Advertisement

நாட்சிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ எனப் பதறித் துடித்தவன், ஒரே எட்டில் அவளை அடைந்து தாய்க் கோழி போல முழுதாய் அவளை தன் உடல் கொண்டு போர்த்தினான்

அங்கிருந்த காவலர்கள், சண்முகத்தை கைது செய்து இழுத்து செல்ல முயலும் போது கூட, பாவி பாவி என்று அரற்றிக் கொண்டிருந்தாரே தவிர, யாரையும் தடுக்க முனையவில்லை

நாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சாதாரண அதிர்ச்சி மயக்கம் என்று மருத்துவரால் அறிவிக்கப் பட்டதும் தான் பரணியின் சுவாசமே இயல்பாகியது

ஆனால் மயக்கம் தெளிந்து எழுந்த நாட்சி, “எங்க அவர்அவர்ட என்ன கூட்டிட்டு போங்க…. அம்மாஎங்க அம்மா பத்தி தெரியணும்…..’’ அவள் கதற தொடங்கவும், வேறு வழியின்றி, அவளை சண்முகத்தை அடைத்து வைத்திருந்த, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்

யார் கேள்விகளுக்கும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்து இருந்தவர், இவள் வருவதைக் கண்டதும், “மை ஏஞ்சல்..’’ என்றபடி எழுந்து நின்றார். நீர் வடியும் கண்களோடு அவரைப் பார்த்தவள்

எங்க அம்மாவை என்ன செஞ்சீங்க…?’’ எனக் கேட்க, தலையை குனித்துக் கொண்டவர், “தப்புநான் செஞ்சது எல்லாமே தப்புஎனக்கு தண்டனை வேணும். நான் சொல்றேன். எல்லாத்தையும் சொல்லிடுறேன். ஆனா அதுக்கு அப்புறம் ஒரு தடவை ஒரே ஒரு தடவை என்னை அப்பான்னு கூப்பிடுவியா ஏஞ்சல்..?’’ 

அவர் அப்படிக் கேட்டதும் அவரை  நிமிர்ந்து பார்த்த நாட்சியா உடனே தன் தலையை குனிந்துக் கொண்டாள். ஒரு பெருமூச்சை வெளியேற்றியவர்

எங்க அண்ணன் உங்க அம்மாவை விட்டு போனதும், நான் அவளை போய் பார்த்தேன். என்னோட வந்துடுன்னு கெஞ்சினேன். அவ முடியாதுன்னு ஒரேடியா மறுத்துட்டா

எனக்கு இருந்த கோபத்துல அவளை கடத்திட்டு போய் குடும்பம் நடத்துவேன்னு சொன்னேன். அதுக்கு உங்க அம்மா…’’

சற்று நேரம் கண்களை மூடி திறந்தவர், “உண்மையா சொன்னாளோ இல்ல என்னை அவமானப்படுத்த சொன்னாளோ தெரியாது. எங்க அண்ணனை தன் மனசுக்குள்ள அவ விரும்புறதா சொன்னா….

எங்க அண்ணன் அவளை பொண்ணு மாதிரி பாத்துகிட்டாலும்….. நிஜத்துல அவரை மாதிரி ஒரு புருஷன் தனக்கு கிடைக்கலையேன்னு மனசுக்குள்ள ஏங்குறதா சொன்னா…. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா எங்க அண்ணன் தான் தனக்கு புருசனா வரணும்னு தினம் கடவுளை வேண்டிக்கிறதா சொன்னா

இப்படி அல்லிப் பேச பேச எனக்கு கோபம் அதிகமாச்சு…. “என்னடி சொன்னன்னு…? வேகமா அவ கழுத்தை பிடிச்சி நெறிக்க அந்த நேரம் எங்க அண்ணன் உள்ள வந்துட்டார்

அவரைப் பார்த்ததும் என் கோபம் முழுக்க அவன் மேல பாஞ்சது. நான் அவர்  சட்டையைப் பிடிச்சி சண்டைப் போட அல்லி ரெண்டுப் பேரையும் பிரிச்சி விட வந்தா,

நான் ரொம்ப கோபமா அவளை பிடிச்சி தள்ளி விட, பால்கனி ஓரத்துல இருந்த கம்பி அவ தொண்டைக் குழியில சொருகி, என் அல்லிஎன் அல்லிஎன் கண்ணு முன்னாடியே..’’ 

அதற்கு மேல் அவரால் சற்று நேரம் பேச முடியாமல் போக, நாட்சி விரிய திறந்த கண்களில் நீர் வடிய அவரை வெறித்துக் கொண்டு இருந்தாள்

சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தவர், மூக்கை உறிஞ்சிய படி, “அவ உடம்புல உசிர் இல்லைன்னு தெரிஞ்ச அடுத்த நொடி நான் ரொம்ப பயந்துட்டேன். என்னைக் காப்பாத்த சொல்லி எங்க அண்ணன் கால்ல விழுந்து கெஞ்சினேன். அவர் மசியல. கொஞ்ச நேரம் அல்லிக்கு முதல் உதவி எல்லாம் செஞ்சிப் பாத்து இனி அவ பொழைக்க மாட்டான்னு தெரிஞ்சதும் போலீசுக்கு கால் பண்ணப் போனார்

அப்போ என்னப் பண்றதுன்னு புரியாம அங்க இருந்த கம்பியால அவர் பின் மண்டையில அடிச்சி அவரை மயக்கத்துல தள்ளினேன். என் பிரண்ட் நல்ல சிவத்தை போன் பண்ணி வர வச்சேன்

ரெண்டு பேரும் சேந்து அந்த ஹோட்டல் பின் பக்க வழியா ரெண்டு பேத்தையும் தூக்கிட்டு என் காருக்கு போனோம். அடுத்து நல்ல சிவம் சொன்ன மாதிரி எல்லாத்தையும் நான் செஞ்சேன்

எங்க அண்ணன் கையெழுத்துல எங்க அண்ணனும், அல்லியும் ஊரை விட்டு ஓடிப் போகப் போறதா லெட்டர் எழுதி அதை அந்த ஹோட்டல் ரூம்ல வச்சோம்

அல்லியோட பொணத்தை கல்லுல கட்டி அவ வாழ்ந்த பண்ணை வீட்டுக் குளத்துல போட்டோம். நாங்களே கஜபதி, அல்லின்னு எங்க ஆளுங்களை ரெண்டு பேரை செட் பண்ணி சிங்கப்பூர் கப்பல்ல அனுப்பி வச்சோம்

நாங்க நினச்சபடி எல்லாரும் எங்க அண்ணனும், அல்லியும் ஊரை விட்டு ஓடிப் போயிட்டதா நம்ப ஆரம்பிச்சாங்க. நாங்க எதிர்பார்க்காத விஷயம் நீ எங்க அண்ணனோட மச்சான் குடும்பத்து கையில சிக்கினது தான்

உன்னை அடைச்சி வச்சி இருந்த ரௌடிகிட்ட பணத்தாசை காட்டி உன்னை காப்பாத்தி, உன்னை ஹாஸ்பிடல்ல சேத்ததும், செங்கன் பாட்டிக்கு தகவல் சொன்னதும் நாங்க தான்

அதே மாதிரி உன் பேங்க் பாஸ் புக்ல எங்க அண்ணன் ஏற்கனவே போட்டு வச்சி இருந்த பணத்தோட மேற்கொண்டு உன்னோட வாழ்க்கை மொத்தத்துக்கும் தேவைப்படுற பணத்தைப் போட்டு, அந்த பாஸ் புக்கை உன்கிட்ட சேத்ததும் நான் தான்

உன்னைக் கொடுமைபடுத்தின அந்த ரௌடி என்ன ஆனான்னு தெரியுமா ஏஞ்சல், அவன் தோலை முழுசா உரிச்சி எடுத்து அவன் உயிரோட இருக்கும் போதே, அப்படியே மிளகா தூளை தடவி, அவன் கத்துற சத்தம், ஹா ஹா ஹா…. ரொம்ப சுகமா இருந்தது.’’ 

அந்த நேரத்தில் அவர் கண்களில் மின்னிய பழி வெறியைக் கண்டவள், வேகமாய் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள். “ உன்னை பாலோ பண்ணிட்டே இருந்தேன் ஏஞ்சல். நீ படிச்சது. சுயமா உன் வாழ்கையை தேர்ந்தெடுத்தது எல்லாமே பிடிச்சது

ஈவன் பரணியை உன் லைப் பார்ட்னரா நீ செலக்ட் பண்ணது கூட ரொம்பப் பிடிச்சது. ஆனா நீயும் தேடுற இல்லஉங்க அம்மா அவன் முதுகுக்கு பின்னாடி மறைஞ்சி வாழ்ந்த மாதிரி நீயும் உன்னோட உண்மையான அப்பாவான என்னை விட்டுட்டுஅவனைத் தேடுற இல்லஅதான் எனக்கு பிடிக்கல ஏஞ்சல்…. கொஞ்சம் கூட பிடிக்கல…. நீங்க யார் எவ்ளோ தேடினாலும் அவன் கிடைக்க மாட்டான். கிடைக்கவே மாட்டான்தேடுங்கஎல்லாரும் தேடுங்ககடைசிவரைக்கும் தேடிட்டே இருங்கஹா.. ஹா ஹா..’’ 

சண்முகத்தின்  வெறிச்  சிரிப்பில் அங்கிருந்த காவலர்கள், அவரை வந்து அடிக்க, அப்பொழுதும் அவர் தன் சிரிப்பை நிறுத்துவதாய் இல்லை. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், நாட்சியா வாயிலுக்கு ஓடினாள்

சண்முகம் கொடுத்த வாக்கு மூலத்தின் படி அவர்கள் பண்ணைக் குளம் தூர்வாரப்பட பரணி தடுக்க முயன்றும் முடியாமல் நாட்சி அங்கே வந்து நின்றாள்

அதற்குள் இந்த சம்பவம் ஊடகத்தின் மூலமும், விஷயம் அறிந்தவர்கள் மூலமும் ஊருக்குள் பரவ, தன் உத்தமக் கணவனை சந்தேகப்பட்டு ஒதுக்கி வைத்த தன் மடத்தனத்தை எண்ணி எண்ணி சிவாத்மிகா கண்ணீர் வடித்தார்

தேவிஸ்ரீயும், நாகம்மையும் தேவையில்லாமல் ஒரு நல்லப் பெண்ணின் மேல் வெஞ்சினம் வளர்த்து விட்டோமே எனத் தங்கள் இழைத்த தவறை எண்ணி வருந்தினார்கள்.   

லேய் பரணி…’’ தரணியின் உலுக்கலில் கண் விழித்தவன், தன் எதிரே இருந்த அண்ணனைப் பார்க்க, “கவலைப்படாதேடாமாமா கண்டிப்பா கிடைச்சுடுவார்..’’ என சொல்ல

மறுப்பாக தலை அசைத்தவன், “நாம எல்லாம் மாமாவை சந்தேகப்பட்டு இருக்காம…. அப்பவே இப்படி யாராச்சும் ஏதாச்சும் செஞ்சி இருப்பாங்கன்னு யோசிச்சி தேடி இருந்து இருந்தா…. இந்நேரம் மாமா நம்ம வீட்ல இருந்து இருப்பார் இல்லணா…. 

நாட்சிக்கு மாமா மேல இருந்த நம்பிக்கை நமக்கு இல்லாம போச்சேண்ணா. அதை யோசிக்கும் போது தான் செத்துப் போகலாம் போல இருக்குணா. அந்த சைக்கோ  இத்தனை வருசத்துல மாமாவை என்ன என்ன கொடுமை பண்ணானோ தெரியலையேணா..?’’ 

தன் இடையில் முகம் புதைத்து சிறு குழந்தைப் போல விசும்பி அழும் தம்பியை எப்படித் தேற்றுவது எனப் புரியாமல் விழித்த, தரணி, “லேய்…. இது என்ன சின்னப்பிள்ளையாட்டம். அங்கப் போய் உன் பொண்டாடிய சமாதனப்படுத்துலேய். பாவம் பச்சை தண்ணிக் கூட குடிக்காம தேம்பி தேம்பி அழுதுக்கிட்டு கிடக்கா..’’ 

அண்ணன் உணர்த்திய செய்தியில் தன்னை கொஞ்சம் மீட்டுக் கொண்டவன், சிவத்மிகா மடியில் தலை சாய்த்து இருந்த நாட்சியை தேடிப் போனான். “நாட்சி..’’ அவன் அழைக்க அவளோ பொம்மை போல நிமிர்ந்து பார்த்தாள்

பரணி தன் தாயை ஜாடையாக பார்க்க, அவரோ தயாராய் தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த பாலை மகனின் கையில் கொண்டு வந்துக் கொடுத்தார். அதை அவன் இதழின் அருகே கொண்டு செல்ல, முதலில் மறுத்தவள், அவன் பிடிவாதமாய் பார்த்துக் கொண்டே இருக்கவும்

வேறு வழியின்றி குடிக்க தொடங்கினாள். பாலைக் குடித்த பத்து நிமிடங்களில் அவள் உறங்கிவிட, அவளை அள்ளிச் சென்று தங்கள் படுக்கை அறையில் உறங்க வைத்தான்

பிரேதப் பரிசோதனை முடியவும், அல்லியின் மீதம் இருந்த எலும்புகளுக்கு, பரணியின் குடும்பம் வெகு கெளரவமாய் இறுதிக் கடனை செய்து வைத்தது. அவரின் மருமகன் என்ற முறையில் பரணி தான் அவருக்கு கொல்லி வைத்தான்

நாட்சியை வீட்டில் இருந்த பெண்கள் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டனர். பரணி இதற்கு மேலும் தான் வேடிக்கைப் பார்ப்பது சரியல்ல என்று முடிவு செய்து கஜபதியைக் கண்டுபிடிக்க விஜய் அமைத்து இருந்த குழுவில் தன்னையும் இணைத்துக் கொண்டான்

அப்படி அமைந்த விஜய்யின் குழு ஊரை விட்டு கிளம்பி சென்று நாட்கள் நான்கை கடந்து இருந்தன. நாட்சி விழித்தால் சுவற்றை வெறிப்பதும், தூக்க மாத்திரையின் உபயத்தால் உறங்குவதுமாய் இருந்தாள்

செங்கன் வழக்கம் போல பண்ணை வீட்டை பராமரித்து வந்தான். கூடுதலாக கண்களில் ஒரு வெறுமை. ஆக மொத்தம் அவர்களின் வீடே சோக நதியில் மூழ்கி இருந்தது.

அந்த சோக நதியை  தன் ஒரே சூரிய பாரவையால் வற்ற செய்யும் திறன் படைத்த மனிதர் இருள் சூழ்ந்த ஒரு அறையில் புலம்பிக் கொண்டிருந்தார், “தண்ணீதண்ணி..’’ என.

கூடு நெய்யும்.  

Advertisement