Advertisement

தனிமை தீவில் குடி இருந்தவளுக்கு, உறவுகள் புடை சூழ வாழும் வாழ்வில், கொஞ்ச கொஞ்சமாய் பழி வெறி மழுங்கிக் கொண்டு தான் இருந்தது. அதோடு நெஞ்சின் அடியாழத்தில் புதைத்து சமாதி எழுப்பி விட்டதாய் நம்பிக் கொண்டிருந்த பரணியோடன காதல்,

அவன் ஒற்றை பார்வைக்கே உயிர்த்து வந்து உயிரோடு உணர்வையும் இம்சிக்கும் என்பதையும் அவள் அறியவில்லை. ஏனோ பரணி தன்னை தவிர பிறர் முன் தலை குனிவதை தான் உயிரோடு இருக்கும் நிமிடம் வரை அனுமதிக்க முடியாது என்றே தோன்றி தொலைத்து.

இப்படி புதிய உறவுகளோடும், பழைய நினைவுகளோடும் போராடிக் கொண்டிருந்தவளை, மீண்டும் புளிய மரம் ஏற்றும் வேலையை பரஞ்சோதி அடிக்கடி செவ்வனே செய்து வந்தார்.

வாகனத்தின் குலுங்கிடலில் நாட்சியா விழிகளைத் திறந்தாள். அவள் முன் ராஜேஷ் கார் கதவை திறந்த படி பணிவாய் நின்றுக் கொண்டிருந்தார். வேகமாய் காரில் இருந்து இறங்கியவள், அதை விட வேகமாய் மருத்துவமனையின் உள் ஓடினாள்.

அவளைத் தொடர்ந்து ராஜேஷும் ஓட, மற்ற இரு காவலர்களும் அவர்களைத் தொடந்து ஓடினர். அவசரசிகிச்சை பிரிவு என்ற பெரிய எழுத்துக்கள் பொறிக்க பட்ட அறையின் முன் நாட்சியா மூச்சு வாங்கியபடி நிற்க,

கையில் ஒரு பெரிய கட்டோடும், தலையில் ஆங்காங்கே சிறிய பிளாஸ்டர்களோடும் விஜயன் வந்து நின்றான். நாட்சியா கலக்கமாய் அவன் முகம் பார்க்க,

வருத்தத்தில் தேய்ந்த முகத்தோடு, “நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கும் போது மினிஸ்டர்கிட்ட இருந்து போன் வந்தது மேம். நான் வண்டியை ஓரமா நிறுத்திட்டு இறங்கி பேசிட்டு இருந்தேன். அப்ப வேகமா வந்த லாரி வண்டியை இடிச்சி தள்ளிட்டு நிக்காம போயிடுச்சி..

வண்டியில சாஞ்சி நின்னுட்டு இருந்த நான் ஓரமா போய் விழுந்தேன்…. எனக்கு அடி கம்மி… பிரேம் சார் வண்டிக்குள்ள இருந்தாரா… வண்டி மூணு டைம் குட்டிக்கரணம்  போட்டதுல பின் மண்டையில பயங்கர அடி…

இங்க அட்மிட் பண்ணும் போதே உயிரை காப்பாத்துறது கஷ்டம்னு சொல்லி சைன் வாங்கிட்டாங்க மேம்… ஏதோ சர்ஜரி எல்லாம் பண்ணப் போறதா சொல்றாங்க…. ரொம்ப சீரியஸ் கண்டிசன்ல தான் இருக்கார்…’’

விஜயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த அவசரசிகிச்சை பிரிவின் கதவுகளை திறந்துக் கொண்டு வெளியேறிய மருத்துவர் ஒருவர், “பிரேம் அட்டென்டர்ஸ்…’’ என கேட்க,

நாட்சியா விரைவாய் அவர் முன் சென்று நின்றாள். கூடவே விஜயனும். “அவருக்கு ப்ரைன்ல ப்ளட் லீக் ஆகி கிளாட் ஆகி இருக்கு. அதை ரிமூவ் பண்ண உடனடியா ஆப்ரேட் பண்ணனும்… பட் சக்சஸ் ரேட் தெர்ட்டி பர்சன்ட் தான். நீங்க உங்க பேமிலில கலந்து பேசிட்டு டென் மினிட்ஸ்ல உங்க ஒப்பினியன் சொல்லுங்க. சர்ஜரிக்கு ஓகேனா பார்ம்ஸ்ல சைன் பண்ணிட்டு கேஷ் கவுண்டர்ல பணம் கட்டிடுங்க…’’

தன் பேச்சு வார்த்தை முடிந்தது என்பதைப் போல, அவர் அங்கிருந்து நகர, நாட்சியா சற்றும் தாமதிக்காமல் செவிலி கொண்டு வந்து நீட்டிய படிவங்களில் எல்லாம் கையெழுத்து போட்டவள், அறுவைசிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தையும் உடனடியாய் கட்டினாள்.

விஜயன் அங்கிருந்த காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்து, யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, செயற்கை சுவாசக் கருவிகளின் நடுவில் மரம் போல உணர்வற்று கிடந்த பிரேமை காண காண நாட்சியாவிற்குள் அடியாழத்தில் அமிழ்ந்து கிடந்த பழிவெறி மேலே வந்து அடுத்து என்ன என்பதைப் போல நின்றது.

கண்டிப்பாய் ராசு மதுரவன் இப்படிப்பட்ட இழி செயலை செய்பவர் அல்ல என்றாலும், விஜயனின், “மினிஸ்டர் கிட்ட இருந்து போன்..’’ என்ற வரிகள், அவளை கொலை வெறிக்கு தள்ளி இருந்தது.

பரணியும் சரி, மதுரவனும் சரி பரஞ்சோதி என்ன தவறு இழைத்தாலும், சொந்தம் சொந்தம் என்று அவரை தாங்கிப் பிடிப்பதையே வழக்கமாய் கொண்டிருந்ததைக் கண்டிருந்தவளுக்கு, இம்முறை இவர்கள் மூலமே அவனை ஒரு வழி செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது.

அந்த எண்ணம் பிறந்ததும் செங்கனுக்கு அலைபேசியில் அழைத்தவள், சில உத்தரவுகளை இட, “ராணிமா..’’ என்ற அவனின் தயக்கத்திற்கு, “சொல்றதை செய் செங்கா. முடியலைனா முழுசா என்னை விட்டு ஒதுங்கிரு..’’

அவள் அப்படி சொன்ன பிறகு செங்கன் பதிலும் பேச முடியுமா என்ன. அவள் தனக்கு இட்ட பணியை செவ்வேனே செய்து முடித்தான். அன்று இரவு நாட்சியா வீட்டிற்கு செல்லவில்லை.

வீட்டில் இருப்பவர்களின் முகம் தன்னை பலகீனப்படுத்தும் என்று எண்ணியவளாய் மருத்துவமனையிலேயே தங்கிக் கொண்டாள்.

அன்றைக்கு அதிகாலை தங்கள் குடோன்களில் செம்மரம் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக, ராசுமதுரவன், தரணியோடு கிருஷ்ணமூர்த்தியும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

அப்பொழுது தான் பிரேமிற்கு அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றப் பட்டு இருந்தார். அலைபேசி மூலம் தகவல் அறிந்த விஜயன் அலறிப்புடைத்து நாட்சியாவிடம் விரைய,

அவள் இறுகி அமர்ந்து இருந்த தோற்றமே அவளுக்கு தகவல் தெரியும் என்று சொல்லாமல் சொன்னது. விஜயனை கூர்மையாய் பார்த்த நாட்சியா,

“பரணிக்கு இன்னக்கு மார்னிங் பைனல் மேட்ச். கேம் முடியிற வரைக்கும் அவருக்கு இந்த தகவல் போகக் கூடாது. நீங்க என்ன செய்வீங்க ஏது செய்வீங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது.

ஆனா இப்போ உங்க பிரண்டுக்கு போன் பண்ணி விஷ் பண்ணிட்டு போனை சுவிட்ச் ஆப் பண்ணிட சொல்லுங்க. அதோட வீட்ல எல்லா லேடிஸும் பயந்து போய் இருப்பாங்க போய் ஆறுதல் சொல்லுங்க.

நாட்சியா…. பிரேம் கண் விழிக்காம இந்த ஹாஸ்பிடல் படியை தாண்ட மாட்டானும் சொல்லுங்க… விஜய்… முடிஞ்சா அத்தையை பிரேம்க்காக வேண்டிக்க சொல்லுங்க…’’

கடைசி வரிகளை முடிக்கும் பொழுது நாட்சியாவின் குரல் அவளை அறியாமலேயே கலங்க, விஜயன் சரி என்பதாய் தலை அசைத்துவிட்டு, அங்கிருந்து பாரமான உணர்வோடு கிளம்பினான்.

அவன் சென்றதும், அங்கிருந்த சொகுசு நாற்காலியில் அமர்ந்தவள் நெஞ்சமும் கனத்துப் போய் தான் இருந்தது.

அன்று நடந்த இறுதிப் போட்டியில் மும்பை வாரியர்சை வென்று கோப்பையை கைப்பற்றிய பரணி அணி உற்சாக வெள்ளத்தில் மிதந்தது.

வெற்றி ஆர்ப்பாட்டங்களின் நடுவில் கிடைத்த இடைவெளியில் தன் அலைபேசியை உயிர்ப்பித்தவன், தன் வாட்ஸ்அப் கணக்கில் தொடர்ந்து தன் நண்பர்களிடமிருந்து வந்து குவிந்திருந்த செய்தியை திறந்து பார்த்தவன் திகைத்து தான் போனான்.

அனைவரும் ஒரே போல், அவர்கள் குடும்பமே சிறை சென்றிருக்கும் விதத்தை வித விதமாக விசாரித்து இருந்தனர். பரணிக்கு அடுத்த நொடி முகம் ரௌத்திரத்தில் சிவக்க, அவன் தாய் மாமன் பரஞ்சோதிக்கு அழைத்து இருந்தான்.

அவர் அந்தப்புறம் அலைபேசியை இயக்கினாரோ இல்லையோ, “யோவ் வெண்ண…. அங்க உக்காந்து எந்த முட்டைக்கு முடியை பிடுங்கிட்டு இருக்க…. அப்பா, தாத்தா அண்ணா எல்லாரையும் அரஸ் பண்ணி இருக்காங்களாமே….’’ அவன் எரிச்சலில் பேச,

“மாப்பிள்ளை என்ன கோவிக்காதையா…. எல்லாம் உன் பொண்டாட்டின்னு ஒரு சதிகாரி வீட்ல வந்து உக்காந்து இருக்கா இல்ல… அவ வேலை தான்… ராத்திரியோட ராத்திரியா சர்ச் வாரன்ட் இஸ்யூ பண்ணி இருக்கா… நம்ம குடோன்ல செம்மரம் எப்படி வந்ததுன்னு எனக்கே புரியல பரணி …

அதோட சரியா உங்க அப்பன், அண்ணன், தாத்தா பேர்ல இருக்க குடோனா பாத்து செம்மரம் சிக்கி இருக்கு.. இப்ப நான் இந்த விசயத்துல தலையிட்டா பிரச்சனை வேற மாதிரி ஆயிடும்… நீ ஊருக்கு வா…. நாம உக்காந்து பேசலாம்.

நானும் நம்ம குடும்ப வக்கீல் ஆபிஸ்ல தான் உக்காந்து இருக்கேன். உங்க ஆத்தா தான் ரொம்ப பயந்து போச்சு பாவம். இங்க இவ்ளோ நடக்குது உம் பொண்டாட்டி என்னடானா நைட்டு வீட்டுக்கு கூட வராம… அந்த பிரேம் பயலோட தங்கி இருக்கா…? எம் பேச்சை கேட்டு இருந்தா இப்படி நடந்து இருக்குமா..?’’

அதற்கு மேல் பரஞ்சோதி பேசியதை கேட்பதற்கு பரணியின் பொறுமை அனுமதிக்கவில்லை. அவரோடான தொடர்பை துண்டித்தவன், அடுத்து விஜயனுக்கு அழைத்தான்.

அவன் அந்தப்பக்கம் அழைப்பை ஏற்றானோ இல்லையோ, “டேய் உன்னை எல்லாம் என் பிரண்டுன்னு நம்பினேன் பாரு….? ஒழுங்கா நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..?’’

அவன் குரலில் வெளிப்பட்ட கடினத்தில் விஜயன், “டேய் மச்சான் நான் சொல்றதைக்  முழுசா கேளுடா…?’’ என இழுக்க,

“நீ வாயை மூடு..’’ என அந்தப்பக்கம் குதித்த பரணி,

“நா கேக்குற கேள்விக்கு ஆமா….. இல்ல இப்படி ரெண்டே வார்த்தையில பதில் சொல்லு…. உங்க கலெக்டர் அம்மா எங்க குடோன் மேல சர்ச் வாரன்ட் இஸ்யூ பண்ணாளா…?’’

கொலைவெறியை குரலில் தேக்கி அவன் கேட்க, விஜயன், உள்ளே போய் விட்ட குரலில், “ஆமான்டா…’’ என்றான். “ஓ…’’ என்று இழுத்தவன், அடுத்து, “நேத்து நைட் முழுக்க அவ வீட்டுக்கும் போகல அப்படி தான…. பிரேம் கூட தங்கி இருந்ததா மாமா சொன்னார் அதுவும் உண்மையா…?’’

இந்த முறை அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று விஜயனையே திகில் கொள்ள வைத்தது. “டேய் மச்சான்…. புரியாம பேசாத நேத்து நைட் சிஸ்டர் பிரேம் கூட தான் இருந்தாங்க ஆனா…’’ அடுத்த வார்த்தை அவன் பேசுவதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

விஜயன் பல முறை முயற்சித்தும் பரணி அவன் அலைபேசியை எடுக்கவேயில்லை. டெல்லியில் இருந்து அடுத்த விமானத்தில் சென்னைக்கு புறப்பட்ட பரணியோ கொதிகலனைப் போல கொதித்துப் போய் இருந்தான்.

தாரா எவ்வளவோ வற்புறுத்தியும் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கு பெறமால் ஊரை நோக்கி கிளம்பிவிட்டான். பேட்டி எடுக்க வந்த பத்திரிக்கைகாரர்களிடம் கூட இரண்டொரு வார்த்தையோடு பேட்டியை முடித்துக் கொண்டு விமான நிலையம் புறப்பட்டு விட்டான்.

முன் கோபத்திற்கு பெயர் போன மூர்கனின் கோபம் அன்று, மூளையை தாண்டி உடலின் நாடி நரம்பெங்கும் வியாபித்து இருந்தது. அந்தக் கணம் நாட்சி அவன் எதிரில் வந்து நின்றால் நெற்றிக் கண் சிவனைப் போல அவளை எரித்து இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.

“அடியே நாட்சி…… உன்ன…..’’ அவன் பற்கள் அடிக்கடி அரைபடும் ஓசை கேட்டு பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண் அவனை வித்யாசமாய் பார்ப்பதை எல்லாம் பரணி கண்டு கொள்வதாய் இல்லை.

தன்னை ஒருவன் கொலை வெறியோடு தேடி வந்துக் கொண்டிருப்பதை உணராத நாட்சியா, பிரேம் இருந்த அறையின் வாயிலில் அமர்ந்து அவருக்காய் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

அறையின் வாயிலில் புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த கடவுளோ, “இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கதி  அதோ கதி ஆகப் போகிறதே மகளே…’’ என அவளை பார்த்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.

கூடு நெய்யும்.

Advertisement