Advertisement

கூடு – 26

ஹாக்கி விளையாட்டின் மூலம், இந்தியா இதுவரை எட்டு தங்கம், மற்றும் மூன்று வெள்ளி என பதினோருப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.   

நாட்சியா சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் ஒரு பிடிப்பற்ற தன்மை. மனதிற்கு மிக நெருக்கமானவர்களை இழக்கும் போது ஏற்படும் வலி, இப்படித்தான் இருக்கும் என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்

சுவற்றில் எறும்புகள் வரிசையாய் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. ஒவ்வொரு எறும்பும் தன்னை விட பதினாறு மடங்கு எடையை தூக்க வல்லதாம். எங்கோ படித்த நினைவு அந்த நொடி அவள் மனதில் உலாப் போனது

சற்று நேரத்திற்கு முன் அவள் சாப்பிட்டு முடித்த தயிர் சாத பருக்கை ஒன்றை ஒரு கட்டெறும்பு அனாயாசமாய் தூக்கிக் கொண்டு ஊற, நாட்சியா தன் நிலை மறந்து அந்த எறும்புகளின் உழைப்பை ரசித்துக் கொண்டிருந்தாள்

சாதப் பருக்கை சுமந்து ஊறும் எறும்பு, அடுத்த நொடி அவள் மூலையில் மின்னல் ஒன்று தாக்கியது. மனதிற்குள் அந்த நினைவை மறுபடி ஒருங்கிணைத்து பார்த்தவள்

செங்கா…’’ என அலறியபடி தட தடவென படிகளில் ஓடினாள். தோட்டத்தில் வழக்கம் போல வேலை செய்துக் கொண்டிருந்த செங்கன் மண்வெட்டியும் தலையில் கட்டிய முன்டாசுமாய் அவள் முன் வந்து நின்றான்

உடனே என் காரை எடு செங்கா…… அத்தை…. அம்மா…..’’ அவள் போட்ட அலறலில், மொத்தக் குடும்பமும் வரவேற்பறைக்கு வந்து நின்றது

நான்நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன்…’’ என்றவள் வீட்டு வாயிலை நோக்கி ஓடினாள். அடுத்து வேகமாய் தலையை தட்டிக் கொண்டவள், மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து

போன்என்னோட போன்….’’ என்று சுற்றும் முற்றும் தன்னுடைய அலைபேசிக்காய் தேட, தேவிஸ்ரீ, அலங்கார அலமாரியில் இருந்த அவளது அலைபேசியை, அவளிடம் கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு

நாலு நாளா மாமா போன் பண்ணும் போது எல்லாம் நான் தான் பேசிக்கிட்டு இருந்தேன். உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொன்னாங்க. அதான்…’’ தேவிஸ்ரீ இழுக்க

நாட்சியா அவள் பதில்களை எல்லாம் நின்றுக் கேட்கும் பொறுமையற்று, தன் அலைபேசியில் இருந்து, தன் கணவனுக்கு அழைத்து இருந்தாள்

அந்தப் பக்கம் பரணி வழக்கம் போல, தேவிஸ்ரீ தான் அழைக்கிறாளோ என்ற எண்ணத்தில், “சொல்லு தேவிமா…. வீட்ல எல்லாரும் சாப்டாச்சா…..நாட்சி என்னப் பண்றா…?’’ என கேள்விக் கணைகளைத் தொடுக்க

மாமா…. நான்….. நான் தான் நாட்சிப் பேசுறேன். இப்போ எதையும் விளக்கி சொல்ல நேரம் இல்ல. எங்க இருக்கீங்க நீங்க இப்ப…?’’ 

நாட்சியின் குரலில் இருந்த அவசரத்தை உணர்ந்தவன், “மயிலுஎன்னமா…. ஏதாச்சும் பிரச்சனையா…?’’ என வினவ

அவன் குரலில் இருந்த பதட்டத்தை உணர்த்துக் கொண்டவள், பல பெரும் மூச்சுக்களை எடுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “மாமா இங்க புதுசா எந்தப் பிரச்னையும் இல்ல…  நீங்க எங்க இருக்கீங்க முதல்ல அதை சொல்லுங்க…’’

என மீண்டும் அவனிடம் கேள்வியைக் கேட்க, “நாங்க இங்க மும்பையில சண்முகநாதன் மாமா ஆபிஸ்ல இருக்கோம்டா…. இங்க விசாரணை போய்ட்டு இருக்கு. நல்லசிவம் வேற மூணு நாளைக்கு முன்னாடி மும்பைக்கு ட்ரைன் டிக்கெட் புக் பண்ணி இருந்ததா இன்பர்மேசன் கிடைச்சி இருக்கு

ஹிப்னாடிக் பண்ணி உண்மைய வாங்கலாம்னு பாத்தா அந்த விசாரணையை ஒரு குற்றவாளி மேல பிரயோகிக்க இவங்க சொல்ற ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் பாலோ பண்ணா முழுசா மூணு மாசம் ஓடிடும் போல…. அதான் இங்க மும்பையில அவரை நல்லா தெரிஞ்சவங்க யாரையாவது பிடிச்சி விசாரிக்கலாம்னு விஜய் கூட நானும் சேந்து வந்து இருக்கேன்.’’ 

பரணி விட்டிருந்தால் இன்னும் என்ன என்ன பேசி இருப்பானோ, அதற்குள் நாட்சியா, “மாமா ப்ளீஸ்கொஞ்சம் ஷார்ட்டா பேசுங்க. நீங்க உடனே முன்பையில இருந்து கிளம்பி நம்ம ஊருக்கு வாங்க. அப்புறம் நம்ம பரஞ்சோதி சித்தப்பா எங்க இருக்கார்..?’’ 

நாட்சி முதல் முறையாக பரஞ்சோதியை முறை சொல்லி அழைப்பதை மனதில் குறித்துக் கொண்டவன், “அவர் ஊர்ல தான் இருப்பார் மயிலுநான் முதல்ல அவரை தான் போலீஸ்ஸ்டேசன்ல சரண்டர் ஆக சொல்லி இருந்தேன். அப்புறம் அடுத்த நாள் தொடர்ந்து நடத்த பிரச்சனையில…. மாமா அவரோட ஆளு ஒருத்தனை சரண்டர் ஆக சொல்லிட்டார். எனக்கும் அப்போ இருந்த சூழ்நிலையில அது தான் சரின்னு தோணுச்சி.’’  

பரணியின் குரலில் குற்ற உணர்ச்சியை உணர்ந்துக் கொண்டவள், “ஐயோ மாமாநான் தான் முட்டாள் தனமா நம்ம குடும்பத்தை ஜெயிலுக்கு அனுப்பி உங்களை எல்லாம் தண்டிச்சிட்டேன். அம்மாவை பத்தின உண்மை தெரிஞ்ச அன்னைக்கு அவங்க எல்லாம் என் பக்கத்துல இல்லாம இருந்து இருந்தா என் நிலைமை என்ன ஆகி இருக்கும்னு எனக்கே தெரியல

இப்போ எனக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கு. அந்த சந்தேகம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. நான் சித்தப்பாவை கூட்டிகிட்டு எங்க பண்ணை வீட்டுக்கு போகப் போறேன்

நீங்க நீங்க சீக்கிரம் அவரை நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க. நீங்களும் சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்து சேருங்க. நான் அப்புறம் உங்ககிட்ட பேசுறேன்.’’என்றவள் அதோடு அலைபேசியை துண்டித்துவிட்டு, வேறு சில ஆட்களிடம் தொடர்ந்து ஒரு முப்பது நிமிடங்கள் உரையாடி முடித்தாள்

வரவேற்பறையில் குழுமி இருந்த பெண்களுக்கு அவளின் பரபரப்பின் காரணம் புரியாவிட்டாலும், அவளின் பதிலுக்காய் அவளை பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தனர்.

அலைபேசியை அணைத்தவள், அப்பொழுது தான் அனைவரும் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். அனைவரையும் சுற்றி பொதுவாக ஒரு பார்வையை ஓட்டியவள்,இறுதியாய் சிவாத்மிகாவிடம் தன் பார்வையை நிறுத்தினாள்

அம்மா நான் அப்பாவை தேடிப் போறேன்மா. என்னோட ஊகம் சரியான்னு தெரியலமா…. ஆனாலும்என் உள்மனசு சொல்லுதும்மா…. நான் அப்பாவைக் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குமா…..’’

அவள் சிவாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, பரஞ்சோதி அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தார். நேராக நாட்சியின் முன் நின்றவர், “ என்ன வர சொன்ன போல..?’’ என எங்கோ பார்த்துக்  கொண்டு கேட்க

அவர் அருகில் சென்று நின்றவள், அவர் கரங்களோடு தன் கரத்தை இணைத்துக் கொண்டு, “வாங்க சித்தப்பா போலாம். நமக்கு நிறைய வேலை இருக்கு..’’ என்றபடி அவரை வாயிலை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றாள்

மொத்தக் குடும்பமும் அந்தக் காட்சியை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டு இருந்தனர். செல்வாம்பிகையை நோக்கி திரும்பியவள், “அத்தை, மாமாவையும், அத்தானையும் வீட்டுக்கு வந்ததும் நேரா எங்க பண்ணை வீட்டுக்கு வர சொல்லிடுங்க..’’ என்றபடி வாயிலுக்கு விரைய

அங்கே அவளுக்கு முன் செங்கன், அவள் காரை கிளப்பி அவர்களை அழைத்துச் செல்ல தயாராய் இருந்தான். இவர்கள் பண்ணை வீட்டை அடையும் போதே, வாயிலில் கும்பலாய் சில மனிதர்களும், ராட்சத ஜே.சி.பி வண்டிகளும் நின்றுக் கொண்டிருந்தன

இவள் காரில் இருந்து இறங்கியதும், ராஜேஷ் ஓடி வந்து, “மேம் நீங்க வர சொன்ன மாதிரி எல்லா அரேஜ்மென்ட்ஸ்சும் பண்ணிட்டேன் மேம்.’’ எனப் பணிவாக சொல்ல

கிரேட் ராஜேஷ்..’’ என்று அவரை வாழ்த்தியவள், பரஞ்சோதியின் புறம் திரும்பி, “சித்தப்பா என்கூட எங்க வீட்டுக்குள்ள வாங்க..’’ என அழைக்க, ஜோதி சாவி கொடுத்த பொம்மையாய் நாட்சியாவை தொடர்ந்தார்

கடைசி முறை அவள் பண்ணை வீட்டிற்கு வரும் போது தாக்கிய வாசனை, அதைத் தொடர்ந்து அவள் மயங்கி விழ நேர்ந்தது, அப்படி விழும் போது, இறுதியாய் அவள் கண்டக் காட்சி அவள் மனத் திரையில் துல்லியமாய் பதிவாகி இருந்தது

அவள் விழுந்த இடத்தில அருகில் இருந்த தரையில் சிறிய துளை இருக்க, அந்தத் துளையில் இருந்து வெளியேறிய கட்டெறும்பு ஒன்று ஒரு சாதப் பருக்கையை சுமந்து சென்றது

அந்த வீட்டில் உணவு சமைக்கப்படுவதேயில்லை. அதோடு துளையில் இருந்து வெளிவரும் கட்டெறும்பு என்றால், தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலவறைப் போல இங்கேயும் நிலவறைகள் இருக்குமோ என்ற சந்தேகம் நாட்சிக்கு உதித்தது

அவளுக்கு துல்லியமாய் அந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை. பரஞ்சோதியிடம் தன் சந்தேகத்தை சொல்லி முடித்தவள், “சித்தப்பாஎனக்கு ரொம்ப பயமா இருக்கு…. நாம எந்த இடம்னு சரியா தெரியாமா எல்லா இடமும் தோண்ட ஆரம்பிச்சா….. ஒருவேளை அப்பா உள்ள இருந்து அவருக்கு ஏதாச்சும் ஆயிட்டா….. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு சித்தப்பா…’’

அவள் குரலில் இருந்த பாசம் அவரை என்ன செய்ததோ, அதுவரை அவளிடம் பேசாமல் அமைதியாய் இருந்தவர், “அட ஏங் கண்ணு பயப்படுற…. உன் சித்தப்பன் இந்தப் பரஞ்சோதி என்னத்துக்கு இருக்கேன். இப்போ எல்லாம் நிலத்தையே ஸ்கேன் புடுச்சி கொடுக்குற மெசின் எல்லாம் இருக்கு. நீ விசயத்தை என்கிட்டே சொல்லிட்ட இல்ல. தைரியமா இரு. என்ன ஏதுன்னு நான் பாத்துப்புடுறேன்.’’ என்றவர்

தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் இருக்கும் சிலரை தொடர்புக் கொண்டு பேச, அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் சில மனிதர்களும், எந்திரங்களும் அங்கு குவிக்கப்பட்டனர்

நாட்சியாவின் பண்ணை வீட்டை சுற்றி சுற்றி பெரும் இரைச்சலோடு குழிகள் தோண்டப்பட்டன. அதுவரை திடமாய் இருந்த நாட்சியாவின் நெஞ்சை பயக் குளிர் தாக்கத் தொடங்கியது.

ஒரு ஓரமாய் நாட்சியா வெளிறிய முகத்தோடு அமர்ந்துக் கொள்ள, அவள் அருகில் வந்து நின்ற செங்கன், “நம்ம ஐயா இங்கன இருந்தா அவருக்கு ஒன்னும் ஆகாது ராணிமா. நீங்க தைரியமா இருங்க’’ எனத் தேற்ற தொடங்கினான்

முதலில் அவர்கள் வீடே தரைமட்டமாக்கப்பட்டு, அங்கிருந்த அனைத்து இடத்திலும் பெரிய குழிகள் அமைத்து நிலவறை இருப்பதற்கான தடயங்கள் தேடப்பட்டன. அங்கே அவர்களின் தேடலின் பலன் பூஜ்யமாக தான் முடிந்தது

அப்படியே கிட்ட தட்ட ஆயிரம் சதுர மீட்டர்கள் இடைவெளி விட்டு விட்டு மூன்று இடங்களை அவர்கள் முழுதாய் சல்லடை போட்டு சலித்து இருந்தார்கள்.     

கிட்டத்தட்ட எட்டு மணி நேரமாய் அங்கும் இங்கும் அலைந்து, நடக்கும் பணியை சலிக்காமல் முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார் பரஞ்சோதி. அதோடு மும்பையில் இருக்கும் தன் மருமகன் சொந்த ஊர் திரும்ப, தனியார் ஹெலிகாப்டர் ஒன்றையும் ஏற்பாடு செய்துக் கொடுத்து இருந்தார்

நாட்சியா அங்கும் இங்கும் மாற்றி மாற்றி தன் ராட்சத பற்களால் பூமியை பிளந்து கொட்டும் ஜே.சி.பி வண்டிகளிலேயே தன் பார்வையை பதித்து இருந்தார்

ராஜேஷ் ஏற்கனவே நாட்சி அறிவுறுத்தியிருந்த படி, உயிர் காக்கும் அனைத்துக் கருவிகளும், வசதிகளும் கொண்ட நவீன மருத்துவ குழு ஒன்றை, அங்கே வரவழைத்து இருந்தான்

அவர்களும் கஜபதி மீட்கப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளித்து அவர் உயிர்மீட்க தயார் நிலையில் இருந்தனர்

மயிலு…’’ தன் அருகில் கேட்ட குரலில், நாட்சியா துள்ளிக் கொண்டு எழுந்தாள். ‘மாமா..’’ ஒரே எட்டில் பரணியை அடைத்தவள், அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்

பயமா இருக்கு மாமா…’’ அவளின் பயத்தை உணர்தவன் போல, அவள் முதுகை நீவிக் கொடுத்தவன்

ஷ்…. மயிலு….. என் மாமானுக்கு ஒன்னும் ஆகாது. நீ தைரியமா இரு. அந்த ஆள் தின்னக் கம்பும் கூலும் நாப்பது நாள் பசி தாங்கும். இந்த நாலு நாள் என் மாமானை என்னப் பண்ணிடும்’’ 

வெளியே நாட்சியை தேற்றிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் பரணிக்கும் கலக்கமே. அவர்கள் நிலையை கலைப்பது போல, தொலைவில் தலையில் மஞ்சள் நிற விளக்குகள் ஒளிரும் தலைப்பாகை அணிந்த ஒருவன்

சார்…. இங்க டனெல் மாதிரி ஒரு ரூட் தெரியுது சார்…’’ அந்தக் குரலில், அணைத்திருந்த நாட்சியை விளக்கி தள்ளியவன், குரல் வந்த திசை நோக்கி ஓடினான். ஒரு நொடி தடுமாறினாலும் அடுத்த நொடி நாட்சியும் பரணியை தொடர்ந்து ஓடத் தொடங்கினாள்

அவர்களின் பின்னே செங்கன், விஜய், ராஜேஷ் என மற்றவர்கள் தொடர்ந்து ஓட, அவர்கள் நின்றுக் கொண்டிருந்தது, நாட்சியின் பண்ணை வீட்டை தொடர்ந்த அவர்களின் தென்னத்தோப்பு

குரல் கொடுத்தவனுக்கு முன்னே, அவனைப் போன்ற ஒளி உமிழும் தலைப்பாகை அணிந்த சிலர் வந்து நின்றனர். வெளியே பெரிய பெரிய சோடியம் விளக்குகள் ஒளியை உமிழ்ந்து, மறைந்துப் போன சூரியனின் பணியாற்றிக் கொண்டிருந்தன

அமேசிங் சிவில் வொர்க்.’’ என்று வியந்த ஒருவன், “கைஸ் எல்லாரும் எதுக்கும் ஆக்ஸிசன் மாஸ்க் அண்ட் பேக் எடுத்துக்கோங்க. இந்த சுரங்கப்பாதை எவ்ளோ தூரம் நீளமா இருக்கும்னு நமக்கு தெரியாது. சோ எல்லாத்துக்கும் தயாரா வாங்க.’’

ஆணையிட்டு முடித்த குழுவின் தலைவன் போல இருந்தவன் முன்னால் நடக்க, அவனைத் தொடர்ந்து, மற்றவர்கள் செல்ல, பரணி, “நானும் வறேன்..’’ என்றுக் குரல் கொடுத்தான்

அவன் அப்படி சொன்னதும் அந்தக் குழு ஒரு நிமிடம் என்ன செய்வது என்பதைப் போல பரஞ்சோதியைப் பார்க்க, பரஞ்சோதி பரணியின் கண்களில் என்ன கண்டாரோ

அவனையும் உங்களோட கூட்டிட்டு போங்கஆனா பத்திரம்..” அவர் குரல் இறுதியில் சற்றே கரகரப்பாக ஒலிக்க, பரணி பாய்ந்து தன் தாய் மாமனைக் கட்டிக் கொண்டான்

நாட்சி, “மாமா..’’ என மிகப் பலவீனமாய் பரணியை அழைக்க, அவளின் எண்ணம் புரிந்த பரணியோ, “வேண்டாம் மயிலு…. நீ வேண்டாம். நான். நான் மட்டும் போறேன்.’’ 

பரணியின் குரலை விட, எங்கும் இருள் சூழந்த நேரத்தில், கொஞ்சம் நகர்ந்து சென்றாள் மூச்சு முட்டுமோ என்ற ஒரு சுரங்கப் பாதையில், தன் தந்தையின் நிலை என்னவாய் இருக்குமோ என்ற கேள்வியை முன் வைத்து தொடங்கப் போகும் பயணத்தில் தன்னால் ஒரு அடி எடுத்து வைக்க முடியுமா..? என்ற கேள்வி முகத்தில் அறைய, நாட்சி அந்த மண் தரையில் மடங்கி அமர்ந்தாள்

பரணி செங்கனைப் பார்க்க, அடுத்த நொடி செங்கன் நாட்சியை தாங்கிக் கொண்டான். “உன் ராணிமா பத்திரம். நான் திரும்பி வர வரைக்கும். ஒரு வேளை வரமாலேயே போனாலும்.’’ 

பரணி அந்த வாரத்தையை உதிர்த்தும், நாட்சியா விலுக்கென நிமிர்ந்தாள். ஆனால் அதற்குள் குழுவினரோடு பரணி தன் பயணத்தை தொடங்கி இருந்தான்

ஏதோ ஆங்கிலப் படத்தை நேரில் பார்பதைப் போல, வௌவால்கள் பல தொங்கிய அந்த சுரங்கப் பாதை இறுதியாய் ஒரு கதவில் சென்று முடிந்தது

அங்கே இருந்தவர்கள் கதவைக் கண்டதும், தாங்கள் இணைந்திருத்த தொலைத் தொடர்பு கருவிகளின் மூலம் வெளியே இருந்த தங்கள் குழுவினருக்கு தகவல் கொடுக்க

கதவைக் கண்ட நொடி, தன் மாமானையே கண்டு விட்டு உவகை அடைந்த பரணி வேகமாய் மோதி கதவை உடைக்க முயல, அவர்கள் நின்றுக் கொண்டிருத்த இடத்தில் இருந்த, மண் சரிந்து அவர்களை அப்படியே தனக்குள் விழுங்கியது

கதவின் உள் மாமனும், கதவிற்கு வெளியே மருமகனும் ஒரே நேரத்தில் மூச்சிற்காய் திண்டாட தொடங்கினர்.

கூடு நெய்யும்.  

Advertisement