Advertisement

கூடு – 14

இந்தியா 1900 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது

பட படவென தட்டப்பட்ட அறைக்கதவின் ஒலியில் நாட்சியா நினைவுலகில் இருந்து கலைந்து எழுந்து அமர்ந்தாள். சோம்பலாக கண்ணை எதிரே இருந்த கடிகாரத்தின் மீது ஓட்டினாள். அது நேரம் அதிகாலை ஐந்து என்றது

இந்த நேரத்துல யாரா இருக்கும்…’’ நாட்சியா குழப்பத்தோடே எழவும், மீண்டும் அவள் அறைக் கதவு இடைவெளியின்றி பட படவென தட்டப்பட்டது

வெளிய அலெக்சாண்டர் இருந்தா யாரும் இப்படிக் கதவை தட்ட முடியாதே…’’ நாட்சியா சிந்தனையோடே கதவைத் திறக்க, அவள் கதவைத் திறந்தாளோ, இல்லையோ அடுத்த நொடி, அவள் பட்டுக் கூந்தல் பற்றி இழுக்கபட்டது

நாட்சி என்ன ஏதென்று சுதாகரிப்பதற்குள் அவளைத் தர தரவென்று இழுத்துச் சென்றக் கரம், மாடிப்படியின் வளைவைக் கடந்து வெளிக் கதவு தொடங்கும் இடத்தில் அப்படியே அவளை தள்ளி விட நாட்சியா நிலைக்குலைந்துப் போய் வாசலில் விழுந்தாள்

விழுந்தவள், நிமிரும் அவகாசம் கூட தராமல், வார்த்தை அமிலங்களால் அடுத்த தாக்குதல் அரங்கேற தொடங்கியது

ஊருக்கு வெளிய இருக்க வேண்டியவளுக்கு உரிமைக்காரியா வீட்டுக்குள்ள இடம் கேக்குதோ…? எம் மாமன் தாலி கட்டினா மட்டும் நீ அவரோட பொண்டாட்டியா ஆயிடுவியா…? உன்ன இன்னைக்கு முச்சந்தியில நிறுத்தி சாணி கரச்சி ஊத்தி ஊரை விட்டு துரத்துலநான் கஜபதிபாண்டியன் பொண்ணு தேவிஸ்ரீ இல்லடி….’’

ஆங்காரமாய் அக்குரல் கத்திக் கொண்டே இருக்க, எழ வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இன்றி நாட்சியா அப்படியே உறைந்தாள்

நான் வீட்டுல இல்லாத நேரம் சாரைப் பாம்பு மாதிரி சத்தம் இல்லாம குடி கெடுக்க குடும்பத்துக்குள்ள நுழைஞ்சிட்டா ஈனசிறுக்கி. தேவிமா நீ தாம்லே என்ற வாரிசு. முச்சந்தியில சாத்தி வச்சி இருக்க விளக்குமாத்தை கொண்டாலே! வாய் பேச்சு எல்லாம் இதுகளுக்கு உரைக்காது. பேசுற விதத்துல பேசினா தானா கிளம்பிப் போவா!’’ 

நாகம்மையும் தன் பங்கிற்கு எகிறத் தொடங்க, இவர்கள் குரல் கேட்டு தங்கள் தங்கள் அறையில் இருந்து வெளி வந்தவர்கள் கண்ட காட்சியில் அப்படியே திகைத்து நின்றனர்.

செல்வாம்பிகா வேகமாய் நாட்சியை நெருங்க ஓடி வர, “கழுத்துல எம் மவன் தாலி தொங்கணும்னா அங்கயே நில்லுத்தா…’’ என்ற நாகம்மையின் விஷ வார்த்தைகளில் அப்படியே உறைந்தார்

தரணியும், ராசுமதுரவனும் வயலை பார்வையிட கிளம்பிச் சென்றிருக்க, பரணியோ பயிற்சிக்காக மைதானத்திற்கு சென்றிருந்தான். செங்கன் சற்று நேரத்திற்கு முன்பு தான் அலெக்சாண்டரை உலாவ அழைத்துச் சென்றிருந்தான்

தலை விரிக் கோலமாய் வீட்டு வாயிலில்குனிந்த தலை குனிந்த வாக்கில் இருக்க நாட்சி அப்படியே அமர்ந்து இருந்தாள்

மதுஸ்ரீ தேவியை தடுக்க முன் வர, “அக்கா! நம்ம அப்பா நம்மளை விட்டு ஒரேடியா தொலைஞ்சி போக இவ அம்மா தான்கா காரணம். அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம நம்ம நடு வீட்ல வந்து உக்காந்துட்டு இருக்கா! நீங்களும் பாத்துட்டு அமைதியா இருக்கீங்க. ஆனா என்னால அப்படி ஜடமா இருக்க முடியாது. நம்ம அக்கா தங்கச்சி உறவு உடையாம இருக்கனும்னா இதுக்கு நடுவுல நீ வராத!’’ 

தேவியின் ருத்ர தாண்டவத்தில், சிவாத்மிகாவே சற்று அரண்டு போனார். யார் என்ன செய்வது எனப் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, மதுஸ்ரீ சத்தம் இல்லாமல் தன் அறைக்கு ஒதுங்கியவள், நடந்ததை பயிற்சியில் இருந்த பரணிக்கு அலைபேசி மூலம் அழைத்து தெரிவித்துவிட்டாள்

அதற்குள் தேவி, நாட்சியாவின் அறைக்குள் நுழைந்து அவள் பொருட்களை எல்லாம் தெருவில் எடுத்து வீசி எறிந்தாள். மது அழைத்த அடுத்த நொடி கிளம்பியிருந்த, பரணி ஆறே நிமிடத்தில் வீட்டு வாயிலில் நின்றான்

அவன் வண்டி சத்தம் கேட்டும் நாட்சியா நிமிரவில்லை. வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தவன், அவனைக் கண்டதும், அழுகையில் உதடுகள் துடிக்க, “நீங்க இப்படி பண்ணலாமா மாமா…?’’ எனக் கேட்ட தேவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்

நாகம்மை, “ஒண்டிக் குதிரை….’’ என்று ஏதோ பழ மொழியை தொடங்க, அவரை நோக்கி திரும்பியவன், ஆள் காட்டி விரலை உயர்த்தி, “ஏய் கிழவி! இனி ஒரு வார்த்தை…! ஒரு வார்த்தை எம் பொண்டாட்டிய பத்தி பேசுன... சுடுகாட்டுக்கு கொண்டு போய் உசுரோட கொல்லி போட்ருவேன் பாத்துக்க.’’ என கர்ஜித்தான்

விளையாட்டிற்கு கூட தன்னிடம் பகடி பேசாத பேரன் ஒரேடியாய் எதிர்த்து நிற்கவும் அம்மூதாட்டியின் வாய் தானாக மூடிக் கொண்டது. கோபம் இருந்த இடத்தை தன்னிரக்கம் ஆக்ரமித்தது

அப்படித்தான் செஞ்சிடு ராசா! நிம்மதியா போய் சேந்துடுறேன். எம் மக வாழ்கையை பறிச்சவ மக இப்ப உடமைக்காரியா என் வீட்டுக்குள்ளையே நுழைஞ்சிட்டாளே.”முகத்தை மூடிக் கொண்டு அவர் கண்ணீர் விட, அதற்கும் பரணி எரிந்து விழுந்தான். “வாய மூடுன்னு சொன்னது உன் காதுல விழுகலையா…?’’ என

நாட்சி அசையாமல் அமர்ந்திருக்க மெதுவாய் அவளை நெருங்கியவன், மண்டியிட்டு அமர்ந்து, அவள் தோளைத் தொட, நாட்சி மெதுவாய் நிமிர்ந்தாள். அடர் பழுப்பாய் இருந்த கண்களில் கண்ணீர் இல்லை. ஆனால் அவ்வளவு வேதனை.

அவனையே இமைக்காது பார்த்தவள், “நான் யாரு மாமா உனக்கு? உன் மேல என்ன உரிமை எனக்கு…?’’ என உயிரை கண்களில் தேக்கி கேட்டாள்

அவள் கண்களில் இருந்த வெறுமையை சகிக்க முடியாதவன், “எனக்கு எல்லாமே நீ தாண்டி மயிலு! என்ன சுமந்த அம்மாவை விட, என்னால இனி நீ சுமக்க போற புள்ளைங்களை விட எம் மேல உனக்கு தான் முதல் உரிமை இருக்கு மயிலு!’’ 

அவன் அப்படி சொல்லி முடித்த மறுநொடி வேலுநாட்சியா அவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டாள். அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள்

எனக்கே எனக்குன்னு அப்பா இல்ல மாமா! எனக்கே எனக்குன்னு அம்மா அன்பு கிடைக்கலை மாமா! நீ மட்டும் தான் மாமா எனக்கே எனக்குன்னு கிடச்சி இருக்க முதல் உறவு! எப்பவும் என்னை விட்டுப் போக மாட்ட இல்ல மாமா!’’ 

தலை நிமிர்ந்து உதட்டில் சிரிப்போடும், கண்களில் கண்ணீரோடும் குழந்தைப் போல தலை சரித்து கேட்பவளைக் கண்டவனின் உள்ளம் முழுக்க ஏதோ ஒன்று அடைத்தது

அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், “நம்மை யாராலும் பிரிக்க முடியாது மயிலு! மாமன் கடைசி வரை உன்னோட இருப்பேன் மயிலு! செத்து சவமா போனாலும் உன்னோட தான் இருப்பேன்.’’ 

அவன் அப்படி சொன்னதும் அவனை விட்டு சற்றே பிரிந்து நின்றவள், ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள். “நீ செத்துப் போனா நான் மட்டும் இருப்பேனா…’’ என்றவள், மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டாள்

சற்றே நிமிர்ந்து, அறை கொடுத்த அவன் கன்னத்தை கைகளால் தாங்கியவள், சற்றே எம்பி அவன் முகம் முழுக்க தன் ஈர உதடுகளால் முத்தம் கொடுத்தாள்

அந்த முத்தம், காதலை விட, அவன் மீதமான உரிமை உணர்வை நிலைநாட்டும் செயலாகவே இருந்தது. மீண்டும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்

எம் மாமா! நான் மட்டும் தான் அடிப்பேன். நான் மட்டும் தான் திட்டுவேன். நான் மட்டும் தான் கொஞ்சுவேன்.’’ என்று கண்ணீரோடு அவன் மார்பில் புதைந்ததவள் புலம்பினாள்

வீட்டில் நின்றுக் கொண்டிருந்தவர்களோடு, வீட்டிற்கு திரும்பி இருந்த அத்தனை ஆண்களின் கண்களிலும் கண்ணீர். செங்கன் கண்களில் கண்ணீரோடும், முகத்தில் மகிழ்ச்சியோடும் நீண்ட வருடங்களுக்கு பிறகு உணர்வுகளை வெளிக்காட்டும் நாட்சியாவை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான்

அவன் கழுத்தை கட்டிக் கொண்டிருந்தவள் அப்படியே எழுந்துக் கொள்ள, அவளோடு அவனும் எழுந்துக் கொண்டான். சிறுபிள்ளை போல குதிங்காலைக் காட்டியவள்

என்ன இழுத்துட்டு வரும் போது படியில மோதி கணுக்கால் வலிக்குது மாமா. என்னை என் ரூமுக்கு தூக்கிட்டு போ.’’ என இரு கைகளையும் உயர்த்த, முகத்தில் மலர்ந்த முறுவலோடு அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன், மாடிப் படிகளில் நடக்க தொடங்கினான்

கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கியவள் நிம்மதியாய் அவன் மார்பில் தலை சாய்த்து விழி மூட, நிர்மலமான அவள் முகத்தைக் கண்டவன், “இனி தன் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் குறுக்கிடப் போவதில்லை….’’ என்று மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டான்.

 

பரணி அப்போது அறியவில்லை, நாட்சி தன்னுடைய லட்சியத்திற்கும், காதலுக்கும் இதயத்தின் அறைகளை தனித் தனியே பிரித்து வைத்திருப்பாள் என.

கூடு நெய்யும்.  

 

Advertisement