Advertisement

கூடு – 22

ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள் 28.

பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கிக் கிடந்த செங்கனைக் கண்ட பரணியும் விஜயும் சற்றே அதிர்ந்து போனார்கள். விஜய் வேகமாக வீட்டிற்குள் சென்று நீர் கொண்டு வந்து செங்கனின் முகத்தில் தெளிக்க, பரணியோ செங்கனை நேராக திருப்பி படுக்க வைத்து இருந்தான்.

மயக்கம் தெளிந்து எழுந்த செங்கன், மலங்க மலங்க விழிக்க, அவனைப் பிடித்து உலுக்கிய பரணி, “செங்கன்…. செங்கன் உனக்கு என்ன ஆச்சு…. உன்ன நான் ஹாஸ்பிடல்ல இல்ல இருக்க சொன்னேன். இங்க எதுக்கு வந்த..?’’

சுருக் சுருக்கென  தன்னுள் வலியை செலுத்திக் கொண்டிருந்த பின் மண்டையை ஒரு கையால் தாங்கிப் பிடித்தவன், “ஐயா… ராணிமா தான் என்னை இங்க பிரேம் சார் பைலை எடுத்துட்டு வர சொல்லி அனுப்பி வச்சாங்க…’’ என சற்றே உள்ளே சென்ற குரலில் கூறினான்.

அதோடு அப்படியே எழுந்து நின்றவன், “இன்னைக்கு யாரோ முகம் தெரியாத ஒருத்தர்… ஹாஸ்பிடல்ல இருந்த பிரேம் சாரை கொல்ல முயற்சி பண்ணி இருக்கான். அதனால ராணிமா பிரேம் சார் அப்படி என்ன எல்லாம் இதுவரைக்கும் இந்த கேஸ்ல கண்டு பிடிச்சி இருக்கார் அப்படின்னு தெரிஞ்சிக்க அவரோட பைலை கொண்டு வர சொன்னாங்க..’’

அவர்களுடன் பேசிக் கொண்டே கூடத்திற்கு விரைந்தவன், அங்கிருந்த மர அலமாரியை திறந்தான். திறந்தவன், “ஐயோ ஐயா…. இங்க இருந்த அந்த மஞ்சள் கலர் பைலை காணோம்..’’ என வாய்விட்டு அலறினான்.

அவன் அலறலில் பரணியும் விஜயும் அங்கு விரைந்தனர். பரணி அந்த அலமாரியை பார்த்துக் கொண்டே, “முதல்ல நீ எப்படி மயக்கமானன்னு சொல்லு செங்கன்..?’’ என வினவ,

சற்று நேரம் யோசித்தவன், “ஏதோ என் பின்மண்டையில பலமா மோதின மாதிரி இருந்தது. அப்புறம் நான் முழிச்சி பாக்கும் போது… நீங்க என் முன்னாடி இருக்கீங்க..’’ என்றான்.

பரணியும், விஜயும் அர்த்தம் பொதிந்த பார்வையை பறி மாறிக் கொண்டனர். “சரி பிரேம் ஆபிஸ் பத்தின டீடைல்ஸ்…. கார்ட் இப்படி ஏதாவது இருக்கா..’’ என பரணி கேட்க,

“ராணிமா டைரியில அவரு சென்னை ஆபிஸ் நம்பர் இருக்கும் சின்னய்யா..’’ என்றபடி அந்த டைரியை கொண்டுவந்துக் கொடுத்தான். அதில் இருந்த எண்ணுக்கு பரணி தொடர்பு கொள்ள,

தேன் குரலில் ஒரு பெண் பதில் அளித்தாள். “ஹெலோ  வீ ஆர் ப்ரம் ஈகுள் ஐஸ் டிடக்டிவ் ஆபிஸ் ஹவ் கேன் வீ ஹெல்ப் யூ..’’ அந்தக் குரலின் கேள்விக்கு, “ஹாய் ஐயம் பரணி…. வீ நீட் சம் இன்பர்மேசன் அபவுட் மிஸ்டர் கஜபதி மிஸ்ஸிங் கேஸ்..’’

அந்தப் பக்கம் அந்தப் பெண் சற்று நேரம் மௌனம் சாதித்துவிட்டு, “சார் திஸ் கேஸ் இஸ் ஹைலி கான்பிடன்சியல்…அண்ட் வீ வோன்ட் கிவ் கேஸ் டீடைல்ஸ் டூ அதர்ஸ்..’’ என்று மொழிய,

பேசிக் கொண்டிருந்த பரணியின் முகத்திலேயே பார்வையை பதித்து இருந்த, விஜய் அலைபேசியை நண்பனிடமிருந்து வாங்கி, “ஐயம் ஏ.சி.பி விஜயகுமார் ஸ்பீகிங்…’’ எனத் தொடங்கி பரணியின் மாமா தான் கஜபதி என உரைத்து,

தற்சமயம் பிரேம் மருத்துவமனை கட்டிலில் இருக்கும் வரை எடுத்துரைக்க, அந்த தேன் குரல் உடனே பதட்டத்திற்கு சென்றது. “சார் என்ன சொல்றீங்க.. பாஸ்க்கு என்ன ஆச்சு..?’’ பதட்டம் அவளின் தாய் மொழியை வாயில் வரவழைத்து இருந்தது.

“கொஞ்சம் கிர்டிக்கல் தான். இன்னைக்கு கூட அவரை கொலை பண்ண முயற்சி நடந்து இருக்கு. நீங்க கேஸ் டீடைல்ஸ் கொடுத்தா தான் நாம உண்மையான குற்றவாளியை கண்டுபிடிச்சி நடக்க போற விபரீதத்தை எல்லாம் தடுத்து நிறுத்த முடியும்.’’

அதன் பிறகு அந்த தேன் குரல் அழகி, “சார் நாங்க எல்லா கேஸ் டீடைல்ஸ்ஐயும் சிஸ்டம்ல ஒரு ஹாட் காபி போட்டு வைக்குறது வழக்கம் தான். ஆனா பாஸ் அந்த போல்டரை எல்லாம் பாஸ் வோர்ட் போட்டு லாக் பண்ணி வச்சி இருப்பார். எனக்கு கூட அந்த பாஸ் வோர்ட் தெரியாது. ஹா…அவரோடமெயில்ல கூட எல்லா டீடைல்சும் ஒரு காபி இருக்கும் சார்..’’ என உரைக்க,

விஜய் அக்கணமே அந்த மெயில் பாஸ் வோர்டை உடைத்து உள்ளே சென்று தகவல் சேகரிக்க முடிவெடுத்துவிட்டான்.

போனை வைக்கும் முன் இறுதியாக, “கஜபதி மிஸ்ஸிங் கேஸ்ல உங்களுக்கு வேற ஏதாவது டீடைல்ஸ் தெரிஞ்சா எங்களுக்கு கால் பண்ணுங்க..’’என அவன் அலைபேசி எண்ணைக் கொடுக்க,

“ சார்….. ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி சார் ஏதோ ஒரு ஓல்ட் லெட்டர் அனுப்பி இருந்தார்… அந்த லெட்டர்ல இருந்த எழுத்துக்கள் எல்லாம் அழிஞ்சி போய் இருந்தது.அதனால அந்த லெட்டரை ரெகவரி பண்ண மும்பை அனுப்பி இருந்தோம். மே பி இன்னைக்கு சாயங்காலம் அந்த லெட்டர்ல இருந்த டீடைல்ஸ் எங்க ஆபீஸ்க்கு வரலாம். வந்ததும் நான் உங்களுக்கு கால் பண்றேன் சார்….’’

அவள் அப்படி சொன்னதும், “ரொம்ப தாங்க்ஸ் மேடம். கண்டிப்பா லெட்டர் பத்தின டீடைல்ஸ் கிடைச்சதும் கால் பண்ணுங்க. தாங்க்ஸ்.’’ என்றவன் அலைபேசியை துண்டிக்க பரணி நண்பனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“கஜபதி சார் கேஸ் டீடைல்ஸ் எல்லாம் அவரோட மெயில்லையும் ஒரு காபி இருக்காம். நான் ஒன்னு பண்றேன் பரணி. எங்க டெக்னிகல் ஹெட்டை காண்டாக்ட் பண்ணி அவர் மெயில் பாஸ்வோர்டை உடச்சி அதுல இருக்க பைல்ஸ் எல்லாம் என் பென்ட்ரைவ்ல காபி பண்ணி எடுத்துட்டு வந்துடுறேன். ரெண்டு பேரும் சேந்து அந்த பைல்ஸ்ல எல்லாம் என்ன இருக்குன்னு பாக்கலாம்…’’

அவன் அப்படி சொன்னதும் பரணி “சரி..’’ என்று தலை அசைக்க, “சரி வா நீ மேடம் கூட இரு. நான் உன்னை ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்..’’ என சொல்ல பரணி சம்மதமாய் தலை அசைத்தான்.

பரணி செங்கனை நோக்கி திரும்பி, “செங்கா நீ இங்கயே இரு. கதவை பூட்டிக்கோ. தெரியாதவங்க யார் குரல் கேட்டாலும் கதவை திறக்காதே.’’ அவன் சொன்னதற்கெல்லாம் செங்கன் தலை அசைக்க, இருவரும் மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

விஜய் பரணியை மருத்துவமனை வாயிலிலேயே இறக்கிவிட்டு, அவன் வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, தன வாகனத்தை எடுக்க, பரணி தன் நண்பனை நோக்கி, “மச்சான் ஜாக்கிரதைடா…’’ எச்சரிக்க,

விஜயும் அதை ஏற்பவன் போல தலை அசைத்துவிட்டு, வண்டியை கிளப்பி செல்லும் முன் அவனைப் பார்த்து குறும்பாய் கண்சிமிட்டி விட்டு, “மச்சி நீயும் ஜாக்கிரதைடா… மேல ஒரு புயல் உன்னை தாக்க வெயிடிங்…’’ எனக் கூற அத்தனை நேரம் இருந்த மன அழுத்தம் நீங்கி பரணியின் இதழ்களில் புன்னகை ஒன்று மலர்ந்தது.

அதே புன்னகையோடு பரணி நாட்சியை தேடி நடந்தான். அவள் அங்கிருந்த மருத்துவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருப்பது அவன் பார்வையில் பட, இரண்டு நாட்களாய் ஒரே உடையில் சற்றே கலைந்த ஓவியம் போல இருந்த அவள் தோற்றம் அவனைப் பாதிக்கவே செய்தது.

உடனே தன் மாமன் பரஞ்சோதிக்கு அழைத்தவன், “யோவ்… இந்த லைப் லைன் ஹாஸ்பிடல்ல மேனேஜ்மென்ட் ஆளுங்க தங்க தனியா ஏ.சி ரூம் இருக்கா..?’’ என வினவ, ஜோதியோ, “அதை நீ ஏன் பரணி கேக்குற…?’’ என எதிர் கேள்வி கேட்டு வைத்தார்.

“எம் பொண்டாட்டியோட முதல் இரவு கொண்டாட… ஆளும் கேள்வியும், ஏதாச்சும் கேட்டா நேரா பதிலை மட்டும் சொல்லு..இல்ல..’’ அவன் மீதி வார்த்தையை வாய்க்குள் முனகி கொள்ள,

“ஒரு பத்து நிமிஷம் அப்படியே லைன்ல இரு மாப்பிள்ளை… நான் காளிமுத்துகிட்ட கேட்டு சொல்றேன். நீ வேற நாளைக்கு ஜெயிலுக்கு போகணும்னு சொல்லிட்டியா… அதான் உன் அத்தைய ஆட்டுக்கால் பாயா வச்சி தர சொல்லி சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் மாப்பிள்ளை…’’ என்றவர்,அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் அவன் இணைப்பிற்கு வந்தார்.

“மாப்பிள்ளை என் பிரண்டு தங்க நாலாவது மாடியில தனி ஏ.சி ரூம் இருக்காம். உன்ன அதை யூஸ் பண்ணிக்க சொல்லிட்டான். ஹோஸ்பிடல்ல வைத்தியலிங்கம்னு ஒரு மேனேஜர் இருக்காராம். அவரைப் போய் பாக்க சொல்றான். அவரை கூப்பிட்டு காளிமுத்து பேசிக்கிடுதானாம்..’’ அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அழைப்பை பரணி துண்டித்து விட,

அவர் தட்டில் உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த அவர் மனைவி, “ஏங்க போனை கைல வச்சிக்கிட்டு ஆடு திருடுன பயலாட்டம் முழிச்சிக்கிட்டு இருக்கீங்க..?’’ என வினவ,

“அடியே ஓவரா கேள்வி கேட்ட உங்க ஆத்தா வீட்டுக்கு பத்தி விட்ருவேன். ஒரு மினிஸ்டர் என்னையே என் தங்கச்சி மகன் மதிக்காம போனை பாதியில கட் பண்றான். உன் கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா..? கொழம்பை ஊத்துடி…. ஆளும் அவளும்..’’

பரணியிடம் காட்ட முடியாத கோபத்தை அவர் தன் மனைவியிடம் காட்டிக் கொண்டிருக்க, பரணி வேகமாய் மருத்துவமனைக்கு எதிரே இருந்த பெரிய மாலில் நுழைந்தவன் நாட்சியாவிற்கு தேவைப்படும் குளியல் பொருட்களோடு இருசெட் உடைகளையும் வாங்கி இருந்தான்.

மீண்டும் அவன் மருத்துவமனை வளாகத்திற்கு வர, அங்கே பிரேமை ஸ்ட்ரெச்சரில் எங்கோ இடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள். பரணி நாட்சியாவை கேள்வியாய் பார்க்க, அவள் அவனுக்கு எதிர் திசையில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இவர்கள் நாடகத்தை கவனித்துக் கொண்டிருந்த ராஜேஷ், “சார்… பிரேம் சார் இப்போ தானா பரீத் பண்றதால டாக்டர்ஸ் ரூமுக்கு ஷிப்ட் பண்ண சொல்லி இருக்காங்க. ஐ.சி.யூ வார்ட்ல ஒரு முறை முழிச்சி பாத்தாராம்.

இன்னும் 6 ஹவர்ஸ்ல கான்சியஸ் ரீகைன் ஆக சான்ஸ் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. சோ வேற எந்த மெசின்ஸ் சவுண்டும் இல்லைதா காம் என்வராயின்மென்ட்ல இருந்தா பெட்டரா பீல் பண்ணுவார்னு தான் இந்த ரூம் ஷிப்டிங்.’’

ராஜேஷ் கொடுத்த விளக்கத்தை, ஒரு தலை அசைப்போடு ஏற்றுக் கொண்டாலும், அவன் பார்வை முழுவதும் நாட்சியாவின் மேலேயே இருந்தது. பிரேமை தனி அறைக்கு மாற்றியதும், காவலாளிகள் வெளியே சென்று நிற்க,

பிரேமிற்கு அருகில் இருந்த இருக்கையில் நாட்சியா அமர்ந்துக் கொண்டாள். மறந்தும் பரணியின் புறம் தன் பார்வையை திருப்பவில்லை. இரண்டு நிமிடம் பரணியும் பொறுத்து பொறுத்துப் பார்த்தான்.

Advertisement