவில்லை.

அந்த நிமிடத்தில் இருந்து கஜபதியின் உடல் நிலை எந்தப் பின்னடைவும் இல்லாமல் சீராக முன்னேற தொடங்கியது. சரியாய் மூன்றாம் நாள் எழுந்து அமர்ந்தவர், சவரம் செய்து குளித்து முடித்து, தன் வெண்ணிற வேட்டி சட்டையை அணித்துக் கொண்டு கம்பீரமாய் காலைப் பத்திரிக்கை ஒன்றை கையில் வைத்தபடி அமர, அந்தக் காட்சியை கண்டவர்களின் நெஞ்சம் நிறைந்துப் போயிற்று.

அவரைக் கண்டாலே, மற்றவர்களுக்கு பேச்சு வருவதற்குள் விழிகள் தான் கலங்கிப் போயின. அப்படி ஒரு உணர்சிப்பூர்வமான சந்திப்பாகவே அவையெல்லாம் அமைந்துப் போயின.

அதோடு கஜபதி பெரும்பான்மையான நேரம் மௌனத்தில் கழித்தார். “போதும்…. வேண்டாம்…. நான் நல்லா தான் இருக்கேன்….’’ என்பது போன்றவை மட்டுமே அவர் பேசும் வார்த்தைகளாய் இருக்கும்.

மகள்கள் அவருக்கு பணிவிடை செய்யும் போது அவர்கள்தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். சிவாத்மிகாவின் பணிவிடையை மௌனமாய் ஏற்றுக் கொண்டார்.

பரணியைக் காணும் போது எல்லாம், ஒரு ஆழ்ந்தப் பார்வை அவ்வளவே.இப்படியே ஒரு வாரம் கழிய, கஜபதி வீட்டிற்கு கிளம்பும் நாளும் வந்தது. ராசு மதுரவன் வருந்தி வருந்தி அழைத்தும், கஜபதி  நேராய் தங்கள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என உறுதியாய் இருந்தார்.

அவர் நோக்கம் புரியா விட்டாலும், மற்றவர்கள் அவர் சொல்லுக்கு மறுப்பு சொல்லவில்லை. இறுதியாய் நாகம்மை ஆலத்தி கரைத்து சுற்ற, கஜபதி பனிரெண்டு நீண்ட வருடங்கள் கழித்து தன் இல்லத்தில் கால் பதித்தார்.

அங்கிருந்த தூண்களை தடவிக் கொடுத்தவரின் விழிகள் தாமாய் கலங்கின. தன் முகத்தையே ஏக்கமும், காதலும் சரி பங்கில் கலந்து பார்த்துக் கொண்டிருந்த மனையாளைக் கண்டவர்,

‘இங்கே வா’ என்பதைப் போல, தலை அசைத்து அழைக்க, சிவாத்மிகா வேகமாய் அவர் மார்பில் தஞ்சம் புகுந்தார். மனதின் அழுத்தம் எல்லாம், கண்ணீராய் கரைந்து அவர் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.

கணவன் மனைவிக்கு தனிமை கொடுக்க விரும்பிய மொத்தக் குடும்பமும் உடனே அங்கிருந்து கிளம்பி இருந்தது. அதை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை.

மனைவியின் உச்சந் தலையில் தன் தாடையை பதித்துத் கொண்டவர், “நீ கூட என்ன நம்பாம போயிட்டியே சிவா..?’’ என வருத்தம் தேய்ந்தக் குரலில் வினவ, சிவாத்மிகா மேலும் மேலும் கதறி அழுதார்.

“நான் பாவி… உங்க கையால என்னை கொன்னு போட்ருங்க…கொன்னு போட்ருங்க..’’ அவர் விடாமல் புலம்ப, அவர் முகத்தை தன் மார்பில் இருந்து தன் முகம் நோக்கி உயர்த்தியவர்,

“அடிக்கடி கேப்ப இல்ல, எங்கண்ணன் பையன் பரணியை மட்டும் உங்களுக்கு ஏன் அவ்ளோ பிடிக்குதுன்னு…. இப்போ பதில் சொல்லவா சிவா. மொதோ மொதோ ஊர் திருவிழால உன்னை என் கண்ணுல காட்டினதே நம்ம பரணி தான்.

உனக்கு நியாபகம் இருக்கா தெரியல. திருவிழா கூட்டத்துல தவறிப் போனவனை அப்போ விழா கமிட்டியில இருந்த நான் தான் அவன் போட்டு இருந்த ட்ரெஸ் கலர் வயசு எல்லாம் சொல்லி மைக்ல அறிவிப்பு கொடுத்தேன்…

அன்னைக்கு ஒரு மயில் கலர் பட்டு தாவணி பாவடையில நீ தான், ‘அவன் எங்க அண்ணன் மகன் தான்னு…’ அவனை கூட்டிட்டு போக வந்த. அன்னைக்கு உன்கிட்ட விழுந்தவன் தான்.

எங்க தாத்தா பாட்டி மூலமா உன்னை பொண்ணு கேட்டு வந்தேன். அப்புறம் நிச்சயம் முடிஞ்ச சமயம்… நாம எழுதிகிட்ட லவ் லெட்டருக்கு எல்லாம் போஸ்ட் மேன் வேலை பாத்தது அந்தப் பய சட்டை பாக்கெட்டு தான….!

நான் உனக்கு கொடுத்த மொதோ முத்தத்தையும், நீ எனக்கு கொடுத்த மொதோ முத்தத்தையும் சுமந்தது அந்தப் பய கன்னம் தான. எனக்கு என்னவோ அவனைப் பாக்கும் போது எல்லாம்….நீயே குழந்தையா மாறி ஓடி வர மாதிரி தோணும்.

எப்படியோ அவன் நமக்கு மொதோப் பையனா என் மனசுல பதிஞ்சி போயிட்டான். அடுத்தடுத்து நமக்கு பொண்ணுங்க பொறந்தப்ப எல்லாம் எனக்கு கவலையே வரல சிவா. அதான் நமக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கானே அப்படின்னு தோணும்.

நான் நாட்சியோட அம்மா பத்தின உண்மைய உன்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன். ஆனா பஞ்சாயத்துல வச்சி என்னைக் கேட்ட பார் ஒரு கேள்வி…. எனக்கு புரியல சிவா… உன்னை அளவுக்கு அதிகமா நேசிச்சேன். உன்கிட்ட அந்த நேசத்தை முழுசா காட்டா தெரியலையோ என்னவோ..?

ஆனா  அல்லிப் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட விசாரிக்காம, நான் அந்த தப்பை செஞ்சி இருப்பேன்னு நம்புன பாரு. அங்க தான் நான் உடஞ்சி போயிட்டேன்.

அதுவும் ஒரு வகையில நல்லது தான் நாட்சி என் மகளா இருந்தா மட்டும் தான் இந்த சமூகத்துல அவ மரியாதை கெடாம இருக்கும்னு அதையும் நாட்சிக்காக பொறுத்துகிட்டேன்.

உன்கிட்ட பல சம யம் உண்மைய சொல்லனும்னு தோணும். ஆனா அடுத்த நிமிசமே… இந்த உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சா நாட்சியோட நிலை என்ன ஆகுமோன்ற பயமே என் வாயை மூட வச்சது.

எல்லாத்துக்கும் மேலா, சற்று நேரம் கஜபதி கண்களை இறுக மூடிக் கொள்ள, அவர் எதைப் பற்றி சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்துக் கொண்ட, சிவாத்மிகா கணவனை இறுக அணைத்துக் கொண்டார்.

Advertisement