Advertisement

கூடு – 19

ஒலிம்பிக் கொடி மொத்தம் ஆறு நிறங்களாலான ஐந்து வளையங்களைக் கொண்டது. அவை ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களும் அவற்றின் பின்னால் வெள்ளை நிறமும் அமைந்ததாக காணப்படுகிறது.

நாட்சியாவின் அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் சற்றே தலையை பின்புறம் சாய்த்து கண் மூடி அமர்ந்து இருந்தவள், சற்றே வேண்டா வெறுப்பாக அலைபேசியை எடுத்து காதிற்கு கொடுத்தாள்.

மறுபக்கம் ஏதோ ஓர் பெண் குரல், “மேம் நாங்க லைப் லைன் ஹாஸ்பிடல்ல இருந்து பேசுறோம். இங்க மிஸ்டர் பிரேம்னு ஒருத்தரை ஆக்சிடன்ட் எமர்ஜென்சி கேஸ்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. கமிசனர் சார் விஜயனும் பஸ்ட் எய்ட் ரூம்ல இருக்காங்க. உங்களுக்கு இன்பார்ம் பண்ண சொன்னாங்க மேம்…’’ அந்தக் குரல் சொல்லியவற்றை நம்ம முடியாத நாட்சியா, வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்தாள்.

“நான் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன். ப்ளீஸ் கொஞ்சம் கேர் எடுத்துப் பாத்துக்கோங்க..’’ என்றவள் வேகமாய், “ராஜேஷ்..’’ என அழைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.

நடந்துக் கொண்டே சாமிக்கண்ணுவிற்கு அலைபேசி மூலம் அழைத்தவள், நிலவரம் உரைத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப, ராஜேஷோடு மேலும் இரு காவலர்களும் அவள் பாதுகாப்பிற்கு உடன் பயணப்பட்டனர்.

இருக்கையில் அமர்ந்து தலை சாய்த்தவளுக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. மிகவும் நொறுங்கி போய் இருந்தாள். பழைய நினைவுகள் வேறு அவளை பலவீனப்படுத்தி இருந்தன.

என்ன முயன்றும் முடியாமல், மனது மீண்டும் அந்த வலி மிகுந்த நாட்களுக்கு பயணப்படத் தொடங்கியது. கஜபதி மகளிடம் உரைத்ததைப் போலவே அடுத்த நாள் அவளை வள்ளியூருக்கு அழைத்து சென்றார்.

இரு தினங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக தான் சென்றது. அந்த பொல்லாத மூன்றாம் நாளில், அதிகாலையே செங்கனையும் அழைத்துக் கொண்டு திருநெல்வேலி டவுன் வரை சென்று வருவதாய் சொல்லிவிட்டு பெற்றவர்கள் கிளம்பவும், நாட்சியா மகிழ்ச்சியாய் அவர்களுக்கு டாடா காட்டி அனுப்பி வைத்தாள்.

அதன் பிறகு வழக்கம் போல, தனக்கு பிடித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு தோப்பில் சரண் புகுந்தவள், மாலை மங்கி தான் வீட்டிற்கு திரும்பினாள். ஆனால் அப்பொழுதும் அவர்கள் திரும்பி வரவில்லை. பூங்கோதை பாட்டி மட்டுமே சற்று பதட்டத்தோடு நின்றிருந்தார்.

‘என்ன ஆச்சு பாட்டி..’’ என இவள் கேட்க, “ராசாத்தி டவுனுக்கு போனவுகள இன்னும் ஆளைக் காணோம்…. அதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு..’’ அவர் அப்படி சொல்லியதும், வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்தவள், கஜபதிக்கு அழைத்துப் பார்த்தாள்.

ஆனால் அழைப்பு சென்றுக் கொண்டிருந்ததே தவிர யாரும் எடுக்கவில்லை. ஆனால் நாட்சியா அதைப் பெரிதாக எல்லாம் எடுத்துக் கொள்ளாமல், “பாட்டிமா அப்பா பிசியா இருக்கார் போல…. லேட் நைட் ஆனாலும் வந்துடுவார்…. அதனால நீங்க பயப்படாம இருங்க… முதல்ல எனக்கு டிபன் எடுத்து வைங்க.. ரொம்ப பசிக்குது..’’ என்றபடி உணவு மேஜையின் முன் சென்று அமர்ந்தாள்.

பூங்கோதையும் சற்றே இயல்பாகி நாட்சியாவிற்கு உணவை பறிமாறினார். சரியாய் இரவு எட்டு மணிக்கு அவள் வீட்டுக் கதவு இடிப்பதைப் போல தட்டப்பட்டது.

நாட்சியா குழப்பத்தோடு வாயிலைப் பார்க்க, பூங்கோதை சென்று கதவைத் திறந்தார். அவர் கதவைத் திறந்தது தான் தாமதம் ஆறேழு ஆண்கள் வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தனர்.

நாட்சியா அவர்களை முன் பின் கண்டது இல்லை. ஆனால் கூட்டத்தில் இருந்த பரணியைக் கண்டதும் நாட்சியா மலர்ந்து முகத்தோடே எழுந்தாள். அவள் அவனை நோக்கி நடக்க முயல, அதற்குள் ஒரு முரட்டுக் கரம் அவளைப் பற்றி தன் புறம் திருப்பியது.

“ஏய் உங்க அம்மா… அந்த மலைக்காரி எங்க….’’ என அதட்டலாய் வினவ, அவர் நடத்தை பிடிக்காவிட்டாலும் நாட்சியா நிமிர்வோடே,

“அங்கிள் கையை எடுங்க. வலிக்குது… அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போய்ட்டு வரதா சொல்லிட்டு போனாங்க. என்னனே தெரியல இன்னும் வரல… அப்பாவுக்கு போன் போட்டா அவரும் எடுக்கல…நீங்க எல்லாம் யார்னு சொல்லிட்டு போங்க… டாடி வந்ததும் நீங்க எல்லாம் வந்துட்டு போனதா சொல்றேன்.’’ நாட்சியா என்ன தான் பதில் அந்தக் கூட்டத்திற்கு சொன்னாலும், அவள் பார்வை என்னவோ பரணியின் மீதே இருந்தது.

பரணியோ உள்ளே நுழையும் போது அவளை வெறுப்பாய் பார்த்தவன், அதன் பிறகு அவள் புறம் பார்வையை திருப்பவே இல்லை. அதற்குள் முதலில் நாட்சியை வேகமாய் வந்து பற்றியவன்,

அங்கிருந்த இன்னொருவரை நோக்கி திரும்பி, “பாத்தீங்களா மாப்பிள்ளை தெளிவா சொல்லிட்டே உங்க மச்சான் ஊரை விட்டு ஓடி இருக்காப்ல. என்னவோ என் மச்சான் உத்தம புத்திரன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க. பாருங்க அவர் லட்சணத்தை..’’ என்று எகத்தாளமாக கேட்கவும்,

அவர் மாப்பிள்ளை என்று அழைத்த மனிதர், “வாங்க மச்சான் எப்படியும் திருநெல்வேலி தாண்டி இருக்க முடியாது… அவன் கண்ணுல சிக்கட்டும்…. அப்புறம் இந்த ராசுமதுரவன் யாருன்னு தெரிஞ்சிக்குவான்…’’ ஆத்திரத்தோடு கத்தி முடித்தவர் வெளியேற, அவரை தொடுத்துக் கொண்டு மற்றவர்களும் வெளியேறினர்.

நாட்சிக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை என்றாலும், அப்பாவை காணவில்லை என்பது மட்டும் உரைத்தது. அந்த வயதிலேயே தெளிவான சிந்தனைக் கொண்டிருந்தவள், இடிந்து போய் அமர்ந்து இருந்த பூங்கோதையை நெருங்கி,

“பாட்டி…! ஏன் பயப்படுறீங்க..? ஏதோ ரீசன் அப்பா வர லேட் ஆகுது. அவ்ளோதான். விடுங்க இன்னக்கு ஒரு நாள் பாப்போம். அப்படி அப்பா வரலைனா போலிஸ் அங்கிள்கிட்ட போய் கம்ப்ளைன்ட் கொடுப்போம். அப்பா எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சிடுவாங்க.’’

அவளின் அந்த தைரியம் ஏனோ மூதாட்டிக்கு கைபெறவில்லை. அன்றைய இரவும் கஜபதி, அல்லி வீடு திரும்பவில்லை என்றதும், நாட்சியாவிற்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இரவில் சின்ன சின்ன சப்தங்களுக்கும் அம்மா அப்பா தான் வந்திருப்பார்களோ என, வாசல் கதவை எட்டி எட்டி பார்த்தபடி நாட்சியா அமர்ந்து இருந்தாள். விடியலின் தொடக்கத்தில், அவள் அமர்ந்தபடி தலை சாய்த்திருக்க, அவளை எழுப்பிய பூங்கோதை,

“தாயி…. எனக்கு என்னவோ மனசு உறுத்தலாவே இருக்கு…. கூட போன எம் பேரன் விவரமும் தெரியல…. நான் எங்க ஊரு ஆளுங்களை போய் விவரம் சொல்லி இங்க அழைச்சிட்டு வறேன். அடுத்து என்ன செய்யலாம்னு பேசி முடிவு எடுப்போம்.

நம்ம பாளையத்தானை வீட்டுக்கு பின் பக்கம் கட்டி இருக்கேன் தாயி. நீங்க வெளிக் கதவை பூட்டிக்கிடுங்க. என் குரல் கேட்காம கதவை திறக்க வேண்டாம். நான் சடுதியில வந்துடுறேன். கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. பசிச்சா ரொட்டி பண்ணி வச்சி இருக்கேன் சாப்பிடுங்க… அந்த முருகன் நமக்கு துணை இருக்கட்டும்… ஐயாவும், அம்மாவும் எங்கன போனாங்கன்னே தெரியலையே…’’

கடைசி வரிகளை புலம்பலாக சொல்லி முடித்தவர், எழுந்து நாட்சி கதவைப் பூட்டிக் கொள்ளவும், அங்கிருந்து கிளம்பினார். பூட்டிய வீட்டிற்குள் அமர்ந்திருந்த நாட்சியாவிற்கும் மனது கலக்கமாகவே இருந்தது.

சற்று நேரம் அமைதியாய் அமர்ந்து இருந்தவள், “அப்பா தான் பரணி நமக்கு மாமான்னு சொல்லி இருக்காரே… நாம ஏன் ஊருக்குள்ள போய் அவரோட ஹெல்ப் கேட்டு அப்பா அம்மாவை தேடக் கூடாது…..’’ அந்த எண்ணம் தோன்றியதும் நாட்சியா வேகமாய் வாயில் கதவை திறந்துக் கொண்டு வெளியே செல்லக் கிளம்பினாள்.

ஆனால் அவள் வழியை மறைத்துக் கொண்டு நான்கைந்து உருவங்கள் நின்றன. நாட்சி குழப்பமாய் அவர்களைப் பார்க்க, “நான் சொல்லலை ராசு… இந்த சின்னக் கழுதைக்கு அந்த கேடு கேட்டதுங்க எங்க ஓடிப் போய் இருக்கும்னு கண்டிப்பா தெரிஞ்சி இருக்கும்.

இவளை பிடிச்சி நாலு தட்டு தட்டினம்னா உண்மைய சொல்லிடும். இப்ப கூட அதுங்க இந்தக் குட்டிக்கு தான் காத்துக்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன். அது என்னவோ ராசு உம் மச்சானுக்கு முறையா பிறந்த பிள்ளைங்களை விட இந்தக் கழுத மேல கொஞ்சம் பாசம் அதிகம் தான். அப்படியேஅந்த ஆளை மூக்கும் முழியுமா உரிச்சி வச்சி இருக்குறா இல்ல அதனால இருக்குமா இருக்கும்.’’

பரஞ்சோதி அப்படி சொல்லியதும், ராசுமதுரவனின் தன் மானம் உரசப்பட்டது. நாட்சியாவை உறுத்துப் பார்த்தவர், “ஏய் எங்க உங்க கேடுகெட்ட அப்பனும் ஆத்தாளும்… உனக்கு அவங்க எங்க இருப்பாங்கன்னு தெரியும்னா மரியாதையா உண்மைய சொல்லிடு…’’

அவர் அப்படிக் கேட்டதும், அவர் முகத்தில் இருந்த கடுமையில் சற்றே பின்னடைந்த நாட்சியா, “எனக்கு… எனக்கும் தெரியாது அங்கிள்… திருநெல்வேலி வரை போயிட்டு வரதா சொல்லிட்டு போனாங்க… அவ்ளோதான் தெரியும்… நானே அவங்களை தேட தான் எங்க பரணி மாமா ஹெல்ப் வாங்கலாம்னு வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கேன்.’’

அவள் அப்படி சொன்னதும், பரஞ்சோதி இடிஇடியென சிரித்துவிட்டு, “என்ன மாப்பிள்ளை இங்க நடக்குது…. இந்த புள்ள உங்க பையனை எங்க மாமன்னு சொல்லுது. மலைக்காரி நல்லா விவரமா தான்யா பிள்ளை வளத்து வச்சி இருக்கா.

என்ன மாப்பிள்ளை குடும்ப ஆம்பளைங்க எல்லாத்தையும் இவளுக முந்தியில முடிஞ்சிருவாளுக போல மொளச்சி மூணு இலை விடல. இது வாயைப் பாருய்யா மாமனாம் மாமன்.

முறை உள்ள பிள்ளைங்க அங்க மூலையில உக்காந்து அழுதுக்கிட்டு கிடக்குதுக. சிவா தண்ணி குடிச்சி ரெண்டுனா ஓடிப் போச்சி. இது என்னடானா பரணிய மாமன்னு உரிமையா கூப்பிடுது.’’

பரஞ்சோதி அடுத்த திரியை பற்ற வைக்க, அது தன் வேலையை கட்சிதமாய் காட்டியது. அவர்கள் பேசுவதின் அர்த்தம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த நாட்சியை உறுத்துப் பார்த்தவர்,

“யாரு யாருக்கு மாமன்…’’ என்று கேட்டு விட்டு நாட்சியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நாட்சி தன் வாழ் நாளில் வாங்கிய முதல் அடி அது தான். கன்னம் சிவந்து தலை சுற்றிக் கொண்டு வர, நாட்சி நிலை தடுமாறி வீட்டிற்குள் சென்று விழுந்தாள்.

அதே கோபத்தோடு பரஞ்சோதியைப் பார்த்து திரும்பியவர், “மச்சான்… நீ சொன்னது தான் சரி… இந்தக் கழுதை சரியான விஷம் பிடிச்சது தான் போல. நீ அதை எப்படி விசாரிச்சாலும் சரி. நாளை விடியறதுக்குள்ள எனக்கு உண்மை தெரிஞ்சாகனும். அங்க என் தங்கச்சி அழுது அழுதே செத்துடுவாப் போல….’’

சொல்லி முடித்தவர் அங்கிருந்து அகல, பரஞ்சோதி அங்கிருந்த ஆட்களிடம் என்ன பேசினாரோ, வீட்டை வெளிப்பக்கம் இழுத்து பூட்டியவர்கள், அரை மயக்கத்தில் இருந்த நாட்சியை தங்கள் வாகனத்தில் எடுத்துப் போட்டுக் கொண்டு பரஞ்சோதியின் பழைய குடோனை நோக்கி விரைந்தனர்.

Advertisement