Advertisement

கூடு – 23

1900 ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றுவரும் இந்தியா இதுவரை வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 28.

பரணியின் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறையின் குளிருக்கு போர்வையோடு நாட்சியையும் அணைத்துக் கொண்டு படுத்து இருந்தவனின் உறக்கம் எளிதில் கலைவதாயில்லை

ஆனாலும் அவனை எழுப்பாமல் விடப் போவதில்லை என்ற சங்கல்பம் ஏற்றதை போல அவன் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது

அந்த சப்தத்தில் மெதுவாய் தன் விழிகளை பிரித்தவனுக்கு அது நாளின் எந்த நேரம் என்றே புரியவில்லை. கனமான திரைகள் போர்த்தபட்டிருந்த அறை இருளில் இருந்தது

மெதுவாய் நாட்சியை தன் மேல் இருந்து விலக்கி படுக்க வைத்தவன், பொறுமையற்று மீண்டும் ஒலிக்கத் தொடங்கிய அலைபேசியை கையில் எடுத்தான்

பரணி அலைபேசியை இயக்கி காதில் வைத்ததும், “அடேய் எத்தனை முறைடா உனக்கு போன் பண்றது. அந்த லெட்டர்ல இருந்த டீடைல்ஸ் கிடைச்சிடுச்சி…. அதைப் பத்தி நாம போன்ல பேச முடியாது….. உடனே நீ கிளம்பி எங்க ஆபிஸ் வா…. நான் அவர் மெயில்ல இருந்த டீடைல்ஸ்சும் கலெக்ட் பண்ணிட்டேன்…. சீக்கிரம் வா…’’ 

விஜய்யின் குரலில் இருந்த அவசரத்தில் பரணி படுக்கையை விட்டு உடனே எழுந்தான். “இதோ பத்து நிமிஷத்துல வந்துடுறேன்டா மச்சான்..’’ என்றவன் அலைபேசியை துண்டித்து விட்டு, வேக வேகமாய் உடை மாற்ற தொடங்கினான்

அறையின் விளக்குகள் ஒளிர்ந்த பின்பும் நாட்சியாவின் உறக்கம் கலைவதாயில்லை. மனைவியின் முன் உச்சிக் கூந்தலை வாஞ்சையாய் ஒதுக்கியவன், மென்மையாய் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அவள், “ம்..’’ என்ற முனகலோடு புரண்டு படுக்கவும், அவள் போர்வையை சரி செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்

கீழ் தளத்தில் பிரேமின் அறை வாயிலில் காவல் பணியில் இருந்த ராஜேஷைக் கண்டவன், ‘மேம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க…. உங்க கார்ட்ஸ் யாரையாவது அந்த ப்ளோருக்கு அனுப்பி வைங்க. நீங்க பிரேமை ப்ரொடக்ட் பண்ணுங்க…. அப்புறம் ஏதாவது எமர்ஜென்சினா உங்க மேம் செல்லுக்கு கால் பண்ணுங்க வருவாங்க….நான் கொஞ்சம் வேலையா வெளிய போறேன். இங்க எந்த பிரச்சனை ஆனாலும் எனக்கு முதல்ல தகவல் கொடுங்க.’’ என்றவன் ராஜேஷின் எண்ணைப் பெற்றுக் கொண்டு தன் அலைபேசி என்னை அவனுக்கு பரிமாற்றம் செய்தான்

வேகமாய் வெளியேறியவன் தன் டுகாட்டி வண்டியை எடுத்துக் கொண்டு ஆணையர் அலுவலகம் நோக்கி விரைய, அவன் பாதி தூரம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுதே, அவனுக்கு மீண்டும் விஜயிடம் இருந்து அழைப்பு வந்தது

டேய் மச்சான்…. நான் இங்க மேடத்தோட பண்ணை வீட்டுக்கு வந்து இருக்கேன்டா நீ…. நீ அங்க வாடா நாம ப்ரீயா பேசலாம்..’’ சொல்லி முடித்த விஜய் உடனே தொடர்பை துண்டிக்க பரணியின் புருவங்கள் யோசனையாய் சுருங்கியது

அவன் குரலில் இருந்த ஒரு ஒட்டாத தன்மை பரணிக்கு சந்தேகத்தை தோற்றுவிக்க, தன் அலைபேசியில் இருந்து நாட்சியாவிற்கு சில தகவல்களை அனுப்பிவிட்டு அதன் பிறகே அங்கிருந்து கிளம்பினான் பண்ணை வீட்டை நோக்கி

நாட்சி குளிர் நிறைந்து இருந்த அந்த அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் அறைக் கதவு விடாமல் தட்டப்பட, நாட்சியா கனவில் இருந்து விழிப்பவள் போல மெதுவாய் தன் அயனங்களை திறந்தாள்

அதற்குள் மேலும் கதவுகள் படபடவென தட்டப்பட, நாட்சி வேகமாய் எழுந்தாள். எழுந்தவள், “ஒன் மினிட்’’ எனக் கத்திக் கொண்டே அருகில் இருந்த உடைகளை எடுத்து வேக வேகமாய் அணிந்துக் கொண்டாள்.  

அறைக் கதவை திறந்தவள் முதலில் கண்டது பதட்டம் தாங்கிய முகத்தோடு நின்ற ராஜேஷை தான். அவள் குழப்பத்தோடு, “வாட் ஹாப்பன் ராஜேஷ்..’’ என வினவ, ராஜேஷ் பதில் ஒன்றும் பேசாமல் குனிந்து அவள் அறை வாயிலைப் பார்த்தார்

அவர் பார்வை சென்ற திசையில் பயணித்த நாட்சியாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அங்கே வண்ண தாளில் சுற்றப்பட்ட பரிசுப் பொருள் ஒன்று அமைதியாய் வீற்றிருந்தது

அதைக் கண்டதும் நாட்சியாவின் தொண்டை பயத்தில் உலர்ந்தது. “ராஜேஷ் இது..’’ அவள் பேச முடியாமல் நிறுத்த, “மேம் இது உங்க ரூம் வாசல்ல இருந்ததா இங்க செக்யூரிட்டி டியூட்டி பாத்த போலீஸ் இன்பார்ம் பண்ணார் மேம்…. அவர் கவனத்தை கவராம யாரோ வாசல்ல இதை வச்சிட்டு போய் இருக்காங்க…..நான் நம்ம ஸ்குவாடுக்கு எல்லாம் இன்பார்ம் பண்ணி இருக்கேன் அவங்க வந்துட்டே இருக்காங்க..’’ 

ராஜேஷ் பதிலைக் கேட்டவள், “…. சரி அவங்க வந்து செக் பண்ணி சொல்ற வரைக்கும் நான் பிரேம் ரூம்ல இருக்கேன்..’’ என்றவள் தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு, அந்த அறையின் வாயிலைத் தான் கடந்திருப்பாள்.

அந்த நேரம் அவள் பேசி சிணுங்கத் தொடங்க, அழைப்பது புதிய நபர் என்று தொடு திரையில் ஒளிர்ந்த எண்கள் மூலம் உணர்ந்தவள் அழைப்பை ஏற்றுக் காதிற்கு கொடுக்கவும், மிக மிக அழுத்தமான குரல் ஒன்று அவளிடம் பேசத் தொடங்கியது

ஹலோ மிசஸ் கலிங்கத்துப்பரணி நான் அனுப்பி வச்ச கிப்டை ஓபன் பண்ணாம போறீங்க போல…. உள்ள என்ன இருக்குன்னு தெரிய வேண்டாமா..? உன் புருஷன் உயிர். போ…. போயி பிரிச்சி பாரு..?’’ அதோடு அந்த அழைப்பு துண்டிக்கப்படவும்

நாட்சி வேகமாய் திரும்பி அந்த பரிசுப் பொட்டலத்தை நோக்கி ஓடினாள். ஏனோ நொடியில் விழிகளில் நீர் நிறைந்து இருந்தது. “மேம்மேம்..’’ என ராஜேஷ் தடுக்க தடுக்க வேக வேகமாய் அந்த பொட்டலத்தை பிரித்தாள்

உள்ளே பரணி நேற்று அணிந்து இருந்த உடைகள் ஆங்காங்கே கிழிந்து  ரத்தக் காயங்களோடு மிகவும் கொடூரமாய் இருந்தது. அந்த உடைகளை தன் மார்போடு அணைத்தவள், “ஐயோ’’ எனக் கதறி அழுதாள்

சரியாய் அடுத்த இரண்டே நிமிடத்தில் மீண்டும் அலைபேசி அழைத்தது. அதை வேகமாய் உயிர்ப்பித்தவள், திக்கி கொண்டே, “ஹெலோயார்யார் நீஎனக்கு என் புருஷன் வேணும்…. அவருக்கு ஏதாவது ஆச்சுஉன்ன உயிரோட விட மாட்டேன்…. யார்டா நீ.. எனக்கு என் புருஷன் வேணும்..’’ 

அவள் கதறி அழுதுக் கொண்டே கேட்கவும், மறுமுனையில் சற்று நேரம் அமைதி. அந்தக் குரலில் அந்தகாரத்தின் அமைதி வந்து இருந்தது. “ஷ்…. கூல் பேபிகூல் உன் புருஷன் நல்லா இருக்கான்.  இப்போ நீ என்னப் பண்ற உன்னோட பாதுகாப்புல வச்சி இருக்கியே பிரேம் அவன் கதைய முடிக்கிற…. 

என்ன செய்வ ஏது செய்வ எல்லாம் எனக்கு தெரியாது…. உனக்கு ரெண்டு மணி நேரம் தான் டைம்அவன் கதைய முடிச்சிட்டு நேரா உங்க பண்ணை வீட்டுக்கு வந்து உன் புருஷனை மீட்டுட்டு போற…. உன் கலெக்டர் புத்தியை என்கிட்ட காட்டலாம்னு பாத்த அப்புறம்…..

உன் புருஷன் ட்ரெஸ் பார்சல் வந்த மாதிரி அவன்…..ம்ம்….தலையை வெட்டி அனுப்புறது எல்லாம் ஓல்ட் பேசன் இல்லநான் அவன் உடம்புல இருந்து நீ குடியிருக்குற இதயத்தை வெட்டி அனுப்புறேன் சரியா…?…. நிலைமை உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன்நீ எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியையும் நான் துல்லியமா உணர்ந்துகிட்டு இருக்கேன்….ஹா ஹா ஹா ’’ 

அதோடு அந்த அலைபேசி துண்டிக்கப்பட்டிருக்க, நாட்சியா மிரட்சியாய் அந்த அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள்.ரத்தம் தேய்ந்த அவன் கணவனின் உடைகள் தந்த வலி உயிரை ஊடுருவி பயணிக்க, நாட்சயா ஒரு திடத்தோடு நிமிர்ந்தாள்

ராஜேஷ்….. எனக்கு ஒரு டம்பளர் தண்ணி வேணும்…’’ அவள் கேட்டதைக் கொண்டு வந்து ராஜேஷ் கொடுக்கவும், வெறும் தரையில் தன் விரல் தொட்டு அடுத்த நடத்த வேண்டிய செயல்களை எழுதத் தொடங்கினாள். குறுக்கே பேச வந்த ராஜேஷை வேண்டாம் என சைகையால் தடுத்துவிட்டு, தொடர்ந்து எழுத, அதைப் படித்து முடித்த ராஜேஷ் மிரட்சியாய் நாட்சியாவை பார்த்தார்

உறுதியாய் ராஜேஷை பார்த்த நாட்சியா, அடுத்த நொடி, “ராஜேஷ்…. பிரேம் ரூமுக்கு நான் போறேன்ஒரு ஹாப்பென் ஹவர் என்னை யாரும் டிஸ்ட்ரப் பண்ணாதீங்க…’’ என்றவள் எழுந்து பிரேம் அறையை நோக்கி நடந்தாள்

ராஜேஷ்ஷோ, “ஓகே மேம்..’’ என்றவர், கீழே நாட்சியா எழுதிக் காட்டிய அலைபேசி எண்களை தன் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டே அடுத்தடுத்து அவள் சொல்லி இருந்த விசயங்களை செயலாற்ற தொடங்கினார்

சரியாய் அடுத்த அரைமணி நேரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனியார் துப்பறியும் நிபுணர் மூச்சு திணறல் பாதிப்பால் பரிதாப மரணம் என்ற செய்தி உள்ளூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது.  

ராஜேஷிடம் கண்களால் விடை பெற்றவள், தன் ஆல்பா ரோமியோ காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் தன் பண்ணை வீட்டை நோக்கி. வீட்டின் வாயில் திறந்தே இருந்தது

வீட்டிற்குள் பொருட்கள் அங்கும் இங்கும் கலைந்து கிடக்க, நாட்சியா குழப்பத்தோடே தங்கள் வீட்டை சுற்றி வந்தாள். அந்த நேரம் மெல்லிய புகையாய் ஏதோ ஒரு வாசனை வீட்டை  நிறைக்க நாட்சியா மயங்கி விழுந்தாள்

மீண்டும் நாட்சியாவிற்கு நினைவு திரும்பிய போது, யாரோ அவளை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து இருப்பதை அவளால் நன்றாகவே உணர முடிந்தது

அறை முழுக்க இருளில் இருந்தது. அவள் அசைய தொடங்கவும் அவள் முகத்திற்கு வெகு அருகே தீக் குச்சி ஒன்று உரசப்பட்டது. எதிரே தேவ தூதனோ என்று காண்பவரை ஒரு நொடி திகைக்க செய்யும் ஆணின் முகம் ஒன்று அவள் பார்வை வட்டத்தில் விழுந்தது

நாட்சியா சற்று திகைத்துப் போய் பார்க்கும் போதே, “வெல்கம் டூ மை வோர்ல்ட் மை லிட்டில் பிரின்சஸ்…. வெல்கம் டூ யுவர் வோர்ல்ட் ஆல்சோ….’’ அந்த வார்த்தைகளில் இருந்த கனிவும்,குழைவும் நாட்சியாவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும்

டேய்…. யார்டாநீ எங்க என் அப்பா அம்மாஉனக்கு அவங்களைப் பத்தி ஏதோ தெரிஞ்சி இருக்குநீயா உண்மையா சொல்லிட்டா உனக்கு நல்லது. எங்கடா என் அப்பாஎங்க அப்பா எவ்ளோ நல்லவர்அவர் உனக்கு என்னடா துரோகம் செஞ்சார்எங்க அப்பா…. எங்க அப்பா..’’ 

நாட்சியா அருகில் இருந்த ஏதோ ஒரு பொருள் பலமாய் உடையும் ஓசைக் கேட்டு, வாய்ப் பேச்சை சட்டென நிறுத்தினாள்.திடீரென்று அந்த அறையில் மின்சார விளக்குகள் உயிர் பெற, திடீரென்று ஏற்பட்ட அதிக வெளிச்சம் கண்களுக்கு கூச்சத்தைக் கொடுக்க, நாட்சியா பாதி விழிகளை மூடியும், திறந்தும் அந்த பளீர் வெளிச்சத்திற்கு தன் பார்வையை நிலைப்படுத்த முயன்றாள்

அதே நேரம் அந்த உருவமும் அவள் முகத்தை நெருங்கி இருந்தது. “யார்…. யார் உன்னோட அப்பாஅந்த கஜபதியா…. உனக்கு உயிரை தந்து இந்த பூமியில நீ ஜனிக்க காரணம்…. நான்…. நான் தான் உன்னோட அப்பா…. நீ நாட்சியா கஜபதிபாண்டியன் இல்ல….. வேலுநாட்சியா சண்முகநாத பாண்டியன்…. நீ என்னோட பொண்ணு…. யூ ஆர் மை பிரின்சஸ் நாட் ஹிம்யூ ஆர் மை லிட்டில் ஏஞ்சல்…. நாட் ஹிம்…’’ 

அவளிடம் ஆவேசமாய் சொல்லிக் கொண்டே இருந்த உருவம், அப்படியே தரையில் முட்டிப் போட்டு மடங்கி அமர்ந்தது. நாட்சியா யாரோ தன் மேல் உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சியதைப் போல செயலற்று பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த சண்முகநாதனை

ஏதோ தோன்றியதைப் போல அவளை நிமிர்ந்துப் பார்த்த உருவம், “அந்த கஜபதி என்கிட்ட இருந்து திருட்டிட்டான்….எல்லாத்தையும்…. என் காதலியஎன் குழந்தைய…. எல்லாத்தையும். நான் யார்னே உனக்கு தெரியல இல்லநான் நீ அப்பான்னு நம்பிட்டு இருக்கியே அந்த கஜபதியோட மூத்த தம்பி. உனக்கு நம்ப குடும்பம் பத்தி எதுவுமே தெரியாது இல்ல. நான் சொல்றேன். கடைசி முறையா இந்த ஊரை விட்டு கிளம்பறதுக்குள்ள உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன்… 

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது பிரின்சஸ்…. ஆனா என்னமோ உன்கிட்ட என் வாழ்கையில நடந்த எல்லா விசயத்தையும் சொல்லி அழணும்னு தோணுது…. பிகாஸ் யூ ஆர் மை ஒன்லி பிரின்சஸ்மை ஜீன்மை ஒன்லி சைல்ட்முடிஞ்சா இந்த அப்பனை மன்னிச்சிடு….’’ 

சுவரைப் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கிய சண்முகநாதனை பார்த்துக் கொண்டிருந்த நாட்சியின் விழிகள் இமைக்க கூட முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் விரிந்து இருந்தன. அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து அவள் கன்னத்தை நனைத்து இருந்தது

பொய்….’’ அவள் உதடுகள் மென்மையாய் என்றாலும் அவ்வார்த்தைகளை அழுத்தமாய் உச்சரிக்க, அவளை நிமிர்ந்து பார்த்த சண்முகநாதனோ, மறுப்பாய் தலை அசைத்து விட்டு

என்னால நீ தான் என் பொண்ணுன்னு ஈசியா நிரூபிக்க முடியும்…. டி.என்.ஏ டெஸ்ட் போதும்…. ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்லப் போற விசயத்தை முழுசா கேளு நாட்சி….நீ கேட்டு தான் ஆகணும்..’’ 

மீண்டும் அவர் முகம் சுவற்றில் இலக்கின்றி பதிய, மென் குரலில் சண்முகநாதன் பேசத் தொடங்கினார். “எங்க அப்பாவுக்கு நாங்க மூணு பசங்க நாட்சியாகஜபதிசண்முகநாதன் மணிவாசகம்….. எங்க எல்லார் பேர் பின்னாடியும் பாண்டியன் அப்படிங்கிற குடும்ப பேர் இருக்கும்அது எங்க தாத்தா பேர்…’’ 

சண்முகம் தன் போக்கில் பேசத் தொடங்க, நாட்சியாவின் மனமோ அவர் வார்த்தைகள் விவரித்துக் கொண்டிருந்த சம்பவத்தில் பயணிக்க தொடங்கின. அவள் வாழ்வில் நெடுநாளாய் பூட்டப்பட்டு இருந்த அறை அவரின் வார்த்தை சாவிகளால் திறக்கப்பட்டுக் கொண்டிருக்க,உள்ளிருந்து வெளிவரப் போவது எத்தகைய பூதமோ என்ற அச்சத்தோடு நாட்சியா அவர் வார்த்தைகளை செவிமடுத்துக் கொண்டிருந்தாள்.

கூடு நெய்யும். 

 

Advertisement