Advertisement

கூடு – 24

ரியோ டீ ஜெனிரியோவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டிற்க்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 205.

சுவற்றில் பார்வையை பதித்து இருந்த சண்முகநாதனுக்கு அந்த சுவற்றில் அவர் கடந்த கால காட்சிகள் விரிந்ததோ என்னவோ, அதைப் பார்த்துக் கொண்டே நாட்சியிடம் அவள் பிறந்த கதையை கூறத் தொடங்கினார்.

“எங்க தாத்தா செவலைமுத்துப் பாண்டி விவசாயத்தை தன்னோட உயிரா மதிச்சி வாழ்ந்த ஆளு… எங்க அப்பா அவருக்கு ஒரே மகன்…. ஆனா அப்பா அந்தக் காலத்துலையே மோட்டார் கம்பெனி ஆரம்பிச்சி சென்னைப் பக்கம் செட்டிலாயிட்டாரு.

அதுல தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம். தன் அப்பாவோட மனக் குறைய தீக்க எங்க அப்பா தன்னோட முதல் பையனான கஜபதி பாண்டியனை அவங்க அப்பா அம்மாகிட்டையே வளர விட்டார்.

எங்க அண்ணனும் எங்க தாத்தாவுக்கு பிடிச்ச மாதிரி அக்ரிகல்சர் சம்மந்தமா படிச்சிட்டு,வள்ளியூர்ல இருந்த தாத்தாவோட விவசாயநிலம், மில்லு எல்லாம் பாத்துக்கிட்டார்.

அதோட தாத்தாவுக்கு பிடிச்ச மாதிரி, அவர் பாத்த, அதே கிராமத்துல இருந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரோடையே வாழ ஆரம்பிச்சார்.

எங்க அண்ணனுக்கு அப்புறம் பிறந்த நானும் என் தம்பி மணிவாசக பாண்டியனும் எங்க அப்பா சம்பாதிச்சி வச்சி இருந்த மொத்த பணத்துக்கும் ஏக போக வாரிசுகளா ரொம்ப ஆடம்பரமா வளந்தோம்.

நான் என்னோட மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிப்பையே ஆஸ்திரேலியா போய் தான் முடிச்சேன். நான் திரும்பி வந்ததும், “இனிமே கம்பெனி பொறுப்பை ஏத்துகிட்டு ஒழுங்கா வேலை செய்யணும்னு அப்பா கண்டிசன்ஸ் போட ஆரம்பிச்சிட்டார்.

நானும் சரின்னு சொல்லிட்டு அப்பாவோட கம்பெனில வேலை பாக்க ஆரம்பிச்சேன். அப்போ என் தம்பி லண்டன்ல படிச்சிட்டு இருந்தான். இங்க நாங்க தாயாரிக்கிற மோட்டார் சைக்கிளுக்கு எல்லாம் அப்பா வெளிநாட்டு கம்பெனிங்ககிட்ட இருந்து பார்ட்ஸ் வாங்கி அதை அசெம்பிள் பண்ணிக்கிட்டு இருந்த நேரம் அது.

அப்போ தான் எனக்கு அந்த யோசனை தோணுச்சி. நாமே ஏன் சொந்தமா ஒரு டூவீலர் பார்ட்ஸ் தயாரிக்கிற கம்பெனியை உருவாக்கி நடத்தக் கூடாதுன்னு.

எங்க அப்பா என்னோட யோசனையை முழுமனசா ஆதரிசார். எங்களோட ப்ரொடக்சன் கம்பெனிக்கு நாங்க மும்பையை செலக்ட் பண்ணினோம். அந்த சமயத்துல நான் இல்லாத இடத்தை நிரப்ப எங்க அண்ணனை சென்னைக்கு அப்பா வாரம் ஒரு முறை வந்து போக சொன்னார்.

அண்ணனும் அப்பா பேச்சை மீறாம வாரம் ஒரு முறை கம்பெனி அக்கவுண்ட்ஸ் சரி பாக்கவும், புது ஷோரூம் ஆர்டர்ஸ் எடுத்து சேல்ஸ் இம்ப்ரூவ் பண்ணவும் சென்னை வந்து போக ஆரம்பிச்சார்.

நானும் என் தம்பியும் எப்பவும் எங்க அண்ணன் கிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கி தான் இருப்போம். அவர் அப்படியே எங்க தாத்தா சாயல்ல கொஞ்சம் முரட்டு தனமா கிராமத்து மனுசனா இருந்ததாலையும் இருக்கலாம்.

வாழ்க்கை ரொம்ப தெளிவா அழகா சந்தோசமா போயிகிட்டு இருக்கும் போது தான் நான் உங்க அம்மா அல்லியை சந்திச்சேன்.’’ இந்த வரிகளை சொல்லி முடித்ததும் சண்முகம் சற்று நேரம் மௌனம் காத்தார்.

கமறிய தொண்டையை சற்றே செருமிக் கொண்டவர், “உங்க அம்மா அல்லி பேரைப் போல பூ மாதிரி தான் அழகா இருப்பா… ரொம்ப கட்டுக் கோப்பான மலைஜாதிப் பொண்ணு.

ஒரு சமயம் எங்க கம்பெனிக்கு கிடச்ச பெரிய ஆர்டரைக் கொண்டாட என் பிரண்ட்ஸ்சோடா நீலகிரி ஹில்ஸ் போய் இருந்தோம். அங்க தான் அவளை பாத்தேன்.

நாங்க காட்டுக்குள்ள சுத்தி பாத்துட்டு இருக்கும் போது என்னை பாம்பு கடிச்சிடுச்சி. அங்க பெருசா ஹாஸ்பிடல் எதுவும் இல்லாததால என்னை அங்க இருந்த வைத்தியர் வீட்டுக்கு தூக்கிட்டு போனாங்க.

அங்க வைத்தியர் பேத்தியா உங்க அம்மா இருந்தா. கடிச்சது ரொம்ப விஷம் உள்ள கட்டு வீரியன் பாம்பு அப்படிங்கிறதால நான் அவங்க குடிசையிலேயே மூணு நாள் தங்கி இருந்து ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டியதா போச்சு.

அந்த மூணு நாளும் பாம்பு கடிச்ச இடத்துக்கு முறிவு மருந்து கட்டியும், வேளா வேளைக்கு கசாயம் கொடுத்தும் அல்லி தான் என்னை கவனிச்சிகிட்டா.

அவளோட இயற்கை அழகு அவ பக்கம் என்னை இழுத்துச்சி. அவ என்னோட நாகரீக நடை உடை பாவனைகளை ஆச்சர்யமா பாக்குறதைப் பார்த்து எனக்குள்ள நானே சிரிச்சிப்பேன். சோ ஆபோசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்ஸ்.

எனக்கு உடம்பு சரி ஆன பின்னாடியும் மும்பை கிளம்பாம நீல்கிரிஸ்ல இருத்த எங்க கெஸ்ட் ஹவுஸ்லையே ஸ்டே பண்ணேன். அல்லிக்கே தெரியாம அவ மூலிகை சேகரிக்க காட்டுக்குள்ள போகும் போது அவளை பாலோ பண்ணிப் போய் அவகிட்ட பேச ஆரம்பிச்சேன்.

முதல்ல, என்னைப் பாத்து ஓடி ஒளிஞ்சவ, அப்புறம் கொஞ்ச கொஞ்சமா என்னைப் பாத்து சிரிக்க ஆரம்பிச்சா. சரியா ஒரு வாரத்துல அவ கையைப் பிடிச்சிட்டு என் காதலை அவகிட்ட சொன்னேன்.

அவ பதில் எதுவும் சொல்லாம என்னை அந்த காட்டுக்குள்ள இருந்த ஒரு மரத்துக்கிட்ட கூட்டிட்டு போனா. அங்க இருந்த ஒரு மரப் பட்டையை உரிச்சி கயிறா திரிச்சா. அதை என் கையில கொடுத்து அவ கழுத்துல கட்ட சொன்னா. அதே மாதிரி ஒரு கயிறை திரிச்சி அதை என் கையிலையும் கட்டி விட்டா. அவங்க முறைப் படி நாங்க இனிமே புருஷன் பொண்டாட்டின்னு சிரிச்சிட்டே கலங்குன கண்ணோட சொன்னா.

அந்த நிமிஷம் என் வாழ்கையில மறக்க முடியாத நிமிஷம். அதே சந்தோசத்தோட நாங்க எங்க வாழ்கையை தொடங்கினோம். அப்போ அது எனக்கு தப்பாவும் தோணல.

சரியா பதனஞ்சி நாள் கழிச்சி, அப்பா என்னை கூடிட்டு வர எங்க கெஸ்ட் ஹவுஸ்க்கே ஆள் அனுப்பி வச்சிட்டார். சீக்கிரமா வந்து அல்லியை முறைப்படி அழைச்சிட்டு போறதா சொல்லிட்டு நான் கிளம்ப ரெடி ஆனேன்.

அப்போ அவ அழுதுகிட்டே எங்க மலை சாதி வழக்கத்துல எங்க பொண்ணுகளை வெளியூர் ஆளுகளுக்கு கட்டிக் கொடுக்க சம்மதிக்க மாட்டாங்க. நான் ஒரு முறை உங்ககிட்ட வந்துட்டா அப்புறம் எங்க வட்டத்துல இருந்து முழுசா என்னை ஒதுக்கி வச்சிடுவாங்க.

அதனால நீங்க கொஞ்ச நாள் கழிச்சே என்னை கூடிட்டு போக வாங்க. எனக்கு எங்க கூட்டத்துல இருந்து கழிப்பு சாங்கியம் பண்ணி தான் உங்களோட அனுப்பி வைப்பாங்க. எனக்கு கொஞ்ச நாள் எங்க தாத்தாவோட இருக்கணும். அப்புறம் எங்க சனங்க யாரையும் என்னால பாக்கவே முடியாதே…. அப்படின்னு சொல்லிட்டு தேம்பி தேம்பி அழுதா.

நானும் அவளை சமாதானப்படுத்திட்டு அவ விருப்பப்படியே அவளை கொஞ்சநாள் கழிச்சி வந்து கூடிட்டு போறதா சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பினேன்.

மும்பை திரும்பின எனக்கு பல பயங்கர அதிர்ச்சி காத்துட்டு இருந்தது. எங்க கம்பெனில ஏதோ பயர் ஆக்சிடன்ட் நடந்து மொத்த மெட்டிரியலும் யூஸ் பண்ண முடியாத அளவுக்கு டேமேஜாகி இருந்தது.

இந்த சடன் லாசை எங்க அப்பாவால தாங்க முடியாம அவருக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக் வந்தது. அண்ணா ஊர்ல இருந்து வந்தார். அப்போ பெருசா நாங்க இன்ஸ்யூர் எதுவும் பண்ணி வேற வைக்கல.

பயங்கர பண நெருக்கடி. அண்ணன் கொஞ்சம் தாத்தா சொத்துகளை வித்து ஹெல்ப் பண்ணினார். என்னால அதை ஏத்துக்கவும் முடியல. மறுக்கவும் முடியல.

அந்த நேரத்துல என்னோட ஸ்கூல் பிரண்ட் நல்லசிவம் மறுபடி என் லைப்ல வந்தான். அவனை எதேச்சையா ஒரு பார்ல மீட் பண்ணினேன். அவன் அப்போ சின்ன சின்னதா சிலோன்ல இருந்து கள்ளத் தோணியில பொருட்களைக் கடத்தி வித்து வாழ்கையை நடத்துறதா சொன்னான்.

அவன் நார்மலா இருந்தா அதையெல்லாம் சொல்லி இருப்பானோ என்னவோ, போதையில இருந்ததால முழுசா என்கிட்ட உளற ஆரம்பிச்சான். அவன் சின்னதா செய்யிற தொழிலை நாம ஏன் பெருசா செஞ்சி இப்ப ஏற்பட்டு இருக்க கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க கூடாதுன்னு தோணுச்சி.

மறுபடி அவனை போய் சந்திச்சேன். ரெண்டு பெரும் ஒரு நாள் முழுக்க என்ன செய்யலாம் ஏது செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சோம். நம்ம நாட்ல எந்தப் தப்பை செஞ்சாலும், அதை மூடி மறைக்க ஒரு அரசியல்வாதி துணை வேணும்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சது.

அந்த நேரத்துல எங்க தாத்தா ஊர்ல அவங்க ரிலேசன் ஒருத்தர் எம்.எல்.ஏ வா இருந்தார். பரஞ்ஜோதின்னு. எங்க தாத்தா மூலமா நல்லசிவத்தை அந்த எம்.எல்.ஏவுக்கு பி.ஏ வா சேத்துவிட்டேன்.

அவர் பதவியை கேடயமா பயன்படுத்தி சைனா, சிலோன் இங்க இருந்து எல்லாம் பொருளை வாங்கி கஸ்டம்ஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு, அந்தப் பொருட்கள்ல இந்தியன் லேபிள் ஒட்டி சந்தைப்படுத்தி ஒண்ணுக்கு பத்துமடங்கா லாபம் பாத்தோம்.

எண்ணி ரெண்டே மாசத்துல நான் இழந்த பணத்தை எல்லாம் திரும்ப எடுத்தேன். என் கம்பெனியை மறுபடி புதுப் பொலிவோட தொடங்குனேன். அப்பாவுக்கு என்னோட வளர்ச்சியை பாத்து ரொம்ப சந்தோசம்.

அதே சந்தோசத்தோட அப்பா அவரோட பிரண்ட் பொண்ணை என்னோட லைப் பார்ட்னரா சூஸ் பண்ணார். அப்போ தான் உண்மையா எனக்கு மறுபடி அல்லி நியாபகமே வந்தது.

அப்பாகிட்ட இந்த கல்யாணம் வேணாம்னு நான் ஆர்கியூ பண்ணப் போய் அது பெரிய குடும்ப சண்டையா மாறிடுச்சி. அப்பா ரொம்ப ஸ்டேடஸ் பாப்பார். அம்மா வேற அவரோட உடம்பை காரணம் காட்டி தினம் என்னை அப்பா பாத்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்திட்டே இருந்தாங்க.

என்னால தெளிவா ஒரு முடிவை எடுக்க முடியல. என்னோட பிரச்னையை நான் நல்லசிவம்கிட்ட சொன்னப்ப அவன் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு,

“டேய் சண்முகம் உங்க வீட்டு மருமக ஒரு மலைஜாதிப் பொண்ணா..? கொஞ்சம் யோசிச்சு பாரு இப்போ சமூகத்துல உன் நிலைமை என்ன….? இளம் தொழிலதிபர். லீடிங் பிஸ்னஸ் மேக்னட்.

உன்னால படிக்காத தற்குறியான ஒரு மலை ஜாதிப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியுமா..? அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உன்னால அவளை நம்ம சமூகத்துக்கு அறிமுகப்படுத்த தான் முடியுமா..?

எல்லாத்தையும் விட ஜாதி வெறி பிடிச்ச உங்க தாத்தாவும், அந்தஸ்து பாக்குற உங்க அப்பாவும் கண்டிப்பா இதுக்கு எல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க.

இது எல்லாத்தையும் தாண்டி நீ அந்தப் பொண்ணை கல்யாணமே பண்ணிக் கிட்டாலும், கொஞ்ச நாள்ல நீயே நாம தப்பு பண்ணிட்டோமோன்னு பீல் பண்ண ஆரம்பிப்ப…. ஏன் நாளைக்கு உன்னோட குழந்தைங்க எதிர்காலம் கூட நீ எடுக்கப் போற அவசர முடிவால பாதிக்கப்படும்.

மலை ஜாதிக்கார பொண்ணுக்கு என்ன தெரியும்..? அவ குழந்தைக்கு உண்டிவில் வச்சி குருவி அடிக்கவும், மரத்துல இருந்து தேன் எடுக்கவும் வேணா சொல்லித் தருவா. அவளால வேற என்ன சொல்லித் தர முடியும்.

இதோ பார் சண்முகம்…. உனக்கு கடைசியா ஒரு அட்வைஸ் சொல்றேன். தண்ணியில இருந்து மீனை எடுத்தா அது தவிச்சி போயிரும். அப்படி தான் சில மனுசங்களும்.

அந்தப் பொண்ணு காட்டு வாழ்க்கைக்கு பழகினவ. என்ன தான் உனக்காக இங்க வந்து இருந்தாலும் அவளால அவ சொந்தப் பந்தங்களைப் பிரிஞ்சி, பிறந்ததுல இருந்து பாத்து வளர்ந்த காட்டை விட்டு நிம்மதியா இருக்க முடியும்னு நம்புறியா..?

கண்டிப்பா கிடையாது. உன்னால எப்படி வாழ்க்கை முழுக்க அந்தக் காட்ல போய் வாழ முடியாதோ அதே மாதிரி அந்தப் பொண்ணால உன் கூட காட்டைப் பிரிஞ்சி  நிம்மதியா வாழ முடியாது.

ஏதோ ரெண்டு பேரும் சந்தர்ப்பவசமா சந்திச்சீங்க… பழகினீங்க…. அதோட அதை எல்லாம் மறந்துரு. அந்தப் பொண்ணுக்கு உன்னோட இடம் தெரியாது. நீ இனி அவளைத் தேடிப் போகாதே.

உனக்காக காத்திருந்து நீ வரலைன்னதும் அந்தப் பொண்ணு அவங்க ஜாதி வழக்கப்படி, அவங்க அப்பாவுக்கு அதிகமா சீர் தரப் பையனுக்கு வாழ்க்கைப்பட்டு அவ வாழ்கையை நடத்திக்கட்டும்.

என்னக்கு தெரிஞ்ச விசயத்தை நான் எடுத்து சொல்லிட்டேன். இதுக்கு மேல முடிவு உன் கையில..’’ அப்படின்னு சொல்லிட்டு நல்லசிவம் பார்ல இருந்து கிளம்பிட்டான்.

Advertisement