Advertisement

ஏற்கனவே நீங்க எங்க மலைக்கு வந்து போன விசயத்தை எல்லாம் உங்க சோக்காளிங்க மூலமா விசாரிசிட்டார் போல. என் கண்ணைப் பார்த்து இனி என்ன செய்யலாம்னு இருக்க அப்படின்னு கேட்டார்.

நான் அவர் கண்ணைப் பாக்காமலேயே, “குழந்தைப் பிறந்ததும் அதை எங்க தாத்தாகிட்ட ஒப்படைச்சிட்டு… செத்துப் போகலாம்னு இருக்கேன்’’ அப்படின்னு சொன்னேன்.

உடனே உங்க அண்ணன் ரொம்ப கோபமா, “எங்க குடும்ப வாரிசு அனாதையா யார்னே அடையாளம் தெரியாம உங்க காட்டுல வளர நான் அனுமதிக்க மாட்டேன்..’’ அப்படின்னு சொல்லிட்டு,

“இப்போ என் தம்பிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. கடவுள் உன் சார்பா அவனுக்கு சரியான தண்டனையை கொடுத்து இருக்கார். இனி அவனால வேற எந்தப் பொண்ணையும் அம்மா ஆக்க முடியாது.

நீ விருப்பப்பட்டா நான் எங்க வீட்ல பேசி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்  பண்ணி வைக்கிறேன். அவன் முதல் பொண்டாட்டி இப்போ அவனை விவாகரத்துப் பண்ண தயாரா இருக்கா..’’அப்படின்னு ஐயா சொன்னதும்,

“மறுபடி உங்களோட வாழ வேண்டிய சந்தர்ப்பம் வந்தா நான் உயிரை விட்ருவேன்னு சொன்னேன். எந்தக் காலத்துலையும் நம்பிக்கை துரோகி பிச்சை போடுற வாழ்க்கை எனக்கு வேண்டாம்னு சொன்னேன்.

நான் அப்படி சொன்னதும் உங்க அண்ணன் வேற எதுவும் பேசல. ‘’உனக்கு ஒரு வாழ்க்கை வேண்டாம். ஆனா உன் வயித்துல இருக்க எங்க குடும்ப வாரிசுக்கு பின்னாடி ஒரு பேர் வேணும். அதைக் கண்டிப்பா நாங்க தான் கொடுக்கணும்.

நான் கொடுக்கப் போறேன். அதனால என்ன கெட்டப் பெயர் எனக்கு வந்தாலும் பரவாயில்ல. போ போய் தாயாராகு. இன்னைக்கு நைட்டே நாம வள்ளியூர் போறோம்.’’

அவர் சொன்ன மாதிரி என்னை அவரோட கூட்டிட்டு போனார். போற வழியில ஒரு மஞ்சள் கயித்தை கொடுத்து அதை என்னையே என் கழுத்துல கட்டிக்க சொன்னார்.

நாங்க அங்கப் போய் இறங்குனதும் ஏகப் பிரச்சனையாகிப் போச்சு. பெரிய பஞ்சாயத்து நடந்து அவர் குடும்ப சொத்துல இருந்து எனக்குப் பிறக்கப் போற குழந்தைக்கு எந்தப் பங்கும் கொடுக்க போறதில்லைன்னும்,

தன்னோட குழந்தைக்கு அம்மாங்குற முறையில, எனக்கு ஜீவனாம்சம் கொடுக்குறது மட்டும் தன்னோட பொறுப்பும்னு,  எல்லார் முன்னாடியும் பத்திரத்துல எழுதிக் கொடுத்து, பஞ்சாயத்தார் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டார்.

அப்போ தான் உங்க அண்ணி சிவாத்மிகாவை நான் பாத்தேன். அவங்க கண்ணுல இருந்த வலி ஜென்மத்துக்கும் என்னால மறக்க முடியாது. ஆனா அவர் செய்த தியாகத்துக்கு பரிசா எங்களுக்கு நாட்சியா கிடைச்சா.

ஒரு நல்ல அப்பா என் பொண்ணுக்கு கிடைச்சதுக்கா நான் இந்த நிமிஷம் வரை பெருமையா உணர்றேன். ஊருக்கு தான் நான் அவரோட ரெண்டாவது பொண்டாட்டி. உண்மைய சொல்லப் போனா அவர் என்னை தன்னோட மூத்தப் பொண்ணு மாதிரிப் பாத்துக்கிறார்.

நிறைய நாள் நான் ஒடஞ்சி போய் இருந்தப்ப எல்லாம் என்னை விடவும் இந்த சமூகத்துல மோசமா பாதிக்கப்பட்டவங்க இருக்காங்கன்னு காட்ட, என்னை பக்கத்துல இருந்த சர்ச்ல இயங்கிட்டு இருந்த கேரிங் ஹோமுக்கு அனுப்பி வச்சார்.

என் பொண்ணு படிக்க போனதுக்கு அப்புறம், எனக்கு தனியா டீச்சரை ஏற்பாடு பண்ணி என்னோட அறிவை வளத்து விட்டார். இப்போ அடுத்து என் வாழ்கையை எப்படி வாழணும்னு நான் தெளிவா முடிவு எடுத்தாச்சு.

நாட்சிக்கு விவரம் தெரிஞ்சதும், நான் கிறித்தவ மதத்தை தழுவி கன்னியாஸ்திரி ஆகப் போறேன். எனக்கும் எம் பொண்ணுக்கும் ஒரு கௌரவமான அடையாளத்தைக் கொடுத்த கஜபதி ஐயா நிம்மதியை நான் மறுபடி மீட்டுத் தரப் போறேன்.

மிஞ்சிப் போனா இன்னும் மூணு வருஷம் தான் என்னோட இந்த குடும்ப வாழ்க்கை வேஷம். இனி என் வாழ்கையை கடவுளுக்கும், அவர் துணையோட கடை நிலையில இருக்குற மனுசங்களுக்கும் சேவை செஞ்சிக் கழிக்க போறேன்.

முதல்ல ஐயா என்னோட முடிவை ஏத்துக்க மறுத்தார். தன்னோட பொண்ணுக்கு அம்மாங்குற உறவு எப்பவும் இருக்கணும்னு நினைச்சார். ஆனா நான் அவருக்கு புரிய வச்சேன்.

இன்னும் கொஞ்ச நாள்ல மத்தவங்க எங்களைப் பத்தி பேசுற விஷயம் எல்லாம் அவளுக்கு புரிய தொடங்கினா, அவ நிலைமை என்ன ஆகும்னு நான் சொன்னதும் அவரும் யோசிக்க ஆரம்பிச்சார்.

அந்த நேரத்துல தான் நாட்சியா பத்தின விசயத்தை உங்ககிட்ட இருந்து மறைச்சி வச்சதுக்காக ரொம்ப வருத்தப்பட்டார். தான் அவளோட உண்மையான அப்பாகிட்ட இருந்து அவளை பிரிச்சி வச்சதை சொன்னா நாட்சியா தன்னை வெறுத்துத்துடுவாளோன்னு பயந்தார்.

அப்போ நான் என்ன சொன்னேன் தெரியுமா…? அவ எந்தக் காலத்துலையும் அவளோட உண்மையான அப்பாவான உங்களை வெறுக்கவே மாட்டான்னு சொன்னேன்.

நீங்க அவளுக்கு கொடுத்தது வெறும் உயிர்…. ஆனா ஐயா அவளுக்கு கொடுத்தது உறவு…. அப்பாங்கிற உறவு… உண்மையான உறவு… அது நீங்க கொடுத்த உசிரை விட ரொம்பப் பெருசு.

உங்களை கையெடுத்துக் கும்பிடுறேன். தயவுசெஞ்சி என் முன்னாடி இனி வராதீங்க. ஊருக்கு உண்மைய சொல்றேன்னு என் மக பிறப்பை அசிங்கப்படுத்திடாதீங்க. நீங்க இப்ப இங்க இருந்து போலாம்.’’

அப்படின்னு சொல்லிட்டு உங்க அம்மா அங்க இருந்து அவ ரூமுக்கு போய் கதவை அறைஞ்சி சாத்தவும், எனக்கு உலகமே இருண்டு போன மாதிரி ஆயிடுச்சி.

எங்க அண்ணனும் அவர் பங்குக்கு, “நான் அல்லியை உன்னோட சேத்து வைக்கிறதா தான் சொன்னேன். அவ தான் அப்படி ஒரு விஷயம் தன் வாழ்கையில நடந்தா நான் உயிரோட இருக்க மாட்டேன்னு சொன்னா.

நம்ம குடும்ப வாரிசை கௌரவிக்க வேற வழி தெரியலை சண்முகம்னு சொன்னார். ஆனா அவர் ஆறுதல் வார்த்தை எதுவும் என் மண்டையில ஏறல. என்னைப் பொறுத்தவரைக்கும் என் அழகான குடும்பத்தை என்கிட்டே இருந்து பிரிச்ச துரோகியா தான் அவர் தெரிஞ்சார்.

அந்த நிமிஷம் நான் அமைதியா அவங்க வீட்ல இருந்து வெளிய வந்தேன். ஆனா அதுக்கு அப்புறம் நான் அல்லியோட வாழ்கையில இருந்து ஒதுங்கிப் போகல.

அவளுக்கு லெட்டர் எழுத ஆரம்பிச்சேன். நல்லசிவம் மூலமா எங்க அண்ணன் குடும்பத்துல நடக்குற ஒவ்வொரு விசயத்தையும் கண்காணிக்க தொடங்குனேன்.

சென்னைல இருந்த போர்டிங் ஸ்கூல்ல நீ படிச்சது எனக்கு ரொம்ப வசதியாப் போச்சு. எப்பவும் உன்னை என் கண் பார்வையிலேயே வச்சிக்கிட்டேன்.

உன் பக்கத்துல வந்து உன்னை  செல்லம் கொஞ்சி சந்தோசப்பட்டதிலையே தவிர உன்னோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சேன். நீ ஆறாவது படிக்கும் போது ஸ்விமிங்ல முதல்ல வந்தியே அப்போ என் கம்பெனி ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் மூணு மாச சம்பளம் போனஸா கொடுத்தேன்.

உன்னோட ஒவ்வொரு பர்த்டேக்கும் எவ்ளோ செலவு பண்ணுவேன் தெரியுமா..? அநாதை ஆசிரமத்துல இருந்து, கோவில்ல அன்னதானம் இப்படி… அந்த ஒருநாள் செலவு கணக்கு எப்பவும் லட்சக் கணக்குல தான் இருக்கும்.

அல்லியை நான் சும்மா சலனப்படுத்திட்டே இருந்தேன். எங்க அண்ணன் ஊர்ல இல்லாத நேரத்துல எல்லாம் யார்க்கும் தெரியாம அவளோட பேச முயற்சி பண்ணிட்டே இருந்தேன்.

ஒருகட்டத்துக்கு மேல அவளால என்னை பாத்து பழைய அல்லியா ஓடி ஒளிய தொடங்குனா.நான் அவளை விடாம துரத்த, எங்க அண்ணன் அவனோட பேரை உனக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக மறுபடி என்னோட வாழ முடியாதுன்னு சொன்னா.

நான் அவளை எப்படி எப்படியோ கன்வின்ஸ் பண்ணேன். நீ, நான் அல்லி எல்லாரும் வெளிநாட்ல போய் செட்டிலாகி நிம்மதியா வாழலாம்னு சொன்னேன்.

அல்லி எதுக்கும் ஒத்து வரல. எங்க அண்ணன் ஊர்ல இல்லாத நேரத்துல எல்லாம் பக்கத்துல இருந்த சர்ச்க்கு அதிகமாப் போகத் தொடங்கினா.

ஏற்கனவே எங்க அண்ணனும், அல்லியும் சேந்து முடிவு பண்ணி இருந்த மாதிரி உனக்கு விவரம் தெரியிற வயசு வந்ததும், உன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டு, உன்னை வெளியூர் ஹாஸ்டல்ல நிரந்தரமா தங்க வச்சி படிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தாங்க.

எங்க அண்ணன் உன்னோட மேல் படிப்புக்கு உன்னை வெளிநாடு அனுப்ப அப்பவே முடிவு பண்ணி வச்சி இருந்தார்.

நானும் விடாப்பிடியா அல்லி பின்னாடி மூணு வருஷம் சுத்திட்டே இருந்தேன். அல்லிக்கு என் மேல வெறுப்பு அதிகமாச்சே தவிர, அவ என்னை மன்னிக்கவே இல்லை. என்கிட்ட சலனப்பட தொடங்கின மனசை அவ முழுசா கடவுளை நோக்கி திருப்பிட்டா.

நிலைமை இப்படி இருக்கும் போது, கன்னியாஸ்திரி ஆகுறதுக்கு தேவையான பார்மாலிடிஸ் பத்தி விசாரிக்க திருநெல்வேலியில இருந்த சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு அல்லியும், எங்க அண்ணனும் வந்து இருந்தாங்க.

அப்போ நீ உன் சம்மர் ஹாலிடேஸ்க்கு வீட்டுக்கு வந்து இருந்த. அவங்க கூட இருந்த பையன் எங்கேயோ வெளிய போகவும் ரெண்டு பேரும் சர்ச் பாதரை பாத்துட்டு அவங்க புக் பண்ணி இருந்த ரூமுக்கு திரும்பினாங்க.

மறுபடி எங்க அண்ணன் மட்டும் ஏதோ வேலையா டவுனுக்கு போக நான் கிடைச்ச சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாதுன்னு தனியா இருந்த அல்லியை சந்திக்க போனேன்.

இங்க தான் நான் என் வாழ்க்கையோட மிகப் பெரிய தப்பை பண்ணிட்டேன் நாட்சி. நான் அன்னைக்கு அங்க போய்  இருக்கவே கூடாது. அல்லியைப் பாத்து பேசி இருக்கவே கூடாது.

அவளை என் கூட வந்து வாழ சொல்லி கட்டாயபடுத்தி இருக்கவே கூடாது. அதையெல்லாம் நான் செய்யாம இருந்து இருந்தா….

இப்பக் கூட உன் தலையைக் கோத உங்க அம்மா உன் பக்கத்துல இருந்து இருப்பா…. அவளை நான் இல்லாம செஞ்சிட்டேன். பாவி நான் இல்லாம செஞ்சிட்டேன்.”

சண்முகநாதன் தரையில் தன் கைகளைக் குத்திக் கொண்டு கதறி அழ, நாட்சியாவிற்கு முன் அவள் உலகம் தட்டாமாலை சுற்றத் தொடங்கியது.

“அம்மா..’’ என்ற முணகலோடு அவள் தலை தொய்யவும், சில பல தோட்டாக்களால் அந்த அறையின் கதவு பெயர்க்கப்படவும் சரியாக இருந்தது.

கூடு நெய்யும்.

Advertisement