Advertisement

கூடு – 25

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக தங்கப் பதக்கங்களை தொடர்ந்து பெற்றுத் தந்து இந்தியாவின் பதக்கப்பட்டியலில் கணிசமான இடம் பிடித்த விளையாட்டு ஹாக்கி

நாட்சியா பரணியின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தாள். இனி அழுவதற்கு திராணி இல்லை என்பதைப் போல அவள் விழிகள் சிவந்து வீங்கி சோர்ந்து இருந்தன

விஜயின் தலைமையில் அவர்கள் பண்ணைக் குளம் தூர் வாரப்பட்டுக் கொண்டிருந்தது. காக்கி உடை அணிந்த காவலர்கள் அந்த பிராந்தியத்தையே ஆக்கிரமித்து இருந்தனர்

ராசுமதுரவன், தரணி, பரஞ்சோதி என அவர்கள் குடும்பத்து மொத்த ஆண்களும் அங்கே குழுமி இருந்தனர். நடந்த களேபரங்களில் செம்மர கடத்தல் விவகாரத்தில் வேறு ஆளை இறக்கி, குடும்பத்தினர்களை பரணி வெளியே கொண்டு வந்திருந்தான்

அங்கிருந்த மணலை தூர் வாரிக் கொண்டிருந்த பொக்லைன் வண்டியில் இருந்த ஓட்டுனர், ‘சார்..’’ எனக் குரல் கொடுக்க, அங்கிருந்தவர்களின் மொத்தக் கவனமும் அவரை நோக்கி திரும்பியது. அவர் தூர் வாரிக் கொண்டிருந்த இயந்திரத்தின் முனையில், வேலி அமைக்க பயன்படும் நீள் வாக்கு கடப்பாறை கல் சிக்கி இருக்க அதில், வெறும் எலும்புக் கூடாய் ஒரு உருவம் இணைக்கப்பட்டிருந்தது

நாட்சி உயிரை உலுக்கும் குரலில், ‘அம்மா…’’ என அலறிக் கொண்டே அந்த இடம் நோக்கி பாய முயல, பரணி தன் முழு சக்தியையும் பயன்படுத்தி அவளை தனக்குள் புதைத்துக் கொண்டான்

அத்தனை ஆண்டுகள் கடந்தும், அவர் அணைந்திருந்த நகைகள் அவரை யார், என தெளிவாய் அடையாளம் காட்ட, ஏற்கனவே வரவழைக்கப்பட்டிருந்த மருத்துவ குழு, பிரேதே பரிசோதனைக்காய் அந்த வெறும் கூட்டை சுமந்து சென்றது

நாட்சியா அழுது அழுது ஓய்ந்து, ஒரு வெறித்த பார்வையோடு பரணியின் பிடிக்குள் அடங்கிவிட்டாள். ஒரு வழியாய் அனைத்து விதமான சம்பர்தாயங்களும் முடிய, காவலர் படை அவள் வீட்டை விட்டு கிளம்பியது

இறுதியாய் விஜய் கிளம்பும் முன் தரணியின் அருகே வந்து, “ தைரியமா இரு மாப்பிள்ளை…. எப்படியும் உங்க மாமாவை மீட்டுடலாம். அந்த சைக் உங்க மாமாவை உயிரோட அடைச்சி வச்சி இருக்குறதா விசாரணையில ஒத்துகிட்டான். ஆனா இடத்தை தான் என்ன டார்ச்சர் கொடுத்தாலும் சொல்ல மாட்டேன்கிறான்

நாங்க டாக்டர்ஸ் உதவியோட அந்த ஆளுக்கு மருந்து கொடுத்து ஹிப்னாடிக் முறையில உண்மைய கண்டுபிடிக்க அனுமதி கேட்டு இருக்கோம். எப்படியும் நாளைக்கு மதியதுக்குள்ள பர்மிசன் கிடைச்சிடும். உங்க மாமாவை உயிரோட மீட்டுடலாம்

அதோட தலை மறைவா இருக்குற நல்லசிவனைக் கண்டுபிடிக்கவும் ஒரு தனி டீமே பார்ம் பண்ணி இருக்கோம். கண்டிப்பா ஏதோ ஒரு வழியில உங்க மாமா எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சிடலாம்.’’ விஜய் பரணியின் தோள்களை தட்டி சொன்னான். 

பரணியோ அதற்கு ஒப்புதலாய் தன் தலையை மட்டும் அசைந்தான். கடந்த இருபத்திநான்கு மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனை முற்றிலும் புரட்டிப் போட்டு இருந்தன

நண்பனின் சோர்வைக் கண்ட விஜய், “ஓகே பரணி…. அப்போ நானும் கிளம்புறேன். எனக்கு எப்போ எந்த நியூஸ் தெரிஞ்சாலும் உடனே உனக்கு கால் பண்றேன். நீ மேடத்தை பார்த்துக்கோ…’’ என்றவன் அங்கிருந்து விலகி நடக்க

ராசு மதுரவன், பரணியை நோக்கி வந்தார். “தம்பி நம்ம வீட்டுக்கு போயிடலாம்யா….. இங்க இருந்தா மறுபடி மறுபடி அதே நினைப்பே இருக்கும் பிள்ளைக்கு..’’ அவர் அப்படி சொல்லவும் பரணி மீண்டும் சரி என்பதாய் தலையை மட்டும் அசைத்து வைத்தான்

அவர்கள் முன்னே நடக்க, பரணி நாட்சியாவை தோளில் சுமந்த படி அவர்களுக்கு பின்னால் நடந்தான். ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த செங்கன் இவர்கள் நடக்கத் தொடங்கவும், தானும் அவர்களோடு வந்து இணைந்துக் கொண்டான்

தாங்கள் வழக்கமாய் வெளியே செல்லும் பொலிரோ வண்டியை அங்கே எடுத்து வந்து இருந்ததால், அனைவரும் ஒரே வண்டியில் ஏறி தங்கள் பயணத்தை தொடங்கினர்

நாட்சியின் ஆல்பா வண்டியை தரணி தங்கள் வீட்டு ஓட்டுனர் மூலம் ஏற்கனவே வீட்டிற்கு அனுப்பி வைத்து இருந்தான். இவர்கள் வண்டி வீட்டை அடைந்ததோ, இல்லையோ

பெண்களின் ஒப்பாரிக் குரல் அவர்களின் செவியை நிறைத்தது. காதில் தண்டட்டி ஆட முன்னால் ஓடி வந்த, நாகம்மை, “அடியே ராசாத்தி…. நீ யாரு எவருன்னு தெரியாமா உன்ன ஏசி பேசிட்டேனேடி தங்கமே…. வைராக்கிய வைரத்துக்கு பிறந்த என் வைரமேஉன்ன தவிக்க விட்டு போயிட்டாளேடி உன்ன பெத்தவ..’’

நாகம்மையின் ஒப்பாரி பெண்களை குமுறி குமுறி அழ வைக்க, அங்கே இருந்த ஆண்களின் கண்களும் ஈரமானது. சிவாத்மிகா, நாட்சியின் முன்னால் வந்து நிற்க

அதுவரை பரணியின் தோளை விட்டு வெளியே வர மறுத்த நாட்சியா, தாயை தேடும் கன்றாய் பாய்ந்து சென்று சிவாத்மிகாவை கட்டிக் கொண்டாள். “அம்மா…. மா…’’ என்ற பரிதவிப்போடு

இருவருக்கும் அங்கே வார்த்தைகள் பயனற்று போக மௌனக் கண்ணீரில் தங்கள் சோகத்தை பெண்கள் இருவரும் ஆற்றிக் கொண்டிருந்தனர். செல்வாம்பிகை முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு அழ

தேவிஸ்ரீ, மதுஸ்ரீ இருவரும் தங்கள் உடன் பிறவா சகோதரியின் இருபுறமும் தங்கள் தாயை ஒட்டி நின்றுக் கொண்டிருந்தனர். அல்லியின் கதை அதற்குள் ஒட்டு மொத்த வள்ளியூர் மக்களின் காதை எட்டி இருந்தது

ஊடகங்கள் அதற்கு முக்கிய காரணம் என்றாலும், ஒரு விசயத்தை காதில் கேட்டதும் அதை பத்து காதுகளுக்கு சேர்த்துவிடும் பெண்களின் சாமர்த்தியமும் அதற்கு முக்கிய காரணமாய் இருந்தது.   

பரணி சோர்ந்து போய் அங்கிருந்த இருக்கை ஒன்றில் கையில் தலையை தாங்கியபடி அமர்ந்துவிட்டான். நடந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அவன் மன திரையில் விரிந்துக் கொண்டே இருந்தன

தன்னை பண்ணை வீட்டிற்கு அழைத்த விஜய்யின் குரலில் மாற்றத்தை உணர்ந்த போதே, தன் உடையில் எதற்கும் தேவைப்படும் என்று வாங்கி வைத்திருந்த சிறிய ஜி.பி.எஸ் கருவியை இணைத்துக் கொண்டவன், அந்த செய்தியை நாட்சியாவிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்

அவன் பண்ணை வீட்டை அடையவும், அங்கு வீடு யார் அரவமும் இன்றி விரியத் திறந்திருந்தது. இவன் உள்ளே நுழையவும், ஏதோ வித்யாசமான நொடி மூக்கை துளைக்க, அதன் பிறகு நடந்தது எதுவும் அவன் நினைவில் இல்லை

அவன் கண்விழித்து பார்க்கும் போது, ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு இருந்தான். தன் உடைகள் மட்டும் மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தவன், சுற்றும் முற்றும் பார்க்க, அருகில் விஜய் ஒரு நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு இருந்தான்.

இவன் விழித்து சற்று நேரம் கழித்தே விஜய் கண் விழித்தான். அவனுக்கு விழிப்பு வந்ததும், “டேய் மாப்பிள்ள சாரிடா…… என் பையனை கடத்தி வச்சி இருக்குறதா சொல்லி…. உன்னை பண்ணை வீட்டுக்கு கூப்பிட சொன்னாங்கடா…. அப்புறம் எதுவும் நியாபகத்துல இல்லஇது என்ன இடம்டா…’’ என்ற விஜய் சுற்றும் முற்றும் தன் பார்வையால் அளக்க

தெரியலை மச்சி…. சரி யார் உன்னை ப்ளாக் மெயில் பண்ணது..’’ என பரணி கேட்க, “தெரியலை மச்சி…. பேர் எல்லாம் சொல்லலஆனா என் பையன் உடம்புல இருக்குற மச்சம் வரை சொன்னானா…. அதான் நான் பயத்துல..’’ விஜய் நிறுத்த

பரவாயில்ல விடுறா…. பாத்துக்கலாம்நான் போட்டுட்டு வந்த ட்ரெஸ்ல ஒரு ஜி.பி.எஸ் கனெக்ட் பண்ணி இருக்கேன். அந்த விசயத்தை நாட்சிக்கும் மெசேஜ் பண்ணி இருக்கேன். எப்படியும் நம்மளை கண்டுபிடுச்சிடுவாங்க..’’ 

என தேறுதல் அளித்தவன், “ஆனா என் ட்ரெஸ்சை மட்டும் எதுக்கு மச்சி எடுத்து இருப்பானுங்க..?’’ எனக் கேட்க, இருவருக்கும் ஒரே நொடியில்  அதற்க்குண்டான விடை கிடைக்க

இருவரும் ஒரே சமயத்தில், “ஓ மை காட்..’’ என வாய் விட்டு அலறினர். பரணி எண்ணியபடியே அவன் உடையை வைத்து நாட்சிக்கு தூண்டில் விரித்து இருந்தார் சண்முகம்

ஆனால் அந்த உடையில் இருந்த ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டே, நாட்சி அவருக்கு தூண்டில் விரித்து விட்டாள் என்பது தான் உண்மை. பரணியின் உடையில் அந்தக் கருவியைக் கண்டவள்

ராஜேஷை தண்ணீர் கொண்டு வர சொல்லி, அதில் தன் உடலில் இணைத்துக் கொள்ளப் போகும் ஜி.பி.எஸ் பற்றிய தகவலை அவருக்கு கொடுத்துவிட்டு, அவள் பிரேம் அறைக்கு செல்லும் அரை மணி நேரத்தில் பிரேம் இறந்ததாக மருத்துவர் ஊடகத்தின் முன் தகவல் அளிக்க வேண்டும் எனவும் எழுதிக் காட்டவும், ராஜேஷ் அவள் வார்த்தைகளை அச்சு மாறாமல் பின்பற்ற தொடங்கினார்

ஆனால் நாட்சியாவை மறைத்து வைத்திருந்த அறை நிலவறை என்பதால் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் இழுத்துவிட்டது. முதலில் மேல் அறைகளை அவர்கள் உடைத்து தேட, அங்கே இருந்த பரணியும் விஜயும் முதலில் மீட்கப்பட்டனர்

அவர்களோடு மற்ற இடங்களையும் அவர்கள் சல்லடையிட்டு தேட, நிலவறையில் இருந்த பழங்கால முரட்டு மரக்கதவு அவர்கள் வழியை மறிக்க, அவர்கள் துப்பாக்கி தோட்டாவால் அதை தகர்த்து உள் நுழையும் போது கண்ட காட்சி, பரணிக்கு இப்பொழுதும் பட படப்பை தோற்றுவித்தது

அம்மா..’’ எனக் கத்திக் கொண்டே மயங்கிச் சரியும் நாட்சி, “நான்.. பாவி.. பாவி’’ எனக் கத்திக் கொண்டே, தரையில் கைகளை குத்திக் கொள்ளும் சண்முகத்தையும் கண்டவனின் உள்ளம் ஒரு நொடி ஆடித் தான் போயிற்று

Advertisement