Advertisement

அன்னைக்கு முழுக்க உக்காந்து யோசிச்சி பாத்ததுல நல்லசிவம் சொல்றது தான் சரின்னு தோணுச்சி. அல்லியை என்னோட அழகான கனவா நினச்சி மறந்துட ஆசைப்பட்டேன்.

அந்த முடிவை எடுத்ததுக்கு அப்புறம் அதை செயல்படுத்த ரொம்ப எல்லாம் எனக்கு நேரம் ஆகல. அப்பாவுக்கு நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுல ரொம்ப சந்தோசம்.

அடுத்த ஒரே மாசத்துல சென்னையே மிரண்டு போற மாதிரி என் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்தது. அடுத்த வாரம் மும்பையில ரிசப்சன். நானும் என் பொண்டாட்டி ராதாவும் ஹனிமூனுக்கு நியூசிலாந்து போனோம்.

ராதாவோட வெள்ளை தோலும், நுனி நாக்கு ஆங்கிலமும் நான் எடுத்த முடிவு சரி தான்னு என்னை நினைக்க வச்சது. நாங்க ஹனிமூன் போய் இருந்தப்ப பாரா கிளைடிங் போனோம்.

அதுல எதிர்பாராதாவிதமா என்னைத் தாங்கிட்டு இருந்த கயிறு அறுந்து நான் மலை உச்சியில இருந்து பெரிய பாறை மேல விழுந்துட்டேன். அந்த விபத்துல என்னைக் காப்பாத்த முடிஞ்ச டாக்டர்ஸ்சால என் ஆண்மையைக் காப்பாத்த முடியல.

இடுப்பெலும்புல இருக்க நரம்பு ஏதோ பர்மனென்ட் டேமேஜ் ஆயிட்டதா சொன்னாங்க. நான் உயிர் பிழைச்சி எழுந்து நடந்ததே கடவுள் கருணைன்னு சொன்னதை எங்க அம்மா, அப்பா சந்தோசமா ஏத்துகிட்டாங்க.

ஆனா என் புதுப் பொண்டாட்டிக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்லைன்னு அவ அனுப்பி வச்ச டைவர்ஸ் நோட்டிஸ் காட்டிக் கொடுத்துச்சி. கிட்டத்தட்ட இருபது நாள் கோமால இருந்து பிழைச்சி, மூணு மாசம் கழிச்சி வீட்டுக்கு வந்த என்னை வரவேற்றது என் பொண்டாட்டி அனுப்பி வச்ச டைவர்ஸ் நோட்டிஸ் தான்.

அப்பா என்னோட வாழ்க்கை வீணாகவே தான் தான் காரணம்ன்னு ரொம்ப வருத்திக்க தொடங்கினார். நான் மறுபடி மும்பை கிளம்பிட்டேன். முழு மூச்சா என்னை பிசினஸ்ல ஈடுபடுத்திக்கிட்டேன்.

பணம், புகழ் இந்த உலகத்துல எதையும் சாதிக்க முடியிற திமிர்… நான் ரொம்ப புதுசா மாறினேன். அப்போ கூட மறுபடி அல்லியைப் போய் பாக்கணும்னு எனக்கு தோணல.

என் தம்பிக்கும் கல்யாணம் நடந்தது. அவன் சந்தோசமா வாழ ஆரம்பிச்சான். சென்னையில எந்த நல்லது கெட்டது நடந்தாலும் சும்மா எட்டிப் பாத்துட்டு போறதோட சரி.

அப்பாவுக்கு என்னைப் பத்தின கவலை அதிகம் ஆச்சு. மறுபடி அவருக்கு ரெண்டாவது அட்டாக் வரும் போது அவரை எங்களால காப்பாத்த முடியல. அப்பாவோட இறுதி காரியத்துக்கு வரும் போது தான் நான் மறுபடி அல்லியை சந்திச்சேன்.

எங்க அண்ணனோட ரெண்டாவது பொண்டாட்டியா. அந்த நிமிஷம் எனக்கு எவ்ளோ பெரிய அதிர்ச்சியா இருந்தது தெரியுமா..? அப்பாவோட இறுதி காரியம் எல்லாம் முடிஞ்சதும், உடனே மும்பை கிளம்பாம கொஞ்ச நாள் எங்க சென்னை வீட்ல தங்கினேன்.

அப்ப தான் அம்மா எங்க அண்ணன் யாரோ ஒரு மலை ஜாதிப் பொண்ணை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி, அவன் இருக்குற ஊர்லையே ஒதுக்குப் புறமா ஒரு வீடுகட்டிக் கொடுத்து குடும்பம் நடத்திட்டு இருக்குறதா சொன்னாங்க.

எங்க தாத்தா வளர்ப்பை அவங்க குறை சொல்லி திட்ட திட்ட, எனக்கு மலைஜாதிப் பொண்ணு அப்படிங்கிற பேரைக் கேட்டதும், உடனே உங்க அம்மா அல்லி தான் நியாபகத்துக்கு வந்தா.

உடனே கிளம்பி வள்ளியூர் போனேன். அப்போ உனக்கு ஒரு பத்து வயசு இருக்கும்னு நினைக்கிறேன். செங்கனோட தோட்டத்துல விளையாடிட்டு இருந்த.

உன்னை பாத்ததும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவ உன் பொண்ணுடா மடையா ஓடிப் போய் கட்டிப் பிடிச்சிக்கோன்னு என் காதுல கத்துற மாதிரி ஒரு பீல்…

அந்த நேரம் அல்லி தோட்டத்துக்கு வந்தா. அழகா புடவைக் கட்டி, பாந்தமா இருந்த அல்லியை பாத்து நான் அசந்தேப் போயிட்டேன். மலையில மூலிகை தேடி அலைஞ்ச காட்டுப் பொண்ணா இவன்னு.

தோட்டத்துக்கு வந்த அல்லி உன்னை தூக்கி கொஞ்ச, நீங்க ரெண்டு பேரும் என்னோட சொந்தம். என்னோட குடும்பம்னு மனசுல தோண ஆரம்பிச்சது.  இனி எந்தக் காரணத்தைக் கொண்டு உங்களை விட்டுத் தரக் கூடாதுன்னு முடிவு பண்ணி எங்க அண்ணனை தேடிப் போனேன். ‘

அவர் மில்லுல தன்னோட தனி ரூம்ல இருந்தாரு. அவரைப் பாத்ததும் சட்டையைப் பிடிக்கிற ஆத்திரம் வந்துச்சி. அதையெல்லாம் அடக்கிகிட்டு, “நீ எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல..’’ அப்படின்னு கேட்டதும்,

அவர் கொஞ்சம் கூட அலட்டிக்கமா, “ஓ அல்லியைப் பாத்துட்டு வரியா… சரிவா எங்க வீட்டுக்கு போலாம். இங்க உக்காந்து இதை பேசினா சரியா வராது. நான் உனக்கு விளக்கம் சொல்றதை விட நாட்சியோட அம்மா சொன்னாத் தான் சரியா இருக்கும்..’’ அப்படின்னு சொல்லிட்டு கிளம்ப,

நீங்க ரெண்டு பேரும் மறுபடி எனக்கு கிடச்சிடுவீங்க அப்படிங்கிற இமாலய நம்பிகையோட நான் அவரோட கிளம்பினேன். ஆனா அல்லி அந்த நம்பிக்கையை வேரோட பிடுங்கி எரிஞ்சா.

நாங்க வீட்டுக்கு வரும் போது நீ தூங்கிட்டு இருந்த. அல்லி ஹால் சோபாவுல உக்காந்துட்டு இருந்தா. என்னைப் பாத்ததும் அவ முகம் பெருசா ஒன்னும் அதிர்ந்து எல்லாம் போகல.

எங்க அண்ணனைப் பாத்து, “உங்க தம்பியை எல்லாம் நம்ம கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்ன விசேஷம்னு…?’’ கூலா கேட்டா. அதுக்கு எங்க அண்ணன், “நீ அதை அவன்கிட்ட தான் கேக்கணும்னு..’’ சொல்லிட்டு அவரோட ரூமுக்கு போக,

நான் அதிர்ந்து போயி அல்லி முகத்தைப் பாத்தேன். “அல்லி..’’ நான் அதிர்ச்சியோட அவ பேர் சொல்லிக் கூப்பிடவும், அவ முகம் ரொம்ப கோபமா மாறுச்சி.

“சீ…. உங்க வாயால என் பேரை சொல்லிக் கூப்பிடாதீங்க…… என்கிட்ட காதல் சொல்லிட்டு… எங்க முறைப்படி எங்க குல தெய்வ சாட்சியா என்னைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டு…. அம்போன்னு என்னை கைவிட்டவர் தான நீங்க..?

கொஞ்ச நாள் கழிச்சி வாங்கன்னு சொன்னேன் தான். ஆனா அந்தக் கொஞ்ச நாள் போறதுக்கு முன்னாடியே உங்க வாரிசை நான் வயித்துல சுமந்துட்டேன்.

விசயம் வெளிய தெரிஞ்சா எங்க தாத்தாவுக்கு பெரிய தலைக் குனிவா போயிடும்னு…. எங்கப் பக்கம் கிராமத்து ஆளுங்க போடுற உடுப்பை மாட்டிக்கிட்டு… தினம் காய்கறி இறங்குற லாரியில ஒளிஞ்சிக்கிட்டு உங்களைத் தேடி நான் சென்னைக்கு வந்தேன்.

நீங்க பாம்பு கடிச்சி எங்க தாத்தாகிட்ட வைத்தியம் பாத்துக்க வரும் போது உங்க பர்சை தவறுதலா அங்கயே விட்டுட்டு போய் இருந்தீங்க. அதுல உங்க விலாசம் இருந்தது. கஷ்டப்பட்டு கையில இருந்த கொஞ்சம் பணத்துல அந்த விலாசத்தை கண்டுபிடிச்சி அங்கப் போனா,

உங்களுக்கு கல்யாணம்னு ஒரு மண்டபப் பேரை சொன்னாங்க. ஒரு வேளை உங்களைக் கட்டாயப்படுத்தி, இல்லை என்னை மறக்கடிச்சி கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களோன்னு உசிரை கையில பிடிச்சிக்கிட்டு உங்களைப் பாக்க அந்த மண்டபத்துக்கு ஓடி வந்தேன்.

அங்க முகம் முழுக்க சிரிப்போட மணமேடையில உங்களைப் பாத்ததும் என் உசுரு உடஞ்சிப் போச்சு. சரி வந்ததுக்கு உங்க சட்டையைப் பிடிச்சி நியாயம் கேக்கலாம்னு யாருக்கும் தெரியாம மணமகன் அறையில போய் ஒளிஞ்சி இருந்தேன்.

அப்போ உடை மாத்த உள்ள வந்த நீங்களும் உங்க சோக்களிப் பய பேர் கூட…. ஹா சிவம் சிவம்னு கூப்பிட்டீங்க…. அந்த ஆளும் என்ன பேசிக்கிட்டீங்க…

என்னை மாதிரி மலைஜாதிப் பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்தா இந்த மண்டபத்துல இப்படி ஒரு மரியாதை கிடைச்சி இருக்குமான்னு அவர் கேட்க,நீங்க என்ன சொன்னீங்க…? “உண்மை தான் சிவம். அவளை எல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியாது. அது ஒரு அழகான கனவு. இனி மறந்துடப் போறேன்னு…. சொன்னீங்களா இல்லையா..?

நான் கனவா….? எங்க ஜாதியில நம்பிக்கை துரோகம் வழக்கத்துல இல்லாத ஒன்னு. உங்களை நம்பி சோரம் போன என்னை நெருப்புக் குழியில போட்டாலும் போடுவாங்களே ஒழிய தனியா வாழ விடமாட்டாங்க.

எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு சாகுறதை விட தனியா செத்துப் போகலாம்னு நான் கடலைத் தேடிப் போனேன். அங்க ஒரு வயசான பாட்டி என்னைக் காப்பாத்தி என்னை அவங்களோட அவங்க குப்பத்துக்கு கூட்டிட்டு போனாங்க.

எங்க வழக்கத்துல கர்ப்பிணி பொண்ணு செத்துப் போனா அவ வம்சம் பத்து தலைமுறைக்கு செழிக்காதுன்னு சொல்வாங்க. அதோட…. என் தாத்தா என் தாத்தாவுக்கு இருந்த ஒரே வம்ச விளக்கு நான் தான்.

இனி என்ன நடந்தாலும் சரின்னு குழந்தை பிறக்கிற வரை உசிரை இழுத்துப் பிடிக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த பூங்கோதைப் பாட்டி பொறுப்புல சின்ன பையன் ஒருத்தனும் இருந்தான்.

எல்லாரும் கூலி வேலைக்கு போய் தான் எங்க வயித்து பொழப்பை கவனிச்சோம். அந்த சமயத்துல தான் பூங்கோதைப் பாட்டிக்கு சென்னையில உங்க அண்ணா இருக்குற வீட்டை சுத்தம் செய்யிற வேலை கிடைச்சது.

பாட்டிக்கு மேலுக்கு முடியாதப்ப அங்க வேலை செய்ய நான் போவேன். என்னவோ அவரை பாக்கும் போது எல்லாம் கையெடுத்து கும்பிடனும் போல தோணும்.

என்கதைய கேள்விப்பட்டு எனக்கு குழந்தைப் பிறந்ததும், நிரந்தரமா வேலைப் போட்டு அவங்க கம்பெனி குவாட்டர்ஸ்ல இடமும் கொடுத்து, பாதுகாப்பா பாத்துக்கிறதா சொல்வார். நானும் ஒப்புக்கு தலையை தலையாட்டி வைப்பேன். எனக்குத் தான் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வாழ்ற எண்ணமே இல்லாம இருந்ததே.

அப்போ நாட்சி என் வயித்துல ஏழு மாசக் குழந்தையா இருந்தா. ஐயா வீட்ல அவங்க தம்பி கல்யாணப் போட்டோ வந்து இருக்குன்னு வீட்ல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவங்க எல்லாரும் ஆவலா பாத்துக்கிட்டு இருந்தாங்க.

நானும் ரொம்ப ஆர்வத்தோட எட்டிப் பாத்தேன். அந்த கல்யாண போட்டோல நீங்க தான் மாப்பிள்ளையா இருந்தீங்க. மனசு தாங்காம ஐயா தம்பி தான் என்னை ஏமாத்தின ஆள்னு பூங்கோதைப் பாட்டிகிட்ட சொல்லி கதறி அழுதேன்.

பாட்டி தான் ஐயா ரொம்ப நல்லவங்க…. கண்டிப்பா உனக்கு நல்லது செய்வாங்கன்னு எல்லா உண்மையும் உங்க அண்ணாகிட்ட போய் சொல்லிட்டாங்க. அடுத்த நாள் ஐயா என்னை அவர் வீட்டுக்கு வர சொன்னார்.

Advertisement